2020 ஆம் ஆண்டில், இலங்கை எதிர்கொண்டப் பாரிய சவால்: COVID-19 தொற்றுநோய், சமீப வரலாற்றில் நம் நாட்டைப் பாதித்த மிகக் கடுமையான தொற்று. COVID-19 பரவுவதற்கு எதிராக தன் குடிமக்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் வழிமுறைகளை இனங்கானவும் நம் நாடு பிரயாசை பட்டுக்கொண்டிருந்த வேளையில், மக்கள்தொகையில் ஒரு குறித்த பகுதியினர் முன்னறிவிக்கப்பட்டதை விட அதிக ஆபத்துக்கு உள்ளானமை தெளிவுற தெரிந்தது – அவர்கள் முதியவர்கள்.
இந்நிலை இரு கேள்விகளை எழுப்புகிறது: எவ்வாறு பயனுள்ள, வயது சார் உத்திகள் முதியோர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு உதவக்கூடும், அதை முன்னெடுக்க தலைமுறைகளுக்கு இடையிலான உரையாடல் ஏன் அவசியமாகிறது?
தலைமுறைகளுக்கு இடையிலான (இடைநிலை) உரையாடல் என்றால் என்ன?
தலைமுறையினருக்கு இடையேயான உரையாடல் என்பது அடிப்படையில் ஒரு சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பொருட்டு, காலங்காலமாக பல்வேறு கண்ணோட்டங்களை ஒன்றிணைக்க முற்படும் வகையில் வெவ்வேறு தலைமுறைகளுக்கு இடையே நடைபெறும் ஒரு உரையாடல் ஆகும். இது இளந்தலைமுறையினருக்கும் பழந்தலைமுறையினருக்கும் இடையே அனுபவங்களைப் பகிர்வதை ஊக்குவிப்பதற்கான ஒரு கருவியாகும்.
இடைநிலை உரையாடலானது பாலினங்கள், இனங்கள், மதங்கள், கலாச்சாரங்கள் மற்றும் சமூக-பொருளாதார பின்னணிகளையும் கருத்தில் கொள்ளும். இது ஒரு சமூகத்தின் மக்களுக்கு சிக்கல்களை உரியமுறையில் இனங்கானவும், விழிப்புணர்வை ஏற்படுத்தவும், நீண்டகால தீர்வுகளை தேடிக்கொள்ளவும் உதவுகிறது.
கூடுதலாக, இது சமுதாய வளர்ச்சிக்கான சாத்தியமான பாதைகளை ஒன்றிணைக்க பல்வேறு வயதினரின் தனிப்பட்ட அனுபவங்களை ஓரிடத்தே கொண்டுவருகிறது.
“தலைமுறைகளுக்கு இடையேயான உரையாடல் என்பது வெவ்வேறு தலைமுறைகள் மற்றும் அனுபவங்களை ஒன்றிணைக்க உதவும் இரு வழி செயல்முறை ஆகும். நடைமுறையில் இது உங்கள் சொந்த சமூகத்தில் அல்லது உங்கள் சொந்த குடும்பத்தில் உள்ள ஒரு பெரியவருடன் உரையாடுவது போன்ற எளிய விடயமே ஆகும்” என ஆசிய மன்றத்தின் சிரேஷ்ட திட்ட அலுவலர் கண்ணியா பீறிஸ் கூறுகிறார்.
