Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

காவிரி நதி நீர் பங்கீடு உலகலாவிய ஒப்பீடு

கோள்நிலை திரிந்து கோடை நீடினும்

தான்நிலை திரியாத் தண்ட மிழ்ப்பாவை – மணிமேகலை

 

தமிழ் இலக்கியங்களிலும், வரலாற்றிலும் என்றும் நீங்காத புகழ்பெற்று நிலைத்திருக்கின்றாள் காவேரி. இவளின் ஆற்றுப் பாசனத்தில் தான் வணிக நகராக இருந்த சோழ வளநாடு வேளாண் மக்களை அதிகம் வளர்த்தெடுத்த டெல்டா பகுதியாக மாறியது. பசுமை என்பதற்கான மறுபெயரென இருந்தவள் காவேரி. கிட்டத்தட்ட10 வருடங்களுக்கு முன்பு கோவை வழியே வேளாங்கண்ணி சென்ற ஒரு அதிகாலையில் எங்களுடன் கரையோரமாய பரவி பயணத்திவள் இக்காவேரி. இவளோடு பயணித்த நேரங்கள் என்பது மிகவும் குறைவு தான். ஆனாலும் இவள் மீதான அடக்கு முறைகள், ஆதிக்கங்கள், அணைகள், உரிமைகள் இவளை மீண்டும் மீண்டும் படிக்க வைக்கின்றது. யோசிக்க வைக்கின்றது.

பாய்மரக்கப்பலின் பாயை இறக்காமலே நேரடியாக ஆற்றின் உள்ளே வந்து ஏற்றுமதி மற்றும் இறக்குமதிகளை நடத்திய பூம்புகார் இன்று காணாமல் போய்விட்டது. காவேரி நீள, அகல, ஆழத்துடன் பிரம்மாண்டமாய் கடலில் கலந்தெல்லாம் ஒரு காலம். காவேரியில் வெள்ளம்  ஏற்படுவதை பார்ப்பதும் அபூர்வம். சொல்லப்போனால் காவிரி டெல்டா பகுதியில் தண்ணீர் வருவதே இன்று சிக்கலாய் போய்கொண்டிருக்கின்றது. சிலப்பதிகாரத்தில் ஆழ்ந்து மூழ்கியவர்கள் பூம்புகாரை பார்ப்பதற்காக காவேரி பூம்பட்டிணம் சென்றால் மறந்தும்கூட அங்கே தண்ணீர் இல்லை. எத்தனை அரசியல்கள், போராட்டங்கள், இழப்புகள், விவசாயிகளின் தற்கொலைகள்? யாருக்கு சொந்தம் இந்த காவேரி என்பது போய் காவேரியால் யாருக்கு இழப்பதிகம் என்று யோசித்தால் தெரிந்துவிடும் காவேரி மீது நடத்தப்படும் அரசியலால் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்ட மாநிலம் எது என்று.

நதி நீர் பங்கீட்டால் பூசல்கள் ஏற்படுவது ஒன்றும் புதிதல்ல. ஒவ்வொரு நதியையும் உரிமை கொண்டாடிக்கொண்டு உலகெங்கும் பிரச்சனைகள் எழுந்து கொண்டே தான் இருக்கின்றன. அதற்கான தீர்வுகளும் கண்டுபிடித்த வண்ணம் இருந்து கொண்டே தான் இருக்கின்றன.

காவேரி எனப்படுவது

தமிழகம், கர்நாடகம்,கேரளம், மற்றும் புதுவைக்குமான வாழ்வாதாரமே இந்த நதி. 765 கிலோமீட்டர் பயணம் குடகு மலையில் இருக்கும் தலைக்காவேரியில் தொடங்கி பூம்புகாரில் வந்து கடலில் கலக்க்கின்றது. கடலில் கலக்கின்றதா என்ற கேள்வியை இப்போது தவிர்ப்போம். குடகு, ஹாசன், மைசூர், மாண்டியா, பெங்களூர் புறநகர் பகுதி, சாம்ராஜ் நகர், தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் வழியாக பயணித்து கடலில் கடக்கின்றது. காவேரியின் கடைசி துளி வரை நாம் உபயோகித்துக் கொள்வதால் கடலில் கடக்கும் வைபவம் நிகழ்கின்றதா என்று தெரியாமலே போய்விடுகின்றது.

