.jpg?w=1200)
“மறந்துட்டேன்”
உலகிலேயே மிக எளிதான ஒரு பதில் இதுதான். ஆனால் உண்மையில் இது பதில் இல்லை ஒரு நோய். அதற்கு காரணம் அல்ஸைமர் எனும் நோயால் பாதிக்கப்படுவது. இந்த நோயால், சாப்பிட்ட சில நிமிடங்களிலேயே அது நியாபகத்தில் இல்லாது மீண்டும் சாப்பிட தோன்றும், சமீபத்திய நிகழ்வுகளின் நினைவுகள் மறந்துவிடும். வீட்டைவிட்டு வெளியேறினால், மீண்டும் திரும்பிவரத் தெரியாது வழி மறந்துவிடும். கோர்வையாகப் பேச வராது. சொல்வதைப் புரிந்துகொள்ள முடியாது. ஒரு கட்டத்தில், தன் பெயர் கூட மறந்துவிடலாம். மனிதன் என்று சொல்வதற்கான சாராம்சங்களே நொறுங்கிப்போய்விடும். இப்படி ஒருவர் இருந்தால், அவருக்கு வந்திருக்கும் நோயின் பெயர்தான், அல்ஸைமர் எனும் மூளை மழுங்கு நோய். இது ஞாபக மறதி நோயின் (டிமென்ஷியா) ஒரு முக்கிய வகை என்கிறார்கள் மருத்துவவியலாளர்கள்.
அல்சைமரின் ஆய்வு…

ஜெர்மனியைச் சேர்ந்த நரம்பியல் நிபுணர் மற்றும் உளவியலாளர் அலாய்ஸ் அல்ஸைமர் (Alois Alzheimer) 1907ஆம் ஆண்டு, நினைவாற்றல் பாதிக்கப்பட்டவர்களை ஆராய்ச்சிசெய்து, மூளையில் ஏற்படும் தேய்மானத்தைக் கண்டறிந்தார். இதனால் மூளையின் பதிவுத்திறன் குறைந்து, புதிய தகவல்களைப் பதியாது. அதனால், தேவைப்படும்போது அந்தத் தகவல்கள் நினைவுக்கு வருவதில்லை. மூளையில் உள்ள நரம்பு செல்கள், வழக்கமாகத் தங்களுக்குள் ஏற்படுத்தும் தகவல்தொடர்புகளைத் தேவையற்ற கெட்ட புரதங்கள் அடைத்துக்கொள்ளும் என்பதையும், இதனால் தகவல் பரிமாற்றம் மூளையில் தடைபடும் என்பதையும் கண்டறிந்தார். இந்த நோய் 65 வயதுக்கு மேற்பட்டவர்களைத் தாக்குகிறது. சில சமயங்களில் 45 – 50 வயதினரைக்கூட தாக்கும். . இது, ஆண்- பெண் இருபாலருக்கும் வரலாம். வயோதிகம் மட்டுமல்லாமல் மரபுரீதியாகவும், தலையில் பலமாக அடிபடுதல் காரணமாகவும், டவுண் சின்ட்ரோம் (down syndrome) என்னும் நோயின் காரணமாகவும் அல்சைமர் வரலாம்.
அல்சைமரால் ஏற்படும் பாதிப்புகள்…

தற்கால நினைவுகள் மறந்துவிடும். சிந்திக்கும் திறன், செயல்களைத் திட்டமிட்டு வரிசையாகச் செய்யும் திறன், முடிவெடுக்கும் திறன், அன்றாட வாழ்வியல் பிரச்னைகளைத் தீர்க்கும் சக்தி அனைத்தும் பாதித்துவிடும். சூழ்நிலைக்குப் பொருந்தாத அழுகை, சிரிப்பு. வழக்கமான குணாதிசயம் மாறி, ஆளுமைத் தன்மையே ஒழிந்துவிடும். மொழி, பழக்க வழக்கங்கள் அத்தனையும் சிதைந்துவிடும். தினசரி வாழ்க்கையில் தனக்கு வேரொருவரின் உதவி தேவைப்படும் நிலை ஏற்பட்டுவிடும்.
அல்சைமரின் பதிவுகள்

உலக மக்களின் மரணத்திற்கான காரணங்களில் இந்த நோய் பெற்றிருக்கும் இடம் ஆறு. அமெரிக்காவில் மட்டும் 54 லட்சம் பேரை பாதித்துள்ளது. தற்சமயம் உலகம் முழுவதும் சுமார் 4 கோடியே 70 லட்சம் நோயாளிகள் இறந்துள்ளனர் என்கிறது ஆய்வு.
அல்சைமர் நோய் வராமல் எப்படி தடுப்பது?
தவறாமல் உடற்பயிற்சி மேற்கொள்ளுதல், இதயம் சீராக இயங்கும் வகையில் உடலை பேணுதல் நீரிழிவு நோயினைக் கட்டுப்பாட்டில் வைத்தல், உடல் பருமனை குறைத்தல், புகைப்பிடித்தலை தவிர்த்தல், இரத்த அழுத்தத்தை சரியான அளவில் வைத்திருத்தல் போன்றவைகள் உதவுகின்றன. மேலும் மிக முக்கியமாக, மூளையை சுறுசுறுப்பாக வைத்திருத்தல் அவசியம்.
வேலையிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டோம், நமக்கு வயதாகிவிட்டது என்று, தூங்குவது, தொலைக்காட்சி பார்ப்பது போன்ற மூளைக்குவேலைத்தராத எளிமையான செயல்களை செய்வது அல்சைமர் நோய்க்கு வழிவகுத்துவிடும். மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்க புதிய திறன்களை கற்றுக்கொள்ள முயற்சிப்பது நன்று.

