மாறிவரும் உலகில் நேற்று இருந்த வழமைகள் இன்று இருப்பதில்லை. நடைமுறைகள், தொழில்நுட்பங்கள், அரசியல் மாற்றங்கள், காலநிலைக் குழப்பங்கள், தொழிற்துறை மாற்றங்கள் இப்படி ஒவ்வொரு பரிமாணத்திலும் காலமாற்றம் நிகழ்ந்தவண்ணமே உள்ளது. காலமாற்றம் திணிக்கின்ற கட்டாயங்களை அங்கீகரித்து, சீரணித்து, முன்செல்லும் சமுதாயமே தனது இருப்பை உறுதிசெய்துகொள்ளும் என்பது வரலாற்று உண்மை.
சமுதாயம் என்ற இக்கட்டமைப்பில் உள்ள ஒவ்வொருவரும் காலமாற்றத்தை எதிர்கொள்ளத் தயார்நிலையில் இருப்பது சாத்தியமில்லை. மேலும் வாழ்க்கை எமக்கு எவ்வாறான சவால்களை முன்வைக்கப்போகிறது என்பது அச்சவால்கள் எம்மை வந்துசேரும்வரை நாம் அறிந்திருப்பதும் இல்லை. இருந்தாலும் சவால்களை வெற்றிகொள்ளவும், காலமாற்றத்துக்குப் பொருத்தமான வாழ்க்கைக்கோலத்தை அமைத்துக்கொள்ளவும், நிலைமைகளை ஆராய்ந்து அதன்மூலம் தெளிவுபெறவும், தமது ஆளுமையை ஏற்றவிதத்தில் பயன்படுத்தவும் முறையான கல்வி அவசியம்.
நாட்டுக்குத் தேவையான, நாட்டின் அபிவிருத்தியில் உறுதுணையாய் இருக்கக்கூடிய பெறுதியான ஆளுமைகளை உருவாக்குவது எந்தவொரு சமூகத்தினதும் தலையாய கடமை. இச்சமூக அமைப்பில் பாடசாலைகளின் பங்கு அளப்பரியது. இவ்வாறான ஆளுமைகள் பாடசாலை மட்டத்திலேயே இனம்காணப்பட்டு பல்வேறுபட்ட துறைசார் தேர்ச்சிகளை அடைவது இதற்கான அடிப்படைத் தேவையென்றால் அது மிகையல்ல. ஒவ்வொரு மாணவனையும் எதிர்காலச் சவால்களை எதிர்கொள்ள வளப்படுத்தும் பொறுப்பு பாடசாலைகளுக்கும் பெற்றோர்களுக்கும் உள்ளது. இன்றைய கல்வி முறைமை இத்தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு எவ்வாறான முன்னாயத்தங்களை ஏற்படுத்தி வைத்திருக்கிறது? நாட்டின் கல்வித்திட்டத்தில் ஏற்படுத்தப்படும் மாற்றங்கள் மட்டும் இப்பிரச்சினையை எதிர்கொள்ளப் போதுமானதா? இப்படிப் பல கேள்விகளுக்கு விடையளிக்கப்படவேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.
இலங்கையில் தொழில்துறைகளும் மனிதவளத்துக்கான கேள்வியும்
இன்றைய உலகில் பல்வேறுபட்ட தொழில்துறைகள் வளர்ச்சியடைந்துள்ள நிலையில், மாணவர்களும் பல்வேறுபட்ட கல்வித் துறைகளைத் தேர்ந்தெடுத்துக் கல்விகற்கின்றனர், அதன்மூலம் தங்கள் கல்வித் தகைமைகளை வளர்துக்கொள்கின்றனர். இருத்தும் இன்று வளமான, தகுதியான ஆளுமைகளை தங்களது தொழில்தேவைகளுக்கு தெரிவுசெய்வதில் தொழில்துறை அதிகாரங்கள் மிகுந்த சிரமங்களை எதிர்நோக்குகின்றன என்னும் உண்மை அநேகர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
வேலைவாய்ப்புக்கள் இருந்தும் வேலையில்லாத் திண்டாட்டம் மேலோங்க இதுவே முக்கிய காரணம். பெரும்பாலான மாணவர்கள் எந்தளவு தங்களது கல்வித் தகைமைகளை பெற்றுக்கொள்வதில் ஆர்வம்காட்டுகின்றனரோ அந்தளவு அவர்களது கல்வித் தகைமைக்கான தொழில்துறை சார்ந்த சமூக அறிவை வளர்த்துக்கொள்ளத் தவறுகின்றனர். எந்தவொரு தொழில்துறையிலும் ஈடுபடும் ஒருவர், சமூகம்சார்ந்த அரசியல், பொருளாதார, தொழில்நுட்ப மாற்றங்கள் மற்றும் அதன் விளைவுகள் பற்றிய அறிவு இல்லாதவராயிருப்பின், தனது கல்வித் தகைமையை உரிய விதத்தில் பயன்படுத்திக்கொள்வது சாத்தியமன்று என்பது நிதர்சன உண்மை.
