கடந்த சில நாடகளாகவே செய்தித்தாளையோ, செய்தி வலைத்தளங்களையோ அல்லது செய்தித் தொலைக்காட்சியையோ பார்த்தாலே அச்சம் தொற்றிக்கொள்ளும் அளவிற்கு அடுக்கடுக்காக மனதை வதைக்கும் செய்திகள். அதுவும் தலைக்கவசம் இல்லாததால் ஓடிக்கொண்டிருக்கும் வண்டியை காவல்துறை ஆய்வாளர் உதைத்ததால் கற்பனிப்பெண் மரணம், ஈவ் டீசிங் காரணமாக மாணவி தற்கொலை, எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி மாணவிகள் பலி என்று நெஞ்சை உறையவைக்கும் செய்திகள் மட்டுமே ஆக்கிரமித்தது நமக்கு ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் தான் வரவழைக்கின்றது. இத்தனைக்கும் குரங்கணி காட்டுத்தீயில் மறைந்த அனைவரும் இயற்கை ஆர்வலர்களாம். அவர்களை மலையேற்றத்திற்கு அழைத்துச் சென்ற சென்னை ட்ரெக்கிங் கிளப் கூறுகிறது.
குரங்கணி சம்பவம்
சென்னையிலிருந்து 13 பேரும் ஈரோடு மற்றும் திருப்பூரிலிருந்து 26 மாணவ மாணவிகளும் கடந்த சனிக்கிழமை மலையேற்றத்திற்காக மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில் உள்ள குரங்கணி மலைக்கு வந்து மலையேற்றத்தில் ஈடுபட்டனர். சனிக்கிழமை மலை உச்சியில் இருக்கும் டெண்டில் அனைவரும் தங்கிவிட்டு, மறு நாள் காலை, முதலில் சென்னைக்குழுவும் சில மணி நேரங்களுக்கு பிறகு ஈரோடு மாணவ மாணவியரும் இறங்கினர். ஈரோடு குழுவின் வழிகாட்டுதலுக்கு அந்த மலைப்பகுதியை சார்ந்த ஒருத்தர் உடனிருந்திருக்கிறார். மிகவும் வேகமாகவும் உற்சாகமாகவும் பாதி தூரம் கடந்து ஒரு இடத்தில் அனைவரும் மதிய உணவுக்கு அமர்ந்திருக்கின்றனர். அப்போது தான் ஈரோட்டு குழுவினர் இவர்கள் இருக்கும் பகுதியை வந்தடைந்தவுடன் அனைவரும் சற்று நேரம் உரையாடிக்கொண்டிருந்திருக்கின்றனர். அப்போது தான் மலைக்கு கீழே மரங்கள் எரிந்து கொண்டிருப்பதை உணர்ந்த அந்த வழிகாட்டில், மறு நாள் காலை கீழே இறங்கலாம் என்று நினைத்திருந்தவர்களை உடனடியாக வேறு வழியாக இறங்க வேண்டும் என்று கூறி வேறு வழியில் இறங்க அழைத்துச் சென்றிருக்கிறார். இதில் நடக்க முடியாத நிலையில் இருந்த 3 மாணவிகள் இடையில் ஒரு இடத்தில் வனத்துறை வாகனம் மூலமாக அன்று காலையே அடிவாரத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக இவர்கள் உடனிருந்தவர் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். எதிர்பாராத விதமாக மள மள வென பறவிய காட்டுத்தீ இவர்கள் கடக்கும் பாதைக்கு அருகில் வந்ததும், தீ தங்களைத் தாக்காமல் இருக்க அனைவரும் கலைந்து ஆங்காங்கே இருக்கும் குழிகளுக்குள் பதுங்கினர். பலத்த காற்றினால் தீ அங்கிருக்கும் மரங்களெங்கும் பரவியது. தீ இவர்கள் அனைவரையும் சூழ்ந்ததால் இவர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு செய்வதறியாது தவித்திருக்கின்றனர். மேலும் தீக்காயங்களுடன் தவித்திருக்கின்றனர். 108 ஆம்புலன்ஸ் வரும் முன்னரே ஒரு சிலர் உயிருக்கு போராடும் நிலையில் இருந்ததாலும் மலையிடுக்கினுள் சென்று அவர்களை காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டதாலும் தான் பலர் இறந்திருக்கின்றனர். இது எதிர்பாராத விதமாக நடந்த துருதிஷ்டவசமான சம்பவம். இத்துயரச் சம்பவம் நடந்ததற்கு இவர்களின் சில அசட்சியங்களும் காரணம் தான்.
