Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

எமனாகும் கடனட்டைகள்

நமது தேவைக்கான பொருட்களையும், சேவைகளையும் நாமே உற்பத்தி செய்துகொள்ள முடியாத நிலையிலும், குறித்த ஒரு பொருளை நமது தேவைக்கும் அதிகமாக உற்பத்தி செய்யும் தன்மையும் காணப்பட்டதன் விளைவாகவே, மனித குலத்தில் கொடுக்கல்வாங்கல் என்கிற முறையே அறிமுகமானது.

இந்த முறையின் ஆரம்பம் “பண்டமாற்று முறைமை” என அழைக்கப்பட்டது. ஒருவர் தன்னிடமுள்ள மிகை உற்பத்தியை அல்லது தனது சேவை வழங்கலை மற்றுமொருவருக்கு வழங்கி, தனக்கு தேவையானதை பெற்றுக்கொள்ளும் முறையாக இது அமைந்தது. இதில், காணப்பட்ட குறைபாட்டை நிவர்த்திக்க வந்த பரிமாற்று ஊடகமே பணமாகும். காலத்துக்கேற்ப பணத்தின் வடிவமும், தன்மையும் மாற்றமடைந்து கொண்டே வந்திருக்கிறது. ஆதிகாலத்தில் மதிப்புமிகுந்த பொருட்களை மாத்திரமே பணமாக பயன்படுத்திய நாம், இன்று அதற்கான ஒழுங்குமுறைகளையும், ஒரு பொதுமுறைமையும் கொண்ட பணத்தினை பயன்படுத்த தொடங்கி இருக்கிறோம்.

படம் – amazonaws.com

இன்று பணத்தின் மற்றுமொரு பரிணாமமாக இலத்திரனியல் அட்டை பயன்பாடுகளை சொல்லலாம். உலகம் அதனை தாண்டியும் தற்போது Bitcoin என்பதை நோக்கி பயணிக்க ஆரம்பித்து விட்டாலும், இப்போதுதான் மக்கள் பணத்திலிருந்து பணமில்லா பரிமாற்றங்களுக்குள் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்கள். அப்படியான பணமல்லா பரிமாற்றங்கள் மக்களை சத்தமில்லாமல் கடனாளியாக்கி மெல்ல மெல்லக் கொல்லும் எமனாகிக் கொண்டிருப்பதனை நம்மில் எத்தனைபேர் அறிவோம்?

இலத்திரனியல் அட்டைகள் என்கிற பொதுமுறையில் இலங்கையில் பிரதானமாக பயன்படுத்தப்படும் அட்டைகள் கடனட்டைகள் (Credit Card) மற்றும் வரவட்டைகள் (Debit Card) ஆகும். இவற்றில் கடனட்டையானது 1989ம் ஆண்டு இலங்கையில் அறிமுகம் செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. கடனட்டை என்பது, ஒருவரது மீள செலுத்தும் இயலுமைகளின் பிரகாரம் முற்பணமாக பயன்படுத்த வழங்கப்படும் அட்டையாக இதுவுள்ளது. குறித்த காலப்பகுதிக்குள் கடனட்டையில் செலவிடும் தொகையை மீளசெலுத்துவதன் மூலம், வங்கியினால் விதிக்கப்படும் அதியுயர் வட்டிச் செலவீனத்தை தவிர்த்துக்கொள்ள முடியும். அதுபோல, வரவட்டை பயன்பாடானது 1997ம் ஆண்டு முதல் இலங்கையில் நடைமுறையில் உள்ளது. உங்கள் வங்கிக் கணக்கிலுள்ள பணத்துக்கு அளவாக கொடுக்கல்,வாங்கலை செய்யக்கூடிய அட்டையாக இது உள்ளது.

படம் – medium.com

வங்கி ஒன்றில் தனிநபர் கடன் பெறுவதைப் பார்க்கிலும், கடனட்டை பெறுவதற்கான செயன்முறை மிக இலகுவானதாக இருக்கிறது. அதுபோல, வங்கிகளும் மக்கள் கடனட்டைகளைப் பெற்றுக்கொள்ள வெவ்வேறு வகைகளில் ஊக்குவிக்கிறது. இதன்விளைவு, மக்கள் தமக்கே தெரியாமல் கடனுக்கு பழக்கபட்டு விடுகிறார்கள். ஒரு கட்டத்தில் முறையாக பணத்தினை கையாள முடியாமலும், வங்கிகளின் அதியுயர் வட்டி வீதங்களிலும் சிக்கி முழுமையான கடனாளிகளாக மாறிப்போகிறார்கள்.

