குகை ஓவியங்களுக்கு பிரசித்தி பெற்ற தம்புள்ளை பொற்கோவில், இலங்கையின் மத்திய மாகாணத்தில் மாத்தளை மாவட்டத்தில் அமைந்துள்ளது. கொழும்புக்கு கிழக்கே 148 கிலோமீட்டர் தூரத்திலும் கண்டிக்கு வடக்கே 72 கி.மீ. தூரத்திலும் அமைந்துள்ள பழைமையான குகைக்கோவிலாகும். சுற்றிலுமுள்ள சமநிலத்திலிருந்து சுமார் 160 மீட்டர் உயரத்துக்கு எழும் மலை மீது இக்குகைத்தொகுதி அமையப்பெற்றுள்ளது. இதுவரை 80க்கும் மேற்பட்ட குகைகள் இப்பகுதியில் கண்டறியப்பட்டுள்ளன. அதில் 5 குகைகள் மிகவும் முக்கியமானவைகளாக கொள்ளப்படுகிறது. இங்கு புத்த பெருமானின் 153 சிலைகளும்,அரசர்களின் சிலைகளும், 4 தெய்வ சிலைகளும் காணப்படுகிறன. அந்த 4 தெய்வ சிலைகளில் இந்துக் கடவுள்களான விஷ்ணு, பிள்ளையார் சிலைகளும் அடங்குகின்றன.
சுமார் 2100 சதுர மீட்டர் பரப்புள்ள சுவர் ஓவியங்களை கொண்டுள்ள இக்குகை கோவிலில் “மாரா பேயின் சலனம்” மற்றும் “புத்தரின் முதல் பிரசங்கத்தின் முத்தாய்ப்பு” போன்ற மிகப் பிரசித்தி ஓவியங்கள் முக்கியமானவையாகும். உலகின் பாரம்பரிய தளமாக விளங்கும் பழமையும் சிறப்பும் மிகுந்த தம்புள்ளை பொற்கோவிலை,யுனேஸ்கோ நிறுவனம் 1991 ஆம் ஆண்டு உலக பாரம்பரிய தளங்களில் ஒன்றாக அறிவித்திருந்தது இதன் சிறப்பம்சங்களில் ஒன்றாகும்.
ஆதி காலங்களில் வெறும் குகைகளாக மட்டுமே பார்க்கப்பட்டு வந்த இது, முதல் நூற்றாண்டுகளில் தான் கோவிகளாக மாற்றப்பட்டது. வலகம்பா எனும் மன்னன் தென்னிந்தியர்களால் அனுராதாபுரத்திலிருந்து நாடு கடத்தப்பட்டு 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தன் தலைநகரை கைப்பற்றியதால் தனது கடவுளுக்கு நன்றி செலுத்தும் விதத்தில் தான் இக்குகைகள் கோவில்களாக மாற்றப்பட்டது என்கிறது வரலாறு. இது அனுராதபுர காலத்தில் கி.மு 1ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 923 வரையான காலப்பகுதியாகும்.
இக்குகை கோவில்களில் புத்தமத தாக்கம் அதிகமாக காணப்பட்டாலும், இலங்கைக்கு புத்தமதம் வரும் முன்னரே 3000 ஆண்டுகளுக்கு முன்பு இக்குகைகளில் மனிதர்கள் வாழ்ந்திருப்பதற்க்கான புதைபடிமங்கள் மற்றும் எலும்புக்கூடுகள் போன்ற சான்றுகள் கிடைக்கப்பட்டவுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் பெரும்பாலும் சிங்களவர்களே புத்தமதத்தவராக இருப்பதால் இக்குகையின் கலை மற்றும் கலாசார அம்சங்கள் சிங்கள இனத்தவர்கள் சார்ந்தே அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள குகைகளில் மொத்தமாக 1500 க்கும் மேற்பட்ட ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.
இலங்கை போர்காலம், வெடிகுண்டு சத்தங்கள் என பல சம்பவங்கள் கடந்துவந்தாலும் பல்வேறு நாட்டு சுற்றுலா பயணிகளை தன்வசம் ஈர்த்து வரும் நாடு என்பதில் சந்தேகமில்லை.