இன்றைய இளைய சமுதாயத்தின் பெரும்பாலான மாணவர்கள் தங்கள் உயர்கல்வியை முடித்து தொழில் சந்தைக்குள் காலடி எடுத்துவைக்கும் நிலையினிலே தாங்கள் வாழும் சமூகத்தின் நீள அகல ஆழங்களை அறிய முனைகின்றனர். சமூக ஊடக வலைத்தளங்களின் செயற்பாட்டில் தங்களை ஆர்வத்துடன் ஈடுபடுத்திக்கொள்ளும் மாணவர்கள், குறித்த தளங்களில் பகிர்ந்துகொள்ளும் அல்லது உரையாடும் விடையங்கள் எந்தளவு அவர்களது சமூகம்சார்ந்த தேடல்களுக்கு வழிவகுக்கும் என்பது கேள்விக்குறி. சுருங்கக்கூறின் அவர்கள் மாணவர்கள் என்கின்ற கூட்டுக்குள்ளேயே தமது உயர்கல்விக் காலம்வரை வாழ்ந்து முடிக்கின்றனர். அக்கூட்டை உடைத்து தொழில்சந்தைக்குள் சுயாதீனமாக விடப்படும்போது அச்சூழலுக்கு இசைவாக்கமடைய அவர்கள் கொண்டுள்ள ஆளுமைப் பண்புகள் போதாமலிருப்பது இன்றைய மாணவர்கள் மற்றும் தொழில்துறை கொண்டுள்ள துர்பாக்கியநிலை. இந்நிலை எமது நாட்டின் மனிதவளத்துக்கான முக்கிய பிரச்சினையாக விஸ்வரூபம் எடுக்கும் நாள் வெகு தொலைவிலில்லை.
நாளுக்குநாள் அதிகரித்துச்செல்லும் திறன்களுக்கான கேள்வி, அதன் தரம் போன்றவற்றை நிவர்த்திசெய்யத் தகுதியான மனிதவளம் இல்லாமை உருவாக்குகின்ற இடைவெளி அதிகரித்துக்கொண்டே செல்வது, எமது நாடு எதிர்நோக்கவுள்ள மிகப்பெரும் சவால். அதுமட்டுமன்றி, தங்களது இளமைப் பருவத்தின் மிக நீண்ட காலப்பகுதியையும், பெருமளவான பணத்தையும் தங்களது கல்விக்காக செலவிடும் மாணவ சமுதாயம் தாம் முதலீடுசெய்த காலத்துக்கும், பணத்திற்கும் ஏற்ற விளைவை பெற்றுக்கொள்ளுமா என்ற கேள்வியையும் புறந்தள்ளிவிட இயலாது.
இவ்விடைவெளிக்கான காரணங்கள் என்ன
மாணவர்களது ஆளுமைப் பண்புகள், மற்றும் அவர்களுக்கே உரித்தான விஷேட திறமைகள், உலகில் இன்று அனைவரிடமும் எதிர்பார்க்கப்படும் படைப்பாற்றல், புத்தாக்கத் திறன் போன்றவை மாணவ வாழ்க்கையில் இடைநடுவே சொருகிவிடப்படக்கூடிய பிரத்தியேக கற்கைநெறி அல்ல. மாறாக அவர்களது திறமைகள் அவர்களது பிறப்பிலிருந்தே நெறிப்படுத்தப்படவேண்டிய ஒன்று. வேறுபட்ட சூழ்நிலைகளிலும் குடும்ப அமைப்புக்களிலும் வாழும் பிள்ளைகள் அனைவருக்கும் நெறிப்படுத்தப்பட்ட வழிகாட்டல் முதன்மையாகக் கிடைப்பது பாடசாலையிலேயே. பாடசாலையினூடான ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்விப் பருவத்திலேயே இவ்வாறான ஆளுமை விருத்திகள் வளப்படுத்தப்படல் அவசியம்.
