ஏன் இதையெல்லாம் பதிவிடுகிறோம்? புத்தகத்துக்கோ அல்லது திரைப்படத்துக்கோ மிஞ்சி போனால் சமூக நிலைமைக்கோ கட்டுரைகள் அல்லது விமர்சனங்கள் எழுதினால் நிறைய நாட்கள் நீடித்து நிற்கமுடியும், கூடவே மக்கள் மத்தியில் இஸ்திரமான ஒரு நிலையை அடையமுடியும். எத்தனை பேர் இதை வாசிப்பார்கள்? துடிப்பான சுவாரஸ்யமான தகவல்கள்தான் அதிக கவன ஈர்ப்பினை ஏற்படுத்தும் வல்லமை கொண்டவை. சரி இது போன்ற தலைப்புகளில் எழுதுவதற்கு அனுபவமும் அடையாளமும் தேவையே, அங்கீகாரம் பெற்றவர்கள் எதை எழுதினாலும் அது கவனிக்கப்படுகிறதே, அங்கீகாரம் பெற்ற பிறகு எழுதிக்கொள்ளலாமே. இது போன்ற கருத்துக்களை நண்பர் ஒருவர் தெரிவித்திருந்தார். இதற்கு விளக்கம் கொடுக்கலாமா இல்லையா என்ற மனநிலையில் இல்லை என்று சுதாகரித்து கொண்டு கிளம்பி விட்டேன்.
இன்றைய வடக்கு சூழலில் அருகிவருகின்ற ஒரு வழிபாட்டு முறை தான் கரகாட்டம். முன்னைய காலங்களில் பஞ்சம், தோற்று நோய், இயற்கை சீற்றங்களின் போது மாரியம்மனை வேண்டி வழிபட்ட ஆடலும் பாடலும் நிறைந்த வழிபாட்டு முறை தான் கரகாட்டம். இது தமிழ் மக்களுக்கே உரிய மிகப்பழைமையான நாட்டார் வழிபாட்டு ஆடற்கலை ஆகும். காலத்தினால் இது தொழிலுக்காக ஆடப்படுகின்ற கண்காட்சி ஆடல் முறையாக மாறிப்போனது. பணத்துக்காகவும் கேளிக்கைக்காகவும் ஆடப்படுகின்ற ஆடல் முறையாக இது மாறிப்போனது தமிழ் சமுகத்தின் இழிநிலையை காட்டுகின்றது. பயத்தால் புனிதமாக ஆடப்பட்ட கலையின் இன்றிய நிலை வருத்தத்திற்குரியதே. இருந்தும் சமகாலத்தில் கோயில் வழிபாட்டுடன் ஆடப்படும் கரகமும் நிலைத்தேயுள்ளது.பொதுவாக கரகம் ஆண்களுக்குரியதொன்றாகும். ஆனாலும் சிறுபான்மை பெண்களாலும் ஆடப்படுகிறது.
கரத்தில் இருவகைகள் உள்ளன. ஒன்று சக்தி கரகம் மற்றையது ஆடு கரகம். முன்னையது தொன்மையானது பின்னையது தொழில்முறையானது. சக்திகரகம் ஆண்களால் மட்டுமே எடுக்கப்படும், பெண்கள் தீட்டு உடையவர்கள் என்பதால் எடுப்பதில்லை என்பார்கள். இக்கரகம் இறை வழிபாட்டுடன் தொடர்புடையது. பக்தியின் விளைவாக எடுக்கப்படுகிறது. ஆடு கரகம் ஆண்கள் பெண்கள் என இருவகையினராலும் ஆடப்படுகிறது. இது தொழிலுக்காக எடுக்கப்படுகிறது. ஒன்றுக்கு மேற்பட்ட அடுக்கு செம்புகளும் ஆடுகரகத்தில் பயன்படுத்தப்படுகின்றன. சக்தி கரத்தை அபிநயங்களை கூட்டியும் அம்பலமாகவும் கேளிக்கைக்காகவும் பணத்தை ஏற்படுத்தும் நோக்கிலும் மாற்றப்பட்டு ஊர் ஊராக ஆடு கரகம் ஆடப்படுகிறது.
