Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

மண்ணை மனிதன் மறந்தால்…

மண்ணினாலான பாத்திரத்தில் வைக்கப்பட்ட நீரை அருந்தும் பழக்கம் உங்களுக்குண்டா? மட்பாண்டங்களில் சமைக்கப்பட்ட உணவை உண்ணும் சந்தர்ப்பங்கள் உங்களுக்கு அமைந்ததுண்டா? மரச்சட்டங்களில் களிகொண்டு நிரப்பி அமைக்கப்பட்ட வீட்டுத் தரையில் பாயின்றி நீங்கள் படுத்துறங்கியதுண்டா? இயற்கை எமக்களித்த குணம்பொருந்திய சிறப்பம்சங்களின் இன்பமிகு பயன்பாட்டை வாழ்வின் ஒருதடவையேனும் அனுபவித்துச் சுவைத்ததுண்டா?

பிறப்பிலிருந்து இறப்பு, ஏன் அதற்கு அப்பாலும் மனிதன் மண்ணோடு கொண்ட உறவு அழிந்துபோவதில்லை. மண் எனும் பதம் மனிதனின் வாழ்வியல், கலாசாரம், பண்பாடு, கலை, வீரம், நாகரிகம் என அத்தனை அம்சங்களிலும் ஒன்றிக்கலந்ததாகவே இருந்துவந்துள்ளது.

தமது அன்றாடப் பாவனைகளிலிருந்து தாம் வாழ்ந்த வீடுகள், பயன்படுத்திய உபகரணங்கள், விளையாட்டு மற்றும் அலங்காரப்பொருட்கள் இப்படி ஆரம்பகாலத்திலிருந்து மனிதன் மண்ணையே தனது பிரதான மூலப்பொருளாக உபயோகித்து வாழ்ந்துவந்திருக்கிறான். காலம் செல்லச்செல்ல பல்வேறு காரணங்களுக்காக மண்ணினாலான பாவனைப்பொருட்களுக்கு மனிதன் பல பிரதியீடுகளைப்பயன்படுத்தத் துவங்கினான். உலோகங்களின் கண்டுபிடிப்பு இதற்கொரு முக்கிய காரணமாக அமைந்ததென்பது வரலாறு.

படம் - upload.wikimedia.org/wikipedia

படம் – upload.wikimedia.org/wikipedia

என்னதான் ஒன்றுக்கு பத்து வகையான மூலப்பொருட்கள் மற்றும் வாசனைத் திரவியங்கள் போன்றவற்றைப் பயன்படுத்தி நவீன முறையில் நாம் உணவு சமைத்தாலும், அன்று எமது பாட்டியும் தாயும் சமைத்துக்கொடுத்த கீரைக்கும் குழம்புக்கும் அவை சுவையிலும் குணத்திலும் ஈடாவதில்லை. மூன்றுக்குக் குறையாத கறிகளுடன் உணவுண்ணும் நாம், பாட்டிகொடுத்த கத்தரிக்காய்க் குழம்போடுமட்டும் உணவுண்ட கதை எவ்வாறு சாத்தியமானது?

இயற்கைக்கு மாறுசெய்யாத எதுவும் அழகும் சுவையுமுடையதே! இதற்கு அவர்கள் பயன்படுத்திய கிருமினாசினிக்குப் பலியாகாத காய்கறிவகைகள் ஓர் காரணமென்றால், அவர்கள் பயன்படுத்திய இயற்கையோடு ஒன்றிய உபகரணங்கள் மற்றுமொரு அழுத்தமான காரணமெனலாம். மண்சட்டி, கருங்கல் அம்மி, பிரம்பினாலான வம்மிப்பழம்கொண்டு மொழுகிய சுளகு, மரத்தாலான உரல் உலக்கை, சிரட்டையாலான அகப்பை இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இவ்வரிசையில் மட்பாண்டங்கள் புறக்கணிக்கப்படமுடியாதவை.

