Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

“கங்கை கொண்ட சோழ புரம்”

ராஜராஜ சோழனை விட ராஜேந்திர சோழன் தான்டா பெரிய ஆள்! இது என் நண்பன். என்னடா இப்படி சொல்ற ! இலங்கை வரை வெற்றி கண்டவர். தஞ்சை பெரிய கோயில் கட்டுனவரு ,அப்பா தான்டா கெத்து!. இது நான்.

அப்பாவோட தலைநகர் ஏற்கனவே இருந்த பெரிய நகரம். ஆனா பையன் ஒரு புதிய நகரை உருவாக்கி, அங்க அவன் கட்டுன கோயில் நாம கவனிக்காமல் கடந்து வந்த மிகச்சிறந்த கலை வரலாறுடா!. இப்படி நீண்ட உரையாடல் “கங்கை கொண்ட சோழபுரத்தின்” மீதான காதலாய் மாறியது. கங்கை கொண்ட சோழபுரம் நோக்கி பயணிப்பது என்றானது.

ஆனால் மதுரையில் இருந்து 270கி.மீ தூரத்தை (போக, வர 540) இரு சக்கர வாகனத்தில் பயணிப்பது என்ற முடிவுடன் ஆரம்பம் ஆனது பயணம். (என் நண்பனும் கங்கை கொண்ட சோழபுரம் பார்த்ததில்லை, எங்கோ படித்ததை பகிர்ந்தான்).

தஞ்சை பெரிய கோவில் (pinimg.com)

அதிகாலை மூன்று மணிக்கு வாகன உயிர்ப்பு நிலையம் (பெட்ரோல் பங்க்) சென்றோம். பந்தாவாக நண்பன் தன்னிடம் இருந்த கிரெடிட் கார்டை நீட்ட, முகத்தில் சின்ன சலனம் கூட இல்லாமல் இங்க கார்ட் வாங்க மாட்டோம் பணமா குடுங்கனு கேட்டாரு!.

கையில் இருந்த மொத்த பணத்தையும் கொடுத்து விட்டு, “மோடி வாழ்க”! என்று உரக்க வஞ்சப் புகழ்ச்சியணி பாடி விட்டு, போகும் வழியில் இருந்த அத்தனை ATM இலும்  கார்ட் தேய்த்து, எங்கள் கிரெடிட் கார்டுக்கு கெட்ட வார்த்தையில் திட்டாத குறையாய் தஞ்சை வந்தோம். தேநீர் அருந்தவாவது பணம் வேண்டுமே!, இறுதியாகத் தேநீர் கடை அருகில் இருந்த ATM உள்ளே நுழைந்து குல தெய்வத்தை வேண்டியபடி செயல்பட ஆரம்பித்தான் நண்பன். 500, 2000 எது வந்தாலும் பரவாயில்லை என்று இருந்த எங்களுக்கு எல்லாம் 100 ரூபாய் நோட்டுகளாய் வந்தன. அப்பொழுது தேநீர் கடையில் ஓடிய பாடல் எங்கள் காதுகளில் சப்பதமாக் கேட்டது.

“இதோ எந்தன் தெய்வம் முன்னாலே நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே!”

தஞ்சை வந்து பெரிய கோயில் பார்க்காமல், போக முடியுமா! கோயில் உள்ளே சென்றோம். “பிரகதீஸ்வரர்” கோயில் பெரிய கோயில் என்று அழைக்கப்படும் காரணத்தை, அந்த பிரம்மாண்டம் ! நமக்கு சொல்லும்.

தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் சிற்பங்கள் மற்றும் கல்வெட்டு (suyashchopra.files.wordpress.com)

ஆயிரம் ஆண்டு கட்டிடம்! அந்தக் கம்பீரம் சிறிதும் குறையவில்லை. இந்தக் கோயில் கட்டுவதற்கு, மண் சுமந்த நபரின் பெயரை கூட கல்வெட்டில் பொறிக்கச் செய்தாராம் இராஜராஜ சோழன்! ஆர்வ மிகுதியில் தேடினோம் அந்த கால எழுத்து ஒன்றும் புரியவில்லை. ஒரே கல்லில் செதுக்கப்பட்ட நந்தியின் பிரம்மிப்பில் இருந்து மீள முடியாமல் நிற்கும் போது,அங்கு இருந்த ஒருவர் இந்த நந்தி வளர்ந்துகிட்டே இருக்குப்பா!-னு சொல்ல ,நல்லவேளை இதை கேட்க சோழன் உயிரோடு இல்லை என்று நினைத்துக்கொண்டு நகர்ந்தோம்.

