Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

தேர்தல் கிரிக்கெட்டில் வீழும் போராளி விக்கெட்டுகள்

ஆள், படை, அம்பாரி, பெரும் பணபலம் இவையெல்லாம் தான் இன்று அரசியல் செய்ய அடிப்படைத் தகுதிகளாக உருப்பெற்று நிற்கிறது. மக்கள் பிரச்னைகளுக்காக, வெகுஜென மக்களின் உணர்வுகளுக்காக போராட்டக் களத்தில் இருப்பவர்கள் காணாமல் போவது தேர்தலுக்கு தேர்தல் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. அதற்கு மிகச் சமீபத்திய உதாரணம் இரோம் ஷர்மிளா…

இந்திய தேசத்தின், வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை வாபஸ் பெற வலியுறுத்தி, 16 ஆண்டுகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டவர் தான் இரோம் ஷர்மிளா (imgix.net)

ஒரு மக்கள் பிரதிநிதியின் குரல், சம்பந்தப்பட்ட தொகுதி மக்களின் மனசாட்சியின் குரலாக ஒலிக்கப்பட வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால் இங்கே மக்கள் பிரச்னைக்காய் களமாடியவர்கள், தேர்தல் களத்துக்கு வரும் போது வைப்புத் தொகையை கூட தக்க வைத்துக்கொள்ள முடியாமல் படுதோல்வியையே பரிசாக தரும் வாக்காளர்களைப் பார்க்கையில், போராட்டக் காரர்களின் மனம் எத்தனை ரணங்களுக்குள் சிக்கியிருக்கக் கூடும்? இங்கே புரட்சி தேவை தான். அது அதிகாரக் குவியலுக்கு எதிரானதாய் மட்டுமே அல்ல. அந்த அதிகாரத்தை ஒரே இடத்தில் குவித்து வாக்குகளாய் தொடுக்கும் வாக்காளர்களுக்கு எதிராகவும் தான்.

இந்திய தேசத்தின், வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை வாபஸ் பெற வலியுறுத்தி, 16 ஆண்டுகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டவர் தான் இரோம் ஷர்மிளா, சமீபத்தில் போராட்டத்தை முடித்துக் கொண்ட இவர்,  உலகில் நீண்டகாலம் உண்ணாவிரத போராட்டம் நடத்தியவர் என்ற பெருமையை பெற்றவர். அகிம்சை போராட்டத்துக்கு காந்தியை முன்னுதாரணமாக சொல்கிறோம். கத்தியின்றி, ரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகுதே என்ற காந்தியின் அடியொற்றி, தன்னுடலை வருத்துவதையே ஆயுதமாக கொண்டு களமாடியவர் இரோம் ஷர்மிளா.

மணிப்பூரில் நடந்த வன்முறைகளுக்கும், மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் அதன் விளைவுகளுக்கும் காரணமான ஆயுதப்படை சிறப்பு அதிகாரங்கள் சட்டம் 1958யை இந்திய அரசு திரும்ப பெற வேண்டும் எனக் கோரி கடந்த 2000ஆம் ஆண்டு, நவம்பர் 2ம் தேதி உண்ணாநிலை போராட்டத்தை துவங்கினார். அப்போது அவருக்கு வயது 28 தான்.

 

மீனவ மக்களுக்காக களத்தில் நின்ற உதயகுமாருக்கு அவர்களது வாக்குகள்கூட கூட ஒருங்கிணைந்து விழவில்லை எனில் இங்கே போராட்டம் செய்பவர்களுக்கான அடையாளம் எங்கே இருக்கிறது? (muw.org)

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 9ம் தேதி அவர் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்ட போது அவருக்கு வயது 44. சாப்பிடாமல் இருந்தவரை, தற்கொலைக்கு முயன்றதாக கைது செய்து சிறையில் அடைப்பதும், வெளியே வந்து அவர் உண்ணாவிரத்தை தொடர்வதும், காவல் துறை பலவந்தமாக மூச்சுக்குழாய் வழியே உணவை செலுத்துவதும்…எத்தனை வீரியமிக்க போராட்டங்கள்? இங்கே வெகுஜன வாக்கு வங்கி கட்சிகளின் தலைவர்கள் ஒரு அறிக்கை விடுவதும், மாவட்ட தலைநகரங்களில் நூறு பேர் கூடி நின்று கோஷம் எழுப்பி, ஊடக செய்திகளில் பெயரும், படமும் வர போஸ் கொடுத்து விட்டு நகருவதைப் போல அல்ல, இரோம் ஷர்மிளாவின் போராட்டம். அதன் வலியும், வீச்சும் ஆகப் பெரியது.

