Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

டொலர்களை விழுங்கிய தாமரை கோபுரத்தின் மறைக்கப்பட்ட கதை!

தெற்காசியாவிலேயே மிக உயரமான கோபுரத்தை கட்டுகின்றோம் எனக்கூறி  சீனாவிடம் கடன்களை வாங்கிக் குவித்து உருவான தாமரைக் கோபுரம் திறக்கப்பட்டு இப்போது மூன்று வருடங்களை கடந்துள்ள  நிலையில்,  இது வரை தொடர்ச்சியான மக்கள் பாவனைக்கு இது திறந்து விடப்படவில்லை, மாறாக கிறிஸ்மஸ் மற்றும் வெசாக் தினமென விசேட தினங்களில் மட்டும் அதன் மின்விளக்குகள் ஒளிரவிடப்பட்டன. இந்நிலையில் இம்மாதம் 15ம் திகதி கட்டணத்துடன் பொது மக்கள் பாவணைக்கு  திறக்கவுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

உண்மையைச் சொல்லப்போனால் இதுவரையிலும் இந்த ஆசியாவின் அதிசயம் நாட்டுக்கு ஐந்து சதத்தையேனும் வருமானமாக பெற்றுத்தரவில்லை. கடந்த காலங்களில் இதற்காக பெற்றுக்கொள்ளப்பட்ட பெருந்தொகை கடன்கள் பொதுமக்களின் பணத்தை கொண்டே மீள செலுத்தப்பட்டு வந்தன.

கட்டுமான பணிகளின் போது: புகைப்பட உதவி – colombolotustower.wordpress.com

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ ஆட்சி காலத்தில் அதாவது 2012களில் இந்த தாமரைக் கோபுர திட்டம் தொடர்பில் அரசியல்வாதிகள் பல்வேறு கருத்துகளை முன்வைத்தனர். அவற்றில் மக்கள் விடுதலை முன்னனியின் பொது  பொதுச் செயலர், டில்வின் சில்வா ”நாம் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொள்வதற்குதான் அந்த தாமரைக் கோபுரம் உதவும்” என்று கூறிய கருத்தே அப்போதும் அனைவருக்கும் சட்டென்று நினைவுக்கு வரும் கருத்தாக உள்ளது. 

சாங்கம் அவசியமற்ற விளையாட்டை விளையாடுகின்றது. நாடு அபிவிருத்தி அடைந்து விட்டது என்று கூவினாலும் நாம் இன்னும் அதனை அடையவில்லை, அந்த தாமரைக் கோபுரம் நாம் பாய்ந்து செத்துவிடவே உதவும், அதற்கு மேல் ஒரு ஹோட்டல் உள்ளதாம், அந்த ஹோட்டல் சுற்றுமாம் கிராமபுர மக்களுக்கு எதற்காக இது? இங்கே தேநீர் கொஞ்சம் குடிக்க கூட வழியில்லாமல் இருக்கும்போது அங்கு சென்று ஒரு கோப்பை தேநீரை குடிக்க முடியுமா? அதெல்லாம் எங்களுக்காக கட்டப்படவில்லை வேறு விளையாட்டுகளுக்காக வேறு ஒரு வர்க்கத்தினருக்காக  உருவாக்கப்படுகின்றது” என்று டில்வின் சில்வா பரணகமவில் நடைபெற்ற  கூட்டம் ஒன்றில் உரையாற்றி இருந்ததை ஊடகங்களில் பிரபலமாக பேசப்பட்டது. 

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர,  “ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சின்னமான  மொட்டு என்பது ஊழலின் சின்னம் என்று கடுமையாக விமர்சித்து மகிந்த ராஜபக்ஷ அரசின் மேல் குற்றம் சுமத்தி பேசியிருந்தார். அவர் தாமரைக் கோபுரம் என்பது ஊழல் கோபுரம் என்று தெரிவித்திருந்தமை இன்று உண்மையாகியிருக்கின்றது எனலாம்.

