Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

பூட்டப்பட்ட கதவுகளுக்குப் பின்னே : இலங்கையில் வீட்டு வன்முறைகளும் தீர்வும்

“குடும்பச் சண்டைகள் சாதம் சமைக்கும் வரையே” என்னும் சிங்களப் பழமொழி, பாதிப்பற்ற சிறு சிறு பிணக்குகளுடன்கூடிய இலங்கைக் குடும்பங்களின் மகிழ்ச்சிகரமான வாழ்க்கை முறையைப் படம்பிடித்துக் காட்டுகிறது. சிறியளவிலான சச்சரவுகள் இருந்தபோதும் பெரும்பாலும் சுமுகமான உறவுநிலைகளைக் கொண்ட குடும்பங்கள் இலங்கைத் திருநாட்டின் பிரதிநிதித்துவங்களாகக் கொள்ளப்படுகிறது. இருப்பினும் இச்சுமுகமான குடும்பச் சூழல்கள் யதார்த்தத்தத்திற்கு சற்று தூரமாகவே உள்ளன.

சமூகத்தினுள்ளே இருந்துகொண்டு அச்சமூகத்தையே அச்சுறுத்தும் ஆணாதிக்கச் செயற்பாடுகளை எழில்மிகு இவ்விலங்கைத்தீவில் எதிர்பார்ப்பது கடினம். ஆம் உலகின் முதல் பெண் பிரதமராக சிறிமாவோ பண்டாரநாயக்க அம்மையாரைத் தெரிவுசெய்த நாட்டில் ஆணாதிக்கத்தை எப்படி எதிர்பார்க்க முடியும்? சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை பெண் சனாதிபதியாக ஏற்றுக்கொண்ட நாட்டில் பெண்களுக்கெதிரான வன்முறையை எப்படி  எதிர்பார்க்க முடியும்? ஆசியாவின் முதல் பெண் ஆட்சியாளரான அனுலாதேவியை உருவாக்கிய தேசம் பெண்களுக்கெதிரான வன்முறையில் சிக்கித்தவிப்பதை யாரால் ஏற்றுக்கொள்ள இயலும்? இவர்களோடு பண்டைய இலங்கையை ஆட்சிசெய்த ஏனைய பெண் ஆட்சியாளர்களான லீலாவதி, சிவாலி மற்றும் கல்யாணவதியையும் மறந்துவிட முடியாது.

உலகின் முதலாவது பெண் பிரதமராக திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்கவை தெரிவுசெய்ததன் மூலம் உலக அரங்கில் இலங்கை தனது பெயரை பெருமையடையச் செய்தது. இப்படியான ஒரு நாட்டிலேயே பெண்களுக்கெதிரான வன்முறைகளும் குறிப்பிடத்தக்க அளவு மேலோங்கி நிற்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. படம் - thefamouspeople.com

உலகின் முதலாவது பெண் பிரதமராக திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்கவை தெரிவுசெய்ததன் மூலம் உலக அரங்கில் இலங்கை தனது பெயரை பெருமையடையச் செய்தது. இப்படியான ஒரு நாட்டிலேயே பெண்களுக்கெதிரான வன்முறைகளும் குறிப்பிடத்தக்க அளவு மேலோங்கி நிற்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. படம் – thefamouspeople.com

இப்பெண் ஆட்சியாளர் பட்டியல் இலங்கையை ஓர் சமவுரிமையையும் சமத்துவத்தையும் நிலைநாட்டும் நாடாக படம்பிடித்துக் காட்டவல்லது. இருப்பினும் இவ்வெளிப்படையான தோற்றத்தை அகற்றி நிதர்சனத்தை நோக்குவோமாயின் தங்களது நம்பிக்கைக்குரியவர்களாகக் கருதப்படும் ஆண்வர்க்கத்தினராலேயே வன்முறைக்குள்ளாக்கப்படும் பெண்கள் இந்நாட்டில் இருப்பதை எம்மால் இனங்காண இயலும். இவ்வாறான பெண்கள் பாரியளவில் வீட்டு வன்முறைகளை எதிர்நோக்கியவண்ணமுள்ளனர்.

எமது அண்டைய நாடுகளான இந்தியா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளில் அற்ப காரணங்களுக்காக தங்களது ஆண் உறவினர்களால் சாதாரணமாகக் கொல்லப்படும் பெண்களின் நிலையோடு ஒப்பிடுகையில் எமது நாட்டில் நடப்பதாகக் கொள்ளப்படும் வன்முறைகள் ஒப்பீட்டளவில் சிறியவையே. இருப்பினும் இங்கு நடைபெறும் வன்முறைகளைச் சிறிதாக எண்ணிப் புறந்தள்ளிவிட முடியாது. பெண்களுக்கெதிரான வன்முறைகள் அளவில் பெரிதாக இருந்தாலும் சிறிதாக இருந்தாலும் அவை தடுக்கப்படவேண்டியவையே.