இலங்கை மத்திய வங்கியின் தரவுகளின் பிரகாரம், இலங்கையிலுள்ள 80%மான மக்கள் தமது கொடுக்கல் வாங்கல் செயல்பாடுகளுக்காக கடனட்டை அல்லது வரவட்டையை பயன்படுத்துகிறார்கள். மத்தியவங்கியின் அண்மையக்கால தரவுகளின் பிரகாரம் 17,093,239 பேர் வரவட்டைகளைப் பயன்படுத்துவதுடன், 1,355,704 பேர் கடனட்டைகளை பயன்படுத்துபவர்களாக உள்ளார்கள். ஒட்டுமொத்தமாக பார்க்கின் சுமார் 18.4 மில்லியன் மக்கள் ஏதோவொருவகையில் பணமில்லா கொடுக்கல் வாங்கல் செயல்பாடுகளுக்கு தங்களை பழக்கபடுத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள். இது இலங்கை போன்ற நாடொன்றில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் அதியுச்ச நிலை என பெருமைப்பட்டுக் கொண்டாலும், அதனை மீறிய சோகக்கதையும் அதன் உள்ளே பொதிந்துள்ளது என்பதே உண்மை.

இவ் இலத்திரனியல் அட்டைகளின் பயன்பாட்டின் பிரகாரம், 2017ம் ஆண்டு மார்ச் மாதத்தின் இறுதிவரை வங்கிகளிடம் மக்கள் பெற்றுள்ள ஒட்டுமொத்த கடன்தொகையின் அளவு 77.7 பில்லியனாக உள்ளது. இது ஒட்டுமொத்த சனத்தொகையில் இருபது பேருக்கு ஒருவர் கடனட்டையைக் கொண்டிருப்பதை குறிப்பதுடன், சராசரியாக ஒரு கடனட்டையைக் கொண்டிருப்பவரின் கடனளவு 581,540 ரூபாவாக இருக்கலாம் என கணிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொருவரது மீளசெலுத்தும் இயலுமை அடிப்படையில் கடன் நிலுவை அளவு மாறுபடக்கூடியதாக உள்ளநிலையில், சிலரது கடன் எல்லையின் அளவு மாதம்தோறும் எப்படியானதாக இருக்கும் என்பதனை நீங்களே கணிப்பிட்டு பார்த்துக்கொள்ளுங்கள். காரணம், நிஜத்தில் கடனட்டையைக் கொண்டுள்ள அனைவருக்குமே சராசரி கடன் அளவு இருப்பதில்லை. அப்படியாயின், சிலருக்கு இந்த சராசரி அளவை பார்க்கிலும் கடனின் அளவு பலமடங்கு உயர்வாக இருக்கக்கூடும். ஒட்டுமொத்தமாக இதை பார்க்கும்போது, ஆடம்பர மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் தங்களை அறியாமலே தம்மை சுற்றிப் பின்னப்படும் கடன் வலைக்குள் மெல்ல மெல்ல சிக்கிக்கொள்ள ஆரம்பித்துவிட்டார்கள் என்கிற உண்மையை வெளிச்சம்போட்டு காட்டுவதாகவே உள்ளது.

எங்கிருந்து தவறு ஆரம்பித்தது?

