Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

Booker பரிசுபெற்ற Life of Pi நாவல் வாசித்ததுண்டா?

 

ஒரு மிகப்பெரிய வெற்றிக்கு பின்னர் ஆத்மார்த்தமான உழைப்புகள் பின்நிற்கின்றன. புக்கர் பரிசு பெற்ற யான் மார்டேலின் Life of Pi என்ற நாவலிலும் மிகப்பெரிய, தீவிரமான உழைப்பு ஒன்று பின்நிற்கின்றது. 1963 இல் கனடாவில் பிறந்த யான் மார்டேலின் நான்காவது நூலே என் பெயர் பட்டேல். தனது எழுத்து வாழ்க்கைப்பற்றி சொல்லும்போது அவர் பின்வருமாறு சொல்கின்றார். 

“ நான் பட்டினியால் வாடியபோது இந்த புதினம் பிறந்தது. விளக்குகிறேன். 1996 வசந்தகாலத்தில் கனடாவில் எனது இரண்டாவது புதினம் வெளியானது. சரியாக விற்கவில்லை. மதிப்புரை வழங்கியவர்கள் குழப்பினார்கள். அல்லது மேலோட்டமாக புகழ்ந்து உள்ளதையும் கெடுத்தனர். வாசகர்கள் ஓரங்கட்டி விட்டனர். ஊடகங்களில் நான் காட்டிய குரங்காட்டி வித்தைகளெல்லாம் பலிக்கவில்லை. புத்தகம் நகர்ந்தபாடில்லை. ஆடத்தெரியாத யாருமே அணியில் சேர்த்துக்கொள்ளாததால் ஓரங்கட்டி நிற்பதைப் போல கடைகளில் என்புத்தகம் சீந்துவாரற்று கிடந்தது. விரைவிலேயே அமைதியாக மறைந்தும் போயிற்று. 

தோல்வியால் துவண்டுபோகவில்லை. மற்றொரு கதைக்கான பணியில் ஈடுபட்டிருந்தேன். கதைக்களம் 1939 ஆம் ஆண்டு போர்ச்சுகல், அமைதியிழந்திருந்தேன். அத்துடன், என்னிடம் சிறிதளவு பணம் மட்டுமே இருந்தது. பம்பாய்க்கு பறந்தேன். இங்கே மூன்று விஷயங்களை புரிந்துகொள்ளுதல் பொருத்தமாக இருக்குமென்று தோன்றுகிறது. இந்தியாவின் வரையறைக்குட்பட்ட வாழ்க்கை முறை, எந்தவொரு ஜீவனிடமிருந்தும் அமைதியின்மையை அடித்துதுரத்திவிடும். அங்கே சிறிதளவு பணத்தைக்கொண்டு நீண்ட நாட்களைக் கடத்திடலாம். அத்துடன் 1939 ஆம் ஆண்டுபோர்சுகல் பின்புலத்தில் புதினம் படைப்பதற்கு 1939 ஆம் ஆண்டு போர்ச்சுகல்லுக்கு சென்றாக வேண்டிய அவசியமில்லை…. “இப்படித்தான் யான் மார்டேல் தனது புதிய நாவலுக்கான கதையைத்தேடி மும்பை, வடஇந்தியாவில்  பல இடங்கள் என அலைந்து திரிந்துவிட்டு இறுதியாக சென்னைக்கு தெற்கே தமிழ்நாட்டின் கடற்கரையில் அமைந்த சிறிய யூனியன் பிரதேசமான பாண்டிச்சேரிக்கு வருகின்றார். 

Life of Pi நாவலின் எழுத்தாளர் Yann Martel  –  புகைப்பட விபரம்- IndianTv.com

அங்கு தனது நாவலுக்கான கதையைத்தேடி அலைந்து திரிகிறார். அப்படி ஒருநா‌ள் எதேட்சையாக இந்தியன் காபி ஹவுஸில் ஒரு காபியை குடித்துவிட்டு பில்லுக்காக 