“இளைஞர்களைப் பொறுத்தவரை, இது கடந்த காலத்திலிருந்து கற்றுக்கொள்வதற்கும், முக்கிய அறங்கள் மற்றும் வாழ்க்கைப் பாடங்களை அடையாளம் காண்பதற்கு வாய்ப்புகளை உருவாக்குகிறது. இதன் மூலம் அவர்கள் தங்கள் வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்ள முடியும். மூப்பர்களைப் பொறுத்தவரை, இது சமூகத்தில் தங்களையும் ஒரு அங்கமாக உணரவும், இந்த சமூகம் தங்களுடையது என்பதை உணரவும் உதவுகிறது”
இலங்கையில், 1980 களில் இருந்து அண்டை நாடுகளை காட்டிலும் நம் நாட்டில் வயதான நபர்களின் தொகை விரைவான வீதத்தில் அதிகரித்து வருகிறது. சமீபத்திய தரவுகளின்படி, 1981-2012 க்கு இடையில், முதியோரின் விகிதம் (60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள்) 6.6% இலிருந்து 12.4% ஆக உயர்ந்துள்ளது.
இலங்கையின் மக்கள் தொகை 2041 க்குள் சுமார் 9% ஆல் அதிகரித்து 22 மில்லியனை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது; இதில், வயதானவர்கள் நாட்டின் மக்கள்தொகையில் 5.3 மில்லியனாக இருப்பார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது, இது 2010 ல் இருந்ததின் இரு மடங்காகும். இந்நிலை நாட்டில் முன்னெப்போதையும் விட இடைநிலை உரையாடலை தீவிரமாக ஊக்குவிக்க வேண்டிய சூழலை உருவாக்கி உள்ளது.
“சுதந்திரத்திற்குப் பின்னரான தசாப்தங்களில் இலங்கை நீண்ட ஆயுட்காலம் மற்றும் குறைந்த பிறப்பு விகிதங்களை அடைந்துள்ளதால் நாட்டில் வயதானவர்களின் விகிதம் வேகமாக அதிகரித்து வருகிறது. இந்த மக்கள்தொகை மூப்பு செல்வந்த நாடுகளை விட வேகமாக நடைபெறுகிறது” என ஆசிய மன்றத்தின் சிரேஷ்ட செயற்திட்ட மேலாளர் ரொஷான் ஷாஜேஹான் தெரிவித்தார்.
இதற்கிடையில், ஒரு மக்கள் தொகையில் வயதான அனைத்து உறுப்பினர்களும் உடல்நலம், வறுமை, கவனிப்பு போன்றவற்றில் சமமாக பாதிக்கப்படக்கூடியவர்கள் என்ற சமூகப் புரிதல் காணத்தக்கதாக உள்ளது. எனினும் இது உண்மையல்ல. முதுமை என்பது பொருளாதாரம் அல்லது சமுதாயத்தின் மீதான ஒரு ‘சுமையாக’ கருதப்பட்டாலும், உண்மையில் இது கொண்டாடப்பட வேண்டிய விடயமாகும்.
சமூக வளர்ச்சிக்கு முக்கிய ஆதாரங்களாக விளங்கும் அறிவு மற்றும் அனுபவ வளத்தை நம் முதியவர்கள் கொண்டுள்ளனர். வயதான சமூகத்தின் ஒரு பகுதியினர் மற்றவர்களை விட அதிகம் பாதிக்கப்படக்கூடியவர்களாக இருக்கும்போதிலும், ஒட்டுமொத்த சமூகத்திடம் இருந்தும் நாம் கற்றுக் கொள்ளவும், அதிலிருந்து மேம்பாட்டுக்கு உதவவும் நிறையவே உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
“வயதானவர்கள் தங்கள் குடும்பங்கள், சமூகங்கள் மற்றும் தேசத்திற்கு, உணர்வு பூர்வமாக, சமூக ரீதியாக மற்றும் பொருளாதார வழியில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகிறார்கள்,” என ரொஷான் மேலும் விளக்கம் அளித்தார்.
தடைகளைச் எதிர்கொள்ளல்.
முதியவர்கள் உலகெங்கிலும் உள்ள பல்வேறு சமூக நிறுவனங்களில் தடைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. பணியிடங்கள், கொள்கைகள் வகுப்பு மற்றும் சுகாதாரத்துறை என வயதானவர்கள் அதிகம் கருத்தில் கொள்ளப்பட வேண்டிய இடங்களில் அவர்கள் பெரும்பாலும் கருத்தில் கொல்லப்படுவதில்லை அல்லது மிகக் குறைத்து மதிப்பிடப்படுகிறார்கள்.
