Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

கடன்தரப்படுத்தல் எதனை சொல்லுகிறது?

கடன்தரப்படுத்தல் (Credit Rating) என்கிற வார்த்தையை அவ்வப்போது சாமனியர்களாகிய நாம் கடந்தே வந்திருப்போம். சாதாரணமாக, வங்கியொன்றில் கடன் வாங்கச் செல்லும்போதோ அல்லது வாகனம் ஒன்றைக் குத்தகை அடிப்படையில் பெற்றுக்கொள்ளச் செல்லும்போதோ நமது கடன் செலுத்தும் இயலுமையை வங்கிகளும், நிதிசார் நிறுவனங்களும் கணித்துக்கொள்ளும் முறையாகவே இது இருக்கிறது. சாமானியர் ஒருவருக்கே இப்படியான மதிப்பீடுகள் இருக்கிறது என்றால், பாரிய பெறுமதியில் கடன்களை பெற்றுக்கொள்ளும் ஒரு நாட்டின் கடன் தரப்படுத்தல் எப்படி இருக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? அந்தக் கடன் தரப்படுத்தல் எதனை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கப்படுகிறது என்பதாவது உங்களுக்கு தெரியுமா ?

உண்மையில், இவ்வாறான கடன் தரப்படுத்தல் ஏன் செய்யப்படுகிறது? யார் இதனை செய்கிறார்கள்? இது எவ்வாறு எங்கள் பொருளாதாரத்தில் தாக்கத்தை செலுத்துகிறது? என்பதனை அறிந்துகொள்ளாமலேயே இருக்கிறோம். இந்த கடன் தரப்படுத்தலில் ஏற்படுகின்ற ஒவ்வொரு மாற்றமும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இறுதியில் எங்களையே பாதிக்கப்போகிறது என்பதையாவது நாம் அறிவோமா?

கடன்தரப்படுத்தல் என்றால் என்ன? யார் இதனை செய்கிறார்கள்?

கடந்த 2016ல் இந்த நிறுவனம் இலங்கையின் கடன்தரப்படுத்தலை B+ என்கிற நிலையிலிருந்து BB- என்கிற நிலைக்கு தரமிறக்கியிருந்தது. (sharetu.com)

இன்றைய நிலையில் இலங்கையிலும் சரி, சர்வதேச ரீதியிலும் சரி, பிரசித்திபெற்ற மூன்று முக்கிய கடன் மதிப்பீட்டு நிறுவனங்கள் இந்த மதிப்பீட்டு சேவையை செய்கின்றன. அவை, விட்ச் (Fitch Credit Agency), மூடி (Moodi’s Credit Agency) , ஸ்டான்ரட் அண்ட் பூவர்ஸ் (Standard & Poor’s) ஆகிய மூன்று நிறுவனங்களே ஆகும். இவை, பெரும்பாலான முதலீட்டாளர்களுக்கு தங்களது முதலீடுகளுக்கு எவ்வகையான வருமானம் மற்றும் அபாயம் உள்ளன என்கிற அடிப்படையில் நாட்டின் அல்லது நிறுவனத்தின் கடன் மதிப்பீட்டு நிலையினை தெரிவிக்கின்றன. இந்த மதிப்பீட்டை இலகுவாக முதலீட்டாளர்களும், ஏனையவர்களும் விளங்கிக்கொள்ளக் கூடியவகையில், இந்த குறியீட்டை பயன்படுத்துகிறார்கள்.