படம் - http://easiestrecipes.blogspot.com

படம் – easiestrecipes.blogspot.com

மட்பாண்டங்கள் இலகுவில் உடைந்துவிடக்கூடியவை. உலோகங்களிலும்பார்க்க அதிகமான தன்வெப்பக்கொள்ளளவு கொண்டவை, பாரமானவை, இவ்வாறு பல காரணங்களுக்காகவும், அவசர உலகத்தில் தனது வேலைகளை இலகுவாக்கிக்கொள்ளவும் மனிதன் மட்பாண்டங்களைவிட்டும் உலோகம் மற்றும் பிளாத்திக்கு போன்றவற்றைத் தனது அன்றாட வாழ்க்கையில் அதிகம் பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறான். அவசர உலகத்தில் இலகுவாகவும் விரைவாகவும் சமைக்கக்கூடிய, கொண்டுசெல்லக்கூடிய, உபயோகத்துக்கிலகுவான திரவியங்களாலான உபகரணங்களைப் பயன்படுத்துவது தவிர்க்கமுடியாததாயினும் மட்பாண்டப் பாவனையில் நாம்பெற்ற, பெறக்கூடிய அனுகூலங்கள் மற்றும் குணங்கள் பற்றிகொஞ்சம் மீட்டிப் பார்ப்போம்.

மட்பாண்டங்களைப் பயன்படுத்துவதென்பது ஒரு கலாச்சாரம் சம்பந்தமான விடையம் மட்டுமே என நீங்கள் நினைத்தால் அது தவறு. மட்பாண்டங்கள் எமது கலாச்சாரம் மட்டுமன்று அது எமது முன்னோர்கள் எமக்காய் விட்டுச்சென்ற ஆரோக்கிய வழிமுறை. சமையல், வழிபாடு, மருத்துவம் என அனைத்திலும் மண்ணினாலான உபகரணங்களை ஆரோக்கிய நோக்கம் கருதி அவர்கள் உபயோகித்து வாழ்ந்து காட்டியுள்ளனர் என்ற வரலாறை நாம் மறந்துவிடக்கூடாது.

படம் - http://tip10.info

படம் – http://tip10.info

மண்ணின் கார (Alkaline) இயல்பு மட்பாண்டப் பாவனையின் இயற்கையான அனுகூலமாகும் என்பது அநேகருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மண்/களியில் இயற்கையாக உள்ள கார இயல்பு மட்பாண்டங்களில் சமைக்கப்படும் அல்லது களஞ்சியப்படுத்தப்படும் உணவு அல்லது பானங்களில் உள்ள மிகை அமிலங்களை நடுநிலையாக்கி உணவுப்பொருட்களை நடுநிலையான PH பெறுமானத்தில் பேண உதவுகிறது என்பது அறிவியல் உண்மை. இது, பால் மற்றும் இறைச்சி போன்றவற்றை சமைக்கும் பொழுது அவற்றில் காணப்படும் மிகை அமிலத்தை நடுநிலைப்படுத்தி இரைப்பை/வயிற்றில் உணவுமூலம் ஏற்படும் அமிலத்தன்மை உண்டாக்கும் வலிகளிலிருந்து எம்மைக் காக்க வல்லது.

ஏறத்தாழ இரு தசாப்தங்களுக்கு முன்னர் எமது கிராமப்புற வீட்டு முற்றங்களில் நிழல் மரங்களிடையே மேடையாக்கிய மண்குவியல்மேல் நீர்நிரப்பிய மண்முட்டிகளை வைப்பது வழக்காக இருந்துவந்துள்ளது. வெயில் காலங்களில் வீதியில் செல்லும் வழிப்போக்கர்களின் தாகம் தீர்க்கவென இவ்வாறு மண்முட்டிகளில் நீர் நிரப்பி வைத்தது எம்முன்னோர்களின் விருந்தோம்பலையும், முகந்தெரியாத சக மனிதர்கள்மீதும் அவர்கள் கொண்டிருந்த அக்கறையையும் எமக்குப் பறைசாற்றுகின்றன. இவ்வாறான பாரம்பரியமும் மண்வாசனையும் எமக்களித்தது வெறும் வரலாறு மட்டுமல்ல, ஆரோக்கிய அம்சங்களையும்தான்.

