அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு யார் இந்த இலங்கைத் திருநாட்டை வழிநடத்துவார்கள் என்பதை தீர்மானிக்கும் விதமாக, இந்த ஆண்டு நவம்பர் 9 முதல் டிசம்பர் 9 வரையிலான காலப்பகுதியில் இலங்கை தனது எட்டாவது சனாதிபதித் தேர்தலை நடாத்த எதிர்பார்த்துள்ளது. எந்தவொரு தேர்தலையும் போலவே, இம்முறையும் இந்தத் தேர்தலை எதிர்பார்த்திருக்கும் இக் காலகட்டத்தில், அனைத்து அரசியற் கட்சிகளும், எந்த வேட்பாளர் தமது கட்சியை வெற்றியடையச் செய்ய தேவையான வாக்குகளை பெற தகுதியானவர் என்பதை தீர்மானிக்கும் செயற்பாட்டில் இருப்பதால்; தீவிரமான அரசியல் நடவடிக்கைகளை அக்கட்சிகளினிடையே அவதானிக்க ஏதுவாக உள்ளது.
நம்மில் பலருக்கு இந்தத் தேர்தல், அநேகமானவர்களைப் போல, வெறும் வெற்று அரசியற் கூக்குரலும், உற்சாகமான ஊளை அருவெறுப்பொலியுமே தவிர வேறொன்றுமில்லை என் கருதலாம். ஆனால் அரசியல் மற்றும் நற்குடிவாழ்வில், குடிமக்களின் செய்வினைமிக்க பங்கேற்பானது ஓர் செயற்திறன் மிக்க சனநாயகத்திற்கு மிகவும் இன்றியமையாததும் முதன்மையானதும் ஆகும். எனவே இதுவே அதைச் செயற்படுத்த சிறந்த தருணமாகும். சனாதிபதிப் பதவி என்றால் என்ன, ஏன் இப் பதவி உருவாக்கப்பட்டது, அப் பதவிக்கு வரையறுக்கப்பட்ட அதிகாரங்கள் மற்றும் வரம்புகள் என்ன என்பனவற்றை கண்டறிவது அவசியமாகும்.
சனாதிபதிப் பதவி
1972ம் ஆண்டு, முதலாம் அரசியலமைப்புச் சட்டம் மூலம் சனாதிபதிப் பதவியானது இலங்கைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. அந்தக் கால கட்டத்தில் அது ஓர் பெயரளவிலான, எவ்வித ஆட்சி அதிகாரமும் அற்ற ஓர் அலுவலக பதவியாகவே காணப்பட்டது. உண்மையில் இலங்கையின் ஆட்சி அதிகாரமானது அப்போது ஒரு பாராளுமன்ற அமைப்பிலான அரசாங்கத்தின் கீழ் பிரதம மந்திரியிடமே (சிறிமாவோ பண்டாரநாயக்க) காணப்பட்டது.
1978ம் ஆண்டு இரண்டாம் அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின் படி இம்முறைமை மாற்றப்பட்டு நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதி ஆட்சிமுறை அமுல் படுத்தப்பட்டது. இத் திருத்தத்தின் படி சனாதிபதிக்கு (ஜே.ஆர். ஜெயவர்த்தன) வழங்கப்பட்ட பலம்மிக்க சக்தி வாய்ந்த ஆட்சி அதிகாரங்கள் இன்றுவரையும் கேள்விக்குள்ளாக்கப்படுகின்றன.
ஒரு நிலையான நிர்வாக அதிகாரம் கொண்ட சனாதிபதி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அழுத்தங்களால் எளிதில் திசைதிருப்பப்படமாட்டார் மற்றும் சிறுபான்மை மக்களின் நலன்களின் பாதுகாப்பையும் இப் பதவி உறுதி செய்யும் என்ற வாதத்தின் அடிப்படையில் ஜே.ஆர். ஜெயவர்த்தன அவர்களால் 1966ம் ஆண்டு முதல், நிறைவேற்று அதிகாரம் கொண்ட நிர்வாக சனாதிபதிப் பதவிக்கு பரிந்துரைகள் செய்யப்பட்டன. இது இப்போது மிகப்பெரிய விவாதத்துக்குரியதாகியுள்ளது. இன்றைய சமகால இலங்கை அரசியலில் நிறைவேற்று அதிபர் பதவி மிகவும் சர்ச்சைக்குரிய விடயமாக மாறியுள்ளது.
