மத்தியகிழக்கு நாடுகள் என்றாலே வெறும் பாலைவனக் காடுகள் என்கிற காலம் மலையேறி, சுற்றுலாப் பயணிகளைக் கூட கவர்ந்திழுக்கக் கூடிய நாடுகளாக அவை உருவாக்கம் பெறத் தொடங்கிவிட்டன. அத்தகைய மத்தியகிழக்கு நாடுகளில் முதன்மையானது துபாய் ஆகும்.
துபாயின் கண்ணைப் பறிக்கும் கட்டிடங்கள், கடல் நடுவே உருவாக்கம் பெற்ற செயற்கைத் தீவுகள், தொழில்நுட்பம் மற்றும் பணத்தினை கொண்டு கட்டியமைக்கபட்ட வசதிகள், பாரம்பரிய உணவு முறைகள் என்பனவும் சுற்றுலாப் பயணிகளை இலகுவாக கவர்ந்திழுக்கக்கூடிய விடயங்களாக இருக்கின்றன. ஐரோப்பிய மற்றும் ஆசிய நாடுகளுக்கு ஒரு மத்திய தளமாக துபாயின் அமைவிடம் இருப்பதும் சுற்றுலாத்துறையில் ஆழ காலுன்றுவதற்கு வரப்பிரசாதமாக அமைந்திருக்கிறது என்பதில் ஐயமுமில்லை.
இப்படிப்பட்ட துபாய்க்கு தனித்துவத்தையும், பெருமையையும் சேர்க்கும் பெயர்களில் ஒன்று Burj Khalifa எனும் உலகின் மிகப்பெரிய வானுயர் கட்டடமாகும்.
ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு கட்டடம் ஒருவகையான பெயர்சொல்லும் கட்டடமாக அமைவது வழக்கம். அந்தவகையில், துபாயின் அபிவிருத்தியை திட்டமிடும்போது, சுற்றுலா, வணிகம் உட்பட அனைத்துக்குமே சார்ந்ததாக திட்டமிடப்பட்டு கட்டப்பட்டு துபாயின் அடையாளச் சின்னமாக இருக்கவேண்டும் என கட்டப்பட்ட கட்டிடங்களில் ஒன்றே Burj Khalifa ஆகும். இந்த வானுயர் கட்டடத்திலிருந்து பார்த்தால் தெரிவது துபாயின் அழகு மட்டுமல்ல, கூடவே மேகங்களுக்கு சொந்தமான வானின் அழகும் கூடத்தான். காரணம், இந்த வானுயர் கட்டடத்தின் உச்சம்தொடும் உயரமே ஆகும்.
2020ல் Dubai Creek Tower கட்டிமுடிக்கப்படும் வரை, உலகின் அல்லது துபாயின் வானுயர் கட்டடமாக இந்த Burj Khalifaவே உலகசாதனைக் கட்டடமாக இருக்கப்போகிறது. இந்தக் கட்டடத்துக்கான திட்டமிடலானது 2003ம் ஆண்டிலே Emaar Properties நிறுவனத்தினால் பரிந்துரைக்கப்பட்டு, 2004ல் கட்டுமானப்பணிகள் ஆரம்பிப்பதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. கிட்டத்தட்ட 6 வருடங்களின் உழைப்பின் பயனாக, 2010ல் உலகின் வானுயர் கட்டடம் எனும் பெயரை தாங்கியதாக இந்த கட்டடத்தின் பணிகள் நிறைவுக்கு வந்தது.
Burj Khalifa கட்டடமானது பல்வேறுவகை பயன்பாட்டை உள்ளடக்கியதாக கட்டப்பட்ட சாதனைக் கட்டடமாக உள்ளது. இதன் மொத்த உயரம் 829 மீட்டர்கள். இந்த கட்டடத்தின் ஆரம்பநிலையில் இது வெறும் 560 மீட்டர் உயரத்தை அடிப்படையாகக்கொண்டு திட்டமிடபட்டு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும், 2006ம் ஆண்டுக்கு பின்னதாக மீதமுள்ள கட்டிடத்தின் உயரமானது திட்டவரைபுகளில் உள்ளடக்கப்பட்டு கட்டிட பணிகள் அதற்கேற்ப மாற்றியமைக்கபட்டிருந்தது.
Burj Khalifaவின் சாதனைகள்
இந்தக் கட்டடம் இதுவரை கீழ்வரும் உலகசாதனைகளை தன்னகத்தே தக்கவைத்திருக்கும் கட்டடமாக உள்ளது.
- உலகின் வானுயர் கட்டடம்.
- உலகின் உயரமான கட்டட வடிவமைப்பைக் கொண்ட கட்டடம்.
- உலகின் மிக அதிகமான குடியிருப்பு தொகுதியை கொண்ட கட்டடம்.
