“எங்கள் இரண்டாவது குழந்தைக்குத் தேவையான பாலின மாற்றம் குறித்து நாங்கள் அறிந்ததும், எங்கள் சொந்த ஊரை விட்டு வெளியேற முடிவு செய்தோம். எங்கள் உறவுகள், நண்பர்கள் இதைப் புரிந்துகொள்வார்கள் என்று நாங்கள் நினைக்கவில்லை. அவர்களுக்கு எப்படி விளக்குவது என்றும் எங்களுக்குத் தெரியவில்லை.” என ஷாஷி கூறினார்.
ஷாஷி மாதிரியான பெற்றோருக்கு, DSD உடைய குழந்தை பிறப்பதனால் அவர்களின் முழு வாழ்க்கையையும் பாதிக்கும்.
உலகளாவிய ரீதியில் 5,000 பிறப்புகளுக்கு ஒன்று எனும் கணக்கில் பாலின வளர்ச்சியின் வழக்கமான தோற்றத்திலிருந்து மாறுபடுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இன்றுவரை பாலின வளர்ச்சியில் வேறுபாடுகளுடன் பிறந்த குழந்தைகள் அல்லது இளம் பருவத்தினரின் சுமார் 200க்கும் மேற்பட்ட வழக்குகளை இலங்கையின் பொரளையில் உள்ள லேடி ரிட்ஜ்வே (Lady Ridgeway) மருத்துவமனை ஆவணப்படுத்தியுள்ளது.
இது பொதுவாக DSD என அழைக்கப்படுகிறது. எவ்வாறாயினும், இந்த எண்ணிக்கை DSD இன் உண்மையான பரவலைப் பிரதிபலிப்பதிலிருந்து வெகுதொலைவில் இருக்கக்கூடும். இப் பாலின வேறுபாடுடையவர்கள் இலங்கையில் பயிற்சி செய்யும் குழந்தைகளுக்கான சில உட்சுரப்பியல் நிபுணர்களால் பராமரிக்கப்படுகிறார்கள்.
இலங்கையில் பெரும்பாலும் DSD தொடர்பான வழக்குகள் ஆவணப்படுத்தப் படுவதில்லை. இதற்கு பல காரணங்கள் உள்ளன. ஒரு முக்கிய காரணம் என்னவென்றால் குழந்தையின் DSD நிலையைச் சமூகத்தில் இழிவாக பார்த்தல் மற்றும் தங்கள் குழந்தை ஓரங்கட்டப்படுவதைத் தவிர்ப்பதற்காக பெற்றோர்கள் இதைப் புறக்கணிக்கிறார்கள்.
இந்தக் குழந்தைகளும் அவர்களது பெற்றோர்களும் பல மருத்துவ, சட்ட மற்றும் சமூகப் போராட்டங்களோடு தங்கள் வாழ்க்கையைச் செலவிடுகிறார்கள். இவை அனைத்தும் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் அவர்களைச் சோர்வடையச் செய்கின்றன. அவை ஏன் என்று ஆராய்வோம்.
DSD என்றால் என்ன ?
இது பொதுவாக பிறக்கும்போதே வெளிப்படத் தொடங்குகிறது. ஒரு நபரின் பாலினம் பொதுவாக வெளிப்புறப் பிறப்புறுப்பின் அடிப்படையில் பிறக்கும்போதே அடையாளம் காணப்படுகிறது. இருப்பினும், சில அரிதான சந்தர்ப்பங்களில் வழக்கமான ஆண் அல்லது பெண் உறுப்புகளுடன் ஒத்துப்போகாத வெளிப்புறப் பாலியல் உறுப்புகளுடன் குழந்தைகள் பிறக்கின்றன.
இந்த நிலை மூன்று சாத்தியமான வழிகளில் வெளிப்படும்.
இன்று, நவீன விஞ்ஞானம் ஒரு நபரின் பாலினம் மற்றும் பாலினத்தை தீர்மானிக்கும் காரணிகளைக் கண்டறியும் பணியில் இயங்கிக்கொண்டிருக்கிறது. பாலியல் வளர்ச்சியில் கீழ்காணும் ஏழு பகுதிகள் தாக்கம் செலுத்துகிறது என்பதை நாம் அறிவோம் :
கண் நிறம், முடி நிறம், உடலின் தன்மைகள் மற்றும் பலவற்றில் பல வேறுபாடுகள் இருப்பதைப் போலவே இந்த ஏழு பகுதிகளின் தொடர்புகள் பாலின வளர்ச்சியின் பல்வேறு மாறுபாடுகளை உருவாக்கலாம்.