தேர்தல் முறை
இலங்கை தனது முதலாவது நாடளாவிய தேசியத் தேர்தலை 1947ம் ஆண்டு பாராளுமன்ற ஆட்சி முறையின் கீழ் நடாத்தியது. ஆனால் 1978ம் ஆண்டு நிறைவேற்று சனாதிபதிப் பதவி அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும், ஜே. ஆர். ஜெயவர்தன அவர்கள் இரண்டாவது முறையாக சனாதிபதிப் பதவிக்கு போட்டியிட முடிவு செய்த போதே, முதன்முறையாக சனாதிபதித் தேர்தல் நடைபெற்றது.
இலங்கையில் சனாதிபதித் தேர்தலானது நாடளாவிய ரீதியில் ஒரே நாளில் நடைபெறுகிறது. மேலும் ‘தரவரிசை-தேர்வு வாக்களிப்பு’ (ஆர்.சி.வி) அல்லது ‘விருப்பு வாக்களிப்பு’ முறையின் கீழ் வாக்குகளின் தரவரிசையின் அடிப்படையின் மாறுபாட்டைப் பயன்படுத்தி சனாதிபதி தேர்ந்தெடுக்கப்படுகிறார். இதில் வாக்காளர்கள் தமது விருப்பப்படி வேட்பாளர்களை வரிசைப்படுத்துகிறார்கள் (ஒரு வாக்காளருக்கு மூன்று விருப்பத் தேர்வுகள் மட்டுமே).
சனாதிபதித் தேர்தல் எப்பொழுது நடைபெறுகிறது?
இலங்கையின் முதலாம் அரசியலமைப்புச் (1972) சட்டத்தின் படி சனாதிபதிப் பதவிக்கான காலம் நான்கு ஆண்டுகள் மற்றும் சனாதிபதிப் பதவி வகிப்பு இரண்டு தடவைகள் மாத்திரமே எனவும் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் இரண்டாவது அரசியலமைப்புச் (1978) சட்டத் திருத்தத்தின் கீழ் பதவிக்காலத்தை ஆறு ஆண்டுகளாக நீடித்து, பதவி வகிப்பு இரண்டு தடவைகள் மாத்திரமே என மீண்டும் வரையறுக்கப்பட்டது.
2010ம் ஆண்டில், அரசியலமைப்புச் சட்டத்தின் 18 ஆவது திருத்தத்தின் படி சனாதிபதிப் பதவி வகிப்பு இரண்டு தரங்கள் மட்டுமே என்ற சட்டத்தின் நீக்கம், சர்வாதிகாரத்திற்கான வழிவகைகளை உருவாக்கியது. ஆனால் அரசியலமைப்புச் சட்டத்தின் 19 ஆவது திருத்தம், 2015ம் ஆண்டு மீண்டும் நிறைவேற்றப்பட்டது. அதன் மூலம் சனாதிபதிப் பதவிக்கான காலத்தை 5 ஆண்டுகளாக சுருக்கியும் மற்றும் சனாதிபதிப் பதவி வகிப்பு இரண்டு தடவைகள் மட்டுமே எனவும் வரையறுக்கப்பட்டது.
சனாதிபதித் தேர்தல் எவ்வாறு நடைபெறுகிறது?
சனாதிபதித் தேர்தல் சனாதிபதியின் பதவிக்காலம் முடிவடைவதற்கு ஒரு மாதத்திற்கு முன் நடைபெறவேண்டும், ஆனால் இரண்டு மாதங்களுக்கு முன்னதாக நடைபெறக்கூடாது. எவ்வாறாயினும், சனாதிபதி தனது முதல் பதவிக்காலத்தின் நான்கு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் எந் நேரத்திலும் இரண்டாவது முறையாக மீண்டும் சனாதிபதி தேர்தல் நடத்த மேல்முறையீடு செய்ய அனுமதியுண்டு.