ஐ.நா.வைப் பொறுத்தவரை, இந்த தொற்றுநோயைக் கடப்பதற்கான முக்கிய காரணிகளில் ஒன்று தலைமுறையினருக்கு இடையேயான ஒற்றுமை. வயதானவர்களுக்கு COVID-19 இன் தாக்கம் குறித்த ஐ.நா பொதுச்செயலாளரின் கொள்கை சுருக்கத்தை ஆதரிக்கும் அறிக்கையில்,: “சர்வதேச மற்றும் இடைநிலை ஒற்றுமை மிகவும் தேவைப்படும் ஒரு நேரத்தில், முதியயோரை மேலும் பாதிப்புகளுக்கு உட்படுத்தும் வயது பாகுபாடு மற்றும் வயதானவர்களை களங்கம் செய்தல் உள்ளிட்டவை அதிகரிப்பது குறித்து எங்கள் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்துகிறோம்.”
தொற்றுநோயின் பரவலானது சுகாதார சேவைகள், உயிர் காக்கும் சிகிச்சைகள் மற்றும் சமூக சேவைகளுக்கான அணுகல் ஆகியவற்றின் அடிப்படையில் முதியவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை எவ்வாறு அதிகரித்துள்ளது என்பதை இது எடுத்துக்காட்டுகிறது. அவர்கள் அவரவர் வேலைகளில் எதிர்மறையான தாக்கங்களையும் சந்தித்த அதே நேரத்தில் உள மற்றும் உடல் ஆரோக்கியத்தின் அடிப்படையிலும் புறக்கணிக்கப்படுகின்றனர்.
இத்தகைய சவால்களுக்கு மேலதிகமாக, தொற்றுநோயால் கொண்டுவரப்படும் கட்டுப்பாடுகளால் மேலும் ஓரங்கட்டப்பட்ட குழுக்களாக மாறி வரும் முதியவர்கள், பெரும்பாலும் இணைய அடிப்படையிலான தொடர்புகள் மற்றும் ஏற்பாடுகளுக்கு அணுகல் இல்லாமல் இருக்கலாம். இதுபோன்ற காரணிகளால் தனிநபர்களின் மன நலனில் ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் பற்றி கருத்தில் கொள்வது அவசியம்.
இது தொடர்பாக, ஆசியா மன்றம் கருவித்தொகுப்பு ஒன்றை உருவாக்கியுள்ளது, இது முதியவர்கள் உள்ளிட்ட குழுவினருடன் மனரீதியாக உணர்திறன் மிக்க முறையில் உரையாடலை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது பற்றிய வழிகாட்டுதல்களை இங்கே காணலாம்.
COVID-19 காரணமாக அதிக இறப்பு விகிதங்கள் ஒரு புறம் குறிப்பிடப்படும் வேளையில், இன்னொரு புறம் தவறான நடத்தைக்கான நிகழ்வுகளும் பதிவாகின்றன. தனிமைப்படுத்தல் மற்றும் முடக்க நடவடிக்கைகளின் பாராமுகமான இயல்பினால் இது போன்ற சூழ்நிலைகளில் வயதானவர்கள் எதிர்கொள்ளக்கூடிய சாத்தியமான துஷ்பிரயோகம், வன்முறை மற்றும் புறக்கணிப்பு போன்றவற்றை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. எந்த தலைமுறையை நோக்கமாகக் கொண்டாலும், வயதை அடிப்படையாகக் கொண்ட தவறான முன்னோட்டம் என்பது அனைவரது முன்னேற்றத்தையும் தடுக்கும் என்பதே உண்மை. இதனால் ஏற்படும் எதிர்மறையான விளைவுகள் இறுதியில் சமூகத்தின் அனைத்து பிரிவுகளையும் பாதிக்கின்றன. குறிப்பாக, ஒரு சமூகத்தின் அனைத்து நபர்களுக்கும் சமமாக நடாத்தும் மற்றும் ஆதரிக்கும் கொள்கைகளை வடிவமைப்பதில் இருந்து இது நம்மைத் தடுக்கிறது, இது சமூக மட்டத்தில் எதிர்மறையான விளைவுகளையே உண்க்கும்.