Kaveri Map
Kaveri Map (Pic: wikipedia)

சர்வதேச நதிநீர் சட்டம்

காவேரிக்காக மட்டும் அல்ல உலகெங்கிலும் உள்ள மக்கள் தங்களின் நீர் தேவைக்காக நதியினை உரிமை கோருவது நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றது. விவசாயம், குடிநீர் தேவை, மின்சாரம் எடுத்தல், நீர் தேக்க அனுமதி, அணைகள் கட்டுதல் தொடர்பாக நாட்டுக்குள்ளும் நாடுகளுக்குள்ளும் போராட்டங்களும் பிரச்சனைகளும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன.  சர்வதேச நதிநீர்ச் சட்டத்தினைக் கொண்டு இப்பிரச்சனைகள் எல்லாம் தீர்த்து வைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இச்சட்டத்தின் படி ஆண்டாண்டு காலமாக நதி நீரினை நம்பியே இருக்கும் கடைமட்ட அல்லது சமதளப் பகுதிகளுக்கே நதியின் மீது அதிக உரிமை இருக்கின்றது என்று கூறியுள்ளது காரணம், பருவநிலையானது மலைப்பகுதியில் எப்போது வேண்டுமானாலும் மாறலாம். மழைப்பொழிவானது அங்கு எப்போதும் நிகழ்கின்ற ஒன்று. அதனால் கீழ் உள்ள மக்களுக்குச் செல்லும் நதி நீரில், நதி உற்பத்தி ஆகும் இடத்தில் இருக்கும் மக்கள் எந்த ஒரு தடையும் விதிக்கக் கூடாது என்பதாகும். மின்சாரத்திற்காக நீர் தேக்க திட்டங்களை அம்மக்கள் நடைமுறைப்படுத்த விரும்பினாலும், இருபக்க கருத்துகளும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும் என்பதாகும். சிந்து நதி தொடர்பாக பாகிஸ்தானிற்கும் இந்தியாவிற்கும் இடையே கருத்து வேறுபாடுகள் வந்த போதும் கூட உலக வங்கியினை நாடி இது போன்ற பிரச்சனைகளை தீர்த்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

Nagarjuna
Nagarjuna (Pic: wikipedia)

சிந்து நதி நீர் பங்கீடு

1960ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19ம் தேதி இந்திய பிரதமர் திரு. ஜவஹர்லால் நேரு மற்றும் பாகிஸ்தான் பிரதமர் திரு. ஆயுப் கான் அவர்களின் முன்னிலையில் இவ்வொப்பந்தம் கராச்சியில் கையெழுத்தானது. அதன்படி பியாஸ், ராவி, சட்லஜ் போன்று இந்தியாவின் கிழக்கில் பாயும் நதிகளின் கட்டுப்பாடு இந்தியாவிற்கும் சிந்து, ஜெனாப், ஜீலம் நதிகளின் கட்டுப்பாடுகளை பாகிஸ்தானிற்கும் கொடுத்தது. சிந்து நதியின் பிறப்பிடம் சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், இவ்வொப்பந்தத்தில் சீனாவின் கருத்துகள் கேட்கப்படவில்லை. இந்தியாவில் பாயும் சிந்து நதியின் மொத்த அளவில் 20% வரை விவசாயம் மற்றும் மின்சார உற்பத்திக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். ஒரு வேளை சீனா இந்த நதியில் முழு உரிமை கோரினால் இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கும் பிரச்சனையாக அமையும். இந்தியாவும் பாகிஸ்தானும் பல்வேறு நேரங்களில், எல்லைத் தொடர்பாக பல்வேறு சண்டைகள் மற்றும் போரில் ஈடுபட்டாலும், இது நாள் வரை நதி நீர் பங்கீட்டில் எந்த பிரச்சனைகளிலும் ஈடுபட்டதில்லை. 