தொடர்ந்து, “மக்கள் எழுச்சி மற்றும் நீதி கூட்டணி” என்ற கட்சியை துவக்கினார். மணிப்பூரில் நடந்த சட்டசபை தேர்தலில், அவரது கட்சியும் போட்டியிட்டது. அங்கு ஆளுங்கட்சியாக இருந்த, காங்கிரஸ் முதல்வர் ஒக்ராம் இபோபி சிங்கை எதிர்த்து, தொபல் சட்டசபை தொகுதியில், இரோம் ஷர்மிளா போட்டியிட்டார்.  இபோபி சிங்கிற்கு எதிராக கடுமையான பிரச்சாரம் செய்தார்; ஆளும் காங்கிரசுக்கு பெரும் சவாலாக இருப்பார் என்று தான் முதலில் அவதானிக்கப்பட்டது. ஆனால் தேர்தல் முடிவுகளோ தலைகீழாய் இருந்தது.

தொபல் தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளர்  இபோபி சிங், 18,649 ஓட்டுகள் பெற்றார்; இரண்டாவது இடத்தை பிடித்து தோல்வியடைந்த, பா.ஜ.க வேட்பாளர் பசண்டா, 8,179 ஓட்டுகள் பெற்றார். ஆனால், இரோம் ஷர்மிளாவுக்கு, வெறும், 90 ஓட்டுகள் மட்டுமே கிடைத்தன. அவரது கட்சி சார்பில், மற்ற தொகுதிகளில் போட்டியிட்ட வேட்பாளர்களும், படுதோல்வியை சந்தித்தனர் எனில் மக்கள், வாக்காளர்களின் மனநிலைதான் என்ன? ஆனால் போராளிகள் தோற்றுப் போவதும், அரசியல்வாதிகள் மகுடம் தரிப்பதும் இவ்வுலகுக்கு புதிதல்ல.

தமிழகத்தில் நடந்த ஒரு விடயம்கூட நினைவுக்கு வருகிறது. கூடங்குளம் போராட்டம். அதை முன்னின்று நடத்திய அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின்  ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமாரன் கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியே அடைந்தார். தொடர்ந்து நடந்த 2016 சட்டசபை தேர்தலில் “பச்சை தமிழகம்” என்னும் தன் கட்சியின் சார்பில் ராதாபுரம் சட்டசபைத் தொகுதியில் தேர்தலை சந்தித்தவரும் தோற்றுத் தான் போனார். பள்ளிக் காலத்திலேயே தன் தாத்தா, பாட்டியைப் புற்றுநோய்க்குப் பலி கொடுத்த சம்பவம்தான் அணு உலைக்கு எதிரான போராட்டக்கரராக உதயகுமாரை வார்த்தெடுத்தது.

கல்லூரியில் படிக்கும் காலகட்டத்திலேயே ‘எறும்புகள்’ என்னும் இலக்கிய அமைப்பையும் பொதுப் பிரச்னைகள் பற்றி அலசுவதற்கு ‘நியூ இந்தியா மூவ்மெண்ட்’ என்ற அமைப்பையும் நடத்தினார் அவர். அதன் ஒரு கட்டமாகத்தான் அணு உலை குறித்த துண்டறிக்கைகளை விநியோகம் செய்திருக்கிறார். அதன் தொடர்ச்சியாக, சமத்துவ சமுதாய இயக்கத்தின் இயக்குனர் டேவிட்டுடன் தொடர்பு ஏற்பட்டுக் கடந்த 2001ஆம் ஆண்டு அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தைத் தொடங்கியவர் போராட்டத்தையும் முன்னெடுத்தார்.