முன்னாள் ஜனாதிபதி  மைதிரிப்பால சிரிசேன தலைமையில் 2019 செப்டம்பர் 16ம் திகதி இது மக்கள் மயமாக்கப்பட்டது. இதன்போது  இக்கோபுரம் நிர்மாணிப்பு திட்டத்தில்  2 பில்லியன் அளவிலான பாரிய அளவு மோசடி நடந்துள்ளதாக  மைத்திரிப்பால சிரிசேன  தெரிவித்த கருத்தானது மிகப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

2012 ம் ஆண்டு குறித்த கோபுர கட்டமைப்புக்காக  2 பில்லியன் நிதியினை சீன நிறுவனம் ஒன்றுக்கு முற்பணமாக அரசாங்கத்தினால் வழங்கப்பட்டது என்று கூறப்பட்டது எனினும் இந்த விடயம் தொடர்பாக மேலதிகமாக தேடிய போது அவ்வாறானதொரு நிறுவனமே இல்லை எனவும் தெரியவந்துள்ளது என மைத்திரிபால சிரிசேன கூறியிருந்தார். பின்னர் அந்த கருத்துக்கு பதில் வழங்கும் முகமாக ராஜபக்ஷ தரப்பில் இருந்து “அது  முற்றிலும்  பொய்யான தகவல்கள்” என மஹிந்த ராஷபக்ஷ அறிக்கை வெளியிட்டார்.

கட்டிடத்தினை  திறந்து வைக்கும்முன்னாள் ஜனாதிபதி  மைதிரிப்பால சிரிசேன –  புகைப்பட உதவி -News.lk

கோபுரம் திறக்கப்பட்ட போது “இனி தாமரைக் கோபுரத்தை பொதுமக்கள் பார்வையிட முடியும், அதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படும்” என அதிகாரிகள் தெரிவித்தனர். என்ற போதிலும் அதன் பின்னர் தூரப் பிரதேசங்களில் இருந்தும் வாகனங்களில் வந்த பொதுமக்களுக்கு காணக் கிடைத்தது என்னவோ மூடிய நிலையில் இருந்த தாமரைக் கோபுரமே. இதனால் அதனை பார்க்க வந்தவர்களுக்கு ஏமாற்றமும், நேரவிரயமும் மாத்திரமே கிடைத்தது. இன்று வரையும் தாமரைக் கோபுரம் திறக்கப்படாமலேயே காணப்படுகின்றது.

கொழும்பில் மிக உயரமான தொலைத்தொடர்பு கோபுரம் 

2008 ஆம் ஆண்டு தொலைத்தொடர்பு கோபுரம் ஒன்றினை நிர்மாணிக்க வேண்டிய தேவையும், அவசியமும் தொலைத்தொடர்பு ஆணையகத்திற்கு உருவானது. அதிகரிக்கும் தொடர்பாடல் தேவையினை பூர்த்தி செய்யும் முகமாக இதனை நிர்மாணிக்க ஆணையகம் முடிவுசெய்தது. அதனைத் தொடர்ந்து பேலியகொட பகுதியில் ஓர் இடத்தினை தெரிவு செய்து குறித்த கோபுரத்தை கட்டமைக்க ஆயத்தப்பணிகளை மேற்கொண்ட போது இந்த இடம் தொடர்பிலான சர்ச்சைகள் உருவாகவே அந்த திட்டம் ஆரம்பித்த அதே வேகத்தில் நின்றும் போனது. 

இரண்டு வருடங்களின் பின்னர் 2010 இல் கொழும்பு விஜெவர்தன மாவத்தையில் உள்ள ஒரு இடத்தினை அதே கோபுர நிர்ணமானிப்புக்காக அரசு தெரிவு செய்தது. ஆறு ஏக்கர் பரப்பளவான இந்த பகுதியில் பல  குடியிருப்புக்கள் காணப்பட்டன. அவர்களுக்கு வேறு இடத்தில் வீடுகள் வழங்கப்பட்டதன் அடுத்த கட்டமாகவே  2012ஆம் ஆண்டு தாமரை கோபுரத்தின் கட்டுமாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

இடி தாங்கியுடன் கோபுரத்தின் மொத்த உயரம் 356.3 மீற்றர்  ஆகும். இது இலங்கையில் மட்டுமன்றி தெற்காசியாவிலே  உயரமான கோபுரமாக கருதப்படுகின்றது. இந்த கோபுரத்தை உருவாக்க சீன நிறுவனம் ஒன்று தேர்வு செய்யப்பட்டது அதே சமயம் இலங்கை பொறியியலாளர்களின் ஒத்துழைப்புடன் இந்த கோபுர கட்டுமானம் ஆரம்பிக்கப்பட்டது. 

இந்த திட்டத்திற்கு சீனாவிடம் இருந்து 104.3 அமெரிக்க டொலர்கள் கடனாக பெற்றுக்கொள்ளப்பட்டது. மீதி 20% சதவீதமான தொகையினை தொலைத்தொடர்பு ஒழுங்கு படுத்தல் ஆணைக்குழுவானது ஏற்றுக்கொள்ள ஒப்புதல் வழங்கியது. தொலைக்காட்சி மற்றும் வானொலிக்கு சமிக்சை வழங்கும் உலோக கோபுரம் (ஆண்டனா) கோபுர உச்சியில் நிறுவப்பட்டுள்ளது. மூன்று மாடிகளைக் கொண்ட இக்கோபுர உச்சியில் உற்சவ கூடம், உணவு விடுதி, அருங்காட்சியகம்  மற்றும் கேட்போர் கூடம் என்பன காணப்படுகின்றன.