River Indus
Indus River (Pic: thethirdpole)

நைல் நதி

உலகின் மிக நீளமான நைல் நதியின் பங்கீடுகளும் இத்தனை ஆண்டுகள் பிரச்சனைகளுக்குட்பட்டதாகவே இருக்கின்றது. எகிப்து, புருண்டி, சூடான், எத்தியோப்பியா, காங்கோ குடியரசு உட்பட்ட பத்து நாடுகளில் பாயும் இந்த நதியில் அதிக உரிமையானது சூடானிற்கும் எகிப்திற்கும் தான் அதிகம் இருந்தது. தொடர்ந்து அதிகரித்து வந்த மக்கள் தொகைப் பெருக்கம் மற்றும் நகர்புற தேவைகளுக்காக எகிப்தும், நைலின் மிக முக்கிய மூன்று கிளை நதிகளான வெள்ளை நைல் நதி, நீல நைல் நதி, மற்றும் அத்பரா ஆகிய மூன்றின் பிறப்பிடமான சூடானும் நைல் நதியை தங்களின் விருப்பம் போல் பகிர்ந்து கொண்டு அதில் அதிகாரம் செலுத்தினார்கள். ஆனால் சர்வதேச நதி நீர் சட்டத்தின் படி உருவாக்கப்பட்ட (Entebbe Agreement) என்டெப் ஒப்பந்தத்தின் படி இந்த உரிமை கொண்டாடும் முறை தடுத்து நிறுத்தப்பட்டது. மேலும் நதியின் கீழ்புறம் வசிக்கும் மக்களின் நிலை, விவசாயம், மற்றும் தொழில் சார் தேவைகளை மனதில் வைத்துக் கொண்டு இப்படியானதாக ஒரு முடிவு எடுக்கப்பட்டிருக்கின்றது. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு நாடுகளாய் சுதந்திரமடைய ஒப்பந்தங்களில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்ட வண்ணம் இருக்கின்றன. நைல் ஆற்றுப்படுகை இயக்கத்தில் மிக சமீபத்தில் சேர்ந்த தெற்கு சூடான் 2011ல் சுதந்திரமடைந்தது. 28% நைல் நீரின் கட்டுப்பாடானது இந்த நாட்டின் கையில் தற்போது இருப்பது குறிப்பிடத்தக்கது. 90% தன்னுடைய தண்ணீர் தேவைகளுக்காக எகிப்து நாடானது நைல் நதியினையே அதிகம் நம்பியுள்ளது. அதில் வரும் 80% நீரினை விவசாயத்திற்காக பயன்படுத்தி வருகின்றது என்று சொன்னாலும் கூட, உணவு தேவைகள் அனைத்திற்கும் எகிப்து பெரும்பாலும் வெளிநாடுகளையே நம்பி இருக்கின்றது. இதனை எகிப்து சரிவராக புரிந்து தண்ணீர் மேலாண்மையினை சீர் படுத்தாமல் போனால் 2025ல் எகிப்து தன்னுடைய அனைத்து நீர் வளங்களையும் இழந்துவிடும் என ஐக்கிய நாடுகளின் சபை எச்சரித்துள்ளது.

Nile River
Nile (Pic: wikipedia)

