Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

விழித்திறனற்று போனாலும் பார்வைசார் துறையில் ஓர் சாதனை பயணம் : ஆஷ்சர்யாவின் கதை

 ‘எங்களாலேயே செய்ய முடியாததை அவள் மாத்திரம் எப்படி செய்து காட்டுவாள்?’ என்று பலர் கேட்டார்கள். நான் ஆஷ்சர்யா. என்னை பொறுத்தவரை ஒழுக்கம் என்பது எம்முள்ளிருந்து வெளிப்பட வேண்டும்.. நான் தனித்துவமானவள். எனக்கென்று திறமைகள் உள்ளன. எனக்கு சில பலவீனங்களும்  உண்டு. அப்பலவீனங்களை கட்டுப்பாட்டுக்கு  கீழே வைத்து எப்படியோ பலத்தை கண்டுபிடிக்கின்றேன் ” – ஆஷ்சர்யா.

இலங்கையின் முதல் பார்வை குறைபாடுள்ள ஆடை வடிவமைப்பாளரும், நவநாகரீக வர்த்தக நாமமான கிறிஸ்டியானா குளோரியின் நிறுவனருமான ஆஷ்சர்யா பீரிஸ் ஜெயகோடி, 2019 ஆம் ஆண்டிற்கான பிபிசியின் சிறந்த 100 பெண்கள் பட்டியலில்    உள்ளிடப்பட்டு உலக அரங்கில் பெயர் பெற்றார். உலகெங்கிலும் இருந்து முன்மாதிரியான  பெண்களைக் கொண்டாடும் இப்பட்டியலில் உள்வாங்கப்பட்ட ஒரே இலங்கையர் இவர் மாத்திரமே ஆவார்.

ஆஷ்சர்யா, தேவி பாலிகா வித்யாலயத்தின் பழைய மாணவி. தனது இடைநிலைக் கல்வி முடிந்ததும், கேம்பிரிட்ஜின் Warwick பல்கலைக்கழகத்தில் ஆங்கில மொழியில் டிப்ளோமா பெற்றார். சிறிது காலத்திற்குப் பிறகு, இவர் வங்கித் துறையில் நுழைந்தார். ஒரு கோர சம்பவம் இவரது அமைதியான வாழ்க்கையை தலைகீழாக புரட்டிப்போட்டவரை இவர் அங்கேயே பணி புரிந்தார்.

Ashcharya Peiris Facebook page

குண்டுத்தாக்குதல்

2000 ஆம் ஆண்டில் ஒரு நாள் ஆஷ்சர்யா வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, ஓர் தற்கொலை குண்டுதாரி குண்டை வெடிக்கச்செய்ய, ஏற்பட்ட வெடிவிபத்தின் காரணமாக ஆச்சார்யாவின் பார்வை பறிபோனது. இந்த சம்பவம் காரணமாக அவருக்கு உடலில் பல காயங்கள் ஏற்பட்டன. உடல் நலம் குறித்து  மருத்துவர் தரப்பும் நேர்மறையானதாக ஏதும் கூறவில்லை, அது மட்டுமின்றி  அந்நேரத்தில் ஆஷ்சர்யாவின் மனநிலையும் நிலையற்றதாக இருந்தது.

ஆஷ்சர்யா இருந்த நிலையில், அவரது குடும்பமும் அவருக்கு நம்பிக்கை தருவதை விடுத்து அவளை கைவிட்டுவிட்டது. அவருக்கு ஆதரவளிக்கும் பொறுப்பை ஏற்கவும் அவர்கள் தயாராக இருக்கவில்லை.

“எமது நாட்டில் பெற்றோர் அவர்களது எதிர்காலத்தில் பிள்ளைகள் தமக்கு ஆடம்பரமான பாதுகாப்பான வாழ்கையினை வழங்குவார்கள் என்ற எதிர்பார்ப்பில் பிள்ளைகளை பெற்றுகொள்வதே இங்கு பிரச்சினைக்கு காரணமாக அமைகின்றது. ஆனால் நான் அவ்வாறு நினைக்கவில்லை. பெற்றோர் என்பவர்கள் பராமரிப்பாளர்கள், ஒரு குழந்தையின் வாழ்க்கை என்பது பெற்றோருக்கு சொந்தமானதல்ல. எவ்வாறான சூழ்நிலையிலும் பிள்ளைகளின் வாழ்விற்கு அவர்கள் உற்ற துணையாக இருக்க வேண்டும். எதிர்காலத்தில் நான் வாழ்வில் பல சாதனைகளை புரிவேன். ஒரு செல்வந்தரை திருமணம் செய்து என் பெற்றோரை நான் பராமரித்துகொள்வேன் என என் பெற்றோர்  எதிர்பார்த்தார்கள்.ஆனால் நான் என் பார்வையை இழந்தவுடன் அவர்கள் என்னை கைவிட்டுவிட்டனர்”    என ஆஷ்சர்யா  கூறினார்.

