பாகம் 01 – நதிக்கரையிலிருந்து உலகின் உச்சிக்கு
நோக்கியா!
இன்றைக்கு ஸ்மார்ட்ஃபோனில் கலக்கும் பலருக்கு இந்தப் பெயரே தெரிந்திருக்காது. ‘ஒருகாலத்தில் உலகை ஆண்ட செல்ஃபோன் தயாரிப்பு நிறுவனம்’ என்று அறிமுகப்படுத்தினால். ‘அப்படியா? சுமார் ஐம்பது வருஷம் இருக்குமா?’ என்று கேட்பார்கள்.
உண்மையில், செல்ஃபோன் கண்டுபிடித்தே அத்தனை வருடமாகவில்லை! நோக்கியாவின் ராஜ்ஜியமும் மிகச்சமீபத்தில்தான் சரிந்தது.
அதுவும் சாதாரண ராஜ்ஜியமா!
செல்ஃபோனுக்கு முன்பாக உலகை ஆக்கிரமித்திருந்த மற்ற எலக்ட்ரானிக் சாதனங்கள் எதிலும் ஒற்றைக்கம்பெனி எல்லா நாடுகளிலும் ஆதிக்கம் செலுத்தியதில்லை. ஜப்பானில் ஒருவர், அமெரிக்காவில் ஒருவர், ஐரோப்பாவில் ஒருவர் என்று கலந்துகட்டிதான் ஜெயிப்பார்கள். ஒரு சந்தையில் ஜெயிப்பவர் இன்னொன்றில் நுழையக்கூட இயலாது, அல்லது, நுழைந்து அடிவாங்கித் திரும்புவார், இரண்டாவது இடம், மூன்றாவது இடம் என்று திருப்தியடைவார்.
ஆனால், செல்ஃபோன் விஷயத்தில் நோக்கியாவுக்குக்கீழே இரண்டாவது இடத்தில்கூட யாரும் இல்லை. அவர்கள் நுழைந்த இடத்திலெல்லாம் சந்தைப்பங்கில் பெரும்பகுதியை ஆக்கிரமித்துக்கொண்டார்கள். மற்ற எல்லாரும் சேர்ந்து போராடினாலும் நோக்கியாவின் விற்பனையை எட்டமுடியாது என்கிற நிலைமை.
2007ம் ஆண்டு, நான் நோக்கியாவின் சரித்திரத்தைப் புத்தகமாக எழுதினேன் (‘நோக்கியா: கொள்ளை கொள்ளும் மாஃபியா: கிழக்கு பதிப்பகம் வெளியீடு). அதில் ஒரு வரி என்றால் ஒரே ஒரு வரிகூட அதன் சரிவு சாத்தியங்களைப்பற்றி எழுதவில்லை.
நான்மட்டுமல்ல, அப்போது நோக்கியாவைப்பற்றி எழுதிக்கொண்டிருந்த யாருமே இப்படியொரு சரிவை ஊகித்திருக்க வாய்ப்பில்லை. அந்த அளவுக்குச் சந்தையின் மன்னனாக நோக்கியா இருந்தது. அதன் ஆராய்ச்சிப்பிரிவும், உற்பத்தி, விற்பனை, சந்தைப்படுத்தல் போன்றவையும் மிக வலுவாக இருந்ததால், அவர்கள் வருங்காலத்துக்கும் தயாராக இருந்தார்கள் என்பதுதான் உண்மை.
ஆனால், அந்த வருங்காலத்தை அவர்களால் அனுபவிக்கமுடியவில்லை. முதலிடத்தில் இருந்த நோக்கியா, இரண்டாவது, மூன்றாவது இடத்துக்குக்கூடச் செல்லவில்லை, ஒரேயடியாக ஆட்டத்திலிருந்து காணாமல்போனது. ‘நோக்கியா’ என்ற பெயரே தெரியாத ஒரு தலைமுறையே உருவாகுமளவுக்கு மற்றவர்கள் சந்தையை ஆக்கிரமித்துவிட்டார்கள்.
என்ன நடந்தது? நோக்கியாவுக்கு ஏன் இப்படியொரு சரிவு? அதை அவர்கள் எப்படிக் கையாண்டார்கள்? இப்போது புதிய வடிவத்தில் நோக்கியாவால் மீண்டும் வெல்லமுடியுமா? அல்லது, மற்ற போட்டியாளர்கள் அதை மீண்டெழ விடமாட்டார்களா? புதிய தலைமுறையினரைப் புரிந்துகொண்டு அவர்களுக்கேற்ற செல்ஃபோன்களை நோக்கியாவால் தயாரிக்கமுடியுமா?