ஒரு சனாதிபதியின் உத்தியோகபூர்வப் பதவிக்காலம் முடிவுக்கு வரத் தொடங்கும் போது (அல்லது தேர்தலை முன்கூட்டியே நாடாத்துவதில் சனாதிபதி ஆர்வம் காட்டினால்) தேர்தல் ஆணையம் நியமன உத்தரவை வெளியிட வேண்டும், இது அடிப்படையில் வேட்பு மனுக்களை ஏற்றுக்கொள்வதற்கான திகதியை நிர்ணயிக்கும் வர்த்தமானியாகும். மேலும் வேட்பு மனுக்களை ஏற்றுக்கொள்வதற்கான திகதி நியமன உத்தரவை வெளியிட்ட திகதியிலிருந்து 16 நாட்களுக்கு குறைவானதாகவும் மற்றும் 21 நாட்களுக்கு மேற்பட்டதாகவும் நிர்ணயிக்கப் படாது. வேட்பு மனுக்களை ஏற்றுக்கொள்வதற்கான திகதியில், ஒரே நாளில் வேட்புமனுக்கள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன, பொதுவாக காலை 8 மணி முதல் 11 மணி வரை வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் நேரமாகும் (ஆட்சேபனைகளுக்கு கூடுதல் காலம் வழங்கப்படும்). மற்றும் தேர்தலுக்கான திகதி வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட திகதியிலிருந்து நான்கு வாரங்களுக்கு குறையாமலும், ஆறு வாரங்களுக்கு மிகையாகாமலும் நிர்ணயிக்கப்படவேண்டும்.
அதன் பிறகு குறைந்த பட்சம் ஒரு மாதம் முதல் அதிக பட்சமாக ஆறு வாரங்கள் வரை தேர்தல் பிரச்சாரப் பணிகள் அனுமதிக்கப்படுகின்றன. ஆனால் அனைத்து தேர்தல் பிரச்சாரப் பணிகளும் தேர்தலுக்கு 48 மணித்தியாலங்களுக்கு முன்னதாக முடிவடைய வேண்டும்.
வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக பல்வேறு வகையான விதிமுறைகள் கடைபிடிக்கப் படுகின்றன, மேலும் வாக்கெடுப்புகள் சுதந்திரமாகவும், நியாயமானதாகவும், ரகசியமாகவும் நடைபெறுவதை உறுதிசெய்ய குறிப்பிட்ட விதிகள் உள்ளன -அவற்றை இந்த தொடரின் போது நாம் மேலும் விரிவாக ஆராய்வோம்.
வாக்கெடுப்பு பொதுவாக காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். மாலை 4 மணிக்குள், தமக்குரிய வாக்கெடுப்பு நிலையங்களுக்கு சமூகமளிக்க முடியாதவர்கள் முன்னதாகவே தபால் மூலம் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள். இத் தபால் மூலம் வாக்கெடுப்பில் அதிகமாக தேர்தல் கடமைகளில் ஈடுபடும் அரசு அதிகாரிகள், அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், முப்படை வீரர்கள் மற்றும் அதன் பணியாளர்கள், மற்றும் நாடு முழுவதும் கடமையில் ஈடுபடும் காவல்துறை மற்றும் ஊர்காவற் படை வீரர்கள் ஆகியோர் வாக்களிப்பார்கள்.
இதேவேளை வாக்கெடுப்பு நிலையங்களில் அளிக்கப்பட்ட வாக்குகளின் கணக்கெடுப்பு வாக்குப் பெட்டிகள் வாக்குக் கணக்கெடுப்பு மையத்திற்கு பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்ட பிறகு இரவு 7 மணியளவில் ஆரம்பமாகும்.
போட்டியிடும் ஒவ்வொரு அரசியற் கட்சியிலிருந்தும் அல்லது குழுவிலிருந்தும் ஐந்து வாக்கு கணக்கெடுப்பு முகவர்கள் ஒவ்வொரு வாக்குக்கணக்கெடுப்பு மையத்திற்கும் நியமிக்கப்படலாம். மற்றும் போட்டியிடும் ஒவ்வொரு அரசியற் கட்சி அல்லது குழுவிலிருந்து இரண்டு முகவர்களை ஒவ்வொரு தபால் வாக்குக்கணக்கெடுப்பு மையத்திற்கும் நியமிக்கலாம். மேலதிகமாக, சுயாதீன பார்வையாளர்களிடமும் மற்றும் பல்வேறு அமைப்புகளிடமும் தேர்தலின் பக்கச்சார்பற்ற தன்மையை உறுதிசெய்யும் பொறுப்பை ஒப்படைத்துள்ளனர்.
