
தங்களுக்கு விருப்பமான இடங்கள், விருப்பமான மனிதர்கள், உடைகள் என்று தங்கள் இஷ்டம் போல் தேர்வு செய்துகொண்டு சிரித்த முகத்துடன் தங்கள் இறுதி புகைப்படத்தை தாங்களே எடுத்துக்கொள்ளும் முயற்சி தான் – ஆபத்தின் விளிம்பில் எடுக்கப்படும் “தாமி”க்கள் (Selfies) .உயரமான இடத்தில் இருந்து விழுதல், ஆபத்தான கடல் பகுதியில் மூழ்குதல், இரயிலில் மோதுண்ட மனிதர்கள் என்று பெரும்பாலான தற்கொலைக்கான காரணிகள் இவர்களுக்கும் பொருந்தும். இவ்வகை மரணங்கள் நிகழும் காரணங்கள் மற்றும் அவற்றை தடுக்கும் வழிகளை பற்றிய சிறிய விழிப்புணர்வு முயற்சி இது.

படம் – images.baklol.com
தகவல் தொழில்நுட்பத்துறை பலவிதமாக பரிணாம வளர்ச்சி பெற்று இன்று அதன் உச்சத்தை அடைந்திருக்கிறது. நமக்கு ஐந்து வயது இருக்கும்பொழுது ஒரு மிட்டாய்க்காக தரையில் உருண்டு அடிதடி போட்டுக்கொண்ட நபர் முதல் இன்று புதிதாக அறிமுகமான நபர் வரை அனைவரையும் ஒருசேர ஒருங்கிணைத்து நமது கருத்துக்கள், புகைப்படங்கள், மகிழ்ச்சியான தருணங்கள், மனக்குமுறல்கள் என்று அனைத்தையும் அன்றாடம் பதிவு செய்வதே சமூக ஊடகங்களின் முக்கிய பயன்பாடு எனலாம். இத்துடன் விருப்பத்தேர்வு குழுக்கள், முன் அறிமுகமில்லாத நபர்கள் சேர்கை என்று நமக்கு தெரிந்தோ தெரியாமலோ ஒரே நேரத்தில் பல்லாயிரக்கணக்கான மக்களை இந்த இணைய மாயை உலகில் நாம் தொடர்பு கொள்கிறோம்.
தாமி “செல்பி” எனப்படுவது தங்களை தனியாகவோ குழுக்களாகவோ பின்னணி சூழலுடன் அல்லது பொருட்களுடன் வெளிக்காட்டிக் கொள்வதற்காக எடுக்கப்படும் படங்கள் ஆகும். இதை மேலும் விவரித்தால் சுமார் பதினைந்து வகையான செல்பிக்கள், எட்டு முதல் பத்து வகையான முக பாவங்கள் என்று சுட்டுத்தள்ளி இன்ஸ்டாகிராம் செயலிகளில் பதிவிடுகிறார்களாம் செல்பி விரும்பிகள்.

படம் – qzprod.files.wordpress.com
அதிகாலை செல்பி, குளியலறை செல்பி, உடற்பயிற்சி செல்பி, உணவு நேர செல்பி, ஒரு பிரபலமான நபரை சந்தித்தால் பிரபலங்களுடன் செல்பி என்று காலை முதல் இரவு வரை இவர்களின் பல அவதாரங்கள் இதில் அடக்கம். சமூக வலைத்தளங்களில் தங்களை இணைத்துக் கொண்டாலும் தமது இருப்பை பதிவு செய்தலும் வெளிக்காட்டலுமே செல்பி புகைப்படங்களின் அடிப்படை காரணமாக இருக்கலாம். அதிகப்படியான விருப்புகள் (Likes) மற்றும் பின்னூட்டங்கள் (comments) கிடைப்பதன் மூலம் தங்களுக்கான அங்கீகாரம், புகழ், சாகச வீரம் முதலியவற்றை வெளிக்காட்ட ஒரு சாதனமாக செல்பிக்களை பயன்படுத்துகின்றனர் இவர்கள். இதில் இளவயதினர் முதல் நடுத்தர வயதினர் வரை அனைவரும் அடக்கம்.
இவ்வாறு ஆரம்பித்த “செல்பி” காலச்சாரம் காலபோக்கில் “கில்பி (Killfie)” க்களாக மாறிவிட்டன. மார்ச் 2014 முதல் செப்டெம்பர் 2016 முடிய எடுத்த ஒரு கணக்கெடுப்பில் உலகம் முழுவதும் 127 செல்பி மரணங்கள் நிகழ்ந்துள்ளன. அவற்றில் 76 மரணங்கள் இந்தியாவில் சம்பவித்துள்ளது. மும்பையில் மட்டும் சுமார் பதினைந்து இடங்களில் செல்பி புகைப்படம் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
நீளமான ரயில் தண்டவாள பாதைகளில் தங்கள் நண்பர்களுடன் “செல்பி” எடுத்துக்கொண்டால் அவர்கள் நட்பு நீண்ட காலம் தொடரும் என்பதை பறைசாற்றும் என்பது ஒரு சிலரது எண்ணமாம். அதுவே விபத்துகளுக்கும் காரணமாக அமைகிறது.

