பாகம் 02: மீண்டும் பந்தயத்தில்
ஒரு நகரத்தில் யாருக்கும் செருப்பு என்றாலே தெரியாது, எல்லாரும் வெறுங்காலுடன்தான் நடந்துகொண்டிருந்தார்கள்.
அப்போது, அந்த நகரத்துக்கு ஒரு புதியவர் வந்தார். அவர் செருப்புகளைத் தைத்து விற்கத்தொடங்கினார். எல்லாம் தரமான செருப்புகள், விலையும் குறைவு.
ஆனால், நகரவாசிகள் யாரும் அவருடைய செருப்பை வாங்கவில்லை. காரணம், அவர்களுக்குச் செருப்பின் தேவை புரியவில்லை. ‘வெறுங்காலோட நடக்கவேண்டியதுதானே, இதெதுக்கு வீணா?’ என்று யோசித்தார்கள்.
ஆகவே, அவர் அவர்களுக்குச் செருப்பின் முக்கியத்துவத்தை விளக்கத்தொடங்கினார், ‘இதைப் போட்டுக்கிட்டா கல்லுமுள்ளு காலிலே குத்தாம காப்பாத்தும், வெய்யில்ல நடந்தா சூடு தெரியாது.’
இப்படி அவர் விளக்கியதும், சிலர் அந்தச் செருப்புகளை வாங்கிப் பயன்படுத்த ஆரம்பித்தார்கள். அவர்களைப்பார்த்துக் கொஞ்சம்கொஞ்சமாக மற்றவர்களும் செருப்புக்கு மாறினார்கள். அந்த நகரத்தில் செருப்புகள் நன்கு விற்றன.
இதைப்பார்த்து மற்ற பலர் அங்கே செருப்பு விற்க வந்தார்கள். ஆனால், முதன்முதலாக அங்கே செருப்புகளைப் பிரபலப்படுத்தியவருடைய செருப்புகள்தான் அதிகம் விற்பனையாகின. அவர் பெரிய பணக்காரராகவும் புகழோடும் வாழ்ந்தார்.
இப்போது, அந்த நகரத்தில் செருப்பு அணியாதவர்களே கிடையாது. சிலர் ஒன்றுக்கு இரண்டு, மூன்று செருப்புகளைக்கூட வாங்கிவைத்திருந்தார்கள், வேளைக்கு ஒன்றாகப் போட்டுக்கொண்டு நடந்தார்கள்.
இவர்கள் செருப்பில் புதிய வசதிகளை எதிர்பார்த்தார்கள், ‘மெத்துமெத்துன்னு இருக்கணும்’ என்றார்கள், ‘பலவண்ணங்கள்ல செருப்பைத் தயாரிக்கலாமே’ என்று கேட்டார்கள். இவர்களுடைய எதிர்பார்ப்புக்கிணங்க அவர் தன்னுடைய செருப்புகளை மாற்றி இன்னும் வெற்றியடைந்தார்.
அதேநேரம், அந்த நகரத்தில் சிலர் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தினார்கள். அவர்கள் தினமும் ஓடுவதற்கு, உடற்பயிற்சி செய்வதற்கு வசதியான காலணிகளை எதிர்பார்த்தார்கள்.
அப்போது, அங்கிருந்த செருப்புத் தைப்பவர்கள் சிலர் ஓட்டத்துக்கென்று விசேஷக் காலணிகளை, கால்முழுவதையும் மூடக்கூடிய ‘ஷூ’க்களைத் தயாரித்து விற்றார்கள். இவர்கள் அதனை விரும்பி வாங்கினார்கள்.
அந்த நகரத்தில் செருப்பை அறிமுகப்படுத்தியவர் இதைக் கவனித்தார். ஆனால், இந்த ‘ஷூ’க்கள் அவ்வளவு முக்கியமானவை என்று அவருக்குத் தோன்றவில்லை. ஆகவே, அவர் எப்போதும்போல் செருப்பில்மட்டும் கவனம்செலுத்தினார். அதை இன்னும் சிறப்பாக மாற்றுவது எப்படி என்றுமட்டுமே யோசித்தார்.
சில ஆண்டுகளில், அந்த நகரத்தில் எல்லாரும் ‘ஷூ’க்களையே விரும்பி வாங்கத்தொடங்கினார்கள். இதனால், மற்ற செருப்புத் தைப்பவர்களின் தயாரிப்புகள் நன்கு விற்றன.
இதைக்கண்டபிறகு, அவர் விழித்துக்கொண்டார், செருப்போடு ‘ஷூ’க்களையும் தயாரிக்க முயன்றார்.
ஆனால் அதற்குள், அவருடைய போட்டியாளர்கள் எங்கோ சென்றுவிட்டார்கள். அவரால் அந்தப் போட்டியில் தாக்குப்பிடிக்கமுடியவில்லை. விரைவில் அவருடைய நிறுவனமே முடங்கிவிட்டது.
