Covid-19 பெருந்தொற்றுக்கு பின்னரான இலங்கையின் தொழிற்சந்தை பாரியளவு மாற்றத்தை கண்டுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. சமூக இடைவெளி பேணுதல், தனிமைப்படுத்தல் தொடர்ச்சியாக நம்மை சுத்தப்படுத்திக்கொள்ளல் என நம் வாழ்க்கை முறையில் எத்தனை புதிய பழக்கங்களை நாம் கைக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளோமோ, அதற்கு இணையான புதிய நடைமுறைகளை பின்பற்ற வேண்டிய கட்டாயத்திற்கு வியாபாரங்களும், ஏனைய நிறுவனங்களும் தள்ளப்பட்டுள்ளன.
புதிதாக நம் உலகுக்கு வந்துள்ள கொரோனா வைரஸை போலவே, இந்த புதிய நடைமுறைகளும் நம்மோடு இன்னும் சிலகாலத்துக்கு தொடர்ந்து பயணிக்க உள்ளது என்பதே அறிஞர்களின் கருத்தாகும். எனவே புதிய வழிமுறைகளை நோக்கி நகரும் வர்த்தக உலகத்தில் ஈடுகொடுக்க இலங்கையின் ஊழியப்படை நவீன திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.
எதிர்காலம் டிஜிட்டல் மயம்
2020இன் ஆரம்பத்தில் உலக பொருளாதார சங்கத்தால் வெளியிடப்பட்ட கணிப்பு அறிக்கையின்படி, உலக தொழிற்சந்தையானது நான்காம் கட்ட கைத்தொழில் புரட்சியின் விளைவால் உருவாகியிருக்கும் புதிய தொழில்நுட்பங்களால் பெருமளவு மாற்றமடையும் என்ற கருத்து உருவானது. 2030 இற்குள் உலகளவில் குறைந்த பட்சம் ஒரு பில்லியன் தொழிலாளர்கள் புதிய தொழில்நுட்பங்கள் நோக்கி தங்களை மீள தேர்ச்சிப்படுத்திக் கொள்வார்கள் என்றும் அந்த கணிப்புகள் கூறியது. மேலும் பல தொழில்களுக்கு தற்போது எதிர்பார்க்கப்படும் அடிப்படைத் திறன்களில் 40% வரை 2022 அளவில் மாற்றமடையும் நிலையும் இருந்தது.
பெருந்தொற்றுக்கு பின்னரான பொருளாதாரத்தில் செழித்து வளர தீர்க்கமானதாக நிரூபிக்கக்கூடிய ஒரு காரணி என்றால் அது டிஜிட்டல் சார் கல்வியறிவு. ஏற்கனவே பல நாடுகள் டிஜிட்டல் மயமாக்கலை எதிர்காலம் நோக்கிய பாதையாக அங்கீகரித்திருந்தாலும் Covid-19 பெருந்தொற்று அதன் தேவையை மேலும் துரிதப்படுத்தியது. சமூக இடைவெளி மற்றும் தனிமைப்படுத்தல் ஊரடங்குகள் எங்கள் இயல்பு வாழ்க்கையை வெகுவாக பாதித்ததால், நினைத்ததை முடிக்க நாம் டிஜிட்டல் தளங்கள் மற்றும் தொழில்நுட்பத்தின் உதவியை அதிகம் நாட வேண்டி இருந்தது.
இலங்கையில் டிஜிட்டல் கல்வியறிவு சமீபத்தில் அதிகரித்து வருகிறது, இது 2018ல் 42% ஆக இருந்து 2019 இல் 46% ஆகவும், 2020 முதல் பாதியில் 49.5% ஆகவும் அதிகரித்துள்ளது.
Microsoft வழங்கும் தீர்வு
Microsoft Global Skills Initiative (உலகளாவிய திறன் முன்னெடுப்பு) என்பது தமது டிஜிட்டல் திறன்களை மேம்படுத்த வேண்டியவர்களுக்கு உதவக்கூடிய ஒரு ஆதாரமாகும். Microsoft இன் கூற்றுப்படி, இந்த தனித்துவமான உலகளாவிய பரோபகார முயற்சி குறிப்பாக “COVID-19 ஆல் பாதிக்கப்படுபவர்களுக்கு டிஜிட்டல் பொருளாதாரத்தில் தேவைப்படும் வேலைகளுக்கு தேவையான திறன்களை பெற உதவுவதற்காக” உருவாக்கப்பட்டது. 2020 நடுப்பகுதியில் இந்த முயற்சியைத் தொடங்கிய போது Microsoft இன் ஆரம்ப நோக்கம், இந்த ஆண்டின் இறுதிக்குள் 25 மில்லியன் வேலை தேடுபவர்களுக்கு பயனளிப்பதாகும். அவர்களின் அணுகுமுறையானது, தங்களுக்கு சொந்தமான புதிய மற்றும் கைவசமுள்ள வளங்களை LinkedIn மற்றும் GitHub நிறுவனங்களுடன் இணைத்து, விரிவான தரவுகளை அடிப்படையாகக் கொண்ட இலவச கற்கை நெறிகளை உருவாக்கிக் கொடுப்பது.