பங்கேற்பாளர்களைப் பற்றிய குறிப்பு
அனைவரும் செய்திகளைப் பார்ர்த்த கனமே “இந்த மலையேற்றத்தில் பங்கேற்றவர்கள் போதிய ஏற்பாடுகள் இல்லாமல் சென்றதாகவும், போதிய அறிவில்லாமல் தீயில் மாட்டிக்கொண்டதாகவும்” முதலில் விமர்சித்தனர். ஆனார் இதில் பங்கேற்ற அனைவரும் இயற்கை ஆர்வலர்கள் என்பது தெரிந்தவுடன் தமிழக மக்களை அது மேலும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஆம் சென்னையிலிருந்து சென்ற அனைவரும் இயற்கை ஆர்வலர்கள் மட்டுமல்லாது அவர்கள் சென்னை டிசம்பர் வெள்ளத்தின் போது மீட்பு பணியில் முழுவதுமாக ஈடுபட்ட சமூக ஆர்வார்கள். மேலும் சல்லிக்கட்டு போராட்டத்திலும் ஈடுபட்டவர்கள் என்கின்றனர் சென்னை சமூக ஆர்வலர்கள். இவர்கள் சென்னையில் அனைத்து வார இறுதியிலும் ஒன்றாகச் சேர்ந்து ஏதோ ஒரு குளத்தையோ அல்லது கடற்கரையையோ அல்லது ஏதோ ஒரு பொது இடத்தை சுத்தம் செய்து கொண்டிருப்பர். நமது நவீன வாழ்க்கை முறையில் இவ்வாறான சமூக நலச் செயல்களில் ஈடுபடும் எத்தனையோ குழுக்களை நாம் சென்னை போன்ற பெரு நகரங்களில் காணமுடிகிறது என்பது, நாளைய இந்தியாவிற்கான நம்பிக்கையை வளர்க்கிறது. இதற்காக எந்த அமைப்போ, கட்சியோ இவர்களுக்கு நிதி தருவதில்லை, இது தன்னார்வத்தினால் இவர்கள் ஈடுபடும் செயல் என்பதால் செலவையும் இவர்களே பகிர்ந்து கொள்கிறார்கள். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் பலருக்கு இது முதல் மலையேற்றப் பயணம் இல்லை. மலையேற்றத்தைப் பற்றிய குறிப்புகளும், காடுகளைப்பற்றிய அறிவும் நன்கு அறிந்தவர்களுமாவர். நிச்சியம் சமயோசிதத்தோடு தான் செயல் பட்டிருக்கின்றனர். அப்படி இல்லையெனில் 9 வயது 11 வயது குழந்தைகளுக்கெல்லாம் ஒன்றும் ஆகாதவாறு நடந்திருப்பார்களா ?
காடுகள் மற்றும் மலைகளை இந்தியா பாதுகாக்கும் முறை
இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் 25 சதவிகிதம் காடுகள் ஆகும். இந்தியாவின் மக்கள் தொகை நெருக்கத்திற்கு ஏற்றவாறு இயற்கையாகவே காடுகளும் மலைகளும் அதன் வளங்களும் நிறைந்திருக்கும். நாகரீகம் என்கின்ற பெயரிலும், நகரமயமாக்கல் என்கின்ற பெயரிலும் இந்தியர்களாகிய நாமும் பல நேரங்களில் இயற்கையை சிதைத்து வருகின்றோம். 40 சதவிகிதமாக இருந்த காடுகள் 15 ஆண்டுகளில் 25 சதவிகிதமாக குறைந்ததற்கு ஆக்கிரமிப்புகளும் காரணமாகலாம். இந்த மாறுதல்களால் நாம் இழந்த வளங்களில் நீர் நிலைகள் முக்கிய பங்கை வகுக்கின்றன.மலைகளையும் காடுகளையும் பாதுகாக்கும் நோக்கம் கொண்டு இந்திய அரசு காடுகள் இருக்கும் பகுதிகளைக் கண்டறிந்து அங்கு காடுகளையும் அங்கு இருக்கும் விலங்குகளையும், வளங்களையும் பாதுகாக்கும் நோக்கம் கொண்டு, ஆகிரமிப்புகள் ஏற்படாதவாறு பாதுகாத்து வருகின்றது. அது மட்டுமல்லாமல் காடுபேணுநர்கள் நியமித்து அவருக்கு கீழ் சில ஊழியர்களையும் வேலைக்கு அமர்த்தி இந்த இயற்கை வளங்களை பாதுகாப்பதோடு, பருவ நிலைக்கேற்றவாறு மலைவாழ் மக்களுக்கு விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்தி வருகின்றனர். அதுமட்டுமலாமல் காடுகளை பாதுகாக்கும் பொருட்டு செயல்படும் சில தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும் தனது பங்கில் காடுகளை பாதுகாக்க அனுமதி அளித்திருக்கிறது. குறிப்பாக “வேர்ல்டு வைல்டு லைஃப் ஃபௌண்டேசன்”, ”பூவுலகின் நண்பர்கள்” போன்ற அமைப்புகள் இயற்கை வளத்தைக் கருத்தில் கொண்டு பல செயல் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. கடந்த வருடம் ஒரு புலி இறந்ததைக்கூட செய்தியாக வெளியிட்டதிற்கு பின்னும் ஒரு விழிப்புணர்வு சார்ந்த பார்வை இருக்கிறது.