இவ்வாறு நாடுகளையும், நிறுவனங்களையும் அதன் கடன்தன்மைக்கு ஏற்ப மதிப்பீடு செய்து தரப்படுத்துகின்ற இந்த மூன்று வகை நிறுவனங்களில் விட்ச் (Fitch) நிறுவனமானது இலங்கையின் கடன்தரப்படுத்தல் நிலையில் மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. இதன் பிரகாரம், கடந்த 2016ல் இந்த நிறுவனம் இலங்கையின் கடன்தரப்படுத்தலை B+ என்கிற நிலையிலிருந்து BB- என்கிற நிலைக்கு தரமிறக்கியிருந்தது. பின்பு, மீண்டும் இவ்வாண்டு மாசி மாதமளவில் B+ என்கிற ஸ்திரத்தன்மை வாய்ந்த நிலைக்கு தரமுயர்த்துவதாக அறிவித்திருந்தது. அத்துடன், கடந்த காலத்தில் எதற்காக இலங்கையின் கடன்தரப்படுத்தலானது குறைக்கபட்டது என்பதற்கான காரணத்தையும் வெளியிட்டிருக்கிறது.

தரமிறக்கப்பட காரணங்கள் என்ன?

மீள்நிதியளித்தல் அபாயம்

விட்ச் நிறுவனத்தின் கணிப்பின் பிரகாரம், கடந்த வருடத்தில் இலங்கை பெற்றுக்கொண்ட கடன்களை மீளவும் செலுத்தக்கூடிய தன்மையினை கொண்டிருக்கவில்லை என்பதுடன், பெற்றுக்கொண்ட கடனை தீர்த்துக்கொள்ள புதிய கடன்களை பெறும் செயல்முறையே இடம்பெறுவதாக மதிப்பிட்டிருந்தது. இதற்கு, தீர்வாக இலங்கையானது சர்வதேச நாணய நிதியம் மற்றும் அதற்கு ஒப்பான நிதியங்களின் உதவியுடன் இந்த நிலையை சீர்படுத்த முடியும் எனவும் அந்த நிறுவனம் ஆலோசனைகளை வழங்கியிருந்தது.

எனினும், 2016ன் பிற்பகுதியிலும், தற்போதும் இலங்கையானது சர்வதேச நாணய நிதியம் உட்பட ஏனையவர்கள் துணையுடன் கடன்களை மீளச்செலுத்தும் பொறிமுறையை உருவாக்கி உள்ளதால், இலங்கை மீளவும் இவ்வாண்டில் கடன்தரத்தில் தரமுயர்த்தப்பட்டுள்ளது.

குறிப்பிடத்தக்களவான கடன்முறிகளின் முதிர்வுகாலம் நெருங்கியமை

கடன்முறியானது இரண்டு பகுதிகளைக் கொண்டதாக அமைந்துள்ளது. அவை கடன் முதல் மற்றும் வட்டி என்பன ஆகும். இலங்கை அரசானது கடன்முறிகள் மூலமாக நிதியை சேகரித்துக்கொள்ளும்போது அதற்கான வட்டியினை வருடாந்த அடிப்படையில் வழங்குவதாகவும், கடன் முதலை முதிர்வு திகதியில் வழங்குவதாகவுமே இந்த கடன்முறிகள் வடிவமைக்கபட்டதாக இருக்கும்.

விட்ச் நிறுவனத்தின் கணிப்பின் பிரகாரம், கடந்த வருடத்தில் இலங்கை பெற்றுக்கொண்ட கடன்களை மீளவும் செலுத்தக்கூடிய தன்மையினை கொண்டிருக்கவில்லை என்பதுடன், பெற்றுக்கொண்ட கடனை தீர்த்துக்கொள்ள புதிய கடன்களை பெறும் செயல்முறையே இடம்பெறுவதாக மதிப்பிட்டிருந்தது. (gmanews.tv)