இருப்பினும் பல காரணிகள் இங்கு செல்வாக்கு செலுத்துவதால், இந்த வித்தியாசமான குணாதிசயங்களோடு பிறக்கும் DSD உள்ள குழந்தைகளுக்குப் பிறக்கும் போது பாலினத்தை வரையறுக்க மருத்துவர்களுக்கு கடினமாக உள்ளது. இது மருத்துவ ரீதியாகவும்,
சட்டரீதியாகவும் பெற்றோர்கள் பலவிதமான சிக்கல்களுக்கு முகங்கொடுக்க வழிவகுக்கிறது.
பிறக்கும் போதே தெளிவற்ற பிறப்புறுப்பு உள்ள குழந்தை கண்டறியப்பட்டால், பாலினத்தை தன்னிச்சையாக யூகிக்காமல் குழந்தைக்கு பாலினம் ஒதுக்கப்படும் முன் சிறப்பு மருத்துவ ஆலோசனை, தகுந்த விசாரணைகள் மற்றும் மருத்துவ ஆலோசனைகளைப் பெறுவது முக்கியம். குழந்தையின் பாலினத்தை மாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டால், குழந்தை மற்றும் குடும்பம் எதிர்கொள்ளக்கூடிய பல பாதகமான சமூக மற்றும் சட்டரீதியான தாக்கங்களைத் தடுக்க இது உதவுகிறது.
‘ஆண் குழந்தையா அல்லது பெண் குழந்தையா?’
இந்தக் கேள்விக்கு பதில், பிறக்கும்போதே ஒவ்வொரு பெற்றோரும் மருத்துவரும் கூறவேண்டிய ஒன்று. ஆனால் DSD பிறப்பு விடயத்தில் எப்போதும் இது தெளிவாக இருக்காது.
அடையாளம் காண்பது கடினமாக இருக்கும்போது குழந்தையின் பிறப்பைப் பதிவு செய்வதற்கும், தேர்ந்தெடுக்கப்பட்ட பாலினத்தில் அவர்களை வளர்ப்பதற்கும் பெற்றோரும் மருத்துவர்களும் பெரும்பாலும் பாலினங்களில் ஒன்றைத் தேர்வு செய்கிறார்கள்.
சில நிபந்தனைகளின் பேரிலும், குழந்தையின் நிலையின் அடிப்படையிலும் பிறப்புறுப்பை அறுவை சிகிச்சை செய்யவேண்டி ஏற்படலாம். வேறு சில நிகழ்வுகளில், குறிப்பாக கான்ஜெனிட்டல் அட்ரீனல் ஹைப்பர் பிளாசியா- Congenital Adrenal Hyperplasia (CAH) எனப்படும் DSD வடிவத்தில் ஆரம்பத்திலேயே இந்த நிலை கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப் படாவிட்டால் குழந்தையின் உயிருக்கு ஆபத்தான சூழ்நிலைகளைச் சந்திக்க நேரிடும்.
“எனது குழந்தை கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்ததால் Lady Ridgeway மருத்துவமனைக்கு மாற்றப்பட வேண்டியிருந்தது, அங்கு எனது குழந்தைக்கு அரிய வகை CAH இருப்பது கண்டறியப்பட்டது.”
“மருத்துவர்கள் எங்கள் குழந்தைக்கு சிகிச்சை அளித்தபோது, அவளுக்கு ஆண் பாலின உறுப்புகள் இருப்பதை அறிந்துகொண்டோம்.”
என ஷாஷி கூறினார்.
“ஆழமான விளக்கம் மற்றும் நிபுணர்கள் குழுவின் ஆலோசனைக்குப் பிறகு, எங்கள் குழந்தையின் பாலினத்தை மறுசீரமைப்பதற்கான கூட்டு முடிவுக்கு வந்தோம். எவ்வாறாயினும் எங்கள் குழந்தை ஏற்கனவே பெண்ணாக பதிவு செய்யப்பட்டுள்ளது, இது எங்களுக்கு நிறைய சிக்கல்களை ஏற்படுத்தியது.”