வழிபாட்டுக்காக எடுக்கப்படும் காரகத்தினுள் புனித நீர் வைக்கப்படுகின்றது. உழவர்கள் ஏர்மங்கல விழாவின்போது இந்த புனித நீரையும், அதே போல பெண்கள் முளைப்பாலிகையையும், – முளைகள் உள்ள ஓடு, எடுத்துக்கொண்டு கோயிலுக்குச் செல்வர். ஆண்கள் பக்தியுடன் எடுத்துச் செல்லும் புனிதநீர் அடங்கிய செம்பே கரகச்செம்பு என்றும் அதை எடுத்துச் செல்லும் உழவரை கரகக்காரர் என்றும் அழைப்பார்கள். இதே போன்ற செய்முறையில் கரகக்காரர்கள் ஒன்பது செம்புகளை எடுத்துச்செல்வார்கள்.
” ஒண்ணா கரகமடி எங்கள் முத்துமாரி
ஒசந்த கரகமடி எங்க முத்துமாரி ” எனத்தொடங்கும் நாட்டார் பாடலில்
“ஒன்பதாம் கரகமடி எங்கள் முத்துமாரி
ஒலகம் செழிக்கவேணும் எங்க முத்துமாரி ” என முடிவுறுவதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
இது வழிபாட்டு முறை என்றால் ஆடற்கரக முறை பல அடுக்குகளை கொண்டமைந்தது.
ஓரளவு தோதான அலுமினிய அல்லது கலப்புலோக செம்பு அல்லது குடம் தெரிவுசெய்யப்பட, அதனை சுற்றி பூக்களாலும் மாலைகளாலும் அலங்காரங்கள் செய்யப்படும். குடத்தினதோ செம்பினதோ வாயிலிருந்து கோபுரவடிவான- அதாவது கூம்பு வடிவ எழுப்பம் ஏற்றப்படும். அதை சுற்றி வண்ணங்களாலும் மாலைகளாலும் அலங்காரம் செய்யப்பட்டு உச்சியில் பொம்மைக்கிளி சொருகப்படும்.
ஆதிகால கரகவழிபாடு மாரியம்மனை நோக்கியதென்பதால் கிளி சொருகப்படும் ஐதீகம் உண்டு. இக்கிளியினை அம்மன்கிளி என அழைப்பர். ஆடுகரகம் எடுப்போர் குடம் முழுக்க மணலை நிரப்புவர். பௌதீகவியல் ரீதியில் சமநிலையை பேணுவதற்காக உள்ளடக்கம் செய்யப்படுவதாகவும், இந்து சமய ஐதீகங்களின் படி கரகச்செம்பை உடலாக உருவகித்தால் உள்ளடக்கம் உயிராக உருவகிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
கரகாட்டம் மூன்று நிலைகளை கொண்டது. தொடக்க நிலை, வேக நிலை மற்றும் அதிவேக நிலை என்பவை அவையாகும். ஊரவர் மத்தியில் கேளிக்கைக்கான நேரத்தினை ஏற்படுத்துவதற்காக கரகக்குழுவில் எல்லோரும் ஆயத்தம் அடையும் நிலையே தொடக்க நிலை.
கரகக் காரருடன் எல்லா வாத்தியங்களும் பொருந்த கரகக்காரர் தன்னை நேர்த்தியாக்கிக்கொண்டு கரகமும் உறுதிச்சமநிலையில் இருக்கின்றதா என சரிபார்த்துக்கொள்ளும் நிலை. நையாண்டி மேள இசையோடு எல்லா கூறுகளும் பொருந்துகின்ற ஒரு நிலையை அடையும் மட்டும் பக்கவாத்தியங்கள் கரகக்காரர்கள் என எல்லோரும் மெதுவாக அசைவுகளை ஏற்படுத்திக்கொண்டு ஒரு பெரிய சபாவிற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுவர்.
ஒருங்கிசைவு பெறப்பட்டவுடன் மெது மெதுவாக வாத்திய வேகத்தை அதிகரிக்க ஆட்டவேகமும் அதிகரித்துக் கொள்ளும். இது இது வேகநிலை. இதன் போது தாளசுதிக்கும் வாசிக்கும் இசைக்கும் ஏற்ப எவ்வித வேறுபாடும் தெரியாமல் கலைஞர்கள் ஆடுவர். இதனை சமநிலை என்றும் கூறுவார்கள். எல்லாம் பொருந்திய உச்சநிலையில் கரகாட்டம் அதிவேக நிலைக்கு செல்லும். ஒரு புயல் மைய்யம் கொண்டதுபோல கரகாட்டக்காரர் வலப்பக்கம் சுழன்று சுழன்று கரகம் கீழேவிழாமல் சமநிலையில் இருக்கவும் காண்போர் சமநிலை அற்று போகுமாறும் ஆடிக்கொண்டிருப்பர். தாளம் முறியாமலும் ஜாதிமுறியாமலும் முகமெது முதுகெது என அடையாளம் காணமுடிய படி சுழன்றுகொண்டிருப்பர்.