அவ்வாறே. 2016ம் ஆண்டளவில் இலங்கையானது சுமார் நான்கு பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான கடன்முறிகளை மீளச்செலுத்தவேண்டிய நிலையில் இருந்தது. இதன்போது, இலங்கையின் கையிருப்பிலும், வெளிநாட்டு ஒதுக்கமாக சுமார் 6.3 பில்லியன் அமெரிக்க டொலர்களே கைவசம் காணப்பட்டது. எனவே, இந்த கடன்களை மீள செலுத்துவதன் மூலமாக, இலங்கை அரசானது மேலதிக வெளிநாட்டு ஒதுக்கங்கள் இல்லாத அபாயநிலையை எதிர்கொள்ள வேண்டியதாக இருந்திருக்கும். காரணம், நாளாந்த செயல்பாடுகளை அல்லது மிக குறுகியகால செயல்பாடுகளை கொண்டு நடாத்த மீதியாகவுள்ள வெளிநாட்டு ஒதுக்கமானது போதுமானதாகவில்லை என்ற காரணங்களை அடிப்படையாகக் கொண்டு விட்ச் நிறுவனமானது இலங்கையின் கடன்தரப்படுத்தலை குறைப்பதற்கான முடிவை எடுத்திருந்தது. இதன்போது, குறித்த நிறுவனம் எதிர்கால முதலீட்டாளர்களின் நலனையும் கருத்தில்கொண்டே குறித்த முடிவை எடுத்திருந்ததாக குறிப்பிட்டிருந்தது.

பலவீனமான பொது நிதிவளங்கள்

மிக நீண்டகலாமாக இலங்கையின் கடன்தன்மையை பாதிப்புக்குள்ளாக்கும் ஒரு விடயமாக இந்த பொது நிதிவளங்களின் வினைத்திறனின்மை சுட்டிக்காட்டப்படுகிறது. அதாவது, அரச வளங்களைக்கொண்டு போதிய அல்லது ஆகக்குறைந்த தேவையான வருமானத்தை கூட திரட்டிக்கொள்ள முடியாதநிலையை இது சுட்டிக்காட்டுகிறது. இதுவும், இலங்கையின் கடன்சுமையை அதிகரிக்கும் ஒரு காரணியாக அமைந்துள்ளது.

வெளிநாட்டு ஒதுக்கங்களில் ஏற்படும் குறைவு

மேலே குறிப்பிட்டதுபோல, இலங்கை அரசானது தொடர்ச்சியாக கடன்களை மீளச்செலுத்தவென தனது ஒதுக்கங்களை பயன்படுத்திக் கொள்வதனால், ஒதுக்கங்களில் குறைவுநிலை ஏற்படும். எனவே, இது ஒட்டுமொத்த செயல்பாடுகளையும் நேரடியாகவோ, எதிர்மறையாகவோ பாதிப்படையச் செய்யக்கூடும். இதன் காரணமாக, ஏற்படக்கூடிய எதிர்கால தாக்கங்களை கருத்தில் கொண்டு கடன்தரப்படுத்தல் நிறுவனம் இந்த தரக்குறைப்பை செய்ய எத்தனித்திருந்தது. ஆனாலும், தற்போதைய நிலையில் பல்வேறு நிதியங்களின் துணையுடன், குறுகியகால சமநிலையை இலங்கை பேணுவதன் விளைவாக, மீளவும் இலங்கையின் கடன்தரப்படுத்தலானது தரமுயர்த்தப்பட்டிருக்கிறது.

நாணய மாற்று விகிதத்தில் தொடர்ச்சியாக ஏற்பட்ட வீழ்ச்சி

இலங்கையின் கடன்தொகை அதிகரித்து செல்வதில் நாணய பெறுமதியில் தொடர்ச்சியாக ஏற்படும் வீழ்ச்சியும் ஒரு காரணமென விட்ச் நிறுவனம் கூறுகிறது. தொடர்ச்சியாக, இலங்கை ரூபாவின் பெறுமதி அமெரிக்க டொலருக்கு எதிராக குறைவடையும்போது மீளச்செலுத்தவேண்டிய கடனின் அளவும் தானாக அதிகரித்துச் செல்லும். இது மேலும், இலங்கையின் கடன்சுமையை அதிகரித்து கடன்தரப்படுத்தலை பாதிக்க செய்யும் என இந்நிறுவனம் குறிப்பிடுகிறது.

இது எவ்வாறு சாமனியர்களை பாதிக்கும் ?