ஒவ்வொரு கணக்கெடுப்பு மையமும் அண்ணளவாக 10,000 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களுக்காக ஒதுக்கப்படுகிறது. மேலும் கணக்கெடுப்பு மையத்தின் தலைவராக, தலைமை கணக்கெடுப்பு அதிகாரி என்று அழைக்கப்படும் ஒரு மூத்த பொது ஊழியர் கணக்கெடுப்பை தலைமை தாங்க நியமிக்கப்படுகிறார். மற்றும் தலைமை கணக்கெடுப்பு அதிகாரியின் மேற்பார்வையின் கீழ் ஆறு உதவி தேர்தல் பொறுப்பு அலுவலர்களும் 20 முதல் 30 வரையிலான அரசு ஊழியர்களும் மாறுபட்ட தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
‘தரவரிசை-தேர்வு வாக்களிப்பு’ (ஆர்.சி.வி) அல்லது ‘விருப்பு வாக்கு’ முறையில், வாக்காளர்கள் தமது விருப்பத்தின் அடிப்படையில் மூன்று வேட்பாளர்களை வரிசைப்படுத்துகிறார்கள். எந்தவொரு வேட்பாளரும் பெரும்பான்மை (50% க்கும் அதிகமான) வாக்குகளைப் பெறாவிட்டால், அதிகமாக வாக்குகளைப் பெற்ற முதல் இருவரைத் தவிர மற்ற அனைத்து முன்னணி வேட்பாளர்களும் அகற்றப்படுவார்கள். இதன்பின்பு இரண்டாம் கட்ட விருப்பத்தேர்வுகள் மீதமுள்ள இரண்டு வேட்பாளர்களுக்கு இடையில் நடைபெறும். நீக்கப்பட்ட வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளில் இருந்து 2ம் விருப்பத் தெரிவாக போட்டியில் நிற்கும் வேட்பாளருக்குரிய வாக்குகள் எண்ணப்பட்டு அவர்களின் முதலாம் கட்ட எண்ணிக்கையுடன் கூட்டப்பட்டு வெற்றியாளர் தீர்மானிக்கப்படுவார். இந்த முறையில் கூட்டாக அதிக வாக்குகளைப் பெற்ற வேட்பாளர் சனாதிபதியாக அறிவிக்கப்படுவார்.
நிறைவேற்று அதிகார சனாதிபதி செய்ய வேண்டிய கடமைகள் என்ன?
சனாதிபதியின் கடமைகளில் முதன்மையானது நாட்டின் உச்ச சட்டமான அரசியலமைப்பு சட்டம் மதிக்கப்படுவதையும் பேணப்பபடுவதையும் உறுதிசெய்வதாகும். சனாதிபதி தேசிய நல்லிணக்கத்தையும் ஒருங்கிணைப்பையும் ஊக்குவிக்க வேண்டும் – அதாவது இலங்கையின் வாழும் சகல மதத்தவரினதும், இனத்தவரினதும் மற்றும் பிற அடையாளக் குழுவினரதும் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்படுவதையும், இலங்கை நாட்டின் சட்டமைப்பின் முன் அவர்கள் அனைவருக்கும் சம உரிமைகள் மற்றும் வாய்ப்புகள் வழங்கப்படுவதையும் உறுதிசெய்வதாகும்.
2010ம் ஆண்டில் அரசியலமைப்புச் சட்டத்தின் 18 ஆவது திருத்தத்தால் அகற்றப்பட்ட பின்னர் மீண்டும் 2015ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட அரசியலமைப்புச் சபையின் செயற்படுகளை கண்காணித்தல், சுயாதீன ஆணைக்குழுக்களைப் பராமரித்தல் மற்றும் அதன்மூலம் மேற்கொள்ளப்படும் பொதுச் சேவை விவகாரங்களைக் கண்காணித்தல் என்பனவும் சனாதிபதியின் பொறுப்புக்களாகும். நாட்டில் நடக்கும் தேர்தல்கள் சுதந்திரமாகவும், நியாயமானதாகவும் நடைபெற ஏற்ற நடவடிக்கைகளை சனாதிபதி மேற்கொள்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சனாதிபதிக்கு எவ்வகையான அதிகாரங்கள் உள்ளன?
