இயற்கையின் அதிசயங்களில் ஒன்றான வெந்நீர் ஊற்றுக்கள்

இந்த உலகின்  அனைத்துப் பகுதிகளிலும் நிலப்பரப்புகள் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. சில இடங்கள் நம்மை ஆச்சர்யப்படுத்தும், சில இடங்கள் அச்சமூட்டும். சில இடங்களில் அதன் அழகை , அதன் ஆச்சர்யங்களை  கொஞ்சம் அதிகமாகவே உணர முடியும். அவற்றை நேரில் பார்த்தால் கண்களுக்குத் தெரிவது கற்பனையா இல்லை நிஜமா என்ற சந்தேகம் கூட ஏற்படும். அப்படி இயற்கையாகவே உருவான   இடங்கள் நம் பிரபஞ்சத்தில் ஏராளமாக இருக்கின்றன. அப்படிப்பட்ட இடங்களில் ஒன்றுதான் இயற்கையான வெந்நீர் ஊற்றுக்கள். 

புவியின் மேலோட்டில் உள்ள நிலத்தடிநீர்  குறிப்பிட்ட இடத்தில் காணப்படும் புவிவெப்பத்தின் காரணமாகச் சூடேற்றப்பட்டு சுடுநீராக ஊற்றெடுக்கும்போது அந்த இடம் வெந்நீரூற்று என அழைக்கப்படுகின்றது.  இந்த உலகம் முழுவதிலும்   கிட்டத்தட்ட 1000 வெந்நீரூற்றுக்கள் காணப்படுவதாகவும் அவற்றுள் சுமார்  50% அமெரிக்காவிலுள்ள வயோமிங்கு என்னும் இடத்தில் உள்ள எல்லோசுட்டோன் தேசியப் புரவகம் (யெல்லோஸ்டோன் தேசியப் பூங்கா) என்ற இடத்திலேயே இருப்பதாகவும் கூறப்படுகின்றது.  அதிலும் அகில உலகரீதியில்  பிரதானமான  வெந்நீர் ஊற்றுக்கள் கிட்டத்தட்ட  பதினைந்து  உள்ளன.

பமுக்கலே வெந்நீர் ஊற்று (துருக்கி),  கீர்கங்கா வெந்நீர் ஊற்று (இமாச்சல பிரதேசம்),  ப்ளூ லகூன் (ஐஸ்லாந்), செனா ஹாட் ஸ்பிரிங்ஸ் (அமெரிக்காவின் அலாஸ்கா),கிராண்ட் பிரிஸ்மாட்டிக் ஸ்பிரிங் (அமேரிக்கா), டிசப்ஷன் ஐஸ்லேண்ட் (அண்டார்டிக்கா), ஹுவாங்லாங் (சீனா ), பஞ்சார் ஹாட் ஸ்பிரிங்ஸ் (பாலி), டெர்மே டி சாட்டர்னியா (இத்தாலி),யுனார்டோக் (கிரீன்லாந்து), குரோகாவா ஆன்சென் (ஜப்பான்), டிராவர்டைன் ஹாட் ஸ்பிரிங்ஸ் (கலிபோர்னியா), ஷாம்பெயின் பூல் (நியூசிலாந்து), டன்டன் வெப்ப நீரூற்று (கொலராடோ), டெர்மாஸ் ஜியோமெட்ரிகாஸ் (சிலி ) எனும் பாரிய வெந்நீர் ஊற்றுக்களே அவை!

புகைப்பட உதவி -Ceylonpages.lk

 

நம்முடைய இலங்கையைப் பொறுத்தமட்டில் யாழ் குடாநாட்டைச் சேர்ந்த கீரிமலை, மதவாச்சி ரத்திகிரிய, வேலிகந்த கல்வௌ, மகசியம்பலாகம மற்றும் மரங்கள மஹவ  -மகா ஓயா ,கிவுலேகம -திருக்கோவில், மஹபலஸ்ஸ- ஹம்பலாந்தோட்டை,  திருகோணமலை கன்னியா போன்ற வெந்நீரூற்றுக்கள் குறிப்பிடப்பட்டபோதிலும்  இவற்றுள் இன்றளவில் மிகவும் பிரசித்தி பெற்ற இடமாக திகழ்வதென்னவோ கன்னியா வெந்நீர் கிணறுகளே. திருகோணமலை  மாவட்டத்தில் உள்ள ஒரு இயற்கை வெந்நீரூற்றான கன்னியா  குறிப்பிட்ட அந்த இடத்தில் 90 – 120 செ.மீ ஆழமுடைய ஏழு சிறிய சதுர வடிவான கிணறுகளாக  அமையப்பெற்றுள்ளன. ஒவ்வொரு கிணற்றிலுமிருந்து வெவ்வேறு வெப்பநிலையில் ஊறிவரும் நீரானது இலங்கையின் சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் ஒன்றாக காணப்பட்டபோதிலும், சுற்றுலாப்பயணிகள் நீராடும் அளவிற்கு போதுமான அளவு நீரிணைக்கொண்டதாக இல்லை. பொதுவாக  வெந்நீரூற்றானது, ஒரு தற்காலிகமான புவியியல் தொழிற்பாடு என்கிற அடிப்படையில்  ஒரு வெந்நீரூற்றின் வாழ்வுக் காலம், சில ஆயிரம் ஆண்டுகள் மட்டுமே. 

