Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

நமது பிரதிநிதிகள் பாராளுமன்றத்தில் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள்?

எமக்காக நாம் தெரிவு செய்த பிரதிநிதிகள், நமக்காக என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள் என்பது தொடர்பில் அறிந்திருக்கிறோமா?

நம்மால் நமது கருத்துக்களை பொதுமன்றத்தில் வெளிப்படுத்த அனுப்பிவைக்கபட்ட பிரதிநிதிகள் அதனை சரியாக செய்கிறார்களா ? இல்லை நமது கருத்துக்களை பொய்யாக்கிக்கொண்டு இருக்கிறார்களா என்பது தொடர்பில் அறிந்திருக்கிறோமா ?

manthri.lk இணையத்தளம்

manthri.lk இணையத்தளம்

இவர்களை எல்லாம் முறையாக கண்காணித்து, பாராளுமன்றத்தில் நமது பிரதிநிதிகள் எத்துணை வினைத்திறனாக செயல்படுகிறார்கள் என்பதனை அறிந்துகொள்ளக்கூடிய ஒரு ஊடகம் இருப்பின் எவ்வாறு இருக்கும் ? தரவுகளின் அடிப்படையில் எங்கள் பிரதிநிதிகளை கேள்வி கேட்ககூடிய சூழல் அமைந்தால் எப்படி இருக்கும் ?

இவ்வாறு யோசிப்பவர்களாக நீங்கள் இருப்பின், இலங்கை பாராளுமன்றத்திற்கு தேர்வு செயப்பட்ட பிரதிநிதிகளை கண்காணித்து, அவர்களது பாராளுமன்ற செயல்பாடுகளுக்கு அமைவாக தரப்படுத்தி, யார் வினைத்திறன் மிகுந்த மக்களின் பிரதிநிதி என்பதனை அடையாளப்படுத்த http://www.manthri.lk/ என்கிற இணையத்தளம் பற்றி நீங்கள் அறிந்திருப்பது அவசியம்.

Manthri இணையத்தளம் இயங்குவது எப்படி ?

இலங்கையில் பாராளுமன்றத்துக்கு தேர்வு செயப்பட்ட 225 பிரதிநிதிகளும், மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற பாராளுமன்றத்தில் திறம்பட செயல்படுகிறார்களா என்பதனை, மதிப்பீட்டு பட்டியல் (Scorecard) மூலமாக நமக்கு தரப்படுத்தி வழங்குகின்ற ஓர் இணையத்தளம் இதுவாகும்.

குறித்த இணையத்தளமானது Verité Research என்கிற ஆய்வு நிறுவனத்தின் பின்னணியில் இயங்குவதன் காரணமாக, பாராளுமன்றத்தில் இடம்பெறும் நிகழ்வுகளின் அடிப்படையிலும், அதில் பங்குகொள்ளும் பிரதிநிதிகளின் வினைத்திறன் அடிப்படையிலும் பிரதிநிதிகளுக்கான தரப்படுத்தல் கணனியின் பாரபட்சமற்ற குறியீட்டு முறைமையின் (impartial coding system) ஊடாக வழங்கபடுகிறது. பாராளுமன்றத்தில் கலந்துரையாடப்படும் 42 விதமான தலைப்புக்கள், இவைதவிரவும் இடம்பெறும் வெவ்வேறு கலந்துரையாடல்கள் என்பனவும், நாளாந்த அடிப்படையில் தரவுகளாக சேகரிக்கப்பட்டு தரப்படுத்தலுக்கு பயன்படுத்தப்படுகிறது. கீழ்வரும் படிமுறைகளை அடிப்படையாகக் கொண்டு, Verité Research தரவுகள் இணையதளத்தில் நிரல்படுத்தபடுகின்றன.

படிமுறை 1 – பாராளுமன்ற விவாதங்கள் தொடர்பில் பாராளுமன்றத்தினால் வெளியிடப்படும் அறிக்கைகளை பெற்றுக்கொள்ளல்.

படிமுறை 2 – Verité Research வடிவமைக்கபட்ட குறியீட்டு முறைமைகளூடாக தரவுகளை ஆய்வு செய்தல்.

படிமுறை 3 – சேகரிக்கபட்ட தரவுகளை பிரத்தியேக மென்பொருளைக் கொண்டு கணணிமயப்படுத்தல்

இவற்றை தவிர்த்து, ஒவ்வரு பிரதிநிதிக்குமென தனியான சுயவிபர நிரல் (profile) தனியாக நிர்வாகிக்கபடுகிறது. இதன் மூலமாக, தனியாகவோ, ஏனைய பிரதிநிதிகளுடனோ ஒப்பீடு செய்து நமது பிரதிநிதிகளின் செயல்பாடு எவ்வாறு உள்ளது என்பதனை தீர்மானிக்கக் கூடியதகாவும் உள்ளது.