கோயில் கோபுரத்தில் 80தொன் ஒற்றை கல் ஒன்று உள்ளது. எப்படி அதை அங்கு வைத்தார்கள் என்று ஒரு பட்டிமன்றமே நடந்தது அங்கே. “கோயில் கோபுரத்தின் நிழல் கீழே விழாது!” என்று சொன்னார்கள். இந்த கட்டிடக்கலையை எப்படி புகழ்வது என்று தெரியாமல் மலைத்தோம்.

மிகப்பெரிய மதில் சுவர்கள், மிகப்பெரிய லிங்கம் என்று பிரம்மாண்ட வடிவமைப்பின் உச்சம்தான் பெரிய கோயில். ஆனால் இங்கு வரும் இந்தியச் சுற்றுலா பயணிகளோ வெளிநாட்டு பயணிகளுடன் புகைப்படம் எடுக்கவே ஆர்வம் காட்டுகின்றர். கங்கை கொண்ட சோழபுரம் செல்ல வேண்டும் என்பதால் கிளம்ப மனமின்றி கிளம்பினோம்.

பட்டீஸ்வரம் கோவில் கும்பகோணம் (holidayiq.com)

“பொன்னியின் செல்வன்” படித்தக் காரணத்தால், இப்பயணத்தில் கடந்து வந்த பெரும்பாலான ஊர்களுக்கு இதற்கு முன்பே வந்தது போன்ற ஓரு உணர்வு. கும்பகோணம் “கோயில்களின் நகரம்” என்று அதனை அழைக்கப்படுவது ஏன் என்று அங்கு சென்றபின்தான் தெரிந்தது, பெரிய பெரிய கோவில்கள் தெருவுக்கு ஒன்றாக நிறைந்துள்ளது. அனைக்கரைக் குறுகிய பாலம் வந்த போது “வந்தியத்தேவன் ” நம் உடன் வருவதைப் போன்ற உணர்வு.

தஞ்சையில் இருந்து 70 கி.மீ தொலைவில் உள்ளது கங்கைக் கொண்ட சோழபுரம். யாரிடம் வழி கேட்டாலும் அக்கோவிலைப் பற்றிய வர்ணிப்போடும், கட்டாயம் பார்க வேண்டும் என்ற கூற்றோடுமே வழி காட்டினார்கள்.

“கண்டோம் கங்கைக் கொண்ட சோழபுரத்தை”. மனம் சற்று ஏமாந்துதான் போனது, தஞ்சைப் பெரிய கோவிலுக்கு குடுத்த முக்கியத்துவத்தில் பாதி கூட இதற்கு அளிக்காததன் விளைவு சரி பாதி கோவிலின் அழிவு!.

1980ஆம் ஆண்டு இந்த கோவிலை “யுனஸ்கோ ” அமைப்பு பாதுகாக்கப்படவேண்டிய இடமாக அறிவித்துள்ளது, என்ற அறிவிப்புப் பலகையை கோயிலின் வெளியே பார்த்தோம். பலகை இருக்கு கோவில் எங்கடா! என்ற எண்ண ஓட்டத்துடன்தான் உள்ளே சென்றோம், 90% மதில் சுவர் சேதம் அடைந்திருந்தது.

“விக்கிபீடியா” சொல்லாததையும் அந்த ஊர்ப் பூர்வ குடிகள் சொல்வார்கள் என்பதால், ஒரு முதியவரை அணுகி கோவில் பற்றி கேட்க ஆரம்பித்தோம்.

கங்கை கொண்ட சோழபுரம் (vacationindia.com)

தான் இறந்தப் பின்னாளில் ஆட்சி அமைக்கும் உரிமைப் பிரச்சனை வரக்கூடாது என்று இராஜராஜ சோழன், தான் இருக்கும்போதே ராஜேந்திர சோழனுக்கு முடி சூட்டினார். (இப்ப உங்கள் மனதில் தமிழ் நாட்டில் நடப்பது நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பு இல்லை)

அப்பா பெரும் அரசனாக இருந்தாலும், தன் திறமையை நிரூபிக்க மிகப்பெரிய கப்பல் படையை உருவாக்கினார் ராஜேந்திர சோழன். (ஆமாங்க உலகின் முதல் மிகப்பெரியக் கப்பல் படை ராஜேந்திர சோழனுடையதே), தந்தை இலங்கை வரை போர் புரிந்து வெற்றி பெற்றார், நாம் இமயம் வரை வெற்றிபெற வேண்டும் என நினைத்து அதை செய்து காட்டினார் இராஜேந்திர சோழன்.