மேலும் 2002 ல் ஏற்றப்பட்டுள்ள பல்லுயிர் பெருக்கச்சட்டம் மற்றும் 2004 ல் அமைக்கப்பட்டுள்ள அதனை ஒட்டிய விதிகள் என்று நடைமுறைகளுக்கான வழிகளையும் நெறிகளையும் வகுத்துள்ளது. அது நிச்சயமாக புதிதாக காடுகளை பாதுகாக்க முன் வரும் ஆர்வலர்களுக்கு துணையிருக்கும்.
மலையேற்றத்திற்கு ஏற்பாடு செய்த அமைப்புகள் பற்றி
மலையேற்றத்திற்கென்று சில நெறிகளும், மலயேற்றத்தின் போது கவனத்தில் கொள்ள வேண்டிய பாதுகாப்பு விடயங்களும் இருக்கின்றது. அதனை மலையேற்றத்தின்போது எத்தனை நபர் கடைபிடிக்கின்றனர் என்பது கருத்தில் கொள்ள வேண்டிய ஒன்று. மலையேற்றத்திற்கு செல்லும் நபரின் உடல் ஆரோக்கியம் மலையேற்றத்தில் இருக்கும் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் இருத்தல் வேண்டும். அவர்களது மருத்துவரிடம் செல்லும் மலைப்பகுதியையும், பயணத்தின் கால அளவையும் குறிப்பிட்டு அலோசனையும் பெற்றிருக்க வேண்டும். ஒரு வேளை இதனை ஏற்பாடு செய்கின்ற அமைப்பே ஒரு மருத்துவர் மூலமாக இந்த ஆலோசனையை வழங்குமாயின் சிறப்பு.
மேலும் மலையேற்றத்திற்கு செல்வதென்றால் அதற்கு மூன்று அல்லது ஆறு மாதங்களுக்கு முன்பிலிருந்தே தினது உடற் பயிற்சியில் அந்த நபர் ஈடுபட்டிருக்க வேண்டும். குரங்கணி மலையேற்றப் பயணத்தை ஒருங்கிணைத்த அமைப்புக்கு இது பற்றிய அறிவு இல்லாமல் இருந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் அந்த அமைப்பே மலையேற்ற பயணங்களை ஒருங்கிணைக்கும் அமைப்பு தான் (சென்னை ட்ரெக்கிங் கிளப்). ஆயினும் பாதி வழியில் 3 பெண்களால் நடக்க முடியாத நிலை ஏற்பட்டதால் ரேஞ்சர் வாகனத்தில் அனுப்பி வைக்கப்பட்டதாக வாக்குமூலத்தில் தெரிவித்திருக்கின்றனர். ஆகவே, சரியான உடல் தகுதி சார்ந்த மருத்துவ ஆலோசனைகள் அனைவருக்கு வழங்கப்பட்டதா என்பதை முதலில் விசாரிக்க வேண்டும். இந்த பயணத்தில் 9 வயது சிறுமியையும் அழைத்து சென்றுள்ளனர். மலையேற்றாத்திற்கு குறைந்தபட்ச வயதாக 10 என்று கூறுகின்றது 25 வருடமாக மலையேற்ற பயணங்களை இமாலய மலைப்பகுதியில் ஏற்பாடு செய்து வரும் ”பீக் அட்வென்சர்” அமைப்பு. இவ்வாறு பங்கேற்பாளரின் ஆர்வத்தை கருத்தில் கொண்டு சில நெறிகளை மீறும்போது தான் நல்ல ஒருங்கிணைப்பாளர்களின் மீது இருக்கும் நம்பகத்தன்மையும் இல்லாமல் போகின்றது.