படம் – ustranscorp.com

கடனட்டைகள் அறிமுகப்படுத்தப்படும் போதான பயன்பாட்டு நோக்கத்திற்கும், தற்போது பயன்படுத்தப்படுகின்ற விதத்துக்குமுள்ள இடைவெளியே தவறு எங்கிருந்து ஆரம்பிக்கப்பட்டது என்பதற்கான உதாரணமாகும். கடனட்டைகள் அறிமுகபடுத்தபட்டபோது, பணத்துக்கு மாற்றீடாக மக்கள் இலகுவாக காவிச்செல்லக் கூடியதாகவும், கொடுக்கல் வாங்கல்களை இலகுவாக செய்யக்கூடியதாக இருக்கவேண்டும் என்கிற நோக்கத்தில்தான் அவை வெளியிடப்பட்டது. ஆனால், இன்றைய நிலையில் கடனட்டைகள் மக்களின் கையில் சுத்தமாக பணமில்லாதபோதிலும், தமக்கான எல்லைவரை கொடுக்கல் வாங்கல்களை செய்யப் பயன்படுத்தப்படுவதாக இருக்கிறது. அப்படியாயின், அந்தக் கடனை எப்படி மக்களால் மீள செலுத்த முடியும் ? இதுதான் மக்கள் தங்களை அறியாமலே மாட்டிக்கொள்ளும் மாயவலையாக இருக்கிறது. அதிலும், பெரும்பாலானவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட கடனட்டைகளை கொண்டு இருக்கிறார்கள். ஒன்றில் அதற்கான கடன் எல்லையை எட்டியவுடன், மற்றையதை எவ்வித தயக்கமுமில்லாமல் பயன்படுத்துகிறார்கள். இதன்போது, குறித்த கடனை எப்படி தீர்க்கலாம் என்பது பற்றி அவர்கள் சிந்திப்பதில்லை. இந்த செயல்முறை ஒவ்வொருவரையும் தெரிந்தோ தெரியாமலோ கடனாளியாக்கி விடுகிறது.

குறிப்பாக, இன்றைய செலவுமுறை பொருளாதாரமானது ஒவ்வொருவரையும் அவர்களது இயலுமைக்கு மீறியதாக செலவுகளைச் செய்ய பழக்கப்படுத்துவதாக இருக்கிறது. இதன்விளைவாக, வங்கியில் உள்ள பண எல்லைக்கு வரவட்டைகளை பயன்படுத்தப் பழகிய நாம், வங்கியில் பணயிருப்பு முடிவுக்கு வருகின்றது என்றவுடன், கடனட்டைகளைப் பயன்படுத்த ஆரம்பிக்கிறோம். இது, போதைக்கு அடிமையாவதற்க்கு சமமான செயலாகும். இறுதியில் போதை எத்தகைய விளைவை தருகிறதோ அதற்கும் மேலான கடனாளி என்கிற பட்டப்பெயரையோ அல்லது வங்குரோத்து நிலையயையோ இது ஒவ்வொருவருக்கும் உருவாக்குகிறது.

இதில் தனிநபர்களது தவறுகள் மாத்திரம் இல்லை. தனிநபர்களின் ஆசாபாசங்களை தங்கள் இலாபத்துக்காக கபளீரம் செய்யும் நிதிநிறுவனங்களின் பங்கும் சேர்ந்தே இருக்கிறது. ஆவண செயல்முறையை குறைப்பது, கவர்ச்சிகரமான சலுகைகளை பெரிதாக விளம்பரபடுத்திக்கொண்டு அதற்கான நிபந்தனைகள் மற்றும் தண்டங்களை சிறியதாக வெளியிடுவது என ஒவ்வொரு தனிநபரது ஆசைகளையும் சட்டங்களுக்கு அமைவாக இலாபமாக மாற்றிக்கொண்டு இருக்கிறார்கள்.

உதாரணத்துக்கு, கடனட்டை உரிமையாளர்களின் அனுமதியேயில்லாமல் அவர்களது கடன் எல்லையை அதிகரிப்பது, 0% வட்டி அடிப்படையில் தவணைமுறைக் கொள்வனவை ஊக்குவிப்பது, மிகப்பெரிய சலுகைகளை வழங்குவதுபோல ஆடம்பர செலவுகளுக்கு அடித்தளமிடுவது (உல்லாச விடுதிகளுக்கான சலுகைகள்) என்பவற்றின் ஊடாக, ஒவ்வொருவர் மீதும் மறைமுகமான தாக்கத்தை ஏற்படுத்தி, அவர்களை செலவுமுறை பொருளாதாரத்துக்குள் இழுத்துவரும் செயல்முறையை கடனட்டையைக் கொண்டு நிதிநிறுவனங்கள் செவ்வனே செய்து முடிக்கின்றன. நீண்டகாலத்தில் இவற்றுக்கு பழக்கப்படும் நாமும், அதற்க்கு அடிமையாகிப் போகிறோம். இறுதியில், நிதிநிறுவனங்களும், அவர்களுடன் இணைந்த இலாபநோக்க நிறுவனங்களும் நமது பணத்தினை சுருட்டிக்கொண்டு செல்ல நாம் கடனாளியாகி நிற்கின்ற நிலையே ஏற்படுகிறது.