காத்திருக்கிறார். எப்போதும் வெளிநாட்டில் இருந்து வருகிற பயணிகள்மீது இந்தியர்களுக்கு ஏதாவது தொடர்பில் பேச்சு கொடுப்பதற்கு ஆசையாக இருக்கும். யான் மார்டின் ஒரு நாவலுக்கான கதைக்கருவை தேடியலைகிற ஒரு எழுத்தாளர் என தெரிந்துக்கொண்ட ஒரு வயோதிபர் அந்த காபி ஹவுஸில் அவருக்கு ஒரு கதை சொல்ல நினைப்பார். “ என்னிடம் ஒரு கதை இருக்கிறது. அது உங்களுக்கு கடவுள் நம்பிக்கை ஏற்படுத்தும். “ என அவர் தனது உரையாடலை மார்டினிடம் ஆரம்பிப்பார். வழமைப்போல இந்தியாவின் பழைய கதைகள் எதையாவது தலையில் கட்டிவிடுவாரோ என நினைக்கும்போது, உரையாடல் நீளும்போது மார்டின் உணர்ந்துக்கொள்வார், ஏதோ ஒரு உன்னதம் அந்த மனிதனிடம் இருக்கின்றது என்று. பாண்டிச்சேரி தாவரவியல் பூங்காவைப்பற்றி விபரிக்கின்ற அவர் “ நீங்கள் கண்டிப்பாக அவனுடன் பேசவேண்டும் என்று சொல்லி மார்ட்டினுக்கு ஒரு மனிதனை அறிகப்படுத்துவார். அந்த மனிதனின் தொலைபேசி எண்ணை கொடுப்பார். மிகப்பெரிய சிரமங்களுக்கு மத்தியில் டொரண்டோ திரும்பிய பிறகு அவரை தொடர்பு கொள்வார். அந்த மனிதனிடம் அழகான ஒரு கதை இருந்தது. அது நம்பிக்கைக்கு அப்பாற்பட்டதாக, அமானுஷ்யமானதாக இருந்தது. 

அந்த கதை பை பட்டேல் பற்றியது. அவன்தான் நம் கதையின் நாயகன். வாழ்வில் எல்லாவற்றையும் இழந்ததன் பின்னர் வாழ்வை எவ்வாறு எதிர்கொள்வது என்பது பற்றிய ஒரு அருமையான கதை. இந்த உலகம் யாரிடம் எல்லாம் சேர்ந்து  வாழ முடியாது, எந்த சூழலில் எல்லாம் மனிதனால் வாழ முடியாது என்று விபரிக்கின்றதோ, முக்கியமாக விலங்குகளுடனான மனிதனின் உறவை, மற்றும் மரணத்தின் விளிம்பு வரை சென்று அந்த மரணத்தை வெற்றிப்பெற்ற இளைஞன் பற்றிய அருமையான நாவல் இது. கதை இதுதான்,

 இதுவரை தனித்த ஆட்சி பிரதேசமாக இருந்த பாண்டிச்சேரி சுதந்திரத்தின் பின் 1954, நவம்பர் முதலாம் திகதி இந்தியாவுடன் இணைத்துக்கொள்ளப்பட்டது. பாண்டிச்சேரியில் இருந்த மிகப்பெரிய தாவரவியல் பூங்காவின் ஒருப்பகுதி வணிக ரீதியான வாய்ப்புகளை ஊக்குவிப்பதற்காக வாடகைக்கு விட முடிவு செய்யப்பட்டது. அப்படி இந்தியாவிற்கு கிடைத்ததே பாண்டிச்சேரி விலங்கியல் பூங்கா. உயிரியல் கோட்பாட்டின்படி உறுதியாக அமைக்கப்பட்ட விலங்கியல் பூங்கா மிகப்பெரிய பரப்பளவை கொண்டதாக இருந்தது. 

பாண்டிச்சேரி தாவரவியல் பூங்கா முழுவதும் சுற்றுவதற்கு ஒரு தொடர் வண்டியின் தேவை இருக்கிற அளவு மிகப்பெரிய  பூங்காவாக அது இருந்தது. வெப்பமும் காற்றில் ஈரப்பதமும் கலந்த காலநிலை. எண்ணற்ற மரங்கள், மலர்கள், சிறுவர்கள், காதலர்கள், முதியவர்கள் என யாவருக்கும் ஏற்ற இடமாக இருந்த அந்த பூங்காவில்தான் பை பட்டேலின் விலங்கியல் பூங்காவும் அமைந்திருந்தது.