சு ப உதயகுமார். கல்லூரியில் படிக்கும் காலகட்டத்திலேயே ‘எறும்புகள்’ என்னும் இலக்கிய அமைப்பையும் பொதுப் பிரச்னைகள் பற்றி அலசுவதற்கு ‘நியூ இந்தியா மூவ்மெண்ட்’ என்ற அமைப்பையும் நடத்தினார் (anoobhuyan.files.wordpress.com)

 

நிற்க.. இந்த இடத்தில் தான் கவனிக்க வேண்டிய ஒரு அம்சம் இருக்கிறது. உதயகுமார் கூடங்குளத்தில் போராட்டம் நடத்திய போது, மீனவர்கள் அனைவருமே அவர் பின்னால் நின்றனர். மீனவ சமூக மக்களின் காவலனாகவும், அணு சக்திக்கு எதிராக நாயகனாவும் உதயகுமாரை அவர்கள் ஏற்றுக் கொண்டு தனதாக்கி பயணித்தனர். அதே உதயகுமார் கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் தேர்தலை சந்தித்தார். அதுவும் தமிழகத்திலேயே பாஜக வலுவாக வேரூன்றி இருக்கும் தொகுதியில். அப்போதைய பாஜக மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், கோடீஸ்வர வேட்பாளர் வசந்தகுமார் ஆகியோருக்கு எதிராக களம் இறங்கினார். இந்த தொகுதியில் மட்டும் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை 40க்கும் மேற்பட்ட மீனவ கடலோர கிராமங்கள் உள்ளன. இவர்களின் வாக்கு மட்டும் ஒரு லட்சத்திற்கும் அதிகம்,.

இது போக உதயகுமார் “ஆம் ஆத்மி” சார்பில் போட்டியிட்டதால் ஒவ்வொரு பகுதியிலும் ஓரளவு நடுநிலையாளர்களின் வாக்குகளும் கிடைக்கும் என அவதானிக்கப்பட்டது. ஆனால் தேர்தல் முடிவில் லட்சம் வாக்குகள் வித்யாசத்தில் காங்கிரஸை வீழ்த்தி பாஜக வென்று, பொன்.ராதாகிருஷ்ணன் மத்திய இணை அமைச்சரும் ஆனார். ஆனால் சுப. உதயகுமார் 15,314 வாக்குகளே பெற்றார். மீனவ மக்களுக்காக களத்தில் நின்ற உதயகுமாருக்கு அவர்களது வாக்குகள்கூட கூட ஒருங்கிணைந்து விழவில்லை எனில் இங்கே போராட்டம் செய்பவர்களுக்கான அடையாளம் எங்கே இருக்கிறது?

போராட்டக் குழுவில் இருந்து களம் கண்டு நெல்லையில் போட்டியிட்ட மை.பா. ஜேசுராஜூக்கு 18,290 வாக்குகளும், தூத்துக்குடியில் போட்டியிட்ட புஷ்பராயனுக்கு 26,476 வாக்குகளும் மட்டுமே  கிடைத்தன.

இன்னொரு உதாரணமாய் உருப்பெற்று நிற்கிறார் டிராபிக் ராமசாமி. சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் தன்னார்வலராக உடனே களம் புகுந்து போக்குவரத்தைச் சீர்படுத்துவதால் தான் இவருக்கு டிராபிக் ராமசாமி என்ற பெயர் வந்தது. பொதுமக்கள் நலன் கருதி, பல்வேறு பொதுநல வழக்குகளைத் தொடர்ந்து பல நல்ல செயல்களுக்கு வித்திட்டவர். அவ்வழக்குகளில் வழக்கறிஞர் துணையின்றி தானே வாதாடியும் வருபவர். 80 வயதைக் கடந்த இவர் சமூக பணிகளில் பல முறை தாக்குதல்களுக்கும் உள்ளாகியுள்ளார்.