அரசியலும், விழிப்புணர்வும்
சென்னை ட்ரெக்கிங் கிளப், இந்த சம்பவத்திற்கு பிறகு, விபத்தில் உயிரிழ்ந்தவர்களின் தனி நபர் விளையாட்டு சாதனைகளையும் குறிப்பிட்டு பகடி நாடகம் ஆடுவது தனது அமைப்பின் பெயரைக் காப்பாற்றுவதற்கு. தனது அமைப்பின் பெயரைக் காப்பாற்றுவதால் இறந்தவர்கள் திரும்பிவிடப்போவதில்லை. எப்படியும் இந்த பயணத்தில் ஈடுபட்டவர்கள், அவர்களது குடும்பத்திடம் சொல்லாமல் சென்றிருப்பதற்கு வாய்ப்பில்லை என்றாலும், மலையேற்றம் பற்றிய விழிப்புணர்வு அவர்களது பெற்றோர்களுக்கு எந்தளவுக்கு இருக்கிறது என்பதும் முக்கியம். 18 வயது நிரம்பாதவர்களின் பெற்றோர்களிடம் முறையே கடிதங்கள் வாங்கி பின் தான் இந்த பங்கேற்பாளர்களை தெரிவு செய்தார்களா என்பதையும் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
சல்லிக்கட்டு போராட்டத்தில் முழுமையாக ஈடுபட்டவர்கள் என்பதற்காகவும், சென்னை வெள்ளத்தின் போது பொது சேவையில் முழுமையாக ஈடுபாட்டனர் என்பதற்காகவும், நெறிகளை ஒரு முறை மீறிவிட்டு மன்னிப்பு கேட்டவுடன் மன்னிப்பதற்கு 13 உயிர் பலி என்பது ஒரு சாதாரண விடயமும் இல்லை. அதுமட்டுமலாமல் இந்த மலையேற்ற பயணத்திற்கும் வனத்துறையினரிடம் முறையே அனுமதி பெறவில்லை என்ற தகவலும் இணைய செய்தித் தளங்கள் மூலமாக தெரியவருகின்றது. முறையே வனத்துறையினரிடமிருந்து அனுமதி பெற்றிருந்தால், காட்டுபுல்லை யாரோ பற்ற வைத்ததால் தான் இந்த கோரச் சம்பவம் ஏற்பட்டதாக கூறப்படும் நிலை ஏற்பட்டிருக்காது. ரேஞ்சர்கள் முறையாக கண்கானித்திருப்பார்கள். அது மட்டுமல்லாமல் இந்த மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தான் சர்ச்சைக்குரிய நியூட்ரினோத் திட்டம் செயல் படுத்த இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கருணை
விதிகளை மீறி ஒரு முறை செய்துவிட்டு எந்த சிக்கலும் ஏற்படாமல் தப்பித்துவிட்டால் ஒருங்கிணைப்பாளர்களுக்கே அலட்சியம் வந்துவிடுகிறது. இவர்கள் ஈரோட்டைச் சேர்ந்த குழுவிற்கு முறையே அலோசனைகளும், மலையேற்ற நெறிகளைப் பற்றியும் தெளிவாக எடுத்துரைத்து தான் இதனை ஏற்பாடு செய்தனரா என்பதை கவனிக்க வேண்டும். எதிர்பாராத விதமாக நடந்த இந்த சம்பவம் போல மீண்டும் எப்போதும் நடைபெறாமல் இருக்க முறைகேடுகள் செய்யும் அமைப்புகள் மீது, தகுதி மற்றும் துறை பாகுபாடின்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வனத்துறையின் முறையான அனுமதி இன்றி இவர்களுக்கு உள்ளே செல்ல அனுமதித்தவர்களையும் விசாரிப்பது மேலும் இது போன்ற சம்பவம் நடைபெறாமல் இருக்க வழிவகுக்கும்.
மலையேற்றத்தின்போது கடைபிடிக்க வேண்டியவை
- உடல் தகுதி (மருத்துவர் ஆலோசனை அவசியம்)
- மன வலிமை
- நல்ல தரமான காலணிகள் அணிந்திருக்க வேண்டும்
- மலையேற்றம் செல்லும் இடத்தின் தன்மையைப் பற்றி நன்கு அறிந்து கொள்ளவேண்டும்
- குறைந்தபட்சம் 10 வயது நிரம்பிபிருக்க வேண்டும்
- தட்பவெப்ப நிலைக்கேற்றவாறு ஆடைகள் மற்றும் கம்பளி ஸ்வெட்டர்கள் எடுத்துச்செல்லவேண்டும்
- வன விலங்குகளின் தன்மை பற்றிய அறிவு சிறிதேனும் இருத்தல் நன்று
- மருந்து மாத்திரைகள், சன் ஸ்கிரீன், குளிர்கால கிரீம் மற்றும அத்தியாவசிய சோப்பு, பல் தூரிகை (அ) பற்பொடி
- குறிப்பாக தீக்காயங்களுக்கான மருந்துகள்
Web Title : Principles and adventure for adventure trek
Featured Image Credit : irrisarriland.es