வீட்டு வன்முறைகள் என்றால் என்ன?

அதிகாரம் மற்றும் கட்டுப்பாட்டைப் பிரயோகிக்கும் பொருட்டு ஒருவர்மீது மற்றொருவர் மேற்கொள்ளும் துஷ்பிரயோகம் மற்றும் அச்சுறுத்தல் நடவடிக்கைகளை வீட்டு வன்முறைகள் எனலாம்.

பெற்றோர், பிள்ளைகள், ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள், வாழ்க்கைத் துணைகள், தாத்தா, பாட்டிமார், மாமாக்கள், மாமிக்கள், திருமணத்தின் மூலமான உறவினர்கள் அல்லது ஒருவருக்குகொருவர் குடும்பரீதியிலான உறவுகளைச் சேர்ந்த தனிப்பட்டவர்கள் ஆகியோருக்கு இடையில் இடம்பெறுகின்ற வன்முறையை வீட்டு வன்முறை உள்ளடக்கி நிற்கின்றது. வீட்டு வன்முறையை இழைப்பவர்களாக பெண்களும் விளங்கும் அதேவேளை, மிகவும் பெரும்பான்மையான வீட்டு வன்முறைகளைப் புரிபவர்கள் ஆண்கள் என்பதுடன், பெண்களையும், பெண்பிள்ளைகளையும் நோக்கி அவர்கள் மூர்க்கத்தனமாகச் செயற்படுகின்றார்கள் என ஆராய்ச்சிகள் தெளிவாகப் படம்போட்டுக் காட்டுகின்றன.

எங்களது சமூகத்தில் ஒரு ஆண் தனது மனைவியை அடிப்பதென்பது நாங்கள் சாதாரணமாகப் புறக்கணித்துச்செல்லும் விடயமாகவே உள்ளது. “அவன் ஆண், அவனது மனைவியை அடிக்கும் உரிமை அவனுக்குள்ளது” அல்லது “அது அவர்களது குடும்பப் பிரச்சினை, அது எங்களுக்குத் தேவையில்லாத விடயம்” என்ற வாசகங்களையே இன்று அதிகம் கேட்கக்கூடியதாய் உள்ளது. “தற்காலத்தில் வீட்டு வன்முறைகள் சாதாரணமான ஒரு விடயமாகவும் தேவையான ஒன்றாகவுமே பலரால் கருதப்படுகிறது. இதில் வருந்தத்தக்க விடயம் என்னவெனில், வீட்டு வன்முறைகளால் பாதிப்பிற்குள்ளாகும் பெண்களே இதனை சாதாரணமான ஒரு விடையமாகக் கருதுகின்றனர்.”  என்று வீட்டு வன்முறைகளின் கலாச்சார அணுகுமுறை பற்றிக்கூறுகையில், Women in Need Sri Lanka வின் நிர்வாக இயக்குனர் திருமதி.சாவித்திரி விஜேசேகர தெரிவித்தார்.

‘கெதர கினி எலியட தான்ன எபா’ அதாவது வீட்டிலுள்ள பிரச்சனைகளை வெளியுலகத்திற்குத் தெரியப்படுத்துதல் கூடாத ஒன்று என்று காலாகாலமாக எமது சமுதாயத்தில் வேரூன்றியிருக்கிறது. இதன்காரணமாகவே வன்முறைக்குள்ளாகும் அனேகமான பெண்கள் தங்களது பிரச்சனைகளை வெளியிடாது மீண்டும் மீண்டும் வன்முறைகளை எதிர்கொண்டவண்ணமுள்ளனர். படம் - thehuffingtonpost.com

‘கெதர கினி எலியட தான்ன எபா’ அதாவது வீட்டிலுள்ள பிரச்சனைகளை வெளியுலகத்திற்குத் தெரியப்படுத்துதல் கூடாத ஒன்று என்று காலாகாலமாக எமது சமுதாயத்தில் வேரூன்றியிருக்கிறது. இதன்காரணமாகவே வன்முறைக்குள்ளாகும் அனேகமான பெண்கள் தங்களது பிரச்சனைகளை வெளியிடாது மீண்டும் மீண்டும் வன்முறைகளை எதிர்கொண்டவண்ணமுள்ளனர். படம் – thehuffingtonpost.com