'நுக கமையில்' காணப்படும் பண்டைய கிராமிய அமைப்பின் ஓர் பகுதியான மட்பாண்டங்கள் - கட்டுரையாசிரியர்

‘நுக கமையில்’ காணப்படும் பண்டைய கிராமிய அமைப்பின் ஓர் பகுதியான மட்பாண்டங்கள் படம் – கட்டுரையாசிரியர்

மண்ணில் காற்றிடைவெளி உள்ளது என்பது நாமறிந்ததே. அதேபோன்று மட்பாண்டங்களிலும் நுணுக்குக்காட்டிக்குரிய சிறியளவிலான துவாரங்கள் காணப்படுகின்றன. சூழல் வெப்பநிலைகாரணமாக பாத்திரத்தில் சேமிக்கப்பட்டுள்ள நீர் ஆவியாகத் துவங்கும் நிலையில் மட்பாண்டங்களிலுள்ள சிறுதுளைகள் வெப்பமான நீர் மூலக்கூறுகளை வெளிச்செல்ல இடமளிக்கும். நீர்த்துணிக்கைகள் வெப்பசக்தியைப் பெற்று ஆவியாகி இத்துவாரங்களிநூடு வெளியேறும். இதன்மூலம் பாத்திரத்திலுள்ள நீர் மேலும் குளிர்வடையும். பாத்திரத்திநனூடு இவ்வாறான வெப்ப மற்றும் ஈரலிப்பு வட்டம் நடைபெறுதல் மட்பாண்டங்களைத்தவிர, பிளாத்திக்கு, கண்ணாடி மற்றும் உலோகப் பாத்திரங்களில் நடைபெறுவதில்லை. மேலதிக நீராவிமூலம் தோற்றுவிக்கப்படும் வெப்பம் மட்பாண்டங்களில்  இலகுவாகத் தவிர்க்கப்படுகின்றதோடு, நீர் இயற்கையான முறையில் குளிர்த்தப்படுகிறது.

படம் - stylecraze.com

படம் – stylecraze.com

அதிகளவு நீரைப் பருகுதல் உடலியக்கம், பதார்த்தப் பரிமாற்றம் மற்றும் அனுசேபத்திற்கு இன்றியமையாதது. சாதாரணமாக நாம் நீரைச் சேகரிப்பதற்கு பிளாத்திக்குப் பாத்திரங்களையே பயன்படுத்துகின்றோம். இவ்வாறான பிளாத்திக்குப் பாத்திரங்களில் சுகாதாரத்திற்கு தீங்கு விளைவிக்கும் நச்சுப்பதார்த்தமான BPA எனப்படும் பிஸ்பெநோல் ஏ (Bisphenol A) காணப்படுகிறது. இது அனுசேபக்குறைபாடு, நரம்புசார் நோய்கள், ஆண்மைக்குறைவு, புற்றுநோய் போன்ற தீய விளைவுகளை ஏற்படுத்தவல்லது. வளர்ந்தோர், பெரியோர், சிறுவர்கள் என எல்லா வயதினரையும் இது பாதிக்கக்கூடியது. நாம் பிளாத்திக்குப் பாத்திரங்களில் சேகரித்துப் பருகும் நீரில் இவை இலகுவாகக் கரைந்து எமதுடலில் கலந்துவிடும் அபாயம் உள்ளதும் குறிப்பிடத்தக்கது. நீரை மட்பாண்டங்களில் சேகரித்துப்  பருகுவதால் இயற்கையாகக் குளிர்த்தபட்ட நீரை அருந்த முடிவதோடு, இவ்வாறான நோய்களிலிருந்தும் எம்மைப் பாதுகாத்துக்கொள்ளக்கூடியதாகவும் உள்ளது.

குளிரூட்டியிலுள்ள நீரை விட மண்கூசாவில் இயற்கையாகக் குளிர்த்தப்பட்ட நீர் சிறந்தது. ஏனெனில், நீண்ட நேரம் மிகுந்த வெயிலில் விளையாடுதல் அல்லது பிற வேலைகளில் ஈடுபடுதல் போன்றவற்றால் ஏற்படக்கூடிய வெப்பத்தாக்குநோயிலிருந்து எம்மைப் பாதுகாக்கவும், குளிரூட்டியில் வைக்கப்பட்ட நீரின் அதிகுளிர்த் தன்மையால் ஏற்படும் திடீர் வெப்பநிலை மாற்றம் மூலம் உடல்நலம் பாதிக்கப்படுவதிலிருந்தும் எம்மைக் காத்துக்கொள்ள முடிவதனாலேயுமாகும்.

