Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

நஞ்சையிலிருந்து நஞ்சான உணவு!

பிளாஸ்டிக் அரிசி, பிளாஸ்டிக் முட்டை என்று பெரும் அதிர்ச்சியான சிக்கல்கள் நிறைந்த விடயங்களை கடந்த ஒரு மாத கால அளவில் தமிழகம் சந்தித்தும் பேசியும் வருகின்றது. இதனை காரணமாகக் கொண்டு அனைத்து இடத்திலும் இயற்கை விவசாயத்தில் விளைந்த பொருட்கள் என்ற விளம்பரத்தினை மையப்படுத்தி தங்களுடைய தரமற்ற பொருட்களை விற்பனை செய்ய விளைகின்றது என்று பெரிய பெரிய நிறுவனங்களை முகநூலிலும் குறுஞ்செய்தி பரிமாற்றத் தளத்திலும் பெரிய விமர்சனங்களை முன் வைக்கின்றனர் இன்றைய நெட்டிசன்கள். தஞ்சை மாவட்டத்தின் கும்பகோணம் மற்றும் புதுக்கோட்டை ஆகிய இடங்களில்தான் பிளாஸ்டிக் அரிசி உபயோகத்தினை கண்டுபிடித்தார்கள் என்ற செய்தி இணையத்தில் வைரலாக, தமிழக அரசு போதிய நடவடிக்கைகளை எடுத்து, அந்த தகவல் பொய் என்று மக்களுக்கு தன்னம்பிக்கை அளித்தது. இங்கு நெகிழி அரிசி தொடர்பான அனைத்து சந்தேகங்களுக்கும் விளக்கம் தரும் ஆவணங்கள் இருக்கின்றன.

உண்ணக் காய்கனி தந்திடு வீரே!

உழுது நன்செய்ப் பயிரிடு வீரே!

என்பது பாரதியின் வரிகள். உழுது நன்செய் நல்லபயிர்கள் விளைவித்ததெல்லாம் ஒரு காலம். அதன் பின்னாள் தோன்றிய பசுமைப் புரட்சி, இயற்கை வேளாண் மறுமலர்ச்சி போன்ற எதுகை மோனை கட்டுரைகள் ஆயிரக்கணக்கில் இந்த இணையத்தில் கிடைத்தவண்ணமே இருக்கின்றன.

இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்களின் சீரிய முயற்சியால் தமிழகம் எங்கும் விவசாயத்தில் மறுமலர்ச்சி என்ற பெயரில் இயற்கை வேளாண்மை மீண்டும் துளிர்க்க ஆரம்பித்தது. (squarespace.com)

ஆனாலும்,

கரிம வேளாண்மையில் (Organic) உருவாக்கப்பட்ட உணவுகள் என்று விற்பனைக்கு வரும் காய்கறிகள், சிறுதானியங்கள், மரபுவிதைகள், அரிசி இரகங்கள், மற்றும் மசாலாப் பொருட்கள் அனைத்தும் இயற்கை வேளாண்மை முறையில் விளைவிக்கப்பட்டனவையா என்பதற்கான விளக்கங்களும், சான்றிதழ்களும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுவதில்லை. பொருட்களை விளைவிப்பவர்களைக் கேட்டால், “குடிக்கும் தண்ணீருக்கு உங்களால் சான்றிதழ் வழங்க முடியுமா?” என்று நம்மிடம் திருப்பிக் கேட்பார்கள். நாமும், அவர் சொல்வது உண்மைதான் என்று வாங்கி வந்து இயற்கை உணவு என்று கூறி உண்ணத் தொடங்கிவிடுவோம்.

இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்களின் சீரிய முயற்சியால் தமிழகம் எங்கும் விவசாயத்தில் மறுமலர்ச்சி என்ற பெயரில் இயற்கை வேளாண்மை மீண்டும் துளிர்க்க ஆரம்பித்தது. சிலர் அவரின் ஆராய்ச்சிகளையும், அறிவுரைகளையும் வருடக்கணக்கில் பின்பற்றி, இயற்கை வேளாண்மையில் ஈடுபட்டு வருகின்றார்கள். அவரின் எண்ணங்களுக்கு சிறகு முளைத்தது சத்தியமங்கலத்தில்தான். அதனால்தான் இன்று வரையிலும் இயற்கை வேளாண் பொருட்கள் கிடைக்கும் இடமாக சத்தியமங்கலம் விளங்குகின்றது. தரமான விதை வகைகள், எண்ணெய் வித்துகள், பருப்புகள் தருமிடமாக விருதுநகர் மாவட்டம் இருக்கின்றது. சுத்தமான சிறுதானியங்களுக்கு தேனி மாவட்டம் சிறந்த இடமாக இருக்கின்றது. ஆனாலும், கரிம வேளாண் பொருட்கள் என்று விற்பனைக்கு வரும் அனைத்தும் இயற்கை விவசாயத்தால் விளைவிக்கப்பட்டவை கிடையாது.