பாராளுமன்றத்தில் நம் பிரதிநிதிகள்

பாராளுமன்ற செயற்பாடுகள் மற்றும் கலந்துரையாடல்கள் அடிப்படையில் முதல் பத்து இடங்களை வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் (manthri.lk)

2015/16ம் ஆண்டில் எடுக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் (01/10/2015 – 31/08/2016) இலங்கை பாராளுமன்றத்தில் மிக அதிகமாக செயல்பாடுகளை கொண்ட பிரதிநிதிகளின் விபரங்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன. தரவுகளின் பிரகாரம், எதிரணியில் உள்ள மக்கள் விடுதலை முன்னணியின் அனுரகுமார திசாநாயக்க முன்னணியிலும், இரண்டாம் இடத்தில் ஜக்கிய தேசிய கட்சியை சேர்ந்த புத்திக்க பத்திரணவும், எட்டாம் இடத்தில் சுதந்திர கட்சியின் பந்துல குணவர்த்தனவும் உள்ளார்கள். முதல் பத்து இடங்களிலும் பெருன்பான்மை கட்சிகளின் பிரதிநிதிகளே இடம்பெற்று இருக்கிறார்கள்.

தமிழர்களை அல்லது சிறுபான்மை இன மக்களை பிரதிநிதித்துவபடுத்தும் கட்சிகளின் பிரதிநிதிகளின் சார்பில் தமிழரசு கட்சியின் மட்டக்களப்பை பிரதிநிதித்துவபடுத்தும் ஞானமுத்து சிறிநேசன் முதன்மையான இடத்தில் உள்ளார். ஒட்டுமொத்த பிரதிநிதிகளின் செயல்பாட்டில் 19வது இடத்தில் இவர் உள்ளமை குறிப்பிடத்தக்கது. இவர் பாராளுமன்றத்தில் 12 வகையான கலந்துரையாடலில் 33 தடவைகள் பங்குபற்றி இருக்கிறார். அதிலும் குறிப்பாக,  நல்லிணக்க மற்றும் மீள் குடியேற்ற கலந்துரையாடலில் அதிகளவில் பங்குபற்றி இருக்கிறார் என்பதும் குறிப்பிடதக்கதாகும். இவர்களை தவிர்த்து 23வது இடத்தில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் பிரதிநிதி டக்களஸ் தேவானந்தா அவர்களும், 24வது இடத்தில் தமிழரசு கட்சியின் சுமந்திரன் அவர்களும், 29வது இடத்தில் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதி ரவூப் ஹக்கீம் அவர்களும் உள்ளார்கள். இவர்களை தொடர்ந்து ஏனைய சிறுபான்மை பிரதிநிதிகள் இடம்பெற்று இருக்கிறார்கள். குறிப்பாக, முதல் பத்து இடங்களுக்குள் சிறுபான்மையின மக்களை பிரதிநிதித்துவபடுத்தும் பிரதிநிதிகள் இடம்பெறாமை, நமது பிரதிநிதிகள் பாராளுமன்றத்தில் இடம்பெறும் அனைத்துவகை கலந்துரையாடல்களிலும் பங்குகொள்வதில்லை என்பதனை தெளிவுபடுத்துகிறது.

நல்லிணக்க மற்றும் மீள்குடியேற்றம் தொடர்பான கலந்துரையாடல்களில் முதன்மை வகிக்கும் பாராளுமன்ற உருப்பினர்கள் (manthri.lk)

நல்லிணக்க மற்றும் மீள்குடியேற்றம் தொடர்பான கலந்துரையாடல்களில் முதன்மை வகிக்கும் பாராளுமன்ற உருப்பினர்கள் (manthri.lk)

எவ்வாறு முன்னணியில் உள்ளவர்களை அறிந்துகொள்வதில் ஆர்வநிலையை கொண்டிருக்கிறோமோ, அதுபோல, யார் பின்வரிசையில் இடம்பெற்று இருக்கிறார்கள் என்பதனையும் அறிய நாம் தவறுவதில்லை. அதன் அடிப்படையில், பாராளுமன்றத்தில் எவ்விதமான வகையிலும் பங்குகொள்ளாமல் இறுதி மூன்று இடங்களையும் கீழ்வரும் பிரதிநிதிகள் கொண்டு இருக்கிறார்கள்.

சிறுபான்மை பிரதிநிதிகளை பொறுத்தவரையில், 221வது இடத்தில் ஜக்கிய தேசிய கட்சியை சார்ந்த தெளபிக் உள்ளார். இவர், 4தடவைகள் பாராளுமன்ற அமர்வுகளில் பங்குகொண்டுள்ளதுடன், எவ்விதமான கலந்துரையாடலிலும் ஈடுபடவில்லை என்பது குறிப்பிடதக்கது. இவருக்கு மேலான இடத்தில், இலங்கை காங்கிரஸ் கட்சியின் ஆறுமுகம் தொண்டமான் 213வது இடத்தில் உள்ளார். இவர், இரண்டு தடவை பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொண்டதுடன், இரண்டு தலைப்புகளிலும் கலந்துரையாடலில் ஈடுபட்டு இருக்கிறார்.