வன்முறைக்குள்ளாகும் ஒவ்வொரு பெண்ணும் அதனை அவர்களது தலைவிதியாகவே கருதுகின்றனர். அவ்வன்முறைக்குத் தங்களைத் தகுதியானவர்களாகவே அவர்கள் கொள்கின்றனர். தங்களது கணவன்மார் செய்யும் இவ்வாறான உரிமைமீறல்களை மூடிமறைக்கின்றனர். இவ்வன்முறைகள் மேலும் மேலும் தொடர்ந்துசெல்லும் நிலைகளிலும் பெண்கள் அதனை ஒரு வன்முறையாகக் கருதுவதில்லை. பல ஆண்டுகள் இவ்வாறான வன்முறைகளையும் அடக்குமுறைகளையும் அனுபவித்ததன் விளைவாகவே ஒரு சில பெண்கள் தங்கள் கஷ்டங்களை வாழ்வின் ஏதோவொரு கட்டத்தில் வெளிப்படுத்த முனைகின்றனர்.

சாதாரணமாக எமது சமூகத்தில் கணவன் மனைவியைத் தாக்குதல் அல்லது அடித்தல் என்பது ஒரு முறைகேடாகவோ, செய்யத்தகாத செயலாகவோ கருதப்படுவதில்லை. மாறாக இவ்வாறான வன்முறைகள் அன்றாடம் எம்கண்முன்னே நடந்தேறும்போதும் அதை நாம் பொருட்படுத்துவதுகூட இல்லை. ஆணாகப் பிறந்தவன் பெண்ணை அடிமைப்படுத்தும் தகுதியைப் பெற்றவன் என்றும் அவனது மனைவியை அவன் எவ்வாறு வேண்டுமானாலும் கையாளமுடியும் என்றும் எம்மிடையே ஓர் அபிப்பிராயம் வேரூன்றியிருக்கிறது.

தங்கள் கணவனை விட்டுப்பிரிந்து  வீட்டுவன்முறைக்கெதிராக நீதியை நாடும் பெண்களைக்கூட எமது சமுதாயம் அவமானச் சின்னங்களாகவே கருதுகின்றது. பாதிக்கப்பட்ட பெண்களின் குடும்பங்கள்கூட அவர்களுக்கான உரிமையைப் பெற்றுக்கொடுக்க முடியாத நிலைக்கு சமூகம்சார்ந்த வெட்க உணர்வு அவர்களுக்குத் தடையாக உள்ளது. சுயமாக செயற்படுதல் மற்றும் உரிமைக்காகக் குரல் கொடுத்தல் போன்றவை பெண்கள் செய்யத்தகாத காரியங்களாகவே கருதப்படுகிறன. விவாகரத்தான மற்றும் ஒற்றைத் தாய்மாரையும்கூட இச்சமூகம் வேறுகண்கொண்டு பார்ப்பதும் நாமறிந்ததே. கணவன் எத்துணை கொடுமை செய்பவனாக இருந்தாலும், பெண் எந்தளவு கஷ்டமான சூழ்நிலையில் வாழ்ந்தாலும் குடும்பத்தைக் கட்டுக்கோப்புக்குள் வைத்திருப்பது அவளது தலையாய கடமையாகவே கருதப்படுகிறது.

இவையே ஆண் பெண் இடையில் எமது கலாச்சாரம் விதைத்திருக்கின்ற மாற்ற முடியாத சித்தாந்தங்கள். பெண்களுக்கெதிரான வன்முறைபற்றிய உண்மையான புள்ளிவிபரங்கள் இன்னும் சர்ச்சைக்குரியதாகவே உள்ளது இருப்பினும் திருமதி.சாவித்திரி விஜேசேகர கூறுகையில் இலங்கையில் சுமார் 6௦% சதவீதம் பெண்கள் இவ்வாறான வீட்டு வன்முறைகளுக்கு உள்ளாகின்றனர். ஐந்து பெண்களில் மூவர் வன்முறைக்குள்ளாகும் இந்நிலையைத் தடுப்பதற்கு நாட்டின் பொறுப்புள தலைவர்களின் தீவிர நடவடிக்கை இன்றியமையாததாக உள்ளது. இருந்தும், எந்தவிதமான ஆக்கபூர்வமான தீர்வும் இதுவரை எட்டப்படாமலே இருக்கின்றது. அரசியல்வாதிகளும் சட்டமியற்றுபவர்களும் இப்பிரச்சினைக்கான தெளிவான ஒரு தீர்வைப் பெறமுடியாதவர்களாகவே உள்ளனர். சில பிரச்சினைகள் மற்றும் சம்பவங்கள் காலத்துக்குக்காலம் மக்களிடையே மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியபோதும், அவை நாளடைவில் மறந்துவிடப்ப்படும் துர்ப்பாக்கியநிலையே எஞ்சி நிற்கின்றது.