ஆக, முதன்முதலாக செருப்புகளை அறிமுகப்படுத்திய ஒருவர், செருப்புகள் தேவை என்று மக்களுக்குப் புரியவைத்த ஒருவர், அந்தச் செருப்புகளைக் குறைந்த விலையில், நிறைவான தரத்தில் தயாரித்து முதல்நிலையில் திகழ்ந்த ஒருவர், இப்போது அதே சந்தையிலிருந்து வெளியேற்றப்படுகிறார், மற்ற போட்டியாளர்கள் அவரைத் தாண்டிச்சென்று பெரிய வெற்றியடைகிறார்கள்.
காரணம், அவர் மக்களுடைய மாறும் எதிர்பார்ப்புகளைச் சரியாகக் கவனிக்காததுதான். மற்றவர்கள் அதை நன்கு பயன்படுத்திக்கொண்டுவிட்டார்கள்.
இந்தக்கதையில் செருப்புகளுக்குப்பதில் செல்ஃபோன்கள் என்றும், ‘ஷூ’க்களுக்குப்பதில் ஸ்மார்ட்ஃபோன்கள் என்றும் பொருத்தினால், அதுதான் நோக்கியாவின் சரிவுச்சரித்திரம்!
நோக்கியா செல்ஃபோன்களைத் தயாரிக்கத்தொடங்கியபோது, அப்படியொன்று தங்களுக்குத் தேவை என்பதையே மக்கள் உணர்ந்திருக்கவில்லை. ஆகவே, அவர்கள் பொருளுக்குமட்டும் விளம்பரம் செய்யவில்லை, அதற்கான தேவையையும் சேர்த்து விளம்பரப்படுத்தினார்கள், அதையும் விற்றார்கள், தொழில்மொழியில் இதனை ‘Educating the customer’ என்பார்கள்.
இப்படி வாடிக்கையாளர்களுக்குச் சொல்லித்தந்து வளர்த்த சந்தையில், அவர்களே மன்னர்களாக இருந்தார்கள். உலக அளவில் எல்லா நாடுகளிலும் செல்ஃபோன் என்றாலே நோக்கியாதான். சாம்சங், சோனி போன்ற மற்ற செல்ஃபோன் தயாரிப்பாளர்களெல்லாம் சற்றுத்தள்ளியே வரவேண்டியிருந்தது.
இந்த வளர்ச்சியின்போது, நோக்கியா கர்வம்கொண்டுவிட்டதாகவோ, சந்தை எதிர்பார்ப்புகளைக் கவனிக்கவில்லையென்றோ, தன்னுடைய தயாரிப்பை மேம்படுத்தவில்லையென்றோ சொல்வதற்கில்லை. அவர்கள் தொடர்ந்து தங்களுடைய தயாரிப்பில் புதுப்புது அம்சங்களை அறிமுகப்படுத்தியபடிதானிருந்தார்கள், உலகில் எங்கெல்லாம் தங்களுடைய தயாரிப்புகளைக் கொண்டுசெல்ல இயலும் என்று திட்டமிட்டுச் செயல்பட்டார்கள்.
இந்தியச்சந்தையே இதற்கு நல்லதோர் எடுத்துக்காட்டு. நம் ஊருக்கேற்ற செல்ஃபோன்களை நோக்கியா சிறப்பாகத் தயாரித்தது, எடுத்துக்காட்டாக, செல்ஃபோனில் டார்ச் வசதி, தூசு தாக்காத, கைப்பிடியிலிருந்து வழுக்காத வடிவமைப்பு, தமிழ், ஹிந்தி உள்ளிட்ட இந்தியமொழிகள்மட்டுமே தெரிந்தோர்கூட பயன்படுத்தும்படியான இடைமுகங்கள் என்று அசத்தினார்கள்.
இதுபோல் வளரும் சந்தைகள் ஒவ்வொன்றையும் நோக்கியா கவனித்துச்செயல்பட்டது. அதனால், பெரிய வெற்றிநிறுவனமாகவே திகழ்ந்தது.
அவர்கள் செய்த பெரிய தவறு, ஸ்மார்ட்ஃபோன்களின் வளர்ச்சியை, தேவையைக் கவனிக்கத்தவறியதுதான்.
அதற்காக, நோக்கியாவில் ஸ்மார்ட்ஃபோன்களே வரவில்லை என்று சொல்வதற்கில்லை. மற்ற பல புதுமைகளைப்போலவே, இதிலும் அவர்கள் முன்னணியில் நின்றார்கள். செல்ஃபோனிலேயே கேமெரா, இணையம், ஈமெயில் படித்தல் போன்ற வசதிகளைக் கொண்டுவந்தார்கள்.
