
பொத்துவில் நகரம் என்றவுடனேயே அனேகரது கவனம் அதன் சுற்றுலாத்தளங்களான அறுகம்பை அதைச் சாடியுள்ள உல்லை கடற்கரை போன்றவற்றையே மீட்டுத்தரும். இப்பொத்துவில் நகரம் இன்று சுற்றுலாப் பயணிகளின் வருகையால் பல்வேறுபட்ட மாறுதல்களுக்கு உள்ளாகியிருக்கிறது. சுற்றுலா விடுதிகள், கடை வீதிகள், சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் பல்வேறு அம்சங்களைக் கொண்டு இன்று இந்நகரம் அபிவிருத்தியடைந்து காணப்படுகிறது. சுற்றுலாப்ப ருவகாலங்களில் இங்கு காணப்படும் கடற்கரைகள் மக்கள் கூட்டங்களால் நிறைந்து காணப்படுவது ஓர் கண்கொள்ளாக் காட்சியாகும். இப்படிச் சுறுசுறுப்பான இந்நகரில் இயற்கை மற்றும் தனிமை விரும்பிகளுக்கு ஓர் சொர்க்கபூமி உண்டென்றால் அது இம்மண்மலையும் அதைச் சார்ந்துள்ள கடற்கரையுமேயாகும்.
இலங்கையின் எந்தவொரு பாகத்திலும் காணமுடியாத இவ்வமைப்பான கடற்கரை பொத்துவிலுக்கான ஓர் தனிச் சிறப்பே எனலாம். முதன்முறை இத்தலத்திற்குச் செல்பவர்கள் வியந்து, உலகில் இப்படியும் ஓர் இடம் உண்டா எனப் பூரிக்கும் அளவு இம் மண்மலை இயற்கை வனப்புமிக்கது. பாடசாலைக் காலங்களில் சுற்றுலா சென்ற சமயம் நாங்கள் பார்த்த மண்மலை சுனாமி அனர்த்தத்தின் பின் சற்று மாறியிருக்கின்றதெனவே கூறவேண்டும். இருந்தும் இப்பிரதேச மக்களை சுனாமி அனர்த்தத்தின் கொடூர தாண்டவத்திலிருந்து இத்தரைத்தோற்றமும் 32 அடிவரை உயர்ந்த இம் மண்மேடுகளும் காப்பாற்றின என்பது மிகையில்லை.
இயற்கையாக அமைந்த இப்பரந்த மண்மேடுகள் அதனிடையே ஆங்காங்கு வளர்ந்திருக்கும் மரங்கள், நீண்டு விரிந்த கடற்கரை, மண்மலையின் உச்சியில் நின்று பார்க்கும்போது தோன்றும் காட்சிபோன்றவை வாழ்வில் ஒருதடவையேனும் நாம் அனுபவித்துச் சுவைக்கவேண்டிய அம்சமே என்பேன்.
குறிப்பாக பௌர்ணமி தினங்களில் நிலா உதிக்கும் காட்சி கிழக்கு மாகாணத்தின் கடற்கரையை அண்டிய மக்களுக்கு இறைவன் பூமியில் உருவாக்கிய சுவர்க்கம் என்றே நினைக்கத் தோன்றும். நிலவொளியில் இவ்வெள்ளிமணற்பரப்பில் அமர்ந்து அலைகளின் ஓசையுடன் கழிக்கின்ற பொழுது பாரதியின் “வெண்ணிலா” பாடலை நினைத்து நினைத்து ரசிக்க ஏற்றது என்பது எனது கருத்து.
நான் ரசித்த இம்மண்மலையை நான் பதிவுசெய்த எனது புகைப்படங்களூடு நீங்களும் ரசிக்கத் தருகிறேன்.