வீட்டு வன்முறையைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் என்ன?

2005 ஆம் ஆண்டுவரையான காலப்பகுதியில் வீட்டு வன்முறைகளைப் புரியும் ஆண்களுக்கெதிராக எந்தவிதமான சட்ட விதிமுறைகளும் நடைமுறையில் இருக்கவில்லை. வீட்டு வன்முறைகள் பெரும்பாலும் வீட்டினுள்ளேயே இருக்கவேண்டிய “குடும்ப விடயம்” என்றே கருதப்பட்டது. “கெதர கினி எலியட தான்ன எபா” எனும் சிங்களப் பழமொழிக்கமைய, வீட்டினுள் உள்ள நெருப்பை வெளியில் விடலாகாது என்று பொருள்படுத்திவைக்கப்பட்டுள்ளது. காவல் நிலையங்களில் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான முறையீட்டுப்பகுதிகள் இருந்தும், மிகவும் அரிதாகவே அவை பயன்பாட்டிலுள்ளன. பெண்களை அடித்தல் மற்றும் காயப்படுத்தல் போன்றவை அங்கு பொருட்படுத்தப்படுவது அரிது. மேலும் உளரீதியான துஷ்பிரயோகங்கள் என்னும் பதம் கேட்டறிந்திராத ஓர் விடயமாகவே உள்ளது.

பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் வன்முறைக்கெதிரான போராட்டத்தில் ஈடுபடும் பெண்கள். பாலியல் வன்முறைகள் தொடர்பான முறைப்பாடுகள் முகக் குறைந்தளவிலேயே மேற்கொள்ளப்படும் அதேவேளை அவ்வாறான முறைப்பாடுகள் மூலம் குற்றவாளிகள் தண்டிக்கப்படும் வீதம் மிக அரிதாகவே உள்ளது. படம் - Reuters/Landove/Dinuka Liyanawatte

பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் வன்முறைக்கெதிரான போராட்டத்தில் ஈடுபடும் பெண்கள். பாலியல் வன்முறைகள் தொடர்பான முறைப்பாடுகள் முகக் குறைந்தளவிலேயே மேற்கொள்ளப்படும் அதேவேளை அவ்வாறான முறைப்பாடுகள் மூலம் குற்றவாளிகள் தண்டிக்கப்படும் வீதம் மிக அரிதாகவே உள்ளது. படம் – Reuters/Landove/Dinuka Liyanawatte

இவ்வாறிருக்க இரண்டாயிரத்தைந்தாமாண்டு மகளிர் உரிமைகளுக்கான இயக்கம் இது தொடர்பான ஒரு பெரும் மைல்கல்லை எட்டியது எனலாம். மகளிர் உரிமைக்காக குரல்கொடுத்த சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் போன்றவற்றின் இடைவிடாத பின்னூட்டல்களின் விளைவாக வீட்டு வன்முறைத் தடுப்புச் சட்டம் Prevention of Domestic Violence Act (PDVA) அமுலுக்கு வந்தது. இச்சட்டமானது வன்முறைக்குள்ளானவருக்கு பாதுகாப்பு வழங்கும் நோக்கில் வன்முறையை மேற்க்கொண்டவருக்கு எதிராக இடைக்கால பாதுகாப்பு உத்தரவை வலியுறுத்துவதாக உள்ளது. மேலும் உளவியல்ரீதியான துஷ்பிரயோகங்களையும் இச்சட்டம் வன்முறையாகவே  கருத்தில்கொள்கிறது. கணவன் மனைவியை அடித்துத் தாக்குவதையே இதுவரை பொருட்படுத்தாத ஓர் சமுதாயத்தில் இவ்வாறான ஓர் சட்டம் அமுலுக்கு வந்தது ஒரு மாபெரும் வெற்றியாகவே கொள்ளவேண்டும்.

இருப்பினும் இச்சட்டம் மற்றும் இதன் செயற்பாடுகள் போன்றவை நடைமுறையில் ஏமாற்றத்தையே ஏற்படுத்துகின்றது.