“வித்தியாசமான பிறப்புறுப்புடன் குழந்தை பிறக்கும் போது, அதைக் கண்டறிந்து நிவர்த்தி செய்வது முக்கியம். குழந்தைக்கு பாலின வளர்ச்சியில் வேறுபாடு இருப்பது கண்டறியப்பட்டாலும், பிறந்த உடனேயே புதிதாகப் பிறந்த குழந்தைக்கு பாலினத்தை ஒதுக்க முடியாது.”என்று (குழந்தைகளுக்கான Lady Ridgeway மருத்துவமனையின் கெளரவ ஆலோசகர், குழந்தை உட்சுரப்பியல் நிபுணர் மற்றும் கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் ‘சிக்கலான ஹார்மோன் கோளாறுகளுக்கான’ மையத்தின் இயக்குனர்) வைத்தியர் சுமுது நிமாலி செனவிரத்ன கூறினார்.
Dr.சுமுது செனவிரத்ன – நாட்டில் உள்ள குழந்தைகளுக்கான உட்சுரப்பியல் நிபுணர்களில் ஒருவர். இவரிடம் ஆலோசனை பெற நோயாளிகள் நாடு முழுவதிலுமிருந்து கொழும்புக்கு வருகிறார்கள்.
“பெரும்பாலும், ஒரு முடிவுக்கு வருவதற்கு முன் குழந்தையின் உட்புற இனப்பெருக்க உறுப்புகள், ஹார்மோன்கள் மற்றும் பாலின குரோமோசோம்களை அடையாளம் காண ஹார்மோன் சோதனைகள், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் (Ultrasound scan) மற்றும் குறைந்தபட்சம் அடிப்படை மரபணு சோதனை (Karyotype) ஆகியவற்றை நாங்கள் கோருகிறோம். இதன் முடிவுகள் வர சில வாரங்கள் ஆகலாம்.”
“பின்னர் பெற்றோர்களுக்கு விளக்கமும் ஆலோசனையும் அளிக்கப்படுகிறது. ஒரு குழந்தை தனது பாலின அடையாளத்தை மதிப்பிடுவதற்குரிய வயதில் இல்லாமலிருந்தால், பிறக்கும் போதே கண்டறியப்பட்ட DSDஇல் அடிக்கடி நிகழ்வது போல் நாங்கள் இந்தக் குழந்தைகளைப் பின்தொடர்ந்து – அவர்கள் புரிந்துகொள்ளும் அளவுக்கு முதிர்ச்சியடைந்தவுடன் அவர்களுடன் இந்தப் பிரச்சனைகளைப் பற்றி விவாதிப்போம்.” என்று வைத்தியர் சுமுது நிமாலி செனவிரத்ன
கூறினார்.
பால் மற்றும் பாலின அடையாளம்
இதில் மிகப்பெரிய சவால் உள்ளது: எதிர்காலத்தில் குழந்தையின் பாலின அடையாளம் எவ்வாறு உருவாகலாம் என்பதை பெற்றோர்கள் அல்லது மருத்துவ வல்லுநர்கள் எவ்வாறு ஊகிக்க முடியும்?
பல சந்தர்ப்பங்களில், அனுபவம் வாய்ந்த நிபுணர்கள் அல்லது பலதரப்பட்ட குழுக்களிடமிருந்து ஆலோசனையைப் பெறுதல் மற்றும் அடிப்படை நோயைக் கண்டறிய உதவலாம். மேலும் அரிதான தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தர்ப்பங்களிலும், குழந்தை வளரும் போதும் பாலின அடையாளம் மிகவும் தெளிவாகிறது. குறிப்பாக பருவமடையும் போது. சில நேரங்களில் பிற்காலத்தில் பாலின மறுசீரமைப்பு தேவைப்படலாம்.
இலங்கையில், DSD பற்றிய விழிப்புணர்வு குறைவாக இருக்கும் மருத்துவ மற்றும் சட்டத் துறைகளில் கூட இது பற்றி வாதிடுவது இன்றியமையாதது.
“ஆனால் எங்களுக்கு ஒரு பெரிய பிரச்சனை இருந்தது. நாங்கள் பிறப்புச் சான்றிதழில் திருத்தம் செய்ய வேண்டியிருந்தது, மேலும் புதிய பாலினத்தை மட்டுமே திருத்தமாக எழுத முடியும். அவரிடமிருந்து பிறப்புச் சான்றிதழை மறைத்து வருகிறோம்” என ஷாஷி எங்களிடம் கூறினார்.
