Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

இலங்கையின் ஆடம்பரப் பிச்சைக்காரர்கள்

கடந்த வாரத்தில் ஊடகங்களில் மிகப்பெரும் செய்தியாக உருவெடுத்திருக்க வேண்டிய ஒரு விடயம், வெறுமெனே சிறு அறிவிப்புடன் அடங்கி போய்விட்டது. அதற்கு, அரசின் மிகசிறந்த தந்திரோபாயமிக்க காய்நகர்த்தலும் காரணம் கூட!

நவம்பர் 27ம் திகதி இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஒரு அறிவிப்பினை வெளியிட்டார். பாராளுமன்றத்தில் அங்கம்வகிக்கும் அனைத்து உறுப்பினர்களுக்கும் மாதாந்தம் 100,000/- கொடுப்பனவு தொகையாக வழங்கப்படும் என தெரிவித்தார். இவை, பாராளுமன்ற உறுப்பினர்களின் சொந்த நலனுக்காக வழங்கப்படவில்லை எனவும், பிரதிநிதிகள் பொதுவைபவங்களில் பங்குகொள்ளும்போது, மக்களுக்கு வழங்கவென மேலதிகமாக அவர்களின் ஊதிய தொகையுடன் வழங்கபடுவதாக தெரிவித்தார். மேலும், இந்த தொகை தேவைப்படாதவர்கள் முறையானவிதத்தில் அறிவிக்கும்பொருட்டு, அது கவனத்தில் கொள்ளப்படும் எனவும் குறிப்பிட்டார்.

நல்லாட்சி அரசு ஆட்சிப் பொறுப்பையேற்ற பின்பு, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் கூட, பாராளுமன்றத்தில் எதிர்ப்பை வெளியிடாத பிரதமரின் முதலாவது அறிவிப்பு இதுவாகத்தான் இருக்கக்கூடும். காரணம், ஆளுங்கட்சி மற்றும் எதிர்கட்சி என்கிற பாகுபாடு அற்றவகையில், இந்த அதிகரிப்பை அவர் முன்மொழிந்திருந்தமை ஆகும்.

 

(virakesari.lk)

நாட்டின் இணையில்லா கொடுப்பனவுகளையும் வசதிகளையும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனுபவிக்கிறார்கள் (virakesari.lk)

கடந்த மாதத்தில் பாதீட்டுடன், இந்த அதிரிப்பு தொடர்பான செய்தியை வெளியிட்டிருந்தால், இந்த செய்திக்கான முக்கியத்துவம் ஊடகங்களால் அதிகளவு வழங்கப்பட்டு பெசப்பட்டிருக்கக்கூடும் என்பதுடன், பல்வேறு சர்ச்சையான வாதங்களை மக்கள் மத்தியிலும் எழுப்பியிருக்ககூடும். இவற்றை தவிர்த்து, பாதீட்டு விவாதம் தொடர்பில், பாராளுமன்றம் கூடியுள்ள சந்தர்ப்பத்தில் எதிரணியில் உள்ளவர்களையும் ஒன்றினைத்து பிரதமர் இந்த தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறார். இந்த தீர்மானம், பாதீட்டில் உள்ள பெரும்பாலான தீர்மானங்கள் நடைமுறைக்கு வரமுன்னதாக, எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாக நடைமுறைக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது. இத்தனைக்கும் இந்தத் திட்டம், தீர்மானம் ஆகியவற்றை முன்னெடுத்த பிரதமர், குறித்த கொடுப்பனவு பாராளுமன்ற பிரதிநிதிகளின் கைகளிலிருந்து மக்களினை சென்றடைவதை உறுதிசெய்யக்கூடிய வழிமுறைகள் மற்றும் மாதாந்த கொடுப்பனவை அறிக்கையிட வேண்டிய வழிமுறை ஆகியவற்றை வெளியிடவுமில்லை அதுதொடர்பில் அக்கறை செலுத்தவுமில்லை. எனவே, மக்களுக்கான பணம் இதுவென கூறிக்கொண்டு, மக்கள் பிரதிநிதிகளிடம் வழங்குவது, வேலியே பயிரை மேய்ந்த கதைக்கு சமனானதாகவே இருக்கும்.