தொலைதொடர்புத்துறைக்குமட்டுமல்ல, ஒட்டுமொத்த பிஸினஸ் உலகுக்கும் நோக்கியாவின் சரிவு ஒரு பாடம். ஆங்கிலத்தில் “Case Study” என்பார்கள்: உலகின் நம்பர் ஒன் இடத்திலிருந்த ஒரு நிறுவனம் சில ஆண்டுகளில் காணாமலே போனது என்றால், அப்படி என்னதான் நடந்தது? எப்படிக் கோட்டைவிட்டார்கள்?
ஒருவேளை நோக்கியா இந்தச் சரிவிலிருந்து மீண்டு, பழைய உயரத்தில் பாதியை எட்டிவிட்டால்கூட, அது இன்னொரு Case Study ஆகிவிடும்: இனிமேல் எழ இயலாது என்று எல்லாரும் கைவிட்ட ஒரு நிறுவனம் விடாப்பிடியாக மேலே வந்தது எப்படி?
நோக்கியாவுக்கு இரண்டாவது இன்னிங்க்ஸ் உண்டா என்பதற்கான பதில் தெரிய, நாம் கொஞ்சம் காத்திருக்கவேண்டும். ஆனால் அதற்குமுன்னால், இது அவர்களுக்கு இரண்டாவது இன்னிங்க்ஸ் அல்ல, மூன்றாவது இன்னிங்க்ஸ் என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.
பலருக்கும் நோக்கியா ஒரு செல்ஃபோன் தயாரிப்பு நிறுவனமாகதான் அறிமுகம். ஆனால் அந்நிறுவனத்தின் வரலாறு தொடங்கியபோது, செல்ஃபோன்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கவில்லை, அட, அவ்வளவு ஏன், டெலிஃபோனைக் கண்டுபிடித்த அலெக்ஸாண்டர் கிரஹாம்பெல்கூட, அப்போது டீனேஜ் பையன்தான்!
1865ம் வருடம், ஃப்ரெடரிக் ஐடெஸ்டம் என்பவர் ஃபின்லாந்தில் ஒரு காகிதக்கூழ் நிறுவனத்தைப் பதிவுசெய்தார். 1871ல் தொடங்கப்பட்ட அந்த நிறுவனத்துக்கு ‘நோக்கியா’ (Nokia Ab) என்ற பெயர் சூட்டப்பட்டது.
ஃபின்னிஷ் மொழியில் ‘நோக்கியா’ என்ற சொல், “Sable” அல்லது “Pine Marten” என்ற மிருகத்தைக் குறித்தது. அந்நாட்டில் பாயும் ஒரு நதிக்கும் “Nokianvirta” என்று பெயர். இது பேச்சுவழக்கில் ‘நோக்கியா’ என்று சுருங்கிவிட்டது.
அந்த நோக்கியா நதிக்கரையில்தான் ஐடெஸ்டமின் தொழிற்சாலை அமைந்தது. ஆரம்பத்தில் காகிதக்கூழ் தயாரித்துக்கொண்டிருந்த இந்நிறுவனம், பின்னர் காகிதமே தயாரிக்கத்தொடங்கியது.
நோக்கியாவின் காகிதக்கூழ்த் தொழிற்சாலை தொடங்கப்பட்டு இருபத்தேழு வருடங்கள் கழித்து (1898) ஹெலிஸின்கியில் இன்னொரு நிறுவனம் தொடங்கப்பட்டது. எட்வர்ட் பொலொன் என்பவர் தனது நண்பர்கள், முதலீட்டாளர்களுடன் இணைந்து தொடங்கிய அந்நிறுவனத்தின் பெயர் :Finnish Rubber Works”. ரப்பரில் செருப்புகள், வாகன டயர்கள், மழைக்கோட்டுகள் போன்றவற்றைத் தயாரித்துக்கொண்டிருந்தார்கள். சில வருடங்களுக்குப்பிறகு, இந்த நிறுவனமும் நோக்கியா நதிக்கரைக்கு வந்துசேர்ந்தது.
“Finnish Rubber Works” தொடங்கப்பட்டுப் பதினான்கு வருடங்கள் கழித்து (1912) அதே ஹெலிஸின்கியில் “Finnish Cable Works” என்ற இன்னொரு நிறுவனம் தொடங்கப்பட்டது. இவர்கள் மின்சாரக் கேபிள்களைத் தயாரித்து விற்றுக்கொண்டிருந்தார்கள்.
ஒருகட்டத்தில், இவர்களும் சில ரப்பர் பொருள்களைத் தயாரிக்க முனைந்தார்கள். இது Finnish Rubber Worksக்குப் பிடிக்கவில்லை. போட்டியைச் சமாளிக்க இவர்களை வாங்கிப்போட்டுவிட்டால் என்ன என்று யோசிக்கத்தொடங்கினார்கள்.