இலங்கையில் வாழும் சாமானிய மனிதனாக மேலே குறிப்பிட்ட விடயங்களை பார்க்கும்போது, இவை எதுவுமே எம்மை பாதிக்காதோ? என்கிற எண்ணப்பாடோ அல்லது இலங்கை அரசே இவற்றை எல்லாம் சமாளித்துக்கொள்ளும் என்கிற எண்ணப்பாடோ உருவாகியிருக்கக்கூடும். ஆனால், எம்மை அறியாதவகையில், இந்த கடன்தரப்படுத்தலில் ஏற்படுகின்ற வீழ்ச்சியானது ஒவ்வொரு சாமானிய இலங்கையரையும் பாதிக்கவே செய்யும்.

கடன்விகிதங்கள் அதிகரிக்கும்போது, கொள்வனவு செலவீனங்கள் அதிகரிக்கும். இது சாமானிய மக்களின் கொள்வனவில் தாக்கத்தை செலுத்தும். அதாவது, அரசின் ஒரு பகுதியாக பொதுமக்கள் அரசசுமையினை வாழ்க்கை செலவீன அதிகரிப்பு என்கிற பெயரில் ஏற்கவேண்டியதாக இருக்கும். (newzealandnz.co.nz)

இலங்கையின் கடன்தரப்படுத்தலில் தரக்குறைப்பு நிகழும்போது, இலங்கை மீதான முதலீட்டாளர்களின் நம்பிக்கையீனமானது அதிகரிக்கவே செய்கிறது. இதனால், இலங்கையின் எதிர்காலம் கேள்விக்குரியதாக மாற அதிக சாத்தியபாடுகள் ஏற்படுகிறன. எனவே, கொள்கை வகுப்பாளர்கள் மீளவும் இலங்கையின் கடன்தரப்படுத்தலை தரமுயர்த்தி ஏற்படக்கூடிய விளைவுகளை குறைக்க முயற்சிப்பார்கள். இதனால், அதற்கான கொள்கைகளை நடைமுறைப்படுத்தவேண்டிய தேவைப்பாடும், அந்நிய செலாவணி ஒதுக்கத்தை சமநிலையில் பேணவேண்டிய தேவைப்பாடும் ஏற்படும். இதன் ஒரு பகுதியாக, கொள்கைவகுப்பாளர்கள் கடன் விகிதங்களை அதிகரிக்கவே செய்வார்கள்.

கடன்விகிதங்கள் அதிகரிக்கும்போது, கொள்வனவு செலவீனங்கள் அதிகரிக்கும். இது சாமானிய மக்களின் கொள்வனவில் தாக்கத்தை செலுத்தும். அதாவது, அரசின் ஒரு பகுதியாக பொதுமக்கள் அரசசுமையினை வாழ்க்கை செலவீன அதிகரிப்பு என்கிற பெயரில் ஏற்கவேண்டியதாக இருக்கும்.  அண்மையகாலங்களில், நிதிநிறுவனங்கள் வழங்குகின்ற கடன் வட்டிவிகிதங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை உற்றுநோக்கின், இதற்கான காரணத்தை இலகுவாக புரிந்துகொள்ளலாம். இது, இந்த கடன்தரப்படுத்தலில் ஏற்படுகின்ற மாற்றம் தொடர்பிலான சிறு உதாரணம் மட்டுமே. இவ்வாறு, மறைமுகமாக பல்வேறு தாக்கங்கள் ஒவ்வரு சாமானிய இலங்கையரையும் வாழ்க்கை செலவீன அதிகரிப்பு என்கிற போர்வையில் பாதிப்படையவே செய்யும்.

எனவே, இலங்கையின் கடன்தரப்படுத்தலும், அதன் குறியீடுகளும் என்னவாக இருந்தால் என்ன? என்கிற அலட்சியத்தை விடுத்து, அது தொடர்பில் அறிந்துகொள்வது எதிர்கால இலங்கையின் எம் எதிர்காலம் எப்படி அமையப்போகிறது என்பதனை அறிந்துகொள்வதாக அமையும்.

Related Articles