கலாச்சார ரீதியான சித்தாந்தங்கள் மற்றும் நம்பிக்கைகள் போன்றவை வேரூன்றிப்போன எமது சமுதாயத்தில் இவ்வாறான சட்டங்களால் பெரிதளவிலான எந்தவொரு மாற்றத்தையும் ஏற்படுத்தமுடியவில்லை என்பது கவலைக்கிடமான ஒரு நிலையாகும். பத்து வருடங்கள் பழைமைவாய்ந்த இச்சட்டம் தனது இயலாமையையே மீண்டும் மீண்டும்  நிரூபித்தவண்ணம் உள்ளது.

வீட்டு வன்முறைக்குள்ளாகும் பல பெண்கள் சமூகத்தை எதிர்கொள்ளத் தயங்கியே வன்முறைக்கெதிராக தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்த முடியாதுள்ளனர். படம் - 123rf.com

வீட்டு வன்முறைக்குள்ளாகும் பல பெண்கள் சமூகத்தை எதிர்கொள்ளத் தயங்கியே வன்முறைக்கெதிராக தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்த முடியாதுள்ளனர். படம் – 123rf.com

கல்வியியலாலர்களின் கருத்தின்படி இச்சட்டத்தின் முக்கிய குறைபாடாக ஆண் பெண் சமத்துவம் கருதப்படுகிறது. சமவுரிமைக்காக இன்னும் பெண்கள் போராடிவரும் நிலையில் இவ்வாறானதொரு சமவுரிமைச் சட்டம் என்பது புதுமையானதொன்றாகவே உள்ளது. சற்று ஆழமாக சிந்திப்போமாயின் அதிகாரிகளும் நிறுவனங்களுமே பெண்களின் கோரிக்கைகளைத் துச்சமாக மதித்து எடைபோடும் ஆணாதிக்க சமூகமொன்றில் சமவுரிமைச்சட்டமென்பது பயனற்ற மற்றும் பகுத்தறிவற்ற வாதமாகவே கொள்ளப்படவேண்டும். ஆய்வுகளினடிப்படையில் ஒரு சதவீதம் பெண்களே வீட்டு வன்முறைத் தடுப்புச்சட்டத்தின்கீழ் சட்ட நடவடிக்கைகளைப் பெற்றுக்கொள்கின்றனர்.

குற்றவியல் நடைமுறைச் சட்டம் வன்முறையை ஒரு குற்றச்செயலாக பார்த்தபோதும், வீட்டு வன்முறைச் சட்டம் வன்முறையை மேற்கொண்டவரை குற்றவாளியாகப் பார்ப்பதில்லை. மாறாக வன்முறைக்குள்ளானவருக்கு பாதுகாப்பு வழங்கமட்டுமே முன்வருகின்றமை இச்சட்டத்தின் மற்றுமொரு குறைபாடாகும். குற்றவாளிக்கு எந்தவித தண்டனையும் வழங்கப்படாதமையோடு பாதிக்கப்பட்டவருக்கான பாதுகாப்பு மீறப்படும் பட்சத்தில் ஒரு வருட சிறைத் தண்டனை அல்லது ஒரு சிறு தொகை அபராதம் என்பன வழங்கப்படுகின்றன. இப்பாதுகாப்பு ஆணைகூட ஒருவருடகாலத்திற்கே செல்லுபடியாகும் நிலை இச்சட்டத்தின் இன்னுமொரு குறைபாடாகும்.

இச்சட்டத்தின்மூலம் ஆக்கபூர்வமான மாற்றம் ஒன்று ஏற்படவேண்டுமெனில் வீட்டு வன்முறை தொடர்பான மூடநம்பிக்கைகளும் தப்பபிப்பிராயங்களும் களையப்படல் வேண்டும்.

வீட்டு வன்முறை தொடர்பான  மூடக்கொள்கைகளை உடைத்தல்

#1 வீட்டு வன்முறைகள் உடல் சார்ந்தவையே

வன்முறைகள் எனப்படுபவை உடல்ரீதியான தாக்குதல்கள் மட்டுமே என்கின்ற தப்பபிப்பிராயம் எம்மவர்கள் மத்தியில் உள்ளது. உண்மையில் உளரீதியான துஷ்பிரயோகங்களும் ஒரு பெண்ணுக்கு மனோரீதியாக கொடுக்கப்படும் அழுத்தங்கள், கேலிப்பேச்சுக்கள் போன்றவையும் வன்முறையிலே அடங்கும். துரதிஷ்டவசமாக உடல்ரீதியான துஷ்பிரயோகங்கள் ஏற்படுத்தும் அதேயளவு வலியையும் வேதனையையும் ஏன், அதனைவிட அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய  மனோரீதியான வன்முறைகளை சட்டமியற்றும் அதிகாரமுள்ளவகளே புறக்கணிக்கின்றனர்.