ஒரு தலைவனாக, சமூக சேவகனாக, பிரச்சனைகளை தனக்கேயான பாணியில் திறம்பட அணுகுபவனாக, தனது கடமைகளை உரிய முறையில் செவ்வனே நிறைவேற்றுபவனாக, இறைவன் தனக்கென பிரத்தியேகமாக அமைத்த திறமையைக் கண்டறிந்து அதனை விருத்திசெய்பவனாக, தேக ஆரோக்கியம் உள்ளவனாக, தலைமைத்துவத்திற்கு கட்டுப்படுபவனாக, கூட்டாகச் சேர்ந்து இயங்குபவனாக, பல்வேறுபட்ட குழுக்களில் அதனதன் பண்பறிந்து சேவையாற்றுபவனாக இப்படி பல பரிணாமங்களை நெறிப்படுத்தும் பயிற்சி நிலையமே பாடசாலை.
இருப்பினும், பாடசாலைக் கல்வியைப் பொறுத்தமட்டில், பாடவிதானம் ஓர் எளிய கூறல்ல, அங்கு மாணவர்களைவிட ஆசிரியர்கள் விழிப்போடும் உரிய மேம்படுத்தல்களோடும் தொடர்ந்து தானும் கற்று மாணவர்களையும் வழிப்படுத்தும் உயரிய பொறுப்பிலுள்ளனர். இச்செயன்முறையில் ஏற்படுகின்ற இடைவெளிகளை நிவர்த்திசெய்து, மாணவர்களை பரீட்சைக்குத் தயார்படுத்துவதில் பாடசாலையைச் சேர்ந்த அனைத்துத் தரப்பினரும் பெரும் பிரயத்தனங்களை எடுக்கின்ற நிலை மறுக்க இயலாதது. பெறுபேறுகளே ஓர் மாணவனது எதிர்காலத்தைத் தீர்மானிக்கின்ற விடயமாக நம்பப்படுகின்ற இக்காலகட்டத்தில் மாணவர்களது பரீட்சை அடைவுகள்மீது பாடசாலைகள் கொண்டிருந்த கரிசனம், இன்று பெறுபேறுகளைப் பெறுவதே முழுமுதல் நோக்கு என்ற அடிப்படையில் அவை செயற்பட்டுவரும் நிலைக்கு வழிவகுத்திருக்கின்றது. பெற்றோரும் சமூகத்தினரும் ஒரு பாடசாலையின் புலமைப்பரிசில், சாதாரணதரம், உயர்தரம் போன்ற பரீட்சை முடிவுகளை வைத்தே ஒரு பாடசாலையின் தரத்தை நிர்ணயிக்கின்றனர். அம்முடிவுகள் தமது சமூகத்தின் அபிவிருத்திக்கு ஆற்றப்போகும் பங்களிப்பின் தரம் பற்றி அநேகர் கவலைப்படுவதாயில்லை.
இலங்கையின் கல்வித்திட்டமும் மாணவர் ஆளுமை விருத்தியும்
ஆனால் எமது கல்வித்திட்டம் இத்தேவைகளை எதிர்வுகூறியே வடிவமைக்கப்பட்டுள்ளது. இலங்கைக் கல்வியமைச்சினால் 2013 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட பாடசாலைமட்டத் திட்டமிடல் வழிகாட்டியின் அடிப்படைக் கருப்பொருட்களில் இரண்டாவது இதையே சுட்டி நிற்கிறது. பாடசாலை மட்டத்திலேயே பாடவிதானத்துடன் சேர்த்து “Hidden Curriculum” என்று மேற்கோளிடப்பட்ட செயன்முறை வேலைகள் (Practical Work), ஒப்படை வேலைகள் (Project Work), புறக்கீர்த்தியச் செயற்பாடுகள் (Extra-Curricular Activities), மற்றும் சமூகவியல் செயற்பாடுகள் (Social Activities) போன்றவை பற்றிய வலியுறுத்தல்கள் எதிர்காலத்தில் தொழில்துறை மற்றும் வாழ்க்கையில் எதிர்கொள்ளவேண்டிய சவால்களுக்காய் மாணவர்களை பாடசாலைமட்டத்திலேயே பண்படுத்துவது குறித்துப் பேசுகிறது.
