Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

மனிதர்களுக்கும் நாய்களுக்குமான அசாத்தியமயான அன்புறவு

பரம்பரை விரோதிகள்.

மனிதனுக்கும் நாய்களுக்குமான உறவு லட்சம் வருடங்கள் பழமையானது. ஆனால் இந்த உறவு புத்தகதின் ஆரம்ப அத்தியாயங்கள் எண்ணி மகிழுமாறு அமைந்திருக்கவில்லை. ஹோமோ சேப்பியன்ஸ், நவீன மனிதனின் மூதாதைகள். சுமார் 100,000 ஆண்டுகளுக்கு முன்பு தங்கள் பூர்வ நிலமான ஆப்பிரிக்காவை விட்டு வெளியேறி புதிய நிலங்களை கண்டடைய தொடங்கினான். அவர்களின் முதல் வருகை யூரேசியா (ஐரோப்பிய-ஆசிய பெருநிலம்) பகுதிக்கு. மெல்ல மெல்ல கண்டம் முழுவதும் பரவி புதியதொரு வாழ்க்கை முறைக்கு தங்களை பழக்கப்படுத்தி கொண்ட நம் மூத்தகுடிகளுக்கு பல்வேறு சவால்கள் அந்நிலப்பரப்பில் காத்திருந்தன. அவற்றுள் முக்கியமானதொன்று மனிதர்களைப் போன்றே சிக்கலான சமூக வலையமைப்பை கொண்டு வேட்டையாடி வாழ்க்கை நடத்தி வந்த நான்கு கால் விலங்கினம் ஒன்று. கேனிஸ் லூப்பீஸ். தற்கால நாய்களின் ஆரம்ப கர்த்தாக்களான சாம்பல் நிற ஓநாய்கள்.

கேனிஸ் லூப்பீஸ் – தற்கால நாய்களின் ஆரம்ப கர்த்தாக்களான சாம்பல் நிற ஓநாய்கள் புகைப்பட விபரம் – Petgearlab.com

வேட்டையாடி வாழ்க்கை நாடாத்தி வந்த முதல் மனிதர்களுக்கும் ஓநாய்களுக்குமான போராட்ட நிலை 60,000 ஆண்டுகளுக்கு மேல் நீடித்து வந்தது. வேகமும்,சூழ்ச்சியும், பலமும் பொருந்திய இந்த எதிரியினம் மனிதர்களுக்கு பெரும் இடர்பாடாக அமைந்தது. எனினும் காலப்போக்கில் சிறிய ஆனால் முக்கியமானதொரு மாற்றம் உண்டாகத் தொடங்கியது. நாய்கள் மனிதர்களை போலவே குழுக்களாக வாழும் இயல்பு கொண்டவை. ஆனால் எந்தவொரு குழுவிலும் ஏற்றுக்கொள்ளப்படாத கட்டாகாலி ஓநாய்கள் தனியாக  வேட்டையாட இயலாது நெருக்கடியான நிலைக்கு தள்ளப்பட்டன. அவற்றுக்கு அப்போது உணவென அமைந்தது மனிதர்கள் ஆங்காங்கே விட்டு சென்ற உணவு மிக்கங்களே. வேட்டையாடாது எளிதாக கிடைத்த இந்த உணவு மூலத்தை பயன்படுத்திக்கொண்ட ஓநாய்கள் மனித குடியிருப்புகளுக்கு அருகாமையில் வாழப்பழகிக் கொண்டன .

நாட்கள் நகரும் தோறும் ஓநாய்கள் மனிதர்களை  மேலும் மேலும் அணுகத் தொடங்கின. ஆண்டுகள் தொடர்ந்த பகைமையும்,போட்டியும் கடந்து மனிதர்களும் ஓநாய்களை அறிவதற்க்கு முற்பட்டனர். எனினும் அவற்றில் சிலது மாத்திரமே மனித தொடுகையை ஏற்றுக்கொண்டன. மனிதர்கள் தங்களை அணுக அனுமதிக்கும் ஓநாய்களை தம்மோடு இருக்க இடங்கொடுதனர் மனித குடியிருப்புகள் கிடைத்த தீயின் வெம்மையும், உணவும் மேலும் மேலும் ஓநாய்களை மனித குழுக்களை நோக்கி ஈர்க்க தொடங்கியது.

பண்டைய மனிதனின் வாழ்வியலோடு பின்னிபிணைந்திருந்த நாய்கள்- புகைப்பட விபரம்: pinterest.com

நாடோடி வாழ்க்கையை மேற்கொண்ட பண்டைய மனிதனின் வழிப்பதையெங்கும் துணையாக வந்தன இந்த நான்கு கால் ஜீவன்கள். தங்கள் சுய தேவை கருதி. இத்தனை கால இறுக்கதை கடந்து மனிதனின் மனதில் ஓநாய்கள் குறிதான பரிவு முகம் தோன்றலானது. தம்மை பின் தொடர்ந்த ஓநாய்களில் ஒப்பீட்டளவில் அமைதியான இயல்புடையவற்றை தம்முடன் மிக அருகில் வைத்துக்கொண்டனர் ஆதிகுடிகள். அதிலும் குறிப்பாக குடும்ப தலைமையில் இருந்த பெண்கள் ஓநாய்களை குழுவின் ஓர் உறுப்பினர் என கருதினர். தொடர்ந்து சீற்றம் குறைந்த ஓநாய்களை தம்முடன் வைதிருந்ததன் விளைவாக அவற்றின் அடுத்த சந்ததி மேலும் சீற்றம் குறைந்ததாக இருந்தது. தொடர்ந்து நடந்த இந்த செயற்பாடு ஓநாய்களை தங்களின் காட்டு தயாதிகளிடம் இருந்து தோற்ற  அளவிலும், குணவியல்புகளிலும் வெகுவாக மாற்றியமைத்தது.