வீட்டு வன்முறைகள் பொருளாதார ரீதியானதாக அல்லது பாலியல் ரீதியானதாக இருக்கலாம். வீட்டு வன்முறைகள் தடுப்புச் சட்டத்தின் மற்றுமொரு குறைபாடு திருமணத்தின் பின்னான பாலியல் வன்முறைகளை வீட்டு வன்முறைகளாக கொண்டிராமையாகும். ஆணென்பவன் பெண்ணை எந்தநேரத்திலும் அவனது விருப்பத்தின்பேரில் கட்டாயப்படுத்தி உடலுறவை ஏற்படுத்திக்கொள்ளும் உரிமையுடையவன் என்ற கொள்கையின் பிரதிபலிப்பாகவே இதனை காண முடியும்.  CARE International இனால் நடாத்தப்பட்ட கருத்துக்கணிப்பின்படி 67% சதவீதமான பெண்களும் 58% சதவீதமான  ஆண்களும் உடலுறவை பெண்கள் புறக்கணிக்க முடியாதனவே கருத்துத் தெரிவிக்கின்றனர்.

#2 வீட்டு வன்முறைகள் குறைந்தளவு வருமானம் மற்றும் படிப்பறிவற்ற குடும்பங்களிலேயே இடம்பெறுகிறது

படித்த சமூக அந்தஸ்தில் உயர்வான குடும்பங்களோடு ஒப்பிடுகையில் குறைந்தளவு வருமானம் மற்றும் படிப்பறிவற்ற குடும்பங்களிலேயே அதிகளவான வீட்டு வன்முறைகள் இடம்பெறுவதாக தோன்றியபோதும் வீட்டு வன்முறையானது இனங்கள், கல்வி நிலைகள், பொருளாதார வகுப்புகள் மற்றும் சமூக நிலைப்பாடுகள் போன்றவற்றுக்கு அப்பாற்பட்டதாகவே உள்ளது.

கிராமப்புறத்தில் உடைந்த குடிசைக்குள் இடம்பெறுகின்ற அதேவிதமான வீட்டு வன்முறைகளே கொழும்பு 7 இலுள்ள மாளிகை வீடுகளிலும் நடைபெறுகிறது.

#3 போதைப்பொருள் பாவனையே வீட்டு வன்முறைக்கான அடிப்படைக் காரணம்

போதைப்பொருட்பாவனையே வீட்டு வன்முறை போன்ற செயல்களுக்குக் காரணம் எனும் எண்ணம் இருப்பினும் அதுவே வீட்டு வன்முறைக்கான அடிப்படைக் காரணம் எனக்கொள்ள இயலாது. வீட்டுவன்முறைகளைப் புரிவதற்கான ஓர் சாக்குப்போக்காகவே இது என்றும் இருந்துவந்துள்ளது, மட்டுமல்லாது தாம் மேற்கொள்கின்ற வன்முறை மற்றும் அதன் தன்மைபற்றி வன்முறை மேட்கொல்பவர்கள் நன்கு அறிந்தவர்களாகவே உள்ளனர்.

#4 வன்முறைக்கெதிராக தங்களின் எதிர்ப்பை பெண்கள் வெளிப்படுத்தினால் அல்லது வன்முறையை விட்டு வெளியேறினால் வன்முறையைத் தவிர்க்க இயலும்

மேலும் பெண்கள் தங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் கருதியே வீட்டுவன்முறைகளைச் சகித்து வாழ்கின்றனர். படம் - Wikipedia.org

மேலும் பெண்கள் தங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் கருதியே வீட்டுவன்முறைகளைச் சகித்து வாழ்கின்றனர். படம் – Wikipedia.org

வன்முறையை எதிர்த்துப் போராடுதல் அல்லது வீட்டை விட்டு வெளியேறல் என்பது இலங்கை போன்றொரு நாட்டில் வாழும் பெண்களுக்கு அவ்வளவு இலகுவான காரியம் அல்ல.

வீட்டை விட்டு வெளியேற நினைக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் எண்ணிலடங்காத கேள்விகளும் சவால்களும் எழுந்தவண்ணமே இருக்கும். மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்? வெளியேறிச் சென்று எங்கு வாழ்வது? யாரிடம் உதவி தேடுவது? எனது பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடுமோ? எனது குடும்பத்திற்கு நான் அவமானத்தைத் தேடிக்கொடுத்துவிடுவேனா? இப்படிப் பல கேள்விகளை எதிர்கொள்ளவேண்டிய சூழ்நிலையில் பெண்கள் உள்ளனர்.