விவசாயிகள் அனைவரும் மரபு விதைகளை பயன்படுத்துவது கிடையாது. மாறாக இராசயன மாற்றத்திற்கு உள்ளான செடிகளில் இருந்து கிடைக்கும் விதைகளை வாங்குகின்றார்கள். இது இரண்டாம் முளைப்பிற்கு மட்டும் போதுமானதாக இருக்கின்றதே தவிர, மும்முறை முளைக்கும் தன்மையற்றது. அதாவது, இயற்கை விவசாயத்தில் விளைந்த  காய்கறிகளின் விதைகளானது பல தலைமுறைகளை உருவாக்கக்கூடியது. ஆனால், விவசாயிகள் தேர்ந்தெடுக்கும் விதைகள் அவ்வாறு இருப்பதில்லை. காரணம், மரபு விதைகளின் பயன்பாடானது கொஞ்சம் கொஞ்சமாய அழிந்து விளிம்பு நிலையில் இருக்கின்றது. அவ்விதைகளைக் கொண்டு பயிர் விளைவிக்கப்படுமாயின் அது இரண்டு அல்லது மூன்று குடும்பங்களுக்கு போதுமானதாய் தான் இருக்கும். மேலும், அதை சந்தைப்படுத்துதல் என்பது சாத்தியங்களுக்கு அப்பாற்பட்டது.

இயற்கை வேளாண்மையின் தேவை என்பது எத்தனை தூரம் விவசாயிகளை சென்று சேர்ந்திருக்கின்றதோ, அந்த அளவிற்கு அதன் மூலம் உருவாக்கப்படும் காய்கறிகளின் தன்மை எவ்வாறு இருக்கும் என்பது வாடிக்கையாளர்களிடம் சென்று சேரவில்லை. (organicauthority.com)

அதையும் மீறி இயற்கை உணவுகள் விளைவிக்கப்படுமானால், அதன் உருவாக்க மதிப்பிற்கு ஏற்றவாறு அதன் விலையும் நிர்ணயம் செய்யப்படும். அந்த நிர்ணய விலையானது சராசரி இந்தியக் குடும்பங்களால் விலை கொடுத்து வாங்கி உண்ணும் அளவிற்கு சராசரியாக இருக்காது. இயற்கை உணவுகளையும், இன்னபிற மதிப்புக்கூட்டப்பட்ட இயற்கை உணவுப் பொருட்களையும் வாங்கும் சக்திக்காக மட்டுமே இந்த கரிம வேளாண்மை என்ற பதம் உருவாக்கப்பட்டிருக்கலாம். இயற்கை வேளாண்மையின் தேவை என்பது எத்தனை தூரம் விவசாயிகளை சென்று சேர்ந்திருக்கின்றதோ, அந்த அளவிற்கு அதன் மூலம் உருவாக்கப்படும் காய்கறிகளின் தன்மை எவ்வாறு இருக்கும் என்பது வாடிக்கையாளர்களிடம் சென்று சேரவில்லை.

பெயரளவில் செயல்படும் இது போன்ற விவசாய மாற்றம் வருங்காலத்திற்கு அச்சத்தை மட்டுமே தரக்கூடியது. சில நேரங்களில் விவசாயிகள் தங்களால் முடிந்த அளவிற்கு இம்முறையிலான விவசாயத்தை பின்பற்றுகின்றார்கள். ஆனால், அவர்களுக்கு அதனால் எந்த லாபமும் கிடையாது. வாங்கும் சக்தி என்பது இந்த நாட்டில் சொற்பமே. 80% இயற்கை விவசாயிகள் வெறும் 5% உயர்த்தட்டு வாங்கும் சக்திக்காக உழைத்தால், அதில் அவர்களுக்கு கிடைக்கும் பலனும் சொற்பமே. இத்தனை முயற்சிகளில் விளைவித்து, அது சந்தைக்கு போய்ச்சேரும் போது, அதனை விவசாயியிடமிருந்து வாங்கி விற்பவர்க்கே இலாபம் தரும் தொழிலாக இன்றும் விவசாயம் இருக்கின்றது.   பண்டைய முறை என்பது அத்தனை எளிதில் இலாபம் தருவதாக இல்லை என்பதும் பல்வேறு விவசாயிகளின் இராசயனத் தேர்வுக்கு காரணமாகின்றது.

இது போன்று இவர்களுக்கு இருக்கும் காரணங்களையும், இயற்கை விவசாயப் பொருட்களின் தேவையையும் கருத்தில் கொண்டு, பணம் செய்ய முயல்பவர்கள், போலியானதை உண்மை என்று விளம்பரம் செய்கின்றார்கள். ஒரு பதினைந்து வருடம் கடைவீதியில் கடை வைத்து, மக்களிடம் கொஞ்சம் நற்பெயர் இருக்கும் பட்சத்தில், கொள்ளை லாபத்திற்காக இயற்கை விவசாயப் பொருட்கள் என்று பெயர் சொல்லி மக்களை ஏமாற்றிவிடுகின்றார்கள். இதனை ஆய்வு செய்வதற்கோ, நாம் உண்ணும் உணவானது நஞ்சா, நல்லதா என்ற பிரக்ஞை ஏதுமின்றி வாழவும் பழகிக் கொள்கின்றோம்.