உதாரணமாக, இந்த COVID காலத்தில் முக்கியமானதாக மாறியுள்ள பொது சேவைகளுக்கான முன்னுரிமை. வயதானவர்களுக்கு அவர்களின் சமூக பொருளாதார சூழ்நிலைகள் காரணமாக அத்தகைய சேவைகளை அணுக முடியாத ஆபத்து நிலை உருவாகியுள்ளது.
எனவே தான் தலைமுறைகளுக்கு இடையேயான இடைநிலை உரையாடல் முக்கியம் பெறுகிறது. இந்த சவாலானது ஒரு குறித்த, பாதிக்கப்படக்கூடிய சமூகத்தின் ஒரு பகுதியை மட்டும் கடந்து அனைத்து தரப்புகளிலும் வேர்விட்டுள்ளது. எனவே முழு சமூகமும் தொடர்புபட வேண்டிய, தீர்க்கப்பட வேண்டிய ஒரு பிரச்சினையாக இது அமைகிறது.
முதியவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் பாகுபாடுகளின் தீவிரத்தை இளைய தலைமுறையினர் புரிந்துகொள்வதை உறுதி செய்வதன் மூலம், இந்த தடைகளைத் தணிப்பதற்கான ஒருங்கிணைந்த முயற்சியைச் முன்னெடுக்க முடியும்.
மன்றத்தால் நிறைவேற்றப்பட்ட அத்தகைய ஒரு முயற்சி குறித்து பேசிய கன்னியா: “கலைகளின் ஊடாக இந்த தலைப்பை அணுகினோம். ‘எங்கள் கதைகள்’ முயற்சியின் ஒரு பகுதியாக, இளம் தொழிலாளர்கள் மற்றும் புதுக் கலைஞர்களை முதியவர்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட வாழ்க்கைக் கதைகளை வெவ்வேறு கலை ஊடகங்கள் வழியாக மாற்ற வழிகாட்டும் வகையில், ஆசிய மன்றம், தீர்த்த சர்வதேச கலைஞர்கள் கூட்டுடன் இணைசேர்ந்துள்ளது..”
இது குறித்து அவர் மேலும் கூறுகையில். “இந்த திட்டத்தின் தனித்துவமானதொரு அம்சம், கதைகளின் தொகுப்பின் போது கையாளப்பட்ட உளவியல்-உணர்திறன் அணுகுமுறையாகும், அங்கு வயதானோர் தங்கள் வாழ்க்கையை (தனித்தனியாகவும் கூட்டாகவும்) பிரதிபலிக்கும் போது அவர்களுக்கு உளவியல் ரீதியான ஆதரவு வழங்கப்பட்டது மற்றும் சில நேரங்களில் அவர்களுக்கு சமாளிக்கக் கடினமாக இருந்த நினைவுகளை பற்றியும் நினைவு கூர்ந்தனர்”
தலைமுறைகள் தோறும் நிலவ வேண்டிய ஒற்றுமை என்பது நமது சமூகத்தின் நிலையான வளர்ச்சியின் ஒரு முக்கிய பகுதியாகும். வலுவான ஒன்றுபட்ட இலங்கையாக எந்தவொரு எதிர்பாராத தடையையும் எதிர்கொள்ள நாம் தயார் என்று நம்புவோம் என்றால், தலைமுறைகளுக்கு இடையேயான ஒற்றுமை நிலவுவதை நாங்கள் உறுதி செய்தாக வேண்டும்.