இலங்கையில் பிறப்புச் சான்றிதழ் சிக்கல்கள்
DSDவுடைய குழந்தை சட்ட அமைப்புடன் தொடர்பு கொள்ளும் முதல் புள்ளி பிறப்புப் பதிவு ஆகும். துரதிர்ஷ்டவசமாக, DSD உடைய நபர்கள் பாரபட்சம் மற்றும் பாகுபாடுகளை எதிர்கொள்ளும் முதல் சிக்கல்களில் இதுவும் ஒன்றாகும்.
இலங்கையில் நடைமுறையிலுள்ள பிறப்புச் சான்றிதழ்.
இலங்கையில், பிறப்புச் சான்றிதழில் திருத்தங்கள் மேற்கொள்வது நிச்சயமாக சாத்தியமாகும். ஆனால் அதற்கான செயல்முறை தான் சிக்கல்களுடன் காணப்படுகிறது. பிறப்புச் சான்றிதழில் திருத்தம் செய்யப்படலாம் என்றாலும் பெயர் மற்றும் பாலினம் ஆகிய இரண்டின் திருத்தங்களுடன் ஏற்கனவே பிறப்புப் பதிவு செய்யப்பட்ட பெயர் மற்றும் பாலினம் இரண்டையும் அது தொடர்ந்து காண்பிக்கும். அதாவது, தனது பெயரையும் பாலினத்தையும் மாற்றும் ஒரு நபருக்கு, பிறப்புச் சான்றிதழில் இரு பெயர்களும் இருக்கும் – அதே போல் இரு பாலின பிரிவும் பதியப்படும்.
உதாரணமாக, தேவக மிஹிரங்க என்று பதிவுசெய்யப்பட்ட ஒரு பையன் DSDவுடன் பிறந்திருந்தால், அவனது பிறப்புச் சான்றிதழில் பெயரைத் திருத்த அவன் தேர்ந்தெடுத்த பெயர் தேவிகா மிஹிரானி எனில் அதுவும் தேவக மிஹிரங்கவுடன் சேர்த்து எழுதப்படும்.
குழந்தை வளரும்போது பாடசாலையில் சேர்க்க, தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க, கடவுச்சீட்டு விண்ணப்பங்கள், வேலைவாய்ப்பு ஒப்பந்தங்கள் மற்றும் பலவற்றிற்கு பிறப்புச் சான்றிதழ் தேவைப்படுகிறது.
இலங்கையில், பிறப்புப் பதிவு பொதுவாக பிறந்த மூன்று மாதங்களுக்குள் செய்யப்படுகிறது. இருப்பினும், இது ஒரு வருடம் அல்லது அதற்கும் மேலாக ஒத்திவைக்கப்படலாம். அப்போது பதிவுசெய்ய கட்டணமாக 60 ரூபாய் அறவிடப்படுகிறது.
இருப்பினும், பல பெற்றோருக்குத் தெரியாதது என்னவென்றால் பிறப்பை தாமதமாகப் பதிவு செய்வதற்கான நடைமுறையானது DSD தொடர்புடைய ஆவணங்கள் மற்றும் மருத்துவரின் பரிந்துரையுடன் மேற்கொள்ளமுடியும். அறுவை சிகிச்சை தேவைப்படும் சந்தர்ப்பங்களில் இது பொருந்தும். அதேவேளை மூன்று வயதுவரைப் பதிவுகள் இடம்பெறாது.
“எங்கள் குழந்தையின் பிறப்பை சரியான நேரத்தில் பதிவு செய்தோம். பாலின மாற்றத்திற்குப் பிறகுதான் பிறப்புச் சான்றிதழை மாற்றுவது எவ்வளவு கடினம் என்பதை நாங்கள் புரிந்துகொண்டோம். பிறப்புச் சான்றிதழில் ஆண் மற்றும் பெண் என இரண்டும் குறிப்பிடப்பட்டிருப்பதை மக்கள் பார்க்கும் போது என் குழந்தை அவர்களால் வெறித்துப் பார்க்கப்படாது, வித்தியாசமாக நடத்தப்படாது, அவமரியாதைக்கு உள்ளாக்கப்படாது, கொடுமைப்படுத்தப்படாது அல்லது ஓரங்கட்டப்பட மாட்டாது என்று நான் நம்புகிறேன்.” என்று அசங்க கூறினார்.