பொருளாதாரத்திற்காக தங்கி வாழ்தல், போதியளவு மன உறுதி இல்லாமை, சுய கெளரவம், அதிகரித்த வன்முறை பற்றிய பயம், சமயம், கலாச்சாரம், பிள்ளைகள் பற்றிய கவலை, தங்குமிடம் பற்றிய பிரச்சினை இப்படிப் பல காரணங்கள் பெண்களை வன்முறைக்கெதிராகப் போராடுவதிலிருந்தும் தடுக்கிறது என்று திருமதி. விஜேசேகர மேலும் தெரிவித்தார்.

இலங்கைவாழ் பெண்கள் ஆணாதிக்கத்திற்கு துணைபோகின்றனரா?

பெண்களே  தங்களைத் தாழ்ந்தவர்களாகவும், வலிமையற்றவர்களாகவும், ஆண்களுக்கு அடிமைப்பட்டவர்களாகவும் வகுத்துக்கொண்டு வாழ்வது மிகவும் கவலைக்குரிய உண்மையாகும். திருமதி. விஜேசேகர கூறுகையில், Care International இனால் 2013 இல் நடாத்தப்பட்ட மேற்கூறிய கருத்துக்கணிப்பின் அடிப்படையில், ஆண்களை விட பெண்களே ஆணாதிக்கத்தை அதிகம் பிரச்சாரிக்கின்றனர் என்பது கசப்பான உண்மை என்கின்றார்.

26% ஆண்கள் எக்காரணத்திற்காகவும் பெண்களை அடித்தல் தவறென்று கூறிய அதேவேளை, 38% பெண்கள் ஒரு சில சந்தர்ப்பங்களில் ஆண்கள் பெண்களை அடித்தல் தவறில்லை எனவும், 59% ஆண்கள் பெண்களுக்கெதிரான வன்முறைகள் எந்தவிதத்திலும் பொறுத்துக்கொள்ள முடியாதவை என்று கூறியபொழுது, 58% பெண்கள் இதற்கெதிராக கருத்துத் தெரிவித்துள்ளனர். மேலும் 78% ஆன ஆண்களும் 87% ஆன பெண்களும் பெண்ணானவள் கணவனுக்கு அடிபணிந்தே வாழவேண்டும் என்னும் கருத்தை ஆதரித்துள்ளனர். பெண்ணானவள் தனது கணவனோடு உடலுறவை புறக்கணிக்க முடியாது என்று 58.2% ஆண்கள் தெரிவித்தவேளை 67.4% பெண்களும் அக்கருத்தை ஆதரித்துள்ளனர். குறித்த மாதிரியில் உள்ள 75% ஆன பெண்கள் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் கற்பழிப்புகளுக்கு பெண்கள் அணியும் ஆடையே காரணம் எனவும் 32% பெண்கள் கற்பழிப்புக்கான முழுக்காரணம் பெண்களின் நடத்தையே எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

மேளம், நாய், பெண் இம்மூன்றுமே அடிக்கக்கூடிய பொருட்கள் என்னும் வாய்வழிச் சொற்றொடரே இலங்கையின் ஆணாதிக்கச் சிந்தனைக்கு ஆதாரமாகக் கொள்ளப்படலாம். பெண்ணானவள் மேளத்திற்கும், நாய்க்கும் ஒப்பிடப்படும் நிலை இன்னும் இந்நாட்டில் நிலவிக்கொண்டுதான் இருக்கிறது. படம் - ips.lk

மேளம், நாய், பெண் இம்மூன்றுமே அடிக்கக்கூடிய பொருட்கள் என்னும் வாய்வழிச் சொற்றொடரே இலங்கையின் ஆணாதிக்கச் சிந்தனைக்கு ஆதாரமாகக் கொள்ளப்படலாம். பெண்ணானவள் மேளத்திற்கும், நாய்க்கும் ஒப்பிடப்படும் நிலை இன்னும் இந்நாட்டில் நிலவிக்கொண்டுதான் இருக்கிறது. படம் – ips.lk