டனூப்

வால்கா நதிக்கு அடுத்தபடியாக மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் ஓடும் மிகப் பெரிய நதி டனூப் நதியாகும். ஜெர்மனி, ஆஸ்திரியா, ஸ்லோவாக்கியா, ஹங்கேரி, குரோசியா, செர்பியா, பல்கேரியா, ரோமானியா, மோல்டோவா, உக்ரைன் போன்ற நாடுகளில் பாய்ந்தோடுகின்றது இந்த நதி. ஒருகாலத்தில் ரோமானிய பேரரசின் எல்லையாக விளங்கிய இந்த நதி 2680 கிலோ மீட்டர் பயணித்து கருங்கடலில் கடக்கின்றது. 2 கோடி மக்களின் குடிநீர் பிரச்சனையை தீர்த்து வைக்கும் இந்த நதியின் நீர் ஆதாரத்தினையும் நதியை பாதுகாக்க 14 நாடுகளைக் கொண்ட தனி அமைப்பு செயல்பட்டு வருகின்றது. 1998ல் உருவாக்கப்பட்டு இண்டெர்நேசனல் கமிஷன் அண்ட் ப்ரெடக்ஷன் ஆப் டனூப் ரிவர் என்ற பெயரில் இயங்கிக் கொண்டு இருக்கின்றது இவ்வமைப்பு. இதன் மூலம் இந்த நதி தொடர்பாக ஏற்படும் பிரச்சனைகள் அனைத்தும் சரிசெய்யப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Danupe
Danupe (Pic: youtube)

ரைன் நதி

சுவிட்ஸர்லாந்து நாட்டின் ஆல்ப்ஸ் மலைப் பகுதிகளில் உருவாகும் மற்றொருமொரு மிகப் பெரிய நதி ரைன் ஆகும். ஆறு நாடுகளில் பாயும் இந்நதியின் மொத்த நீளம் தோராயமாக 1232 கிலோ மீட்டராகும். 1986ல் இந்நதி தொழிற்சாலைக் கழிவுகளால் மிகவும் மோசமான அளவிற்கு பாதிப்படைந்தது. இந்நதியின் கழிவுகள் அனைத்தும் தொடர்ந்து கடலில் கலக்கப்பட்டன. ஆனால் இதனை தடுத்து நிறுத்த ஆறு நாடுகளின் துணை கொண்டு அக்கழிவுகள் அகற்றப்பட்டு 14 ஆண்டுகளில் நதியினை மீட்டெடுத்தார்கள். வற்றாத ஜத  நதிகளாக இருக்கும் கங்கை யமுனை போன்ற நதிகள் இன்று வெறும் கழிவுநீர் செல்லும் பாதைகளாக மாற்றப்பட்டிருக்கின்றன. காவேரிக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்றாலும், ஒன்றுபட்டு உறுதியாக ஒரு நிகழ்வினை நடத்திச் செல்ல விரும்பினால் எதுவும் சாத்தியம் என்பதற்கு இதுவே உதாரணம்.

இன்று உலகின் பல்வேறு பக்கங்களில் இருக்கும் நதிகளிலும் ஆக்கிரமிப்புகளும், அழிவுகளும் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கின்றன. உலகின் அதிக அளவு உயிரினங்களை தனக்குள் கிரகித்து வைத்திருக்கும் அமேசான் நதி இன்று காடுகள் அழிக்கப்படுதல், முறையான நதிநீர் வளங்களை பாதுகாக்கும் வழிமுறைகள் இல்லாமல் தொடர்ந்து அழிந்து கொண்டு இருக்கின்றது. ஆறு என்பது வெறும் ஆறுமட்டும் அல்ல, அதனுடன் கூடிய காடுகள், அதனை நம்பி இருக்கும் உயிரினங்கள், காடுகளில் விளையும் உணவுப் பொருட்கள், காடோடு காடாக வாழ்ந்து மறையும் பழங்குடி மக்கள் அனைத்திற்கும் வாழ்வாதாரம் ஆறுகள் தான். 

Rhine
Rhine (Pic: shutterstock)

காவிரி மீதான அரசியல்

காவேரி மீதான சட்டங்களும் உரிமைக் கோருதல்களும் 1892ல் இருந்தே இருதரப்பிலும் நடந்து கொண்டு தான் இருக்கின்றது. 1892ல் முதன் முறையாக மதராஸ் மாகாணத்திற்கும் மைசூர் மாகாணாத்திற்கும் இடையில் முதல் ஒப்பந்தம் நடை பெற்றது. அதன் பின் இந்திய அளவில் நடைபெற்ற அரசியல் மாற்றங்கள் ஒவ்வொன்றும் காவேரியின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தின.