இவற்றுக்கு எல்லாம் மேலதிகமாக, நாம் தெரிவுசெய்து பாராளுமன்றத்திற்கு அனுப்புகின்ற பிரதிநிதிகள் உண்மையில், ஊதிய தட்டுபாட்டுடன் மக்களுக்கு கொடுப்பனவை வழங்க மேலதிக நிதியை எதிர்பார்த்துள்ள நிலையிலா இருக்கிறார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். எப்போதாவது, ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் எத்தகைய ஊதியத்தையும், சலுகைகளையும் மக்களுக்கு சேவையாற்றுகிறோம் என்கிற பெயரில் பெறுகிறார்கள் என சிந்தித்ததுண்டா ?

சம்பளத் திட்டம்

இலங்கையில் கிடைக்கப்பெறும் தரவுகளுக்கு அமைய, 1985ம் ஆண்டில் பிரதமரின் அடிப்படை சம்பளம் 8,000/- ஆகவும், பாராளுமன்ற பிரதிநிதியின் அடிப்படை சம்பளம் 5,850/- ஆகவும் அமைந்திருந்தது. இவற்றுக்கு மேலதிகமாக, இவர்கள் பொழுதுபோக்கு கொடுப்பனவு (Entertainment Allowance), மேலதிக கொடுப்பனவு (Additional Allowance) , விசேட கொடுப்பனவு (Special Allowance) , துணைக் கொடுப்பனவு (Supplementary Allowance) என்பன மூலம் சுமார் 2,500/- வரை மாதாந்த கொடுப்பனவாக பெற்று இருக்கிறார்கள். 1985ம் ஆண்டில் இலங்கையின் நாணயமாற்றுவிகிதம் ஒரு அமெரிக்க டொலருக்கு எதிராக 30/- ஆகவிருந்த காலமது. எனவே, குறித்த ஊதியத்தின் இன்றைய பெறுமதியை இலகுவாக கணக்கிட்டு கொள்ளமுடியும்.

(serendib.btoptions.lk)

பழைய பாராளுமன்றம் (serendib.btoptions.lk)

அதற்குப்பின்பு, பல்வேறுகாலங்களில் அடிப்படை செலவினங்களின் அதிகரிப்புக்கு ஏற்ப ஊதியங்களும் அதிகரித்ததுடன், சில முன்னைய அரசுகளும் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஊதியத்தில் மாற்றங்களை செய்திருந்தன. இவற்றின் அடிப்படையில், தற்போது இலங்கையின் பிரதமராக உள்ளவர் மாதாந்தோறும் சுமார் 71,500/- வையும், ஜனாதிபதியாக உள்ளவர் மாதாந்தம் சுமார் 97,500/-வையும் சம்பளமாக பெற்றுக்கொள்கிறார்கள். இவர்களை தவிரவும், சபாநாயகர் 68,500/-வையும், பாராளுமன்ற பிரதிநிதிகள் சுமார் 65,000/-வையும் சம்பளமாக பெற்றுக்கொள்கிறார்கள்.