அதேசமயம், ஸ்மார்ட்ஃபோன்களை அவர்கள் அடிப்படைத்தேவைகளாகக் கருதவில்லை. அதை மையமாகக்கொண்டு தங்களுடைய தயாரிப்புகளை அமைக்கவில்லை.
மற்ற நிறுவனங்கள், குறிப்பாக சாம்சங் இதனைச் சிறப்பாகப் பயன்படுத்திக்கொண்டது. அவர்களும் வேறு பல நிறுவனங்களும் ஆண்ட்ராய்ட் என்ற இலவச ஆபரேட்டிங் சிஸ்டத்தின் கட்டற்ற வசதிகளைப் பயன்படுத்தி ஸ்மார்ட்ஃபோன்களைப் பரவலாக்கினார்கள். இன்னொருபக்கம் ஆப்பிள் தனது ஐஃபோன்மூலம் இந்தச் சந்தையைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டது. அதன் தரம், பயன்பாட்டு மேன்மைக்கு யாரும் பக்கத்தில்கூட வரமுடியவில்லை.
முக்கியமான விஷயம், இந்த ஸ்மார்ட்ஃபோன்கள் அனைத்தும் நோக்கியாவின் அடிப்படை செல்ஃபோன்களைவிட அதிக விலை, அதற்கேற்ப அதிகச் சவுகர்யங்கள். இந்தக் கூடுதல் வசதிகளுக்கு மக்கள் இந்தக் கூடுதல் விலையைத் தருவார்கள் என்பதை நோக்கியா புரிந்துகொள்ளவில்லை. ஆகவே, எப்போதும்போல் அவர்கள் குறைந்த விலை, நிறைந்த தரம் ரக ஃபோன்களில் கவனம்செலுத்திக்கொண்டிருக்க, இன்னொருபக்கம் ஸ்மார்ட்ஃபோன்களின் விலை குறைந்துகொண்டே வந்தது. அதேசமயம் நடுத்தர மக்களின் வாங்கும்சக்தியும் மேம்பட, அவர்கள் ‘சாதாரண ஃபோன்களை வாங்குவதைவிட, கொஞ்சம் கூடுதலாகச் செலவழித்து ஸ்மார்ட்ஃபோன்களை வாங்கலாமே’ என்று யோசிக்கத்தொடங்கினார்கள்.
ஒருநிலையில், ஸ்மார்ட்ஃபோன்களே அடிப்படைத்தேவையாகிவிட்டன. மற்ற ஃபோன்கள் சற்றே இழிவாகக் குறிப்பிடப்பட்டன. பணம் இல்லாதவர்கள்தான் அவற்றை வாங்குவார்கள் என்ற மனோநிலை.
இது சரியா, தவறா என்பதெல்லாம் வேறு விஷயம். உண்மையிலேயே ஸ்மார்ட்ஃபோன்கள் நமக்கு உதவுகின்றனவா, அல்லது பாதிப்பைக்கொண்டுவருகின்றனவா என்கிற விவாதம் இன்றைக்கும் நடந்துகொண்டிருக்கிறது. ஆனால், ஸ்மார்ட்ஃபோன்கள்தான் செல்ஃபோன்கள் என்று நினைக்கும் ஒரு தலைமுறை உருவாகிவிட்டது. அதில் நோக்கியாவின் தயாரிப்புகளுக்கு இடமில்லை.
ஆக, பொருளின் தரத்தில், தொழில்நுட்பத்தில், தேவையில், விலையில், விநியோகத்தில், பிரபலத்தில்… இப்படி எதிலும் குறையில்லாத ஒரு நிறுவனம், மக்களின் சிந்தனை மாறியதால் ஓரங்கட்டப்பட்டது, நம்பர் ஒன் நிலையிலிருந்து கீழே விழுந்து காணாமலே போனது.
2011ம் ஆண்டு, நோக்கியாவும் மைக்ரோசாஃப்டும் கைகோர்த்தன. மைக்ரோசாஃப்டின் விண்டோஸ் ஃபோன் ஆபரெட்டிங் சிஸ்டத்தைப் பயன்படுத்தி நோக்கியாவின் ஸ்மார்ட்ஃபோன்கள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. பின்னர் மைக்ரோசாஃப்டே நோக்கியாவின் மொபைல்ஃபோன் தொழில்பிரிவை வாங்கிவிட்டது.
அதன்பிறகும், நோக்கியாவில் ஏதும் விசேஷமாக நடப்பதாகத் தெரியவில்லை. இதற்குள் ஆப்பிள், சாம்சங், ஜியோமி போன்ற நிறுவனங்கள் சர்வதேச அளவில் ஸ்மார்ட்ஃபோன் சந்தையை முழுமையாக ஆக்கிரமித்திருந்தன. இதில் நோக்கியாவுக்கு இடமிருக்கிறதா என்றுகூட யாரும் யோசிக்கவில்லை.