புகைப்பட உதவி -youtube.com

 

இக்கோபுர திட்டமிடல் மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக இலங்கை பல்கலைக்கழக பேராசிரியர்கள் 80 பேரின் ஒத்துழைப்பும் கிடைக்கப்பெற்றது. அதே போன்று இக்கோபுரம் சார்ந்த ஆலோசனைகளை வழங்குவதற்கு  மொரட்டுவ பல்கலைக்கழக தொலைத்தொடர்பு ஒழுங்கு படுத்தல் ஆணைக்குழு தெரிவுசெய்திருந்தது. தாமரை மொட்டு போன்ற இந்த போபுரத்தின் வடிவமானது மொரட்டுவ பல்கலைக்கழக பேராசிரியரான நிமல் சில்வாவின் கற்பனையில் உதித்ததாகும். அதன்படியே திட்டத்தை ஏற்றுக் கொண்ட சீன நிறுவனம் கட்டுமான வேலைத்திட்டங்களை ஆரம்பித்தது. 

கோபுரத்தின் செலவு

இந்த தாமரைக் கோபுர திட்டத்திற்கு இரண்டு சீன நிறுவனங்களுக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டன. இதன் நிர்மாணிப்பு செலவுகளுக்காக சீனாவின்  எக்சிம் (Exim Bank of China) வங்கியிடம் கடன் பெற்றுக் கொள்ள முடிவுசெய்யப்படதோடு,  இதற்கான ஒப்பந்தங்கள் சீனாவின்  BRI – Belt and Road Initiative எனப்படும் செயல்திட்டத்தின் கீழ் கைச்சாத்திடப்பட்டன. அதன்படி இத்திட்டத்திற்கு செலவாகும் 80 வீதமான நிதியினை எக்சிம் வங்கியும், மீதி 20 சத வீதத்தினை தொலைத்தொடர்பு ஒழுங்கு படுத்தல் ஆணைக்குழுவும் ஏற்றுக்கொள்வதாகவும் தீர்மானிக்கப்பட்டது. கோபுரம் கட்டி முடிக்கப்பட்டதன் பின்னர் அதன் மூலம் ஈட்டப்படும் வருமானத்தைக் கொண்டு 40 வருடங்களில் கடன் தொகை மீள செலுத்தப்படும் எனவும் ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன. எவ்வாறான போதிலும் 912 நாட்களில் அதாவது 2015 இல் இந்த கோபுரம் பூர்த்தி செய்யப்படும் என்ற குறிக்கோளுடன் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது எனினும் இது முழுவதுமாக கட்டி முடிக்க 7 வருடங்கள் சென்றன.

புகைப்பட உதவி -Ada derana.lk

கோப் குழு

2017களில் கோப் குழுவின் தலைவரும் அப்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான சுனில் ஹந்துன்நெத்தி தலைமையில்  தொலைத்தொடர்பு ஒழுங்கு படுத்தல் ஆணைக்குழுவின் அதிகாரிகளிடம் தாமரைக் கோபுரம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன்போது பல்வேறு ஊழல்கள் இக் தாமரைக் கோபுர திட்டத்தில் இடம்பெற்றுள்ளது என்பது வெளிப்படுத்தப்பட்டுள்ளது

தாமரை கோபுரத்தை கட்டியெழுப்பும் ஒப்பந்தம் 2012 நவம்பர் 12ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட அதேவேளை, அவ் ஒப்பந்தத்தின்படி 912 நாட்களுக்குள் அதாவது 2015 மே மாதம் 12ம் திகதி பூர்த்தி செய்யப்பட வேண்டும். ஒப்பந்தம் கைச்சாத்திடப் பட்டது 2012 ஜனவரி மாதத்தில் ஆகும். அந்த ஒப்பந்தத்தின் படி இறுதி நாளில் பூர்த்தி செய்யப்பட்டது அத்திவாரம் இடும் பணிகள் மாத்திரமே. இந்த ஒப்பந்தத்தின் முழுப் பெறுமதி 104.3 அமெரிக்க டொலர்கள் ஆகும். அதில் 32.28 மில்லியன் ( சுமார் 600 கோடி ) செலவானது அத்திவார கொங்கிறீட்  இடும் பணிகளுக்கு  மட்டுமே செலவானது, என்ற போதிலும் அந்த செயற்திட்டமும்  முழுமையாக பூர்த்தி செய்யப்படவில்லை.