ஆரம்பகாலத்தில் அவர் பணிபுரிந்த வங்கி அவருக்கு ஆதரவளித்து வந்தாலும், சிறிது காலத்திற்கு பின்னர் அவருக்கான சம்பளம் கொடுப்பதை நிறுத்திவிட்டனர். வங்கியின் தொழிற்சங்கம் அவரை ஒன்றரை ஆண்டுகளாக பொறுப்பேற்று இருந்தது, அவளுக்கு ஒரு சிறிய உதவித்தொகையை வழங்கியது, ஆனால் இது போதுமானதாக இருக்கவில்லை.

தன்னை ஓர் ஊனமுற்ற நபராக தொடர்ந்து தொழிற்புரிய வங்கி நிர்வாகம் ஏற்றுக்கொண்டு இடமளிக்காமையால், ஆஸ்சர்யா அவர் வேலையை ராஜினாமா செய்தார். “அவர்கள் அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார்கள்”  என்று எம்மிடம் கூறும்போது அவர் எந்த வருத்தத்தையும் தெரிவிக்கவில்லை.

வங்கியில் தனது வேலையை ராஜினாமா செய்தவுடன் மற்றவர்கள் தன்னை அந்நியமாக  நினைப்பதாக உணர்ந்தார் “நான் நம்பியவர்கள், என்னை பாதுகாப்பார்கள் என நான் நம்பியவர்கள் கூட என்னை கைவிட்டனர்.ஒரு தாயால் கூட அவ்வாறு பெற்ற மகளை கைவிடமுடியுமா? ஆம் அவர்களாலும் முடியும்”.

ஆனால் இதுபோன்ற கடினமான சூழ்நிலைகளில் கூட, அவர் தனது நம்பிக்கையில் ஆறுதல் கண்டார். “நான் இப்போது பலமாக இருப்பதாக உணர்கிறேன். என் கடினமான காலங்களில் என்னைப் பாதுகாத்த கடவுளைத் தவிர வேறு யாருக்கும் நான் கடமைப்படவில்லை. என் கண்ணீர் அனைத்தும் உலர்ந்துவிட்டது. நான் கடவுளிடம் அழுதேன், எனக்கு உதவ மனித வடிவத்தில் யாரும் இல்லாதபோது எனக்கு உதவுமாறு அவரிடம் கேட்டேன். ”

மாறுபட்ட அனுபவம்

2019 ஆம் ஆண்டில் ரூபாவாஹினிக்கு ஆஷ்சர்யா அளித்த பேட்டியின் interview போது, இந்த சம்பவம் ஒரு சோகம் என்பதை விட தனக்கு மாற்றுப்பாதை அமைத்து தந்த ஒன்றாக தான் கருதுவதாக கூறினார். இது தன்னை வலுவாகவும் தைரியமாகவும் மாற்ற உதவியது என்றும், அடிப்படையில் ஒரு நபராக அவரை மாற்றியமைத்தமைத்தது என கூறினார்.

2000 ஆம் ஆண்டில் அவர் முகம்கொடுத்த குண்டு வெடிப்பு பற்றி கேட்டபோது, “எனது கடந்தகால வாழ்க்கையில் நான் நல்ல காரியம் ஏதோ ஒன்றைச் செய்திருக்க வேண்டும்,” என்று அவர் கூறினார். இந்த சம்பவம் அவரது அவர் உலகத்தையும் வாழ்க்கையையும் குறித்து வைத்திருந்த பார்வையையும் மாற்றி

 அவரது எதிர்காலம் மற்றும் அதை  நோக்கிய பயணப்பாதையையும் மாற்றியமைத்துள்ளது என்பது அவரது எளிமையான வார்த்தைகளில் புலப்படுகிறது.