மாநிலத் தலைவர், நிறைவேற்று அதிகாரத் தலைவர், அரசாங்கத் தலைவர் மற்றும் ஆயுதப் படைகளின் தளபதியாக, சனாதிபதிக்கு பரந்த அளவிலான அதிகாரங்கள் உள்ளன. யுத்தத்தையும் சமாதானத்தையும் அறிவிப்பதும் மற்றும் அவசரகால நிலையை அறிவிப்பதும் இதில் அடங்கும் (எனினும் அவசரகால நிலையை ஒரு மாதத்திற்கும் மேலாக நீடிக்க பாராளுமன்ற ஒப்புதல் தேவை).
சட்டமன்றத்தைப் பொறுத்தவரையில், பாராளுமன்றத்தில் அரசாங்கக் கொள்கை அறிக்கையை உருவாக்க சனாதிபதிக்கு பூரண அதிகாரம் உள்ளது, இது ஒரு அரசாங்கத்தின் அரசியல் நடவடிக்கைகள், திட்டங்கள் மற்றும் அனைத்து சட்டமன்றக் கூட்டத் திட்டங்களுக்கான நோக்கங்கள் ஆகியவற்றின் அறிவிப்பாகும். மேலதிகமாக, பாராளுமன்றத்தை கூட்டவும், ஒத்திவைக்கவும் மற்றும் கலைக்கவும் சனாதிபதிக்கு அதிகாரங்கள் உள்ளன.
சனாதிபதியே இலங்கையின் அதிகாரப்பூர்வ முத்திரையின் பாதுகாவலராவார், ஆகையால் அவருக்கு பிரதம மந்திரி, உச்ச மேல்முறையீட்டு நீதிமன்றங்களின் நீதிபதிகள் மற்றும் சனாதிபதியின் ஆலோசகர்களை நியமிப்பதற்கான அங்கீகாராமும் அதிகாரமும் உண்டு. மற்றும் வெளிவிவகாரத் தூதர்கள், உயர் ஸ்தானிகர்கள் மற்றும் பிற இராஜதந்திர முகவர்களை நியமிப்பதும், அவர்களுக்குரிய அங்கீகாராங்களை வழங்குவதும் மற்றும் அவர்களை வரவேற்பதும் சனாதிபதியின் பொறுப்புக்களேயாகும்.
சனாதிபதியின் அதிகாரங்கள் எவ்வாறு கட்டுப்படுத்தப்படுகின்றன?
சனாதிபதிப் பதவியின் மீதான கட்டுப்பாடுகள் மிகவும் உட்சிக்கலானவையும் மற்றும் நிபுணர்களின் கருத்துக்களுக்கும் விளக்கங்களுக்கும் உட்பட்டவையாகும். நாட்டின் மிகவும் பலம் மற்றும் சக்தி வாய்ந்த பதவியாகினும் அப்பதவிக்கும் வரம்புகளும் வரையறைகளும் உண்டு. உதாரணமாக, சனாதிபதிப் பதவியில் இருக்கும் வரை குடியியல் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகளில் இருந்து விதி விளக்கமளிக்கப்படுவார். மற்றும் அவரது நடவடிக்கைகள் அனைத்தும் “அரசியலமைப்பு அல்லது எழுதப்பட்ட சட்டத்தின் விதிகளுக்கும், சர்வதேச சட்டங்களுக்கும் அவற்றின் வழக்கு அல்லது வழக்காறுகளுக்கும் முரண்பாடானவையாக அல்லாமல் ஒரு சனாதிபதியினால் புரியக்கூடிய அங்கீகரிக்கப்பட்ட செயல்களாக இருக்கவேண்டும்.”