பாடசாலைக்கல்வியோடு பொதுவாக நோக்கும்போது இவ்வாளுமைசார் திறன்கள் மற்றும் அவைசார்ந்த செயற்பாடுகள் பெரிதும் சோபிப்பதில்லை. சொல்லப்போனால் அவை பெரிதாகப் பொருட்படுத்தப்படுவதில்லை. மாறாக, பாடவிதானச் செயற்பாடுகளுக்கு விளைவிக்கப்படும் இடையூறாகவே அவை பெரும்பாலும் கருதப்படுவதுண்டு. பாடவிதானம் எந்தளவு முக்கியமோ அதேயளவு இவ்வாளுமைசார் செயற்பாடுகளும் முக்கியம் என்பது இன்னும் உணரப்படாமலேயே இருக்கிறது.
ஆளுமைப் பண்புகளுடன்கூடிய பெறுபேறுகளையே உலகம் எதிர்பார்த்துக் காத்திருக்கும் நிலையில், ஆளுமைகளை வேறாகவும் பெறுபேறுகளை வேறாகவும் பிரித்துவைத்திருக்கிறது எமது சமூகம். புறநடையாக ஒருசில மீத்திறன் மாணவர்கள் இவ்விரண்டிலும் சோபிப்பதுண்டு. அதேபோன்று வேறுபட்ட துறைசார் ஆளுமைகள் இத்தீவிர போட்டியில் நசுங்கிக் காணாமல்போவதும் உண்டு.
உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகள் ஆண்களுக்கா பெண்களுக்கா? – இலங்கையில் உயர்கல்வி
ஏலவே “உயர்தரப் பெறுபேறுகள்” குறித்த கட்டுரையில் அரசின் அனைத்து மாணவர்களுக்குமான இலவச உயர்கல்வி வழங்கமுடியாத நிலைபற்றியும், உயர்தரப் பரீட்சைமூலம் அரசு எவ்வாறு உயர்கல்விக்கான மாணவர்களை உள்வாங்கிக்கொள்கிறது என்பது பற்றியும் ஆராய்ந்திருந்தோம். அத்தோடு அரசினால் வழங்கப்படுகின்ற உயர்கல்வி துறைகளின் பல்வகைமைக்குள் மனிதகுலத்தின் ஆளுமைப்பன்புகள் மற்றும் திறமைகள் மொத்தமும் உள்ளடக்கப்படுதலும் சாத்தியமன்று. அதன்படி, அதிசிறந்த பெறுபேறுகள்மூலம் உயர்கல்வியில் உள்வாங்கப்படும் சிறுதொகையினர் தவிர ஏனைய பெரும்பகுதி மாணவர்களுக்கு அவர்களின் பாடசாலைச் சுவருக்கு வெளியேயான எதிர்காலத்தை எதிர்கொள்ள பாடசாலைமட்டத்தில் எவ்வாறான பயிற்சிகள் வழங்கப்படுகின்றன? புறநடையான திறமைகளை இனம்கண்டு அவற்றை வளப்படுத்துவதில் பாடசாளைகளது பங்கு மட்டும் போதுமானதா?
பெற்றோர்கள் இதுதொடர்பாக விழிப்புணர்வுடனும் புரிந்துணர்வுடனும் நடந்துகொள்ளத் தயாராக வேண்டும். பரந்து விரிந்த உலகின் விஸ்தீரணத்தில் உங்கள் பிள்ளைகள் பெறப்போகும் பேறுகளை உங்கள் நாட்டின் பொருளாதாரமும், அரச கல்வி கல்லூரிகளின் பல்வகைமையிலுள்ள குறைபாடும் மட்டுப்படுத்தாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.