பாகுபாடு வெளிப்படும் மற்றொரு நிகழ்வு இது. தற்போது பிறப்புச் சான்றிதழில் திருத்தங்கள் மேற்கொள்ளப் பதிவுத்துறை ஆணையாளருக்கு எழுத்துப்பூர்வமாக விண்ணப்பிக்கலாம். பாலினம் அல்லது பாலினத்தில் மாற்றம் என்பது குழந்தையின் முன்னர் நிராகரிக்கப்பட்ட பாலினத்தை அழிப்பதை உள்ளடக்குவதில்லை, மாறாக அது ஒரு சேர்த்தல்/திருத்தமாக மட்டுமே பதியப்படுகிறது.
“இதன் பொருள் என்னவென்றால், பாலின மாற்றம் எப்போதும் பிறப்புச் சான்றிதழில் ஓர் அடையாளமாக இருக்கும். ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளதை அனைவரும் அறிவார்கள். மேலும் பாலின வளர்ச்சியில் உள்ள வேறுபாடுகளால் பாகுபாட்டிற்கு ஆளானவர்கள் பாகுபாடு இல்லாமல் வாழ அதை மறைக்க முயல்வார்கள். அவர்களது பணியிடங்கள் மற்றும் பிற சூழ்நிலைகளில் இதை அவர்களால் மறைக்க முடியாது.” என
(கடந்த மூன்று வருடகாலமாக இந்தப் பிரச்சினையில் பணியாற்றி வரும் The Asia Foundation இன் சட்டத்துறை, நீதி மற்றும் பாலின நிகழ்ச்சிகளுக்கான இயக்குனர்) Dr. ரமணி ஜெயசுந்தர கூறுகிறார்.
பல ஆண்டுகளாக இந்தப் பிரச்சினையை மையப்படுத்தி Dr. ரமணி ஜெயசுந்தர அவர்கள் சிறந்த சட்ட ஆலோசனைகளை முன்வைத்து வருகிறார்.
இந்த ஒற்றைக் குறியீடு அவர்களை வாழ்நாள் முழுவதும் பாதிக்கும். இந்தக் குழந்தைகள் ஒவ்வொரு படிநிலையிலும் களங்கத்திற்கும் மற்றும் பாகுபாடுகளுக்கும் ஆளாகின்றனர். இது சர்வதேச ஆய்வுகள், உள்ளூர் அறிக்கைகளின் அடிப்படையில் பெற்றோர்களிடமிருந்து மருத்துவர்களுக்கு அனுப்பப்பட்ட ஆவணங்கள் ஊடாக அறியமுடிகிறது.
தங்கள் பிள்ளைகளுக்குப் பாடசாலையில் சேர்க்கை அனுமதி கிடைக்காமல் போகலாம் என பெற்றோர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். வித்தியாசமான பாலியல் பண்புகளைக் கொண்டிருப்பதனால் பாடசாலையில் கொடுமைப்படுத்துதல், அவமானம் மற்றும் தனிமைப்படுத்தல் போன்ற உணர்வுகளுக்கு வழிவகுக்கும். பருவமடையும் போது, குழந்தையின் பாலின வளர்ச்சியில் வேறுபாடுகள் அதிகமாக வெளிப்படும். அதாவது மார்பக வளர்ச்சி இல்லாத பெண்கள், மார்பகங்களைக் கொண்ட சிறுவர்கள் அல்லது குரல் வேறுபாடுகள் என்பவற்றைக் குறிப்பிடலாம்.
இலங்கையில் நடைமுறையிலுள்ள ஒரு பாடசாலை வகுப்பறை.
உண்மையில் கூறுவதானால் அரிதான சில சந்தர்ப்பங்களில் பருவமடையும் போதே DSD முதல் முறையாக கண்டறியப்படுகிறது. பாலினத்தின் வெளிப்புற வெளிப்பாடுகளும், ஆவணங்களில் பாலின அடையாளம் மற்றும் மருத்துவ முகாமை ஆகியவற்றுக்கான மாற்றங்கள் இங்கே இன்னும் வலுவாக அமைவது அவசியமாகின்றன.
தாமதமான பிறப்புப் பதிவு பற்றிய கல்வியுடன் DSD உடைய நபர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்காக விழிப்புணர்வு மற்றும் புரிதலில் உள்ள இடைவெளிகளை சரிசெய்வதற்கு கல்வி அமைச்சின் அக்கறையும் அவசியமாகிறது. பதிவுகளை மாற்றுவதற்கான தெளிவான நடைமுறை அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க இன்றியமையாதது.