உலகளாவிய ஆய்வு ஒன்றை மேற்கொண்டு, உலகளாவிய திறன் முன்னெடுப்புக்கான அணுகலை அதிகரிக்க இலங்கையில் ஒதுக்கப்பட்ட சமூகங்களுடன் இணைந்து பணியாற்றிய பின்னர், Microsoft நிறுவனம் உலகளவில் கேள்வியுள்ள மற்றும் தங்கள் முன்னெடுப்பினால் வழங்கப்படும் வளங்களின் மூலம் அடையக்கூடிய பத்து தொழில்களை அடையாளம் கண்டது.
- Customer Service Specialist – வாடிக்கையாளர் சேவை நிபுணர்
- Data Analyst – தரவு பகுப்பாய்வாளர்
- Digital Marketing Specialist – டிஜிட்டல் சந்தைப்படுத்தல் வல்லுநர்
- Financial Analyst – நிதியியல் பகுப்பாய்வாளர்
- Graphic Designer– வரைகலை நிபுணர்
- IT Support/Help Desk Technician – தகவல் தொழில்நுட்ப உதவி/ அலுவல் உதவி தொழில்நுட்ப வல்லுநர்
- IT Administrator – தகவல் தொழில்நுட்ப நிர்வாகி
- Project Manager – திட்ட முகாமையாளர்
- Sales Representative – விற்பனை முகவர்
- Software Developer – மென்பொருள் உருவாக்குநர்
இந்த ஒவ்வொரு வேலைகளுக்கான Microsoft learning paths கற்றல் வழிகாட்டிகள், நுழைவு நிலை டிஜிட்டல் கல்வியறிவு முதல் தொழில்நுட்ப வேலைகளுக்கான மேம்பட்ட தயாரிப்பு அடிப்படையிலான திறன் வரை கொண்ட வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. தங்களுடைய திறன்களை வளர்த்துக்கொள்ளவும், புதிய திறன்களை கற்றுக்கொள்ளவும் விரும்புபவர்களுக்கு ஏற்ற வகையில் இவை அமைந்திருக்கும். எனவே, இந்த திட்டத்தை பயன்படுத்தி வேலை தேடுபவர்கள், லிங்க்ட்இன் கற்றலின் நூலகத்தின் ஊடாக தொழில் வல்லுநர்களால் பிரத்தியேகமாக கற்பிக்கப்பட்ட, கூட்டுறவு பாடநெறிகளை அணுக முடியும், மேலும் இந்த கற்றல் நெறிகளுக்கான பூரணப்படுத்தல் சான்றிதழ்கள் கற்கை நெறி நிறைவின் போது வழங்கப்படும்.
கூடுதலாக, மென்பொருள் உருவாக்குநர், தகவல் தொழில்நுட்ப நிர்வாகி மற்றும் தரவு பகுப்பாய்வாளர் போன்ற கூடுதல் தொழில்நுட்ப வேலைகளை எதிர்பார்த்து வேலை தேடுபவர்கள் Microsoft Learn. இலிருந்து மேலும் ஆழமான தொழில்நுட்ப கற்றல் உள்ளடக்கத்தைப் பெறுவார்கள்.
2021 மார்ச் மாத இறுதியில் இம் முன்னெடுப்பு மூலம் 249 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் இருந்து மூன்று கோடிக்கும் அதிகமான நபர்கள் பயனடைந்துள்ளனர். அவர்களில் 30 000 பேர் இலங்கையை சேர்ந்தவர்கள்.
Microsoft உலகளாவிய திறன் முன்னெடுப்பு மூலம் Microsoft எதிர்பார்க்கும் உச்சக்கட்ட குறிக்கோள், டிஜிட்டல் பொருளாதாரத்தில் வெற்றி பெற தேவையான அறிவு, திறன்கள் மற்றும் வாய்ப்புகள் மூலம் மக்களையும் நிறுவனங்களையும் மேம்படுத்துவதற்கு தேவையான உதவியை வழங்குதல்.
COVID-19 பெருந்தொற்றால் இலங்கையில் வேலையை இழந்தவர்களுக்கு பெருந்தொற்றுக்கு பிந்தைய பொருளாதாரத்தில் புதிய அறிவு மற்றும் திறன்களை பெறுவதன் மூலம் புதிய வேலைவாய்ப்புகளை தேடிக்கொள்ள வழிவகுக்கும் ஒரு ஆதார நம்பிக்கை இப்போது உருவாகி உள்ளது.
Microsoft Global Skills Initiative யிலிருந்து நீங்கள் எவ்வாறு பயனடையலாம் என்பது பற்றி மேலும் அறிய, கீழே தரப்பட்டுள்ள QR குறியீட்டை அலகிடுங்கள்(ஸ்கேன் செய்யுங்கள்).
குறிப்பு: Microsoft நிறுவனம் தன்னுடைய இலவச LinkedIn Learning கற்கை நெறிகள் Microsoft Learn கற்கை நெறிகள் மற்றும் குறைந்த விலையிலான கற்கை சான்றிதழ்கள் வழங்கும் திட்டம் ஆகியவற்றை Microsoft Global Skills Initiative மூலம் 2021 டிசம்பர் 31 வரை நீட்டித்துள்ளது.