கன்னியாவிலும் முன்பு இருந்ததைவிட நீறூற்றுக்களின் வெப்பநிலையானது பெரிதும் குறைந்து போய்விட்டதாகவே பலரும் குறிப்பிடுகின்றனர் . 1798ல் “ரொபட் பர்சிவல்” எனும் வைத்தியர் இலங்கை பற்றி எழுதிய நூலில் கன்னியாவிலுள்ள 7 வெந்நீரூற்றுக்கள் பற்றியும் எழுதியுள்ளார்.  அவ்வூற்றுக்களின் வெப்பநிலை 98பாகை பரனைட் முதல் 106 பாகை பரனைட்டு வரை (36.6 பாகை செல்சியஸ் – 41.38 பாகை செல்சியஸ்  இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் , அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி இந்த  வெந்நீரூற்றுக்களின் வெப்பநிலை 42 பாகை செல்சியசு முதல் 55 பாகை செல்சியசு வரை வேறுபடுவதாக அறியப்பட்டுள்ளது. மேலும், 1816 – 1820 காலப்பகுதியில் தாம் கண்ட இலங்கையைப் பற்றி “ஜோன்டேவி” என்பவர் எழுதிய நூலில் கன்னியாவிலுள்ள சில வெந்நீர்க்கிணறுகளில் மீன்கள் வாழ்ந்ததைக் கண்டதாகக் குறிப்பிட்டுள்ளார். அத்தோடு கிணற்றுக்குக் கிணறு நீரின் வெப்பநிலை வேறுபட்டுக் காணப்படுவதால் அவை ஒரே ஊற்றிலிருந்து தோன்றியவை அல்ல எனவும் தன்னுடைய அனுமானத்தினை தமது நூலில் குறிப்பிட்டுள்ளார் .  

ஏராளமான வரலாற்று ரீதியான சமய நம்பிக்கைகளுடனும், மதகோற்பாடுகளுடனும் தொடர்புபட்ட கன்னியா இன்று சில அரசியல் ரீதியிலான பொறிக்குள் சிக்குண்டிருப்பதும் கவனத்திற்கொள்ளத்தக்கது .இலங்கையில் உள்ள  வெந்நீரூற்றுக்களில் பெரும்பாலானவை கிழக்கு மாகாணத்திலேயே காணப்படுகின்றன. எரிமலைகளின் தொழிற்பாடு காரணமாகவே வெந்நீரூற்றுக்கள் தோன்றுவதாக பொதுவாக கருதப்பட்டாலும், கிழக்கில் அவ்வாறான எரிமலைகள் வெடித்தமைக்கான வரலாற்றுச்  சான்றுகள் இதுவரையிலும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதனால் இந்த  வெந்நீரூற்றுக்கள் தோன்றுவதற்கு எரிமலைத் தொழிற்பாடு காரணமாக இருந்திருக்காது என இலங்கையின் ஆராச்சியாளர்கள் கூறுகின்றனர். ஆனாலும் கிழக்கில் வெந்நீரூற்றுக்கள் காணப்படும் பகுதிகளுக்கு அண்மையில் டொலரைற் (Dolerite) எனும் தீப்பாறைவகை காணப்படுவதும்,  எரிமலை வெடிப்புகளின்  விளைவாகவே இவ்வகைத் தீப்பாறைகள் உருவாகின்றன என்பதையும் கருத்திற்கொண்டுபார்த்தால், மிக முந்திய காலத்தில் இப்பிரதேசங்களில் எரிமலைத் தொழிற்பாடுகள் நிகழ்ந்துள்ளனவா எனச் சந்தேகிக்கப்படுகின்றது. இந்த டொலரைற்றுப் பாறைகள் சுமார் 135 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் தோன்றியிருக்கலாம் எனவும் கருதப்படுகின்றது. மேலும், பாறைகளிலுள்ள கதிர்த் தொழிற்பாட்டு மூலகங்களின் கதிர்வீச்சு  காரணமாக சூழவுள்ள நீர் சூடேறக்கூடும் என்கிற அடிப்படையில்,  மகாஓய, அம்பலாந்தோட்டை  போன்ற பிரதேசங்களில் யுரேனியம் தாதுப் பொருட்கள் இருப்பதற்கான சான்றுகள் கிடைத்துள்ள போதிலும் வெந்நீரூற்றுக்களைச் சூழவுள்ள கதிர் வீசலுக்குரிய அறிகுறிகள் எதுவும் இதுவரை புலப்படவில்லை. 