இருக்கும் கொஞ்சம் நிலத்தில் நீங்களாக தோட்டத்தினை உருவாக்குங்கள். அல்லது மாடித்தோட்டத்தினை உருவாக்குங்கள். இயற்கை முறை விவசாயத்தின் அறிவு என்பது அனைவருக்கும் சென்று சேரவேண்டும் என்பதை இவ்விவசாயிகள் உறுதியாக நம்புகின்றார்கள். (theorganicfarmbali.com)

இயற்கை விவசாயிகள் வாடிக்கையாளர்களுக்கு சொல்லும் மிக முக்கிய அறிவுரைகள்:

  1. மின்னுவதெல்லாம் பொன் அல்ல… பளபளக்கும் காய்கறிகள் என்றால், அதனை இயற்கை விவசாயப் பொருட்கள் என்று நம்பி வாங்காதீர்கள்.
  2. சாதாரண காய்கறிகளின் விலைக்கு இப்பொருட்கள் கிடைக்கின்றது என்றால், நம்பாதீர்கள். உருவாக்கச் செலவு என்பது இம்முறை விவசாயத்தில் மிகவும் அதிகம்.
  3. அருகில் இருக்கும் விவசாய நிலத்தில் காய்கறிகளை வாங்குங்கள். பளபளப்பிற்காகவும், கெடாமல் இருப்பதற்காகவும் சந்தையில் ஏகப்பட்ட வழிமுறைகளை பின்பற்றுகின்றார்கள் விற்பனையாளர்கள்.
  4. இருக்கும் கொஞ்சம் நிலத்தில் நீங்களாக தோட்டத்தினை உருவாக்குங்கள். அல்லது மாடித்தோட்டத்தினை உருவாக்குங்கள். இயற்கை முறை விவசாயத்தின் அறிவு என்பது அனைவருக்கும் சென்று சேரவேண்டும் என்பதை இவ்விவசாயிகள் உறுதியாக நம்புகின்றார்கள்.
  5. மரபு விதைகளை பரவலாக்க வேண்டி செடிகளையும், விதைகளையும் வாடிக்கையாளர்களுக்குத் தருகின்றார்கள். அதனையே மற்றவர்களும் பின்பற்ற வேண்டும் என்று ஊக்குவிக்கின்றார்கள்.
  6. முடிந்தவரை நாட்டுக் காய்கறிகளையே விளைவிக்கின்றார்கள். சில இடங்களில் பாரம்பரிய சமையல் வகைகளை மீட்டெடுக்கும் முனைப்புடனும் இருக்கின்றார்கள்.
  7. மீந்துவிடும் எதற்கும் மாற்றுவழி உணவு முறைகள் மற்றும் சமையல் முறைகள் பற்றியும் பல்வேறு இடங்களில் விளக்கமளிக்கின்றார்கள்.
  8. காய்கறிகளில் ஓட்டைகள் இருந்தால், நிச்சயமாக நம்பி வாங்கிக் கொள்ளலாம்.
  9. இரண்டல்லது மூன்று நாட்களில் கெட்டுவிடும் தன்மை உடையது.
  10. இயற்கை உணவுப் பொருட்களைப் பற்றிய போதிய அறிவு இல்லாமல், தயவு செய்து அப்பொருட்களை வாங்க வேண்டாம். பின்பு, சொத்தையாக இருக்கின்றது, புழு இருக்கின்றது, வண்டு இருக்கின்றது என்று புலம்பிக் கொண்டு மறுமுறை வரமாட்டார்கள்.

ஆயிரக்கணக்கில் பொய்யான, தரமற்ற, விளம்பரத்திற்காக உருவாக்கப்பட்ட எழுத்துகள் பல்வேறு ஊடகங்கள் வழியே நம்மிடம் வந்து சேருகின்றன. உணவுப் பொருட்கள் என்று வந்தால், எண்ணற்ற நோய்களின் பெயர்கள்தான் முதலில் வந்து நிற்கும். நாம் உண்ணும் உணவு எத்தகையது என்ற பிரக்ஞை இல்லாமல் போய்விட்டால், மக்களின் நலனுக்காக உருவாக்கப்பட்ட எதுவும் வெற்றி அடையாது.

(ஆர்கானிக் ஃபார்மிங்கின் சாதக-பாதங்களை தெரிந்து கொள்வதற்காக வேலை நிமித்தமாக நான் சந்தித்த விவசாயி ஒருவரின் அனுபவம் இது)

Related Articles