நாட்டின் பாராளுமன்றமானது சனாதிபதியை அவரது செயற்பாடுகளுக்கும் நடவடிக்கைகளுக்கும் அவரது அதிகாரப் பிரயோகங்களுக்கும் மற்றும் அரசியலமைப்பு சட்டத்தின் கீழுள்ள கடமைகள் மற்றும் செயல்பாடுகளுக்கும் பொறுப்புடையவாராக இனங்காண முடியும். எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரும், சனாதிபதி வேண்டுமென்றே அரசியலமைப்பை மீறிய அல்லது தேசத்துரோகம், லஞ்சம், தவறான நடத்தை, ஊழல் அல்லது அதிகார துஷ்பிரயோகம் ஆகியவற்றில் குற்றவாளி அல்லது மனநிலை, உடல்நிலை ரீதியான பலவீனங்கள் காரணமாக தனது கடமைகளை நிறைவேற்ற முடியாதவர் என்று கருதுவாராயின் சனாதிபதியை உச்சநீதிமன்றத்தால் விசாரிக்கச் செய்து பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா வாக்களிப்பின் மூலம் பதவி நீக்க முடியும்.
இருப்பினும் இது எளிதில் செய்யப்படுவதில்லை. சனாதிபதிக்கு எதிராக ஒரு ‘‘குற்றச்சாட்டு பிரேரணை’’ பாராளுமன்ற உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கிற்கும் குறைவற்றவர்களால் அங்கீகரிக்கப்பட வேண்டும். பின்பு உச்ச நீதிமன்றத்தில் சனாதிபதிக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றச்சாட்டுகளுக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தால், சனாதிபதியை நீக்க பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் மீண்டும் வாக்களிக்க வேண்டும். மேலும் இக் குற்றச்சாட்டுகள் நிரூபணமாகும் முன் உச்சநீதிமன்றத்தில் நேரில் அல்லது ஒரு வழக்கறிஞர் மூலம் தனக்கெதிரான குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக வழக்கு தொடுக்க சனாதிபதிக்கு உரிமை உண்டு.
இதேபோல், அரசியலமைப்பின் 19வது திருத்தம் சனாதிபதியின் அதிகாரங்களில் பல கட்டுப்பாடுகளையும் நிலுவைகளையும் வைத்தது. உதாரணமாக, இது அரசியலமைப்பு சபையை மீண்டும் அறிமுகப்படுத்தியது (2001 இல் 17வது திருத்தத்துடன் கொண்டுவரப்பட்டது, ஆனால் 2010 இல் 18வது திருத்தத்துடன் நீக்கப்பட்டது) இது சுயாதீன ஆணையங்களை பராமரிக்கும் பணியாகும்.
தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களை பல்வேறு ஆணையங்களுக்கு (தேர்தல் ஆணையம், தேசிய காவல் ஆணையம், லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையம்…) பரிந்துரைக்க சனாதிபதிக்கு அதிகாரமுண்டு, இருப்பினும் பரிந்துரைக்கப்பட்டவர்களை அரசியலமைப்பு சபையின் – (பிரதமர், சபாநாயகர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரின்) ஒப்புதல் இல்லாமல் நியமிக்க முடியாது – இதன் மூலம் நிறைவேற்று அதிபரின் சில அதிகாரங்களை திறம்படக் கட்டுப்படுத்துவதுடன் பிற நிர்வாக நிறுவனங்களையும் பலப்படுத்த முடியும்.
தேர்தல் காலம் மற்றும் நாட்டின் மிக உயர்ந்த பதவியை பல ஆர்வலர்கள் பெற முயற்சி செய்யும் நிலையில் இந்த பதவியின் வரலாறு, அதன் கட்டமைப்புகள் மற்றும் அதிகாரங்களைப் பற்றி அறிந்து கொள்வதற்கும், அத்தகவலை சரியாக அறிந்து நாம் தேர்தல் முடிவுகளை எடுக்கவும் இது ஒரு நல்ல சந்தர்ப்பம். சனாதிபதி பதவியைப் பற்றி உங்களது என்ன கருத்து என்ன? நிர்வாக சனாதிபதி பதவி பற்றி நீங்கள் எப்படி உணருகிறீர்கள்? இலங்கையின் சனாதிபதி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அழுத்தங்களிலிருந்து விடுபட்டு சுதந்திரமாக செயற்படவேண்டுமா? நிர்வாக சனாதிபதி உண்மையில் சிறுபான்மை நலன்களைப் பாதுகாக்கிறாரா? சிலரது கருத்துக்களைப் போல நிறைவேற்று அதிபர் பதவி ஒழிக்கப்பட வேண்டுமா? இவையனைத்தும் தேர்தலுக்கு முன்னர் நாம் சிந்திக்க வேண்டிய மிக முக்கியமான விடயங்களாகும்.