இமயம் வரை தான் வெற்றி கொண்ட மன்னர்களின் தலைமீது, கங்கை நீரையும், கற்களையும் சுமந்து வரச் செய்து இதனைக் கட்டினான் ராஜேந்திர சோழன். அதனால்தான் இந்த ஊருக்கு “கங்கை கொண்ட சோழபுரம் ” என்று பெயர் வந்ததாம்! .அதற்கு முன் இந்த ஊரின் பெயர் “வன்னிய புரம்” ,வன்னி மரங்கள் சூழ இருந்ததால் இப்பெயர்.

இந்த ஊரையே தலைநகர் ஆக அறிவித்து, இக்கோவிலைக் கட்டினார். ஆனால் அப்பாவை விட பெரிதாகக் கட்டக் கூடாது என்று நினைத்து பெரிய கோவிலை விடச் சிறிதாக கட்டச் சொன்னாராம் . (பதவி வந்தப் பிறகும் அப்பா மேல் இருந்த மரியாதை போகவில்லை அவருக்கு) இப்பொழுதுதான் நான் வியக்கும் படியான தகவலை சொன்னார் அந்தப் பெரியவர்.

சிவன் கோவில் (marstalys.de)

பெரிய கோயில் “ஆண் போர் வீரனுக்கான மிடுக்குடன் இருக்கும். ஆனால் சோழபுரம் ஒரு பெண்ணுக்கான நளினத்துடன் இருக்கும். பெரிய கோயில் 14 மாடங்களை கொண்டது. இங்கு 7 மாடங்கள் மட்டுமே இருப்பினும் வேலைப்பாடு நுட்பத்தில் சோழபுரமே சிறந்தது. நன்றாக உற்று நோக்கினால் இந்தக் கோபுரம் ஒரு பெண் அலங்காரம் பண்ணி நிற்பது போல் இருக்கும்!” என்று அவர் சொல்ல, எங்களையும் அறியாமல் நாங்கள் பார்க்க “சோழப் பெண்ணாக நின்றது அந்தக் கோபுரம்”

இக் கோவிலை தனது பாதுகாப்புக் கோட்டையாகவும் பயன் படுத்தினாராம் ராஜேந்திர சோழன். ஆனால் இப்பொழுது அதற்கான அடையாளம் அழிந்து காணப்படுகிறது. அந்த கோவிலின் உள்ளே அரச குடும்பத்தினர் மட்டும் குளிக்க “சிங்க முக கேணி” ஒன்று உள்ளது, அது மூடிவைக்கப்பட்டுள்ளது.. அங்கிருந்து தஞ்சைக்கு சரங்கப்பாதை ஒன்று உள்ளதாகவும் சொல்லப் படுகிறது.

இங்கிருக்கும் நந்தியும் மிகுந்த நுட்பமான வேலைபாடுகளால் ஆனது. இங்கிருக்கும் மூலவரில் இருந்து சின்னச் சிலைகள் வரை கண் இமைக்காமல் ரசிக்க கூடிய அழகுடையது. பராமரிப்பு இல்லாமல் போனதால் இப்படி ஆகி விட்டது. அப்பொழுது கோவிலின் பின்புறம் இருந்த காதல் சோடிகளை காவலர்கள் திட்டி அனுப்பும் சப்தம் கேட்டது, சரி பெரியவருடன் புகைப்படம் எடுக்கலாம் என்று தேடினால் அவரை கானவில்லை!.

வந்தது சோழனின் ஆன்மாவா! என்ற எண்ணம் கூட தோன்றி மறைந்தது. இராஜேந்திர சோழனுக்கு பிறகு 11 சோழ மன்னர்கள் கங்கை கொண்ட சோழபுரத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்துள்ளனர். ஆனால் அவர்கள் அரண்மனை இருந்த “மாளிகைபுரம்” வெறும் மண்மேடாய் உள்ளது. 200 வருட பாரம்பரியத்தை கொண்டாடுகின்றனர் அயல்நாட்டவகள், இத்தனை ஆயிரம் ஆண்டு தொன்மை கேட்பார் அற்று அழிகிறது. இதைப் பற்றி ஆராய்ச்சி செய்ய அரசு சுணக்கம் காட்டுகிறது ஆனால் அருகில் இருக்கும் “ஜெயம் கொண்டானில் ” நிலக்கரி எடுக்கும் வேலை மட்டும் சுறுசுறுப்பாய் நடக்கிறது.

இந்த “தமிழ்க் குடியின் வரலாறு, அந்த நிலக் கரியை விடவா! தரம் தாழ்ந்து விட்டது”. என்று கேட்ட என்னை அரசியல் பேசாதே!  என்று கூறி வாகனத்தை மதுரையை நோக்கி செலுத்தினான் நண்பன்.

Related Articles