1924 – கர்நாடகாவில் கிருஷ்ணராஜ சாகர் அணை மற்றும் தமிழகத்தின் மேட்டூர் அணையினையும் கணக்கில் வைத்துக் கொண்டு 50 ஆண்டுகளுக்கு ஓர் ஒப்பந்தம் உடன்படிக்கை செய்யப்பட்டது.

1956ல் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டது அதன் படி மதராஸ் மாகாணம் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, மற்றும் கர்நாடகா என மாறியது. விளைவாக குடகு மலை கர்நாடகா எல்லைக்குள் சென்றது. இதனால் நதிநீர் பகிர்வு பிரச்சனை மேலும் சிக்கலானது.

1962ல் பாண்டிச்சேரியாக இருந்த புதுவையை யூனியன் பிரதேசமாக அறிவித்தது இந்திய அரசு. புதிதாக உருவான அரசுகளும் மாநிலங்களும் காவேரியில் பங்கு கேட்டு பிரச்சனை செய்யத்தொடங்கியது. கபினியின் பிறப்பிடம் கேரளமாக இருப்பதால் இந்தப் பிரச்சனை தொடங்கியது.

1970ல் காவேரியால் அதிகம் பயனடையும் அதாவது அதிக பாசனப் பகுதியினைக் கொண்டுள்ள மாநிலம் எது என்று கணக்கிடப்பட்டது. தமிழகத்தில் மொத்தம் 25. 80 லட்சம் ஏக்கர் பரப்பளவு பூமி காவேரியினை நம்பியிருந்தது. கர்நாடகமோ 6.80 லட்சம் ஏக்கர் பரப்பளவு பூமி மட்டுமே காவேரியினை நம்பியிருந்தது. இந்த அறிக்கை வெளியானதும் தன்னுடைய பாசனப் பகுதியை அதிகப்படுத்த தொடங்கியது கர்நாடகம்.

ஐம்பதாண்டு கால ஒப்பந்தம் 1974ல் முடிவிற்கு வர இரு தரப்பிலும் வாக்குவாதங்களும், பேச்சுவார்த்தைகளும் நடந்து தோல்வியில் முடிவடைந்தது. அதனைத் தொடர்ந்து உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து அதை திரும்பவும் பெற்றது தமிழக அரசு.

Mysore Kavery
Mysore Kavery (Pic: amazingholidaysblr)

முதல் தீர்ப்பாயம்

1986ல் காவேரி நதிநீர் பங்கீட்டிற்காக முதன்முறையாக தீர்ப்பாயத்தினை அமைக்கக் கோரி எம்.ஜி. இராமச்சந்திரன் தலைமையிலான மாநில அரசு, மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தது.  வி.பி. சிங், 1990ல் தீர்ப்பாயத்தியனை அமைத்துக் கொடுத்தார். தீர்ப்பாயத்திடம் கோரி வைத்த அளவு நதிநீர் தமிழகத்திற்கு வராததால் மீண்டும் உச்சநீதிமன்றத்திடம் நியாயம் கேட்டது தமிழக அரசு. 205 டிஎம்சி அளவிற்கு தண்ணீர் தரக் கூறி இடைக்காலத் தீர்ப்பு வழங்கியது உச்சநீதிமன்றம்.

இத்தகைய சூழலில், இந்த தீர்ப்பினை டிசம்பர் 11, 1991ல் தமிழக அரசிதழில் வெளியிட்டது தமிழகம். இதனைத் தொடர்ந்து தமிழர்களுக்கு எதிராக கர்நாடகத்தில் வன்முறைகள் வெடித்தன. தமிழர்கள் மீது வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன. 1997ல் காவேரி ஆற்று ஆணையம் அமைத்து நான்கு மாநில முதல்வர்களையும் பேச்சு வார்த்தைக்கு அழைத்தது மத்திய அரசு ஆனால் இத்திட்டமும் தோல்வியில் முடிவடைந்தது.