இவற்றுக்கு மேலதிகமாக, நாட்டின் இணையில்லா கொடுப்பனவுகளையும் வசதிகளையும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனுபவிக்கிறார்கள். உதாரணமாக, பாராளுமன்றத்தில் மக்களை பிரதிநிதித்துவபடுத்தும் பிரதிநிதி இலங்கையின் எப்பாகத்திலிருந்தும் பாராளுமன்றத்திற்கு வருகைதர, எரிபொருள் கொடுப்பனவு (Fuel Allowance) வழங்கப்படுகிறது. உதாரணமாக, கொழும்பில் உள்ள ஒருவருக்கு மாதம்தோறும் 240 L அளவிலும், கிளிநொச்சியில் உள்ள ஒருவருக்கு சுமார் 640 L அளவிலும் இடத்துற்கேற்ப வழங்கப்படும். இவற்றுக்கு மேலதிகமாக, மக்கள் பிரதிநிதிகள் என்பதால், வரியற்ற முறையில் வாகன கொள்வனவுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. சிலசமயம், இவற்றை பாராளுமன்ற பிரதிநிதிகளின் பொறுப்பான அமைச்சே அமைச்சரின் தேவைக்கென கொள்வனவு செய்துவிடும். இவற்றுக்கு மேலதிகமாக, பாராளுமன்ற பிரதிநிதிக்கு குளிரூட்டப்பட்ட புகையிரத இருக்கைகள் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த சலுகைக்கு எல்லையுமில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.  விமான பயணங்களை மேற்கொள்ளும்போது, வருடத்திற்கு 40 முறை வணிக இருக்கைகளில் (Business Class) இலவசமாக பயணிக்க அனுமதியுண்டு. விமான பயணத்தில் பாராளுமன்ற பிரதிநிதி எந்தவித கட்டணமுமின்றி தனது மனைவியை அல்லது தனிப்பட்ட உதவியாளரை அழைத்து செல்லவும் முடியும்.

இவற்றுக்கு மேலதிகமாக, தொலைபேசி கொடுப்பனவாக 50,000/- மாதந்தோறும் வழங்கப்படுகிறது. அதுபோல, பிரதிநிதிகளின் வீட்டு மின்சாரத்தில் வருடம்தோறும் முதல் 50,000 அலகுகளுக்கு கட்டண விதிவிலக்கு வழங்கப்படுகிறது. பாராளுமன்ற பிரதிநிதியின் உதவியாளர் பிரதிநிதியுடன் பயணம் செய்யவென மேலதிகமாக 10,000/- பயண கொடுப்பனவு வழங்கப்படுகிறது. அத்துடன், பாராளுமன்ற பிரதிநிதிகளுக்கு சுகாதார காப்புறுதியாக வருடம்தோறும் 250,000/- வழங்கப்படுகிறது. ஆனாலும், குறித்த தொகையினை 500,000/-வாக அதிகரிக்க வேண்டும் என்கிற கோரிக்கையினை அமைச்சர் ஜோன் அமரதுங்க முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பாராளுமன்றத்தின் அமர்வுகளுக்கு வருகைதருகின்ற பிரதிநிதிகளுக்கு ஆரம்பத்தில் 500/- ஒவ்வரு அமர்வுக்கும் வழங்கப்பட்டநிலையில், தற்போது 2,500/- வரை அதுவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதுபோல, பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் மானிய விலையில் பாரளுமன்ற பிரதிநிதிகளுக்கு உணவு வழங்கவும், தேக நலன்கருதி இலவச உடல் மசாஜ் (Free Body Massage) பெற்றுக்கொள்ளவும் நிதி ஒதுக்கீடு செய்யப்படுள்ளது.

இத்தனை வசதிகளுடன், மக்களுக்கு குறைந்தது ஐந்து வருடங்கள் சேவையாற்றிய (?) பின்பு, ஆயுட்காலம் முழுவதும் ஓய்வூதியம் பெறுவதற்கும் இவர்கள் தகுதியுடையவர்களாகிறார்கள்.

இவர்களுக்கான நிதி எங்கிருந்து வருகிறது ?