ஆக, ஒருபக்கம் காகிதக்கூழ், காகித நிறுவனம், இன்னொருபக்கம் ரப்பர் நிறுவனம், மூன்றாவதாக ஒரு கேபிள் தயாரிப்பு நிறுவனம், இவையனைத்தும் நோக்கியா என்ற பெயரில் ஒருங்கிணைவதற்கான சூழல் அமைந்தது. 1967ஆம் வருடம் அது நிறைவேறியது.
ஞாபகமிருக்கட்டும், இதுவரை செல்ஃபோனைப்பற்றி நாம் பேசவே இல்லை. இணைந்த நோக்கியாவும் அதே காகிதக்கூழ், ரப்பர், கேபிள்களைதான் தயாரித்துக்கொண்டிருந்தது.
1958ம் ஆண்டு (அதாவது, நோக்கியாவின் அதிகாரப்பூர்வமான இணைப்புக்குச் சில ஆண்டுகள்முன்பாக) அங்கே ஓர் எலக்ட்ரானிக்ஸ் பிரிவு தொடங்கப்பட்டது. ஒல்லி லெஹ்டோ என்பவர் இதற்குப் பொறுப்பேற்றார்.
நோக்கியாவின் சரித்திரத்திலேயே மிகமுக்கியமான திருப்பம் அது. ஆனால், அப்போது அந்த நிறுவனத்தில் யாரும் அதை உணர்ந்திருக்கவில்லை.
ஒன்றல்ல, மூன்று நிறுவனங்கள், நான்கைந்து தொழில்துறைகள், எல்லாவற்றிலும் நல்ல லாபம், நூறு ஆண்டுகளுக்குமேல் அனுபவம்… இப்படிப்பட்ட ஒரு நிறுவனம் தன்னிடையே புதிதாக வந்திருக்கும் பிரிவை மதிக்குமா என்ன?
அந்த எலக்ட்ரானிக்ஸ் பிரிவு அப்போது பெரிய லாபமும் சம்பாதித்துவிடவில்லை. கணினிகளை வாங்கி விற்பது, அதுதொடர்பான சேவைகள் என்று ஏதோ கொஞ்சம்போல் பணம்பார்த்துக்கொண்டிருந்தார்கள், அதற்கான செலவுக்கணக்கோடு ஒப்பிட்டுப்பார்த்தால், சொல்லிக்கொள்ளும்படி எதுவும் தேறவில்லை.
ஒருகட்டத்தில், இந்த எலக்ட்ரானிக்ஸ் பிரிவை இழுத்துமூடினால் என்ன என்றுகூட நோக்கியா யோசித்தது. நல்லவேளையாக, அவர்கள் அப்படிச் செய்துவிடவில்லை.
காரணம், அப்போது மொபைல் தொழில்நுட்பம் ஆரம்பநிலையிலிருந்தது. அதற்காக நோக்கியா செலவிட்ட ஒவ்வொரு டாலரும் பின்னர் பலமடங்காகத் திரும்பவரவிருந்தது. அதுவரை பொறுமையாகக் காத்திருந்ததுதான் அவர்களுடைய சமர்த்து.
எங்குவேண்டுமானாலும் எடுத்துச்செல்லத்தக்க செல்பேசிகள் இன்றைக்குச் சர்வசாதாரணம். ஆனால் அன்றைக்கு, அதற்கான தொழில்நுட்பம் ஓரளவு புரிந்திருந்தாலும், அவற்றை எதார்த்தத்தில் பயன்படுத்தும்படி எப்படி உருவாக்குவது என்று யாருக்கும் தெரியவில்லை. நோக்கியாவைப்போல் பல நிறுவனங்கள் இந்த ஆய்வில் ஈடுபட்டிருந்தன.
ஃபின்லாந்திலேயே சலோரா என்ற நிறுவனமும் இதற்கான முயற்சிகளில் இருந்தது. அவர்களோடு நோக்கியாவும் கூட்டணி சேர்ந்தது. சலோரா மொபைல்ஃபோனைத் தயாரிக்கும், அதற்கான தொலைதொடர்புக் கட்டமைப்பை நோக்கியா வழங்கும் என்று தீர்மானித்துக்கொண்டார்கள்.
இன்னொருபக்கம், ஃபின்லாந்து அரசு நிறுவனமான ‘டெலெவா’வும் இந்தத்துறையில் இறங்க முனைந்தது. நோக்கியா அவர்களோடும் ஓர் ஒப்பந்தம் போட்டுக்கொண்டார்கள்.
இப்படிப் பலரோடு இணைந்து இத்துறையில் இறங்கியபோதும், நோக்கியாமட்டும்தான் அதில் நீடித்தது. மற்றவர்கள் அவ்வப்போது விலகிக்கொண்டார்கள்.