பாராளுமன்றத்தில் கலந்துரையாடப்பட்ட தலைப்புக்களின் அடிப்படையில், அதிகளவிலான சிறுபான்மை கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கெடுத்த தலைப்பாக நல்லிணக்க மற்றும் மீள் குடியேற்றம் அமைந்துள்ளது. நல்லிணக்க ஆட்சிகாலத்தில், மிகப்பெரும் பேசுபொருளாக மாறியுள்ள நல்லிணக்க மற்றும் மீள் குடியேற்ற அமைச்சின் செயல்பாடுகளில் பெரும்பான்மையாக சிறுபான்மை அமைச்சர்கள் பங்குபற்றியுள்ளதுடன், குறைந்தது ஒரு தடவையேனும் தங்களது குரலை பதிவு செய்து இருக்கிறார்கள் என்பது சிறிது ஆறுதலான விடயமாகும். ஏனைய பெரும்பான்மையான தலைப்புக்களின் கலந்துரையாடல்களில் சிறுபான்மை பிரதிநிதிகள் இடம்பெற்றுள்ளபோதிலும், அவர்கள் மிகுந்த ஈடுபாட்டுடன் ஈடுபடவில்லை அல்லது பெரும்பான்மை பிரதிநிதிகளுடன் ஒப்பிடுமிடத்து குறைவாகவே பங்குபற்றியுள்ளார்கள் என்பது தெளிவாகிறது.

2015/16 பாரளுமன்ற செயல்பாடுகள்

Manthri இணையத்தளம் மூலமாக மாதாந்தம் முக்கியமாக பாராளுமன்றத்தில் கலந்துரையாடப்படும் விடயங்கள், முதல்தடவையாக பாராளுமன்றத்தில் பங்குகொண்ட பிரதிநிதிகளின் செயல்பாடுகள், ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கேட்கப்பட்ட கேள்விகள் மற்றும் பதில்கள், வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றபட்ட மசோதாக்கள் என்பன தொடர்பிலும் அறிந்துகொள்ள கூடியாத உள்ளது.

இம்முறை வரவு செலவுதிட்டம் பாராளுமன்றத்தில் சமர்பிக்கபட்டது முதல், அதுதொடர்பிலான கலந்துரையாடல்கள் இடம்பெற்றமை, நிதி ஒதுக்கீடுகளில் ஏற்பட்ட மாற்றங்கள் என்பனவும் தரவு ரீதியாக பதிவிடப்பட்டு வந்தமை சிறப்பம்சமாகும்.

பாதீட்டின் நிதி ஒதுக்கீடு (manthri.lk)

இதன்போது, இம்முறை வரவு-செலவு திட்டத்தில் 70%மான நிதி ஒதுக்கீடு நிதி அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு, மாகாண மற்றும் உள்ளூராட்சிகள், பொது நிர்வாக அமைச்சு, கல்வி மற்றும் அதிவேக பாதை அமைப்பு அமைச்சு என்பவற்றுக்கு ஒதுக்கபட்டுள்ளது என்பதனை சுட்டிக்காட்டுவதாக உள்ளது.

Manthri தரவுகள் மூலம் சாதிக்க கூடியது என்ன?

குறித்த இணையதளத்தின் தரவுகள் மூலமாக, பாராளுமன்ற பிரதிநிதிகள் தொடர்பிலான எவ்விதமான இறுதி முடிவுகளையும் எடுக்க முடியாத போதிலும், நம்மால் நமக்காக தெரிவு செயப்பட்ட பிரதிநிதிகள் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பதனை பெருமளவில் கண்காணிக்க முடியும். குறிப்பாக, யார் எல்லாம் வினைத்திறனுடன் செயல்படுகிறார்கள், யார் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளுக்கு ஏற்ப அவற்றை பாராளுமன்றத்தின் கவனத்திற்கு எடுத்துச் செல்கிறார்கள் என்பதனை அறிந்துகொள்ள முடியும்.

இவ்வாறு ஒரு இணையத்தளம் உள்ளமையினால், குறைந்தது மக்கள் பிரதிநிதிகளும் பாராளுமன்றத்தில் தொடர்ச்சியாக வினைத்திறன் மிகுந்தவகையில் செயலாற்றும் வாய்ப்பும் அதிகமாகவே இருக்கும். காரணம், மக்களால் தேர்தலுக்கு பின்பும், மிக துல்லியமாக கவனிக்கபட்டுக்கொண்டு இருக்கிறோம் என்பதனை இந்த இணையத்தளம் அவர்களுக்கு நினைவுபடுத்திக்கொண்டே இருக்கும்.

 

Related Articles