ஒவ்வரு வருடமும் வரவு-செலவுத் திட்டத்தில் ஒவ்வொரு அமைச்சுக்கும் ஒதுக்கப்படுகின்ற செலவினங்களில் அனைத்து பிரதிநிதிகளுக்குமான செலவினங்கள் உள்ளடக்கப்பட்டுவிடும். குறிப்பாக, பிரதமர் மற்றும் அமைச்சர்களின் சம்பளம் பாராளுமன்ற நிதித்துறையினால் கையாளப்படும். ஒவ்வரு துறைசார் அமைச்சர்களினதும் மேலதிக செலவுகள் மற்றும் மேலதிக கொடுப்பனவுகள் அவர் துறைசார் அமைச்சுக்கள் மூலாமாக ஒதுக்கப்படும். வரிகளற்ற வாகன அனுமதிப்பத்திர விடயத்தினை பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சு கையாள, அமைச்சர்களின் ஊழியர்களுக்கான செலவினங்களை அத்துறைக்குப் பொருத்தமான அமைச்சுக்கள் கையாளுகின்றன.

ஒட்டுமொத்தமாக, சகலவிதமான செலவுகளுக்குமான நிதியானது பொதுமக்களிடம் வரிப்பணமாக அறவிடப்படும். குறிப்பாக, இலங்கையில் மொத்தமாக 225 பாராளுமன்ற பிரதிநிதிகள் உள்ளார்கள். ஜனாதிபதியை தவிர்த்து, இவர்களுக்கு மாத்திரம் மாதாந்தம் 12.2 மில்லியன் ரூபாய்க்களை (இதில் மேலதிக கொடுப்பனவுகள் மற்றும் ஊழியர் கொடுப்பனவுகள் உள்ளடக்கபடவில்லை) சம்பளமாக வழங்கவேண்டி உள்ளது. இதனடிப்படையில், வருடம்தோறும் சம்பளத்திற்காக மட்டுமே சுமார் 146.4 மில்லியனை இலங்கை அரசு செலவிட வேண்டும். இவை அனைத்துமே, ஒவ்வரு வருடமும் வரவு-செலவு திட்டத்தின் மூலமாக மக்களிடம் வரிப்பணமாக அறவிடப்படும். தற்போது, ரணில் விக்கிரமசிங்க அதிகரித்துள்ள 100,000/- (வருடத்திற்கு 270,000,000/-) கொடுப்பனவும் இதனுடன் சேர்ந்து ஒட்டுமொத்த வரி அறவீட்டின் அளவினையே அதிகரிக்கப் போகிறது. பிரதமரின் மக்களிடமிருந்து அறவிட்டு, மீண்டும் மக்களுக்கே கொடுக்கப்போகிறோம் என்கிற கொடுப்பனவு திட்டம் இறுதியில் அரசியல்வாதிகளின் பையை நிரப்பிக்கொண்டு இறுதியில் ஒரு சிறுதொகையினையே மக்களுக்கு வழங்கப் போகிறது. அதுவும் மக்களுக்கு கிடைக்குமா என்பது கேள்விக்குறியே!

(chinadaily.com)

வருடம்தோறும் சம்பளத்திற்காக மட்டுமே சுமார் 146.4 மில்லியனை இலங்கை அரசு செலவிட வேண்டும். இவை அனைத்துமே, ஒவ்வரு வருடமும் வரவு-செலவு திட்டத்தின் மூலமாக மக்களிடம் வரிப்பணமாக அறவிடப்படும் (chinadaily.com)

சுருக்கமாக சொல்லபோனால், மக்களே தமக்கான பிரதிநிதிகளை தேர்வு செய்து பாராளுமன்றத்துக்கு அனுப்பிவைப்பது மட்டுமல்லாது, அவர்களே அடுத்துவரும் ஐந்து வருடங்களுக்கு அவர்களுக்கு தேவையான சகல ஆடம்பர வாழ்க்கையையும் ஏற்படுத்திக் கொடுக்கிறார்கள். இறுதியில், அத்தனையையும் ஏற்படுத்திக் கொடுத்த மக்களுக்கு என்ன கிடைக்கிறது என்பது விடையில்லாத கேள்வியாக தொக்கி நிற்கிறது.

Related Articles