நோக்கியா: சலோரா இணைந்து உருவாக்கிய முதல் மொபைல்ஃபோன் 1982ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அது ஒரு முழுச்செங்கல் அளவுக்கு இருந்தது. எடை, 9.8கிலோ.
தக்கனூண்டு செல்ஃபோன்களையே ‘பெரிசா இருக்கு’ என்று சலித்துக்கொள்ளும் இன்றைய இளைஞர்களிடம் இதைச்சொன்னால் நம்பக்கூடமாட்டார்கள். ஆனால் அன்றைக்கு, அதுதான் செல்ஃபோன். கிட்டத்தட்ட பத்துகிலோ எடையிருந்தாலும், சென்ற இடத்துக்கெல்லாம் வருகிறதல்லவா? அது பெரிய விஷயமாயிற்றே!
அத்தனைபெரிய செல்ஃபோனை எடுத்துப்பேசுவதில் இருக்கக்கூடிய சிரமங்களை நாம் ஊகித்துக்கொள்ளலாம். அடுத்தடுத்து வந்த செல்ஃபோன்கள் கணிசமாக எடைகுறைந்தாலும், அளவில் ‘பெரியவை’யாகதான் இருந்தன. பெரும்பாலானவற்றைக் காரில் வைத்தே பயன்படுத்தமுடிந்தது.
ஆனால், இத்துறையில் ஆய்வுகள் மிகவேகமாக நடந்தன. நோக்கியா படிப்படியாகத் தன்னுடைய செல்பேசியின் எடையைக் குறைத்துவந்தது. இந்தக்காலட்டத்தில் அவர்களுடைய வேகமும் செயல்திறனும் உலகை வியப்பில் ஆழ்த்தியது.
அநேகமாக ஒவ்வொரு நாட்டிலும், மக்கள் அதிகம் வாங்கிய முதல் செல்ஃபோன் நோக்கியாவுடையதாகதான் இருக்கும். பலரும் கேள்விப்பட்டிராத ஃபின்லாந்து என்ற தேசத்திலிருந்து ஒரு நிறுவனம் மிகப்பெரிய அளவில் வளர்ந்து உலகை வென்றது. கோடிக்கணக்கில் நோக்கியா ஃபோன்கள் விற்பனையாகின.
ஒருகட்டத்தில், செல்ஃபோன் என்பது வெறுமனே பேசுவதற்குமட்டுமல்ல என்றாகிவிட்டது. அதில் குறுஞ்செய்தி தொடங்கிப் பாடல் கேட்டல், படம்பிடித்தல் எனப் பல வசதிகள் சேர்க்கப்பட்டன. இவை அனைத்தையும் நோக்கியா முன்னின்று வழிநடத்தியது, இவற்றை மக்களுக்குச் சொல்லித்தந்தது, அதனால் நோக்கியா ஃபோன்கள் நன்கு விற்பனையாகின.
நோக்கியாவின் மொபைல்பிரிவு பெற்ற வெற்றியைத்தொடர்ந்து, அதன் ஆரம்பகாலத் தொழில்கள் அனைத்தும் விற்கப்பட்டன. அதில் கிடைத்த பணமெல்லாம் இங்கே முதலீடு செய்யப்பட்டது. அது நல்ல லாபமாகத் திரும்பிவந்தது, பெயரும் புகழும் குவிந்தது.
இதையடுத்து, பல நாடுகளில் நோக்கியாவின் தொழிற்சாலைகள் நிறுவப்பட்டன. அந்தந்தச் சந்தைக்கேற்ற தயாரிப்புகளை வழங்கிப் பெயர்வாங்கியது நோக்கியா.
இந்தக் காலகட்டத்தில் நோக்கியாவுக்கு உண்மையான போட்டியாளர்கள் என்று யாரும் இல்லை. சாம்சங் போன்ற சில நிறுவனங்கள் கொஞ்சம் போட்டியைக்கொடுத்தாலும், அவர்களெல்லாம் நோக்கியாவுக்குப்பிறகுதான். பயன்படுத்த எளியவை, விலை குறைவானவை, தரமானவை என்று மக்கள் நோக்கியா தயாரிப்புகளையே வாங்கினார்கள்.
முதல் இன்னிங்க்ஸ் வெற்றி, இரண்டாவது இன்னிங்ஸ் பெருவெற்றி, அப்புறம் ஏன் சரிவு? நோக்கியாவின் மூன்றாவது இன்னிங்க்ஸ் எப்படியிருக்கும்? அதை இக்கட்டுரையின் அடுத்த பகுதியில் விரிவாகப் பார்க்கலாம்.