இப்பிடி ஓய்ந்த புயலில் மழையின் இடைவெளி சிரிப்பொலி போல கோமாளிகள் வந்து ஆடுவதுண்டு. இதன் நோக்கம் ஆட்டக்காரர் ஓய்வெடுப்பதாக இருக்கும். கோமாளி அவ்வூர் பேச்சுமொழியில் ஆபாசம் கலக்க நகைச்சுவையாக பேசுவான்.
கரகத்தை கூத்து சாயலில் ஆடுகின்ற வழக்கமும் உண்டு. “கருப்பாயி கூத்து” , “குறவன் குறத்தி கதை “, இராணி இராசா ஆட்டம் ” என்பனவும் கரகத்தை மையப்படுத்திய கூத்து வகைகளாகும்.
காலில் மணிக்கச்சம் – ஆடுபவர் காலில் கட்டிக்கொள்ளும் சதங்கை, தலையில் செம்பை வைத்து தன் அங்கங்களில் சிக்கலான அசைவுகளை சிக்கலான இயக்கங்களை நடனக்காரன் மிகவும் நளினமாகவும் சாமர்தியமாகவும் வெளிப்படுத்திடுவார். இரண்டு நாதஸ்வரங்கள், ஓர் ஒத்து, தவில், தாளம், பம்பை, தமுக்கு போன்ற கருவிகளின் உதவியால் எழுப்பப்படும் நையாண்டி மேளம் என்ற ஒருவகை இசை இதற்கு பின்னணியாக திகழும், கரகமாடுபவன் தலையில் கரகத்துடன் நாத வேறுபாடுகளிற்கு ஏற்ப தன் உடலின் பாவங்களை வெளிப்படுத்துவான். (சடகோபன் )
கரகாட்டம் ஆடிக்கொண்டிருக்கும் போது அடிவைத்து மாறி மாறி வைப்பதுண்டு . இம்மாற்றம் களம் எனப்படும். கரகத்தில் உள்ளதற்கு மேற்பட்ட களக்கணக்குகள் உண்டு. இக்களம் நையாண்டி மேளத்தின் தாள கட்டுப்பாட்டுடன் தொடர்புடையது. எனவே நையாண்டி மேளம் இன்றியமையாததொன்றாகும். ( குணசேகரன் )
வல்வெட்டித்துறையில் ஊறணி என்ற இடத்தில் இந்திய வம்சாவழியினரால் இவ்வாத்தியங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஏனையோர் உடுக்கு நாதஸ்வரம் தவில் போன்றவற்றையே கையாளுகின்றனர். கரகம் ஆடுவதற்கென எந்த மேடை அமைப்பும் இல்லை. ஒரே ஒரு தளம் மட்டும் போதும். மக்களுக்குள் சென்று ஆடும் ஆடற்கரக வழக்கமும் உண்டு.
கரகக் காரரின் உடையமைப்பு மிக அழகாக இருக்கும். முன்னைய காலத்தில் சட்டையும் பாவாடையும் தலையில் குடத்தை தாங்க குடுமியும் அணிந்து கொள்வர். இன்றைய காலத்தில் கீழே ஜீன்ஸ்-உம் மேலே முழங்கால் வரையே நீளுகின்ற மேற்சட்டையும் அணிவர். சில இடங்களில் திரைப்பட பாதிப்பில் பரத உடையும் அணிவதுண்டு.
கரகத்தை வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு பெயர்கள் கொண்டு அழைக்கின்றனர். கிழக்கு இராமநாதபுரத்தில் தஞ்சாவூரில் கரக செம்பு என்றும், திருநெல்வேலி மக்கள் கரகக்குடம் என்றும் கன்னியாகுமாரி மக்கள் கும்ப ஆட்டம் என்றும் இந்தியாவிலும் யாழிலும் கரகம், கரகாட்டம் என்று இருவகையாலும் மலை நாட்டில் செம்பாட்டம், கரக கூத்து என்றும் மட்டக்களப்பில் கரகம் என்றும் அழைப்பர்.
கரகத்தின் அடி நாதம் அற்றுப் போயிருந்தாலும் இன்றும் நிலைத்து நிற்பது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். இத்தோடு நடனங்கள் என்ற பகுதிக்கு விடைகொடுத்துக்கொண்டு வடக்கு நாட்டார் கதைகள் என்ற சுவாரஸ்யமான பகுதிக்குள் அடுத்த முறை செல்லலாம் என எண்ணுகிறேன். அடுத்த தலைப்புடன் சந்திக்கலாம்.