கதைக்களம்: பாண்டிச்சேரி விலங்கியல் பூங்காவின் ஒரு பகுதி – புகைப்பட விபரம் – The guardian.com

பட்டேலின் தந்தை பூர்வீகமாக மிகப்பெரிய உணவு விடுதியை நடத்தி வருபவர்.ஆனால் அவருக்கு விலங்கினங்கள் மீது பேரார்வம் இருந்தது. அதுதான் அந்த விலங்கியல் பூங்கா நடத்தும் தொழிலில் அவரை ஈடுபடுத்த தூண்டியது.நினைத்து பாருங்கள் விலங்கியல் பூங்காவுக்கும், உணவு விடுதிக்கும் ஏதேனும் தொடர்பிருக்கின்றதா? இல்லை. எல்லாம் புதிது. ஒரு உணவு விடுதியில் ஒரு வாடிக்கையாளருக்கு உணவு தயாரிப்பது போலில்லை, மிருகங்களுக்கான உணவை தயாரிப்பது. ஒரு விடுதி விருந்தினரின் அறையை சுத்தம்செய்து அவரது படுக்கையறையை மாற்றுவது போலில்லை விலங்குகளின் இருப்பிடத்தை சுத்தம் செய்வது. விலங்குகள் குடிகாரர்களை காட்டிலும் படுமோசமான தூய்மையற்றவர்கள் என்பதால் தூய்மைப் பணி ரொம்பவே அதிகமாக இருந்தது. மிருகங்களின் பாலியல் தேவையை முறைப்படி பூர்த்தி செய்யாவிட்டால் ஏற்படும் விளைவுகள் சாதாரணமானதல்ல. அது ஒருப்போதும் உணவு விடுதியை நடத்துவதற்கு நேர்எதிர்மாறானது. ஆனால் அந்த சவாலான தொழிலை  மனம்விரும்பி செய்யத்தொடங்குகிறார் பை பட்டேலின் தந்தை.

பாண்டிச்சேரி விலங்கியல் பூங்காவை பை பட்டேலின் தந்தை எடுத்து நடத்த தொடங்கியபோது பை மிகவும் சிறிய பையனாக இருந்தான். வாழ்வு மிகப்பெரிய இழப்புகளை, அதிர்வுகளை அவனுக்கு தந்திருந்தது. முற்றிலும் எதிர்பார்க்காத  திருப்பங்களை அது அவனுக்கு நிகழ்த்தியிருந்தது. ஆனால் இன்றும் பசுமையாக அவன் நினைத்துப்பார்ப்பது பாண்டிச்சேரி விலங்கியல் பூங்காவில் அவன் இருந்த நாட்களைத்தான். ஒரு இளவரசனைப்போல அவன் அங்கு வாழ்ந்தான். சிறுவர்களுக்கு விலங்கியல் பூங்கா என்பது ஒரு கனவு. எப்போதாவது வருடத்தில் ஒருநாள் அது நிகழும். ஆனால் பை பட்டேல் ஒரு இளவரசன் போல அங்குதான் வளர்கின்றான். அவனை கம்பீரமாக எழுப்புகின்ற அழைப்புமணி சிங்கங்களின் கர்ச்சனைகளாக இருந்தது. தினந்தோறும் அதிகாலை ஐந்தரையில் இருந்து ஆறுக்குள் தலை நிமிர்த்தி பிடரியைக் குலுக்கி சிங்கங்கள் எழுப்பும் கர்ச்சனை ஒலி, காலை உணவு நேரத்தை காட்டுகிற குரங்குகளின் கூச்சலும், மைனாக்களின் கீச்சொலியும், கொண்டை சேவல்களின் கூப்பாடோடு விடிகிற காலை.  பாடசாலை செல்கிறப்போது அம்மாவுடன் சேர்ந்து வழியனுப்பி வைக்கிற பலநூறு மிருகங்கள் பறவைகளுடன் ஒரு வன ராஜா போன்ற வாழ்வு பை பட்டேலுக்கு வாய்த்திருந்தது.  