2007ல் தீர்ப்பாயத்தில் இருந்து இறுதி ஆணை வெளியிடப்பட்டது. அதன்படி தமிழகத்திற்கு 419 டிஎம்சி தண்ணீரும், கர்நாடகத்திற்கு 270 டிஎம்சி தண்ணீரும் கேரளத்துக்கு 30 டிஎம்சி தண்ணீரும், புதுவைக்கு 7 டிஎம்சி தண்ணீரும் வழங்க உத்தரவிட்டது. இதை தொடர்ந்து பல பிரச்சனைகள் வர இறுதியில் காவேரி மேலாண்மை வாரியத்தினை அமைக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

இப்படியான சூழ்நிலைகளுக்கு மத்தியில் தண்ணீர் வரத்து குறைவு, மழை பொய்த்துப் போதல் வறட்சி காரணமாக 10 லட்சம் ஏக்கர் பாசனப் பகுதியை தமிழகம் இழந்திருக்கின்றது. கர்நாடகாவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருப்பதால் காவேரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் தொடர்ந்து தாமதங்கள் ஏற்பட்டு வருகின்றன.

Kaveri Summit
Kaveri Summit (Pic: zeenews)

காவேரி வாரியம் – செயல்திட்டம்

பிப்ரவரியில், காவேரி மேலாண்மை வாரியத்தினை 6 வார காலத்திற்குள் அமைக்க வேண்டுமென மத்திய அரசிற்கு உத்தரவு பிறப்பித்தது. ஆனால் அதனை துளியும் பொருட்படுத்தாமல் தட்டிக் கழித்துவிட்டு, மத்திய அரசு, உச்சநீதிமன்றம் செயல்திட்டத்தினையே அமல்ப்படுத்த முடிவு செய்ததே தவிர வாரியம் இல்லை என்றும், அதற்கு இன்னும் அதிக நாட்கள் அவகாசம் தேவை என்றும் கூறிக் கொண்டு வந்தது. இடையில் கர்நாடகாவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற, செயல்திட்டத்தினை நிறைவேற்ற மத்திய அரசு மிகவும் அதிக காலம் எடுத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் பெங்களூர் நகரத் தேவைக்காகவும், நிலத்தடி நீர் அடிப்படையிலும் தமிழ்நாட்டிற்கு அளிக்கப்பட்ட நீரிலிருந்து சுமார் 14.75 டி.எம்.சி தண்ணீரை குறைத்து தான் தர இயலும் கர்நாடகா தரப்பில் வாதிக்கப்பட்டு அதுவும் ஒரு வழியாக ஏற்றுக் கொள்ளப்பட்டது வேதனைக்குரியதாக இருக்கின்றது.

Kaveri Path
Kaveri Path (Pic: factins)

காவேரி மேலாண்மை ஆணையத்தினை அமைக்க விரும்புவதாக மே 18 அன்று மத்திய அரசு ஒப்புதல் அளித்திருக்கின்றது. அதன்படி அக்குழுவில் நீர் பாசனத் துறையில் அனுபவம் பெற்று 20 ஆண்டுகள் தலைமை பொறியாளராக இருக்க வேண்டும் என்று காவேரி நடுவர் மன்றம் கூற, மத்திய அரசின் குழுவில் ஆட்சியர் ஒருவரை நியமிக்க விரும்புவதாக கூறியிருக்கின்றது. காவேரியால் பயனடையும் நான்கு மாநிலங்களையும் சேராத இருவரை முழு நேர செயலர்களாக நியமிக்க வேண்டுமென காவேரி நடுவர் மன்றம் கூற, மத்திய அரசு அந்த செயலர்களையும் தாமே நியமிக்க விரும்புவதாக கூறியிருக்கின்றது. இதனால் காவேரியின் முழுக்கட்டுப்பாடும் தற்போது மத்திய அரசின் கையில் தான் இருக்கின்றது.

                    Web Title: Cauvery Water Issue View From Different Perspective

                             Featured Image Credit: theprint

Related Articles