80 வயதைக் கடந்த ட்ராபிக் ராமசாமி சமூக பணிகளில் பல முறை தாக்குதல்களுக்கும் உள்ளாகியுள்ளார்.(timesofindia.indiatimes.com)

2002ல் சென்னையில் அதிக எடை ஏற்றிக் கொண்டு கட்டுப்பாடில்லாமல் ஓடிய மீன் ஏற்றும் வண்டிகளுக்கு எதிராக நீதிமன்றத்தடை பெற்றவர் டிராபிக் ராமசாமி.  சென்னையில் அனுமதி இல்லாமல் பல அடுக்குமாடிக் கட்டிடங்களைக் கட்டிய பெருமுதலாளிகளுக்கு எதிராக பல வழக்குகள் போட்டு பல கட்டிடங்களை இடிக்க வைத்தார். பல கட்டிடங்களை செயலிழக்கச் செய்தார். கட்டிடங்கள் கட்டுவதில் ஒரு முறைமை உருவாக இது வழி வகுத்தது. சென்னையில் கட்டப்படும் எல்லா கட்டிடங்களும் வாகனங்கள் நிறுத்தும் வசதிகளுடன் மட்டுமே கட்டப்படவேண்டும் என்ற நீதிமன்ற ஆணையினையும் இவர்தான் பெற்றார். இது இன்று தமிழகம் முழுவதும் பரவலாக அமுல் செய்யப்படுகிறது. அரசு நிதி வீணடிக்கப்படுவது, முறைகேடான அரசுச் செயல்பாடுகள் ஆகியவற்றுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நீதிமன்றத்துக்குச் சென்றபடியே இருக்கிறார் ராமசாமி. ஆனால் மக்கள் மன்றத்தில் வாக்கு அரசியலில் இவரது இடமோ பரிதாபத்துக்கு உரியதாய் உள்ளது.

2009 நாடாளுமன்றத் தேர்தலில் தென் சென்னை தொகுதியில் தோல்வி, ஸ்ரீரங்கம், ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிகளிலும் கூட இடைத்தேர்தலில் போட்டியிட்டு சொற்ப வாக்குகளே பெற்று தோல்வியே அடைந்தார். ஆனால் இவர்கள் எல்லாம் போராட்டம் நடத்தியபோது, ஊடகங்களாலும், அரசியல் சார்பு அற்ற நடுநிலையாளர்களாலும், வெகுஜென மக்கள் திரளாலும் கொண்டாடப்பட்ட ஆளுமைகள். இன்னும் பட்டியல் போட இங்கே மனிதர்கள் அதிகம் பேர் உள்ளனர். ஆனால் களப் போராளிகளுக்கு அரசியல் கை கொடுப்பதும் இல்லை, கொடுக்கவும் இல்லை. ஒருவேளை இவர்கள் எல்லாம் வெற்றி பெற்று, மகுடம் தரிந்தால் தீர்க்கப் போவதும், நிவர்த்தி செய்யப்பட இருப்பதும் தங்களின் பிரச்னைகள்தான் என்பது வாக்காளர்கள் ஏனோ நினைவில் கொள்ளவில்லை.

இங்கே மக்கள் களமும், அரசியல் களமும் வேறுபட்டு நிற்கிறது. முன்பெல்லாம் மக்களுக்காக உழைப்பவர்கள் மட்டுமே அரசியலில் நுழைந்தார்கள். சில வாரங்களுக்கு முன்பு ரயில் பயணத்தில் அருகில் இருந்தவரிடம் நீங்கள் என்ன தொழில் செய்கிறீர்கள் எனக் கேட்டேன். அரசியலில் இருக்கிறேன் என பதில் சொன்னார். தொழில் முறை அரசியலின் காலம் வந்து விட்டது. போராளிகள் இதில் போராட்டம் மட்டுமே நடந்த முடியும். போட்டியிடவும், அதில் வென்று அதன் மூலம் மக்கள் பணி செய்வதும் மட்டும் முடியவே முடியாது என்பது வேதனையான விடயம் தான்.

Related Articles