பாண்டிச்சேரியில் இந்த விலங்குகளை வைத்து சர்க்கஸ் கம்பனி நடத்துகிற தந்தையிடம் வளர்கிற பை மிருகங்களின் உளவியலை கற்றிருப்பான். பை ஒரளவு பெரியவன் ஆனதும் அவனுடைய தந்தை சர்க்கஸ் கம்பனியை விற்றுவிட்டு கனடா செல்வதற்கு ஆயத்தமாகின்றனர். மிருகக்காட்சி சாலைகளை நடத்துவது போலில்லை, அந்த தொழிலை விட்டு வேறிடம் செல்வது, மிருகங்களை நிட்சயித்த விலையில் விற்றுக்கொள்ள முடியாது. ஏகப்பட்ட சட்ட சிக்கல்கள், ஓராயிரம் சட்டபுத்தகங்களில் கையொப்பம் இடவேண்டிய தேவை இருக்கிறது. இப்படி எல்லாவற்றையும் ஓரளவு முடித்துக்கொண்டு  ஜப்பானை சேர்ந்த ஒரு ஒரளவு பெரிய கப்பலில் பையின் குடும்பம் கனடாவை நோக்கி போகின்றது. விற்று முடித்த மிருகங்கள் போக சிலதை அவர்கள் கனடா கொண்டு செல்வார்கள். 

எதிர்பாராத நேரம்  பை பட்டேலும் அவர்களது குடும்பமும் சென்ற கப்பல் கடலில் புயலில் சிக்கி கவிழ்ந்து விடுகிறது.  எதிர்பாராத நேரத்தில் சற்றும் எதிர்பார்க்காத சம்பவங்கள் பை பட்டேலின் வாழ்வில் நடக்கும். அவனது மொத்த குடும்பமும் அந்த விபத்தில் இறந்து விடுகிறார்கள். நடுக்கடலில் உயிருக்கு தத்தளிக்கிற பை சிறிய படகு ஒன்றில் ஏறி தப்பிக்க முயல்வான். அதே கப்பலில் பயணித்த எல்லா மிருகங்களும் இறந்துவிட. அதில் பயணித்த சில மிருகங்கள் உயிர்தப்பி பட்டேல் உயிர் தப்பிக்க முயல்கின்ற சிறிய படகில் ஏறிக்கொள்ளும். அதில் ஒரு பக்கம் பை மறுபக்கம்  முரட்டுத்தனமான ஒரு சிறுத்தை, ஒரு காயமடைந்த வரிக்குதிரையும், ஏறிக்கொள்ளும். உயிர்வாழ்தலுக்கான போராட்டம் அங்கு நிகழும். அந்த முரட்டுத்தனமான சிறுத்தை பசி எடுக்க எடுக்க வரிக்குதிரை, குரங்கு என சாப்பிட தொடங்கும். பிறகு தான் தெரியவரும் அந்த சிறிய படகுக்கு உள்ளே ஒரு வங்காள புலி ஒன்று இவ்வளவு நாள் அவர்களுடன் மறைந்து இருந்தது என. அந்த புலியின் பெயர் ரிச்சர்ட் பார்கர். ரிச்சர்ட் பார்க்கர் கடைசியில் சிறுத்தையை கொன்று தின்று விடும். இப்பொழுது அந்த நடுக்கடலில் அந்த படகில் இருப்பது பை பட்டேலும் ரிச்சர்ட் பார்க்கர் மட்டுமே.  ரிச்சர்ட் பார்க்கர் பை பட்டேலை கொன்றுவிடுமா அல்லது பட்டேல் ரிச்சர்ட் பார்க்கரை கொன்றுவிடுவானா இதுதான் கதை.

திரைப்படத்தின் ஒரு காட்சி – புகைப்பட விபரம் -www.oscarchamps.com

உண்மையில் மிருகக்காட்சி சாலை பற்றிய சாமான்ய மனிதனின் சிந்தனைகளை இந்த படம் மாற்றியமைத்தது. மனிதனுக்கும் மிருகங்களுக்குமான உறவு, எல்லை எதுவரையானது? கடலில் ஆபத்தில் மாட்டிக்கொள்கிற மனிதனால் மீளமுடியுமா? வாழ்வு, சமயம், மரணம் எல்லாம் எதுவரையானது. உண்மையில் அவை எவற்றை சொல்ல வருகின்றன என்பதை யான் மார்ட்டெலின் Life Of Pi வித்தியாசமான முறையில், அவருக்கே உள்ள கதை சொல்லும் பாணியில் சிறப்பாக சொல்லி செல்கிறது. பரவாயில்லை. இந்திய தேசம் முழுவதும் அலைந்து யான் மார்ட்டெல் நல்ல சுவாரஸ்யமான கதையொன்றை அதுவும் நிஜக் கதை ஒன்றை  சுவாரஸ்யமான நாவலாக எழுதியிருக்கிறார். 

Related Articles