இலங்கை மத்திய வங்கியின் 2016ம் ஆண்டின் நான்காம் காலாண்டுக்கான தரவுகளின் பிரகாரம், 90 அல்லது அதற்க்கு மேற்பட்ட காலப்பகுதிக்கு கடனட்டை நிலுவைகளை செலுத்தாமல் உள்ள கடனட்டைகளின் எண்ணிக்கை 84,155 ஆகும். இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுமிடத்து 15% வளர்ச்சியைக் கொண்டதாக உள்ளது. இவ்வாறு செலுத்தப்படாது நிலுவையில் உள்ள தொகை 5.8 பில்லியன் ஆகும். ரூபாய் அடிப்படையில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இது 23% வளர்ச்சியாகும். அத்துடன் 2016ல் கடனட்டையைக் கொண்டுள்ள தனிபர் ஒருவர் ஒவ்வொரு கொடுக்கல்வாங்கல் பரிவர்த்தனையை செய்யும்போதும் சராசரியாக 8,589 ரூபாவை செலவிடுகிறார் என்பதையும் மத்திய வங்கி சுட்டிக் காட்டுகிறது.

மேற்கூறிய தரவுகளே, நமது கடனட்டை பயன்பாடு கைமீறிப் போவதையும், அதுசார்ந்த கடன் நிலுவையை மீளசெலுத்த முடியாமல் நாம் திணறி நிற்பதையும் வெளிகாட்டி நிற்கிறது.

கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பதுபோல, காலம் தாமதித்தாலும் மக்களது நிலைமையை புரிந்துகொண்டு தற்போதுதான் மத்திய வங்கியின் கவனம் நிதிநிறுவனங்கள் மீதும் ,கடனட்டை செயன்முறை மீதும் திரும்பியிருக்கிறது. கடனட்டைகளுக்கான வட்டிவீதங்களை நெறிப்படுத்துவது, தண்டப்பண நிலுவைக்கான வட்டிகளை நிர்ணயிப்பதும் அதன் கணிப்பீட்டு முறையை பொதுமைப்படுத்துவது என ஒவ்வொரு வகைகளிலும் பொதுமக்களிடமிருந்து அறவிடப்படும் கட்டணங்கள் தொடர்பில் கவனத்தை செலுத்தத் தொடங்கியிருக்கிறது. அத்துடன், கடனட்டை உரிமையாளர்கள் தங்களுக்கு விதிக்கப்படும் தண்டப்பண நிலுவைக்கான வட்டி வீதங்கள் தொடர்பில் முறையான விளக்கத்தை உரிய வங்கிகள் வழங்காதபோது, அது தொடர்பில் முறைப்பாட்டை செய்து நட்டஈட்டை பெற்றுக்கொள்ள முடியும் என்பதனையும் அறிவித்து இருக்கிறது.

மேற்கூறிய அனைத்துமே, இலங்கை மத்திய வங்கியின் ஆரம்பநிலை செயல்பாடுகள் மட்டுமே! இவற்றுக்கு மேலாக, மக்களது உண்மைநிலையை ஆராய்ந்து மேலும் மக்கள் கடனாளியாகி வங்குரோத்து நிலைக்கு செல்லாதவகையில் இலத்திரனியல் அட்டைகளை பயன்படுத்துவது எப்படி ? என்பது தொடர்பில் அறிவுருத்துவதும், சட்டங்களை நடைமுறைக்கு கொண்டுவந்து அவற்றினை முறையாகச் செயல்படுத்துவதும் மத்திய வங்கியினதும், பொறுப்புவாய்ந்த நிதிநிறுவனங்களினதும் செயல்பாடாக உள்ளது.

உசாத்துணை – Sunday Times

 

Related Articles