தனது இழப்புகளை எண்ணி துக்கப்படுத்துவதற்கு பதிலாக, அவர் கடினமாக பாடுபட்டு, ஒரு ஆடை வடிவமைப்பாளராக வேண்டும் என்ற தனது வாழ்நாள் கனவைப் பின்தொடர்ந்தார். ஒரு தையற்கலை நிபுணருக்கு தனது வடிவமைப்புகளை விவரிப்பதன் மூலம், அவருடைய படைப்புகளை உயிர்ப்பிக்க முடிந்தது.

பார்வை கொண்டவர்கள் பெரும்பாலும் தங்கள் ஆடைகளை வடிவமைக்க தொழில்நுட்பம் மற்றும் கருவிகளை அதிகம் நம்பியிருக்கிறார்கள், ஆனால் ஆஷ்சர்யாவோ அவரது  அனைத்து கணக்கீடுகள், வரைபடங்கள் மற்றும் பிற சூத்திரங்களை மனரீதியாகச் செய்கிறார் என்று கூறினார். அவருடைய செயல்முறை அவரது மூளையில் மட்டுமே நடைபெறுகின்றது.

Ashcharya Peiris Facebook page

காட்சி சார் துறை

குண்டு வெடிப்பைத் தொடர்ந்து வந்த ஆண்டுகளில், ஆஷ்சர்யா முழுமையான தொழில்முறை மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டார், அவரது கனவை அடைய அவருக்கு அவரது கற்பனாசக்தி மட்டுமே உறுதுணையாக  இருந்தது. உத்தேச திட்டமிடல் மற்றும் பாரிய முயற்சியின் பலனாக, 2014 ஆம் ஆண்டில் ஆடை வடிவமைப்பு போட்டியில் வெற்றிகரமாக உள்நுழைந்தார்.

கிறிஸ்டியானா குளோரி என்ற தனது வர்த்தக நாமத்தை அவர் நிறுவுவதற்கு ஒரு வருடம் முன்னதாகவே இப்போட்டி இடம்பெற்றது, இந்த வர்த்தகநாமமானது அனைத்து விதமான உடல் பருமன் வகைகளுக்கும் தோல் நிறவகைக்கும் ஏற்ப பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஆடைகளை மலிவு விலையில் வழங்குகிறது. இதன் மூலம் ஒரு பரந்த சந்தையை தனக்கென விஸ்தீரணம் செய்து கொண்டது.

அவர் போட்டியில் இறுதிப் சுற்றினை நிறைவு செய்தார், அதன் பின்னர் ஒரு வளர்ந்து வரும் ஆடை வடிவமைப்பாளர் என்ற நிலையிலிருந்து தொழில்துறையில் ஒரு முக்கிய புள்ளியாகும் நிலைக்கான தனது பயணத்தைத் ஆரம்பித்தார். ஆனால் அவருடைய பயணம் தடைகள் இல்லாமல் இருக்கவில்லை. பார்வை குறைபாடுள்ள ஒரு வடிவமைப்பாளர் பற்றி இப்போட்டியில் ஆஷ்சர்யாவின் வருகை இடம்பெறும்வரை இலங்கை மக்கள் கேள்விப்பட்டிருக்கவில்லை. இதுவே பார்வையாளர்கள் மத்தியில் இந்நிகழ்ச்சி பற்றிய ஆர்வத்தை மேலும் தூண்டியது.

“மற்ற போட்டியாளர்கள் பொருள் வாங்க கடைக்குச் செல்வார்கள், ஆனால் அவர்களுடன் செல்வதற்கு என்னை அனுமதிக்கவில்லை.” என்று அவர் கூறினார். ஏனையோரால் குறைத்து மதிப்பிடப்பட்ட போதிலும், ஆஷ்சர்யா வெற்றியை நோக்கிய தனது பயணத்தில் விடாமுயற்சியுடன் மும்முரமாக செயற்பட்டார்.