2017 பிப்ரவரியில், நோக்கியா தனது புகழ்பெற்ற 3310 மொபைல்ஃபோனை மீண்டும் அறிமுகப்படுத்தவிருப்பதாக அறிவித்தது. இதைத்தொடர்ந்து, இணையத்தில் புதிய பரபரப்பு.
காரணம், ‘நோக்கியா 3310’ மொபைல்ஃபோனுக்கும் இன்றைய ஸ்மார்ட்ஃபோன் உலகத்துக்கும் சம்பந்தமே கிடையாது. எல்லாரும் ஸ்போர்ட்ஸ் ஷூவில் எலக்ட்ரானிக் சில்லுகளை வைத்துப் பந்தா காட்டிக்கொண்டிருக்கும்போது, ஒரு பழைய செருப்பைப் புதுப்பிப்பதில் என்ன அர்த்தம்? நோக்கியா இன்னும் மக்களைப் புரிந்துகொள்ளாமலிருக்கிறதோ?
அதேசமயம், நோக்கியாவின் தயாரிப்புகளில் இருந்த தரமும் எளிமையும் இன்றைய ஸ்மார்ட்ஃபோன்களில் இல்லை என்று சொல்கிறவர்களைப் பார்க்கமுடிகிறது. என்னதான் இணையமும் பிற வசதிகளும் இவற்றில் சக்கைப்போடு போட்டாலும், இவை நம்மை அடிமைப்படுத்திவைத்திருக்கின்றன, ஃபோன் என்பது பேசுவதற்குதானே, அதை ஒழுங்காகச் செய்தால் போதாதா என்றும் சிலர் புலம்புகிறார்கள், ‘இந்தப் பிரச்னையையெல்லாம் தீர்க்க அவர் ஒருத்தராலதான் முடியும்’ என்று சினிமாப்பட ஹீரோவைப்போல் நோக்கியாவைப் பார்க்கிறார்கள்.
ஸ்மார்ட்ஃபோன்கள் இல்லாத வாழ்க்கையைப் பலரால் கற்பனைகூடச் செய்யமுடியாத இன்றைய சூழலில், நோக்கியா ஒரு சாதாரண செல்ஃபோனை வைத்து விட்டதைப் பிடிப்பது சாத்தியமே இல்லை. அதேசமயம், தனக்கு நன்றாகத் தெரிந்த ஒரு விஷயத்தை அடிப்படையாக வைத்துச் சந்தையில் மீண்டும் நுழைந்து, தன்னுடைய பிராண்டுக்கு ஒரு புதிய மரியாதையை உருவாக்கிக்கொண்டு, இன்னொருபக்கம் மைக்ரோசாஃப்டின் மென்பொருள் பலத்துடன் ஸ்மார்ட்ஃபோன் சந்தையையும் பிடிக்கலாம் என்று அவர்கள் திட்டமிட்டிருக்கலாம்.
ஒருவேளை நோக்கியா இந்த முயற்சியில் வெற்றிபெற்றுவிட்டால், அது நிச்சயம் பெரும் சாதனையாகத்தானிருக்கும். ஓட்டப்பந்தயத்தில் முதலாவதாக வந்துகொண்டிருந்த ஒருவர், விதிமுறைகள் மாற்றப்பட்டதால் வெளியேற்றப்பட்டு, போட்டி நிறுவனங்கள் அவரைத் தாண்டி வெகுதூரம் சென்றுவிட்டபிறகு மீண்டும் உள்ளே நுழைந்து வெல்லமுடியுமா? இன்றைய சந்தையைப் புரிந்துகொண்டு வெல்வதற்கு அவர்களுடைய பழைய அனுபவமும், கிட்டத்தட்ட காணாமல்போய்விட்ட பிராண்ட்பெயரும் உதவுமா? பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
ஆனால் ஒன்று, சந்தையைப் புரிந்துகொள்ளாத எந்த நிறுவனமும் இங்கே வெற்றிபெறமுடியாது. முன்புபோல் ஒவ்வொரு நாட்டுக்கும், அங்குள்ள ஒவ்வொரு பயன்பாட்டாளர் குழுவுக்கும், குறிப்பாக, செல்ஃபோன்களுடனே பிறந்த இன்றைய இளையதலைமுறையினருக்கு ஏற்ற தனித்தனி வியூகங்களை வகுத்து, போட்டியாளர்களின் காய்நகர்த்தல்களைக் கவனித்து முன்னேறினால்மட்டுமே வெற்றி, அது எப்பேர்ப்பட்ட பிராண்டாக இருந்தாலும் சரி, எத்துணைச் சிறப்பான தயாரிப்பாக இருந்தாலும் சரி!