DSDயுடையவர்களுக்கு புதிய பிறப்புச் சான்றிதழ் என்பது புதியவொரு சுதந்திரமான தொடக்கத்தைக் கொடுக்கும். ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக இலங்கையில் DSDயுடைய குழந்தைகளின் பெற்றோருக்கு முக்கிய தேவையாக இருப்பது என்ன?
சமூகம் கொண்டுள்ள உளவியல் பார்வையும் கற்பிதங்களும்.
“எங்கள் குழந்தைகளால் நண்பர்களைத் தேடிக்கொள்ள முடியாது, மேலும் பாடசாலையில் மாணவர்களும் ஆசிரியர்களும் அவர்களைக் கேலிசெய்து கொடுமைப்படுத்துவார்கள் என்று நாங்கள் கவலைப்படுகிறோம்.” என ஷாஷி கூறுகிறார்.
இலங்கையில் DSD உள்ள குழந்தைகள் பொதுவாக மறைக்கப்பட்டே காணப்படுகின்றனர். அவர்களின் இயல்புநிலை பெரும்பாலும் புறக்கணிக்கப்படுகிறது அல்லது அடக்கப்படுகிறது. குழந்தைக்கு தயக்கம் உள்ளபோதிலும் பாலினத்தை இயல்பாக்கும் செயல்பாடுகள் அல்லது ஹார்மோன் சிகிச்சையை மேற்கொள்ள பெற்றோர்கள் அழுத்தம் கொடுப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இலவசமாகக் கிடைக்கும் மருத்துவம் மற்றும் சட்டக் கருவிகள் பற்றி பெரும்பாலும் பெற்றோருக்குத் தெரியாது. பிறப்புப் பதிவுகள் ஒருபுறம் இருக்க, DSDவுடையவொரு குழந்தைக்குத் தன் ஒட்டுமொத்த நல்வாழ்வில் சிறந்த விளைவுகளுக்காக, பருவமடையும் போது அல்லது அதற்கு முந்தைய காலத்தில் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் (Hormonal Imbalances) சிகிச்சை செய்யப்படுவதை உறுதி செய்வது மருத்துவ ரீதியாக அவசியம். பல குழந்தைகள் தங்கள் குடும்பங்களில் பாரபட்சம் காட்டப்படுவார்கள் என்ற பயம் காரணமாக, தகுதியான வழக்கமான மருத்துவ கவனிப்பை இழக்கின்றனர்.
கல்விமுறைகள் சட்டத்திற்கமைவாக வழிநடத்தப்படுகிறது. இருப்பினும், DSDஐச் சுற்றியுள்ள சட்டதிட்டங்கள் இன்னும் உருவாகி வரும் நிலையிலேயே காணப்படுகிறது.
பல குழந்தைகள் தவறாக இனங்காணப்பட்டு அடையாளப்படுத்தப்படாமல் தங்களது உரிமைகளைப் பெறுவதற்கு இயலாமல் போகின்றது. காரணம் அவர்களது பெற்றோர்கள் DSD தொடர்புடைய அவமானம் மற்றும் களங்கம் காரணமாக வாதிடுவதில் இருந்து பின்வாங்குகின்றனர்.
இந்தக் காரணிகள் அனைத்தும் தாக்கம் செலுத்துவதால் – DSDவுடன் பிறந்த குழந்தைகள் மற்றும் அவர்களது குடும்பங்கள் அவமானம், தனித்து வாழத்தேவையான உதவிகள், புரிதல் மற்றும் போதிய விளக்கங்கள் ஆகியவற்றைப் பெறுவது இல்லாமலாகின்றது.
விழிப்புணர்வு மற்றும் கல்வியிலிருந்து மனநல ஆதரவு, மருத்துவ உணர்திறன், சட்டத் திருத்தங்கள், சட்டம் மற்றும் ஆராய்ச்சி ஆகியவையோடு DSDவுடைய நபர்களுக்குத் தகுதியான உரிமைகள் மற்றும் வாய்ப்புகளை வழங்குவது அவசியமாகும். அனைத்திற்கும் மேலாக ஒரு சாதாரண வாழ்க்கையை வாழ அவர்களுக்கான சூழலை உண்டாக்குவது நம் அனைவரின் பொறுப்பாகும்.
*தனிநபர் உரிமைத்தொடர்பான பொறுப்பு நிமித்தம் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.