உள்ளக தோற்றம் -புகைப்பட உதவி – Twitter.com

காப்புறுதி  நிறுவனத்துக்கு 1145 மில்லியன் நிதி

இக்கட்டுமான ஒப்பந்தமிடல், ஒப்பந்தத்துக்காக நிறுவனங்கள் தெரிவு செய்தல், வேலை விபரங்கள் போன்ற அனைத்திலும் சிக்கல்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டது. அதேபோன்று ஒப்பந்தத்தின் படி குறித்த காலக்கெடுவில் பணியை பூர்த்தி செய்யாத நிறுவனங்களின் மீது எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. 

ராஜபக்ஷ ஆட்சி காலத்தில் உருவான ஹம்பாதோட்ட துறைமுகம், மத்தள விமான நிலையம், சூரியவெவ விளையாட்டரங்கம் மற்றும் கொழும்பு தாமரைக் கோபுரம் போன்ற செயற்திட்டங்களுக்காக சுமார் 2000 அமெரிக்க டொலர்கள் செலவழிக்கப்பட்ட அதே வேளை திட்டங்களுக்கு செலவாகும் பணத்தை விட மேலதிகமாக 20 சத வீத அளவிலான பணம் கமிஷனாக செலுத்தப்பட்டுள்ளதாக  அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.  கோபுரத் திறப்பு விழாவின் போது மைத்திரிபால சிரிசேன அவர்கள் இத்திட்டத்தின் ஊழல் மோசடிகள்  குறித்து கூறியதன் பின்னர் எக்சீம் வங்கியானது  தாம் கொடுப்பதாக இருந்த 19 பில்லியனை 12 பில்லியனாக  வரையறுத்தது.

கணக்காய்வின்  போது வெளியான விடயங்கள்

செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி கட்டுமானப் பணிகள் தாமதமாகியதால்  செயற்திட்ட நிதியில் 10 சதவீதம் அதாவது 10.43 பில்லியன் தாமத நிதியாக இலங்கைக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும். எனினும் அந்த நிதி பெறப்படவில்லை என்பது 2017ம் ஆண்டு கணக்காய்வின் போது கண்டறியப் பட்டது. 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியிடப்பட்ட அறிக்கையில் இவ் ஊழல்கள் வெளியாகின.

தாமரை கோபுரம் கட்டுமானத்துக்காக சீன Exim வங்கியிடம் இருந்து பெறப்பட்ட கடன் தொகையின் தவணைப் பணமாக 722 கோடிக்கு அதிக பணத்தை தொலைத்தொடர்பு ஒழுங்கு படுத்தல் ஆணைக்குழு செலுத்தியுள்ளதாக தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக அரசின் ஒருங்கிணைந்த நிதியில் வரவு வைக்கப்படும் தொகையை குறைக்க வேண்டிய நிலைமையும் ஏற்பட்டுள்ளது.

குறித்த காலத்தில் செயற்திட்டத்தை பூர்த்தி செய்யாததால் மொத்த கடன் தொகையில் 76% அதாவது 1230கோடி மட்டுமே வழங்கப்பட்டது. மீதி 393 கோடியை பெற்றுக்கொள்ள எந்த வழியும் எட்டப்படவில்லை. முழு கடன் தொகைக்குமாக செலுத்தப்பட்ட காப்புறுதி கட்டணம், முகாமைத்துவ கட்டணம் என்பதாக 53 கோடிக்கும் அதிக பணம் செலுத்தப்பட்டுள்ளதாக ஆய்வு குறிப்பிடுகிறது. 

ஆரம்ப ஒப்பந்தத்தின்படியே சீன நிறுவனம் 912 நாட்களில் பணிகள் பூர்த்தி அடைந்திருந்தால் அப்போதில் இருந்து வருடாந்தம் 168 கோடி ஆதாயம் கிடைத்திருக்கும். 2017ம் ஆண்டு  அக்டோபர் 31ம் திகதி கட்டிடம் பூர்த்தி செய்யப்பட்டிருக்கும். ஆனால் 2019 ஆகஸ்ட் 31 வரை இக்கட்டுமானம் முடிக்கப்படவில்லை இதனால் பாரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக  அரசாங்க தலைமை கணக்காய்வாளரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிங்களத்தில்: குசும்சிரி விஜேவர்தன/Roar Sinhala
தமிழில்: சந்திரன் புவனேஷ்
தகவல் மூலம்: elakiri.com

Related Articles