- உலகில் அதிகமான பயன்படுத்தும் தளம் அல்லது மாடியைக் கொண்ட கட்டடம்.
- உலகின் அதிக கண்காணிப்பு தளத்தினை (observation deck) கொண்ட கட்டடம்.
- அதிக தூரம் பயணிக்கக்கூடிய (கீழிருந்து மேலாக அல்லது மேலிருந்து கீழாக) மின்உயர்த்திகளைக் கொண்ட கட்டடம்.
- உயரமான சேவை மின் உயர்த்தியை கொண்ட கட்டிடம்.
Burj Khalifa கட்டடத்தொகுதியின் உள்ளடக்கங்கள்
இந்தக் கட்டடமானது தன்னகத்தே 2957 வாகன நிறுத்துமிட வசதிகளைக் கொண்டுள்ளது. அதனைவிடவும், இங்கு அமைந்துள்ள உல்லாச விடுதியானது 384 அறைகளையும், வீட்டு குடியிருப்புத் தொகுதி 900 வீடுகளையும், மொத்தமாக 58 மின் உயர்த்திகளையும் கொண்டுள்ளது. குறிப்பாக, நிலத்துக்கு கீழ் ஒரு கட்டட தொகுதியையும், நில அளவுக்கு மேலாக 163 மாடித்தொகுதிகளையும் கொண்டதாக மொத்தம் 164 கட்டடத் தொகுதிகளை கொண்டுள்ளது. இந்தக் கட்டடத்தில் பாதுகாப்பாகவும், அரச ஒப்புதல் பெற்றதன் பிரகாரமும், அங்கு வசிப்பவர்களோ, கட்டட பயன்பாட்டளர்களோ பயன்படுத்தக்கூடிய அதிகபட்சமான உயரமாக 584.5 மீட்டர் உள்ளது.
இந்தக் கட்டடத்தின் நிலத்துக்கு கீழான பகுதி முற்றுமுழுதாக பராமரிப்பு மற்றும் வாகன தரிப்பிட வசதிகளுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதுற்கு மேலாக, நிலத்திலிருந்து முதல் 8 தளங்களும் ஆர்மணி விடுதிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 9வது தளத்திலிருந்து 16வது தளம் வரை ஆர்மணி குடியிருப்பு தொகுதிகளுக்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது. 19 தொடக்கம் 37வது தளம் வரை மீளவும் குடியிருப்பு பாவனைக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலான, 38ம் மற்றும் 39ம் தளங்கள் மீளவும் ஆர்மணி விடுதியின் உயர்ரக அறைகளை கொண்ட தளத்துக்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது.
43வது தளமானது Sky Lobbyஆக வடிவமைக்கப்பட்டிருப்பதுடன், 44 தொடக்கம் 72 வரையான தளமானது மேம்படுத்தப்பட்ட வசதிகளைக் கொண்ட குடியிருப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. 76வது தளம் மீளவும் Sky Lobbyஆக ஒதுக்கப்படுள்ளதுடன், 77 தொடக்கம் 108ம் தளங்கள் குடியிருப்புத் தொகுதிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 111 தொடக்கம் 121 வரையான தளங்கள் அதிசொகுசு குடியிருப்புக்காக ஒதுக்கப்படுள்ளது. 121 தொடக்கம் 163 வது தளங்கள் முறையே உணவு விடுதி, பார்வையாளர் தளங்கள், அதிசொகுசு மனைகள் மற்றும் தொலைத்தொடர்பு சாதனங்களை நிறுவுவதற்கு என ஒதுக்கப்பட்டுள்ளது.
இதுவரை உலகில் கட்டப்பட்ட கட்டடங்களில் உலகில் நவீனத்துவம் வாய்ந்த கட்டடமாக இது பார்க்கப்படுகிறது. கூடவே, துபாயின் வளர்ச்சியையும், அது சார்ந்த செல்வச் செழிப்பையும் விளக்கும் சின்னமாகவும் இது எழுந்து நிற்கிறது.
துபாய்க்கு செல்லுமொருவருக்கு Burj Khalifa கட்டடத்தினை வெறுமனே சுற்றி பார்த்துவிட்டு வருகின்ற எண்ணமோ அல்லது கட்டடத்தின் பார்வையிடும் தளங்களிலிருந்து துபாயின் அழகை இரசிக்க வேண்டும் என்கிற எண்ணமும் இருந்தால், அவர்கள் அதற்கு சராசரியாக AED 350 (LKR 14,000) தொடக்கம் AED 500 (LKR 20000) வரை நுழைவுக் கட்டணத்தை செலுத்தி சாதனை மிகு கட்டிட அழகையும், துபாயின் வனப்பையும் இரசிக்க முடியும்.