இந்த அவலங்களுக்கு மேலதிகமாக நாட்டின் பொறுப்புள்ள பதவிகளிலிருக்கும் தலைவர்களே வீட்டு வன்முறை எனும் சமூக சீரழிவை ஏற்படுத்தக்கூடிய செயற்பாடுகளுக்கு எதிரான குரல்களைப் பகிஷ்கரிக்கின்றனர். உதாரணமாக சுலாணி கொடிக்காரவின் ICES ஆய்வின் அடிப்படையில், பெரும்பாலான பாராளுமன்ற உறுப்பினர்கள் 2005 ஆம் ஆண்டின் வீட்டு வன்முறைகள் தடுப்புச் சட்டத்தின் கட்டளைகளுக்கு எதிராக பெண்கள் அனுபவிக்கும் வன்முறைகள் மற்றும் அவர்களின் நலன்களைக் கருத்தில் கொள்ளாது கலாச்சாரம் மற்றும் மத சாஷ்ட்டாங்கங்களைக் காரணம் காட்டி ஒதுக்கீடுகளை வெளிப்படுத்திடுள்ளனர். ஹம்பாந்தோட்டையில் 2010ஆம் ஆண்டு இடம்பெற்ற மகளிர்தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்கள் பேசுகையில் “இலங்கையில் பெண்களுக்கான பல சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. உண்மையில் இவ்வாறான சட்டங்கள் சற்று தேவைக்கதிகமாகவே உள்ளனவா என்று நான் சிந்தித்ததுண்டு. மேற்கத்தேய விதிமுறைகளுடனான பல சட்டங்கள் பார்த்த மாத்திரத்தில் கவர்ச்சிகரமாகத் தோன்றலாம். இருந்தும், 2500 ஆண்டுகள் வரலாறு கொண்ட எமது கலாச்சாரத்தில் பெண்களுக்கான ஒரு உயர்ந்த இடத்தை நாம் வகுத்துள்ளோம். ஆனால் இன்று சட்ட ரீதியான அம்சங்கள் வலுப்பட்டுவரும் அதேவேளை, எமது கலாசாரப் பெறுதிகளை நாம் இழந்து வருகிறோம்.” என்று தெரிவித்தார்.

நாட்டின் ஓர் அதியுயர் தலைமையே கலாசாரம் பாரம்பரியம் என்ற பெயரில் பெண்களுக்கான உரிமையை முன்னெடுத்துச் செல்வதற்கான தடைக்கல்லாக இருப்பது நாட்டில் பெண்களின் நலச் சீர்கேட்டை இன்னுமின்னும் இழிநிலைக்கே இட்டுச் செல்லும்.

பெண்கள் உரிமைகளுக்காகச் செயற்பட்டுவரும் மகளிர் அமைப்புக்கள் பெரும்பாலும் மேற்கத்தேய கொள்கைகளைப் பரப்பி எமது சமூக கலாசார பாரம்பரியங்களைக் குலைத்து குடும்பங்களிடையே தேவையற்ற பிணக்குகளை ஏற்படுத்தும் அமைப்புக்களாகவே பெரும்பாலும் பார்க்கப்பட்டு வந்துள்ளது. இருந்தும் இந்நிலை இப்போது உள்ள காலகட்டத்தில் பெரும்பாலும் குறைந்துள்ளது என்றே கொள்ளவேண்டும்.இருந்தபோதும் வன்முறை நிரம்பிய குடும்பங்களில் உடைவு, மனக்கசப்பு, பிரிவு போன்றவை ஏற்கனவே இடம்பெற்றுக்கொண்டே இருக்கின்றது. இதற்கு பெண்கள் அமைப்பு மற்றும் சட்டதிட்டங்களே காரணம் எனக்கொள்வது முறையல்ல. பொதுவாக ஆணாதிக்கக் கொள்கைகள் மற்றும் கட்டமைப்புகள் பெற்றோரிடமிருந்து பிள்ளைகட்கு பரம்பரை பரம்பரையாக கடத்தப்பட்டுக்கொண்டே இருக்கிறது. பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்களாகும்போது அவர்களும் அதே கொள்கைகளையும் கோட்பாடுகளையுமே தங்கள் பெண்கள் மேல் திணிக்கின்றனர். மாறாக சிறுவயதிலிருந்தே ஒருவரை ஒருவர் மதிக்கின்ற, தன்னைப்போல் மற்றவர்களையும் நேசிக்கின்ற, ஆணைப்போல் பெண்ணும் மதிக்கப்படவேண்டியவள் என்கின்ற பண்பாடுகள் பிள்ளைகளிடையே வளர்க்கப்படவேண்டும். அடுத்த மனிதனை அவன் ஆணாக இருப்பினும் பெண்ணாக இருப்பினும் கண்ணியத்தோடும் மரியாதையோடும் நடத்துகின்ற உயர்வான பண்பாடுகளை எமது சந்ததியில் விதைப்பதன் மூலமே வன்முறைகளற்ற சமுதாயத்தை உருவாக்க இயலும்.

Translated by : Rakshana Sharifudeen

Related Articles