படம் – cdn.psychologytoday.com
கரடுமுரடான ஊசிமுனை வளைவுகள் உள்ள மலைப்பகுதிகளுக்கும் சம தளத்திற்குமான நிலப்பரப்பின் அளவுகளை அவர்களால் சரிவர உடனடியாக கணக்கிட முடியாமல் போதல் மலை உச்சி விபத்துகளுக்கு காரணங்களாக அமைகிறது.
வனவிலங்குகளின் தன்மை நேரத்திற்கு நேரம் மாறக்கூடியவை. தங்களை தற்காத்துக்கொள்ள மனிதர்களை தாக்கவும் செய்யும். ஆபத்தை உணராமல் காடுகள் மற்றும் காப்பகங்களில் மிருகங்களின் அருகில் சென்று செல்பி எடுக்க முயல்வது பேராபத்து. இயற்கை அழகானது, சில நேரங்களில் ஆபத்தானதும் கூட. தட்பவெப்ப சூழலுக்கு ஏற்றவாறு மாறும் கடல் அலைகளின் தன்மை பற்றி உணராமல் ராட்சத கடல் அலைகளில் செல்பி எடுத்தலும்கூட.
அமெரிக்கா மற்றும் ரஷ்யர்களின் செல்பி மரணங்களில் சில ஆயுதங்களால் நடந்தவை. தங்கள் தற்காப்புக்காக வைத்திருக்கும் கைத்துப்பாக்கிகளை கொண்டு வித்தியாசமான செல்பிக்களுக்கு முயற்சி செய்துள்ளனர். அப்பொழுது அதில் குண்டு வெளிப்பட்டு விபரீதத்தில் முடிந்திருக்கிறது.

படம் – geek.ng
செல்பியால் ஏற்படும் நன்மைகள்
இவ்வகை புகைப்படங்கள் மூலம் தன்னம்பிக்கை மற்றும் சுய கௌரவம் அதிகரிப்பதாக மனோரீதியாக நம்பப்படுகிறது. இதுவரை 9௦ மில்லியன் செல்பி புகைப்படங்கள் இன்ஸ்டாகிராம் இணையதளத்தில் மட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல். சமூகப்பிணைப்பு அதிகரித்தல் போன்ற எண்ணத்தையும் இது உருவாக்குகிறது. சரியான தருணத்தில் குழுமியிருந்த நபர்களுடன் எடுக்கப்பட்ட செல்பி மலரும் நினைவுகளால் மனம் நிறைக்கிறதாம். ஒரு சிலருக்கு அவர்களது அடுத்த பயணம் அல்லது சிலிர்க்கும் தருணம் வரை அவை தான் சுயவிவர (Profile) புகைப்படம்.
செல்பியால் ஏற்படும் தீமைகள்

படம் – buzzsouthafrica.com
அதிகப்படியான செல்பி புகைப்படங்களுடன் அவற்றின் விருப்பு மற்றும் பின்னூட்டங்களுக்காக காத்திருப்பதால் தன் உணர்வே இல்லாமல் அதில் மூழ்கிவிடுகின்றனர் என்பது ஒரு மனோதத்துவ ரீதியான குற்றச்சாட்டு. சமூகத்தில் ஆழமற்ற தன்மையை இம்மாதிரியான செயல் வெளிக்காட்டுவதாக மனோதத்துவ மருத்துவர்கள் கூறுகின்றனர். சில பெண்கள் அரைகுறை உடைகளுடன் தோழிகளுடன் நடனமாடுவது போல செல்பி புகைப்படங்கள் எடுத்துக்கொள்கின்றனர். இவ்வாறான தோற்ற வெளிப்பாடு பலரின் கவனத்தை ஏற்பதற்கான முயற்சியில் ஒன்று என்றாலும் அது காலச்சார சீரழிவுகளில் ஒன்றாகும். சமூக ஊடகங்களில் உலவும் படங்கள் சிலரின் பிற்கால வாழ்க்கைக்கு ஊறாக வந்து முடியும்.
ஆபத்துக்களை தடுக்கும் வழிமுறைகள்

படம் – uzzsouthafrica.com
மன இறுக்கத்தை குறைக்கவும், மாற்றம் மற்றும் புத்துணர்ச்சிக்காகவும் செல்வது சுற்றுலா. தளர்வான மனநிலையில் இருக்கும்பொழுது பாதுகாப்பு பற்றியும் கவனிக்க தவறிவிடுகின்றனர் பலர். ஆபாயமான அல்லது ஆபத்து விளைவிக்கக்கூடிய பகுதிகளில் தங்களது துணிச்சலை மிகக் குறைவாக வெளிப்படுத்துதல் சூமுகமான சூழலைத் தரும். சமூக வலைத்தள படங்களை பதிவிறக்கம் செய்து தவறாக சித்தரிக்கும் மென்பொருளும் இலவசமாக இணையத்தில் உள்ளது. அகவே இயன்றவரை சுயகட்டுப்பாடு மற்றும் எச்சரிக்கை உணர்வுடன் இருப்பது மூலம் தேவையில்லாத பிரச்சனைகளை தவிர்க்கலாம்.
இறுதியாக, உங்கள் நண்பர் இப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்றால் உடனடியாக அவரை இதிலிருந்து வெளிக்கொணருங்கள். சரியான விருப்பு கிடைக்கவில்லை என்றால் ஹாரர் செல்பி என்று பெயரிட்டு உங்கள் மண்டையை பிளக்க முயற்சிக்கக் கூடும்!