இந்த ஆடை வடிவமைப்பு  போட்டியின் ஒரு முக்கிய கட்டத்தின் போது, ஆஷ்சர்யா   ‘Sri Lankan Drums  எனும் முறையினை தேர்வு செய்த போதிலும் அமைப்பாளர்கள் அவருக்கு ஒரு கைத்தறியை வழங்கினர். அவருடைய விருப்பத்தை அவர்கள் மறுத்துவிட்டதால், ஒரு மாதத்தில் கைத்தறி கற்க வேண்டிய கட்டாயம் ஆஷ்சர்யாவிற்கு ஏற்பட்டது.

ஆனால் சவாலை தங்குதடையற நிறைவு செய்வது மாத்திரம் அவரது நோக்கமல்ல வெற்றி பெறுவதையும் தாண்டி இத்துறையில் ஒரு புதிய மாற்றத்தினை கொண்டுவர அவர் முயற்சித்தார். இலங்கை கைத்தறி துறை இதுவரை கண்டிரா வெளிர் ஊதா நிறத்தை அவரது கைத்தறியில் கொணர்ந்தார். இதைச்சாத்தியமாக்க, அவர் ஏராளமானவர்களை உதவிக்கு அழைத்தார், ஆனால் ஒருவரைத் தவிர ஏனைய அனைவரும் அவருக்கு உதவ மறுத்துவிட்டனர்.

தொலைபேசியில், ஆஷ்சர்யா அனைத்து வழிமுறைகளையும் தையல்காரருக்கு வழங்கினார், இரண்டு வகையான நூல் மற்றும் ஒரு ஒற்றை வண்ணத் தளத்தை ஏனைய வண்ணங்கள் மீது இயக்கி, அவர் மனதில் கற்பனை செய்த கைத்தறித் துண்டுகளை நிஜத்தில் சாத்தியமாக்கினார்.

அவருடைய படைப்புகள் தனித்துவமான அலங்காரங்களை கொண்டிருந்தன. நகைகள் தேங்காய் ஓடுகளால் உருவாக்கப்பட்டிருந்தன. கைத்தறி புடவைகளில் தாமரை மலர்களும் தேங்காய் ஓடுகளால் உருவாக்கப்பட்டிருந்தன. போட்டிக்கான அவரது தனித்துவமான படைப்புகள் பலரின் கவனத்தை ஈர்த்தன.

இவரது கூடுதல் முயற்சிக்கான வெகுமதி 2017 ஆம் ஆண்டில் ‘மிகவும் குறிப்பிடத்தக்க 10 பெண்கள்’ என்ற பிரிவில் தேசிய விருதை வென்றபோது கிடைக்கப்பெற்றது.

இன்று, ஆஷ்சர்யா மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய கழகத்தின் உறுப்பினராகவும், பெண்கள் தங்கள் கனவுகளில் பணியாற்ற ஊக்குவிப்பதற்காகவும், தங்கள் ஆர்வங்களை படிப்படியாகப் பயன்படுத்தி உயர்ந்த இடங்களுக்கு தங்களை உயர்த்துவதற்காக அமர்வுகளை நடத்தும் ஒரு ஊக்கமளிக்கும் பேச்சாளராகவும் உள்ளார்.

Ashcharya Peiris Facebook page

எண்ணப்போக்கை மாற்றுதல்

ஆஷ்சர்யா அனைவருக்கும் ஒரு முன்னுதாரணமாக இருக்கிறார், இவரது வாழ்க்கையானது மாற்றுத்திறனாளிகளை  ஒதுக்கி வைக்கும் இம்மனநிலையை கலைக்க இலங்கை இன்னும் போராடி வருகிறது என்பதை நினைவூட்டுகிறது. மாற்றுத்திறனாளிகள் போற்றுதற்குரியவர்களாக இருக்கிறார்கள், மேலும் அவர்களை வேலைக்கு உள்ளீர்த்தலில்  முன்னுரிமை அளிக்காததன் மூலம், பல பணியிடங்கள் நம் சமூகத்தில் ஒரு முக்கியமான பகுதியினரை தள்ளி வைக்கின்றன.

“சில சமயங்களில், சமூகத்திற்குத் தேவையானதைச் செய்வதற்கான சட்டமன்ற அதிகாரமானது தேசிய கழகத்திற்கு இல்லை” என்று ஆஷ்சர்யா எண்ணினார். “அரசு அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகளும் பாவிக்கக்கூடிய வகையில் கழிப்பறைகள் உள்ளதா?       மாற்றுத்திறனாளிகளுக்கான முன்னுரிமை நுழைவாயில்கள் பற்றி என்ன கூறமுடியும்? கல்வி, காப்பீடு மற்றும் மருத்துவ பராமரிப்பு? உதவிக்கு என்று வரும்போது, நாங்கள் பட்டியலில் கடைசியாக இருக்கிறோம்.” என தன் ஆதங்கத்தை அவர் வெளிப்படுத்தினார்.

பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாகுபாட்டை நீக்குதல், பெண்களின் அதிகாரம், சமத்துவத்தை அடைதல் மற்றும் பலவற்றில் கவனம் செலுத்தும் ஒரு அமைப்பான ஐ.நா. பெண்கள் அமைப்பின் கருத்துப்படி, உலகளவில் அண்ணளவாக 1 பில்லியன் மக்கள் மாற்றுத்திறனாளிகளுக்காக  வாழ்கின்றனர் (மொத்த சனத்தொகையில் 15% ஆகும்) சமீபத்திய உலக வங்கி புள்ளிவிவரங்களை அடிப்படையாக கொண்ட விவரம் இது.

ஐந்து பெண்களில் ஒருவருக்கு ஒருவர் மாற்றுத்திறனாளி ஆவார். மேலும் ஆண்களை விட பெண்களிடையே ஊனம்/இயலாமை அதிகமாக உள்ளது (19.2% எதிராக 12%). இது தவிர, ஊடகங்களில், கொள்கை வகுத்தல் செயல்முறைகள் அல்லது பொது வேலைவாய்ப்பு அரங்கில் 1.       மாற்றுத்திறனாளிகள் விகிதாசாரமாக (பெரும்பாலும் தவறாக) குறிப்பிடப்படுகிறார்கள்.

குறிப்பாக, பெண்கள் மற்றும் சிறுமிகள், பாதுகாக்கப்பட்ட குடிமக்களாக சமூகத்தில் பங்கெடுக்க இயலாமை, வன்முறை மற்றும் பிற தடைகளை சந்திக்கும் நிலைகளுக்கு இரையாகின்றனர். சமூகத்தின் இவ்வளவு பெரிய 1. பகுதியினருக்கு அவர்களின் அடிப்படை சுதந்திரங்களை மறுப்பதன் மூலமும், அவர்களை அத்தியாவசிய விடயங்களிலிருந்து தீவிரமாக அல்லது செயலற்ற முறையில் விலக்குவதன் மூலமும் நாம் ஒரு சமூகமாக தோல்வியடைகிறோம்.

ஆஷ்சர்யாவின் வெற்றி எவ்வளவு தூரம் முக்கியமானது என்பதற்கு இதுவும் ஒரு காரணம். குறைபாடுகள் உள்ளவர்களுக்கான அதிக ஈடுபாட்டை உறுதி செய்வதற்கான கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டால், நாம் அவர்களுக்கு அதிகாரம் அளிப்போம் என்பது மட்டுமல்லாமல், நாட்டை மீண்டெழக்கூடிய  ஒரு பாதையில் பயணிக்க செய்வோம்.

“அதிகாரத்தில் உள்ளவர்கள் ஒரு முன்மாதிரியை ஏற்படுத்த வேண்டும். எங்களுக்கு அனுதாபம் தேவையில்லை, எங்களுக்கு தேவை பச்சாதாபமே. எங்கள் மாற்றுத்திறனாளி உடல்களுடன், நாங்கள் நெஞ்சை நிமிர்த்தி, அவர்களுடன் சரிக்கு சமமாக நிற்கிறோம்,” என்று அவர் கூறினார்.

பிபிசியின் சிறந்த 100 பெண்கள் 2019 பட்டியலில் உள்ளடங்கப்பட்டது ஆஷ்சர்யா புரிந்த பல சாதனைகளில் ஒன்றாகும். அவரிடமிருந்து இன்னும் பெரிய விஷயங்களை நாம் நிச்சயமாக எதிர்பார்க்கலாம், ஏனென்றால் அவர் சிறப்பாக கூறியது போல்: “நீங்கள் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சோதனைகள் மற்றும் இன்னல்கள் அனைத்தும் உங்கள் இலக்குகளை அடைவதற்கேற்ப உங்களை செதுக்கும் மாறுவேடமிட்ட ஆசீர்வாதங்களே அன்றி வேறில்லை.”

Related Articles