உதாரணமாக, புதிதாக ஒரு மொழியைக் கற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டும். புதிர்கள், அறிவு விளையாட்டுகள், போட்டிகள் போன்றவற்றில் கலந்து கொள்ள வேண்டும். சதுரங்கம், பல்லாங்குழி போன்ற விளையாட்டுகள் நன்று. புத்தகங்கள் படிப்பது, படித்ததை மற்றவர்களிடம் பகிர்வது, எழுதுவது போன்றவைகளும் மூளைக்கு வேலைத்தரக் கூடியவைகள்.
தன்னார்வ தொண்டராக, பொது தொண்டாற்றுவது அல்சைமர் நோய் வருவதை தடுப்பதாக கனடா நாட்டிலுள்ள பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவு ஒன்று சொல்கிறது. புதியவர்களை சந்திக்கும் போதும், புதிய வேலைகளில் நம்மை ஈடுபடுத்திக்கொள்ளும் போதும் நமது மூளையில் என்டோர்பின்ஸ் என்கிற ஹார்மோன் சுரக்கிறது, இது மூளையை சுறுசுறுப்பாகவும், உற்சாகமாகவும் வைத்திருக்க உதவுகிறது. ஒரேவிதமான வேலைகளை தினம் தொடர்ந்து செய்யும் போது மூளைதானியங்கி முறைக்கு சென்றுவிடுகிறது.
நாளடைவில், மூளைசெல்கள் இறக்கத்தொடங்குகின்றன. புதியவைகள், வித்தியாசமானவைகளை முயற்சிக்கும் போது மூளைவிழிப்பு நிலையில் இயங்குகிறது. காலை எழுந்தவுடன் பல்துலக்கும்போது, வலதுகையில் குச்சியை வைத்து தேய்ப்பவராக இருந்தால் அதைமாற்றி இடது கையில்தேய்க்க முயற்சி செய்யுங்கள். பல்தேய்க்கும் போது ஏதோ எண்ண ஓட்டத்தில் இருக்கும் மூளை அன்றைக்கு விழிப்பு நிலைக்கு வந்துவிடும்.
இந்த எளிய உதாரணம், மூளையை எப்படி தானியங்கி நிலையிலிருந்து விழிப்புநிலைக்கு கொண்டு வருவது என்பதை விளக்கும். இதுப்போன்று, கடைக்கு தினம் செல்லும் வழியில்செல்லாமல், வேறு வழிகளில் செல்லமுயற்சிக்கலாம். இது போன்ற பயிற்சிகள் மூலமாகவும், உடலினை சரியாக பேணுவதன் மூலமாகவும் மூளையை சுறுசுறுப்பாக்கி, அல்சைமர் நோய் வருவதை தடுக்கலாம்.
அல்சைமர் விழிப்புணர்வு தினம்
அல்சைமர் எனப்படும் மறதி நோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் செப்டம்பர்- 21ஆம் திகதி உலக மறதி தினம் கடைபிடிக்கப்படுகிறது. நோயின் தீவிரம் கருதி சில நாடுகளில் ஒரு மாதம் முழுவதும் அல்சைமர் தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. பல்வேறு தொண்டு நிறுவனங்கள் அல்சைமர் விழிப்புணரவை உலகம் முழுவதும் ஏற்படுத்தி வருகின்றன.
இலங்கையில் அல்சைமர் அறக்கட்டளை நிறுவனம்
1999 ஆம் ஆண்டில் சர்வதேச அல்சைமர் அறக்கட்டளை விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க 2001ஆம் ஆண்டு மார்ச் மாதம் இலங்கையில் இலங்கை அல்சைமர் அறக்கட்டளை(Lanka Alzheimer’s Foundation) நிறுவப்பட்டது. தமித்தேகம என்பவர் தன் மனைவி லோரெய்ன் யூ உடன் சேர்ந்து இதனை நிறுவியுள்ளார். பல நன்கொடையாளர்களால் இவ்வறக்கட்டளை இயங்கி வருகின்றது.

இலங்கையில் அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக கடந்த 18 ஆண்டுகளாய் இத்தொண்டு நிறுவனம் இயங்கி வருகின்றது. இலங்கையில் முதுமை பராமரிப்பு சேவைகளை வழங்கும் முன்னணி நிறுவனமாக வளர்ந்து வருகிறது.


(Lanka Alzheimer’s Foundation) இன் இணை நிறுவனர் மற்றும் தலைவரான தமித்தகமவின் மனைவி லோரெய்ன் யூ இம்மாதம் தனது பதவியில் இருந்து விலகி அடுத்த தலைமுறைக்கு வழிவிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை ஆண்டுகாலம் அவர் ஆற்றிய அளப்பரிய சேவைக்கு பலரும் அவர்களது பாராட்டுகளை தெரிவித்தவண்ணம் உள்ளனர்.