இத்துணை குண நலன்களையுடைய மட்பாண்டங்களின் உற்பத்தி இலங்கையின் பண்டைய கைத்தொழில்களில் ஒன்றாகும். வழி வழியாகப் பல கிராமங்கள் இம்மட்பாண்ட உற்பத்தியையே தமது பிரதான வாழ்வாதாரமாகக் கொண்டுவாழ்ந்துவந்துள்ளது. இருந்தும் அக்காலத்தோடு ஒப்பிடுகையில், கடந்த இரு தசாப்தங்களாக இம்மட்பான்டப் பாவனை பாரியளவில் வீழ்ச்சி கண்டுள்ளது என்ற உண்மை வருந்தத்தக்கது. அருகிவரும் மட்பாண்டப் பாவனையின் விளைவாக இம்மட்பாண்டகைத்தொழில் நலிந்துவருவதைத்  தவிர்க்கமுடியாதுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இருந்தும் இலங்கை அரசு உள்நாட்டு உற்பத்தியின் நன்மை கருதியும், சுகாதார நோக்காகவும் இக்கைத்தொழிலை வலுப்படுத்தும் பல்வேறு செயற்திட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. சிறு முதலீடுகள், நவீன உபகரணங்கள், மட்பாண்டங்களுக்கான சந்தை வாய்ப்பு போன்ற வசதிகளையும் அரசு செய்துவருகிறது.

படம் - rozsavage.com

படம் – rozsavage.com

இருந்தும் இன்று நாம் மட்பாண்டங்களின் பிரதியீடாகப் பல்வேறு திரவியங்களைப்  பயன்படுத்தப் பழகியிருக்கிறோம். முக்கியமாக பிளாத்திக்கு, அலுமினியம் மற்றும் கண்ணாடியைக் கூறலாம். ஆம், இவாறான பதிலீடுகளை உபயோகிப்பதற்கு மனிதனிடம் பல்வேறுபட்ட நியாயமான காரணங்கள் இருக்கின்றன. இருப்பினும் மனித குலத்தின் இருப்புக்கு, அவனது சந்ததிகளின் எதிர்காலத்திற்கு, புவியுடன் அவன் கொண்டுள்ள சமநிலையைப் பேணுதற்கு இப்பரதியீடுகள்தாம் சாபக்கேடுகள். மண்வளத்தைப்பாதிக்கும் பிரிகையடையமுடியாத இப்பிளாத்திக்கு மற்றும் கண்ணாடி உபகரணங்கள் என்றும் மனிதகுலத்திற்கு நன்மைபயக்கப்போவதில்லை என்பது உலகறிந்த உண்மை. இயற்கையான பிரிகையடைதலுக்கு உள்ளாகும் உணவுக்கழிவுகள் முழுமையாகப் பிரிந்தழிய சுமார் ஒரு மாத காலம் செல்கின்றது. பிளாத்திக்குப் பொதிகளோ குறைந்த பட்சம் ஒரு நூற்றாண்டுகாலப் பிரிந்தழிதலைக் கொண்டுள்ளது. பிளாத்திக்குப் போத்தல்கள் இரு நூற்றாண்டையும், அலுமினியக் கொள்கலன்கள் ஐந்நூறு ஆண்டுகளையும் எடுக்கின்றன. இலகுபடுத்தல் என்ற ஓர் காரணத்துக்காக இயற்கையின் அருட்கொடைகளைப் புறந்தள்ளி எமது அழிவுக்கு நாமே அடிக்கல்நாட்டும் நிலை பரிதாபத்திற்குரியதே. இந்நிலையில் மட்பாண்டங்களின் பாவனைநோக்கிய எமது நகர்வு பூகோளத்திற்கு ஒரு வரப்பிரசாதமாகவே அமையும்!

கழிவுப் பொருட்களின் பிரிந்தழிகைக்குச் செல்லும் கால மதிப்பீடு

Related Articles