எனவே இலங்கையில் வெந்நீரூற்றுக்கள் தோன்றுவதற்கு கதிர்த் தொழிற்பாடுடைய மூலகங்கள் காரணமா என்கிற ஐயமும் இன்றுவரையில் உறுதிப்படுத்தப்படவில்லை. அடுத்ததாக, புவியோட்டினுள் இருக்கும் நீர் பல்வேறு அசைவுகளுக்கு உற்படும்போது,  இவ்வசைவுகள் காரணமாக நீரின் மீது ஏற்படும் அமுக்கம் மிக அதிகமாவதுடன் புவியின் உட்பகுதியில் காணப்படும் உயர்ந்த வெப்பநிலையும் சேர்ந்து வெந்நீரூற்றுக்கள் தோன்றக் காரணமாக அமையலாம் எனவும்  புவியின் உட்பகுதியை நோக்கிச் செல்லும் ஒவ்வொரு 200 மீற்றருக்கும் வெப்பநிலை 9 பாகை செல்சியசினால் அதிகரிக்கின்றது எனவும்  இதன்படி பார்த்தால் புவியில் 25 கிலோமீற்றர் ஆழத்தில் வெப்பநிலை 1150 பாகை செல்ஸியஸ்  அளவு இருக்கக்கூடும் . இத்தகைய உயர் வெப்பநிலை காரணமாகப் புவியின் ஆழத்திலிருந்து வரும் நீரூற்றுக்களின் வெப்பநிலையும் உயர்ந்ததாகக் காணப்படலாம். இலங்கையிலுள்ள வெந்நீரூற்றுக்கள் இவ்வாறே தோன்றியிருக்கலாம் என சில ஆராச்சியாளர்கள் கூறுகின்றனர். 

புகைப்பட உதவி – Steemit.com

 

ஆனாலும் இன்றுவரையில் எந்தவொரு ஆராச்சி முடிவும் உறுதிப்படுத்தப்படவில்லை என்பதே வருத்தத்திற்குரியது. புராணக்கதைகளிலும், ஏராளமான கட்டுக்கதைகளிலும் ஊரித் திளைத்திருக்கும் நாமும் நம் அரசியல் தலைமைகளும்  அறிவியல்ரீதியிலான ஆதாரங்களை தேடி உறுதிப்படுத்துவதைவிட, புனைவுகளை உண்மையாக்குவதிலேயே குறியாக இருக்கின்றோமோ என்னவோ !

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே  இவ்வாறான நீரூற்றுக்களை மனிதன் நீராடவும், உடல் மற்றும் உள்ளத்திற்க்கான புத்துணர்ச்சியளிக்கும் இடமாகவும்,  பயன்படுத்த  ஆரம்பித்திருக்கிறான் என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள்.  சூடான நீரில் திண்மப் பொருட்கள் இலகுவில் கரையக் கூடியனவாக இருப்பதனால், வெந்நீரூற்றுக்களில் அதிகளவில் கனிமங்கள் காணப்படும். இதனால் இந்த வெந்நீரூற்றுக்களில் உள்ள நீரில் பல மருத்துவ பயன்பாடுகள் இருக்கும் என்ற நம்பிக்கையில், இந்த இடங்கள் சுற்றுலாத் தலங்களாக இருப்பது மட்டுமல்லாமல், இயலாத்தன்மை உள்ளவர்களுக்கான உடலியக்க மருத்துவம் சார்ந்த சிகிச்சை அளிக்கும் நிலையங்களுக்கான இடங்களாகவும் அமைந்துள்ளன.மின்சார உற்பத்தி, சுடுநீர்த் தேவை, சுற்றுலாத்துறை போன்ற வணிகநோக்கிலான தேவைகளுக்கு இந்த வெந்நீரூற்றுக்கள் பயன்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது .

                                            

 

Related Articles

Exit mobile version