புதியதோர் அத்தியாயம்

மனிதக் குடிகளுடன் இயைந்து வாழப்பழகிய முந்தை நாய்களிடம் தங்கள் கானகத்து இயல்புகள் பலதும் இருந்தன. ஆனால் காலப்போக்கில் அவற்றின் உருவ அமைப்பில் வெகுவான மாற்றங்கள் உண்டாகலாயின. ஓநாய்களை காட்டிலும் இந்த நாய் மூதாதைகள் உருவத்தில் சிறியதாகவும், சிறிய மூக்கும், தாடையும், பற்களையும் கொண்டனவாகவும் மாறின. மேலும் அவற்றின் வால்கள் சுருளவும் , காது மடல்கள் மடியவும் ஆரம்பித்தன. தோல் மற்றும் மயிர் நிறமும் வெளிர் நிறம் கொண்டனவாக மாறின. இதற்கு காரணம் அவற்றின் அதிரினலின்எனும் ஹார்மோன் செறிவு குறைந்து வந்தமையே. இந்த மாற்றங்கள்  குடிமைப்படுத்தல் குறிகள் என வரையறுக்கப்படுகின்றன. மேலும் ஓநாய்கள் போலில்லாமல் நாய்கள் அதிகளவு எலும்பு போன்ற கடினமான உணவுகளை உட்கொண்டமையால், செரிமான அமைப்பிலும் கணிசமான மாற்றங்கள் உண்டாகின. மனிதர்கள் விவசாயதிற்கு தங்களை பழக்கப்படுதிக்கொண்ட போது அதன் தாக்கம் நாய்களிலும் எதிரொலித்தன. AMY 2B எனும் மாச்சத்து உணவுகளை செரிமானம் செய்ய உதவும் மரபணு கூறு நாய்களிடம் வளர்ச்சியடைய தொடங்கின.

 புகைப்பட விபரம் – labblog.uofmhealth.org

சமூக அமைப்பின் ரீதியில் ஓநாய்களும், மனிதர்களும் ஏறக்குறைய ஒரே மாதிரியான கட்டமைப்புகளை கொண்டிருந்தனர். சில கரு குடும்பங்களை  உள்ளடக்கிய ஒற்றை பெருங்குழு. இந்த காரணத்தால் மனிதர்களுடன் இணைந்து செயலாற்றவும், மனித கட்டளைகளை புரிந்துகொள்ளவும் நாய்களுக்கு மிகவும் இலகுவாக இருந்தது. அனைத்தை காட்டிலும் நாய்களிடம் இருந்த மிகப்பெரிய இயல்பு மாற்றமாக கருதப்பட்டது மிகை சமூகவயத்தன்மை (hyper sociability). மனிதர்களிடம் தங்களை வெளிப்படுதிக்கொள்ளவும், அவர்களுடன் அதிக நேரத்தை செலவிடவும், அவர்களின் கவனத்தை தன்னை நோக்கி திருப்பிக் கொள்ளவும் நாய்களால் இயலுமாக இருந்தது. இயல்பில் நாய்கள் மனிதனின் வேட்டை துணைகளாக காணப்பட்ட போதிலும், காலப்போக்கில் சமூக விருதியடைந்த மனிதனுக்கு நாய்களிடம் இருந்தான தேவைகளும் வேறுபடலாயின.

மனித குடியேற்றங்கள் உலகம் முழுவதும் பரவிய காலங்களில் நாய்களும் மனிதருடன் உலகெங்கும் பரவின. அவை அங்கு வாழ்ந்து வந்த ஏனைய நாயினங்களுடனும், ஓநாய்களுடனும் கலந்து புதுவகை நாய்களை உண்டுபண்ணின. அவற்றில்  மனிதனின் தலையீடும் இருந்தமையால் மனித தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் அவை மாற்றியமைக்கப்பட்டன. உலகின் வடக்கு சைபீரிய பனிப்பாலை பகுதிகளில் வாழ்ந்த மக்களுக்கு துருவக்கரடிகள் பிரதான வேட்டை எதிரிகளாக இருந்தன. அவற்றை எதிர்ப்பதற்கும் வேட்டையாடுவதற்கும், பனி வண்டிகளை இழுத்துச் செல்வதற்கும் உகந்த வகையில் பெரிய உடலமைப்பு கொண்ட  சமோயெட் எனும் நாய் வகை விருத்தி செய்யப்பட்டது. எகிப்தின் பாலை நிலத்தில் வேட்டையாடும் பொருட்டு கஅதிகம் ஓசை எழுப்பாத நாயினமான பஸேஞ்சி வடிவமைக்கப்பட்டது. உலகில் தற்போது கிடைக்கும் மிகப் பழமையான நாயினமான ஸலூக்கி, ஆப்கானிய பகுதியில் விரைவுக்கான வேட்டை நாய்களாக உருவாக்கப்பட்டவை. ஷார்-பெர் என்னும் கடினமான தோலுடைய நாய்கள் காட்டுப்பன்றிகளை வேட்டையாடவும், அவற்றின் தாக்குதலில் இருந்து தப்பிக்கவும் உரியவாறு அமைக்கப்பட்டன. சீனாவின் சிங்கநாய் என அழைக்கப்படும் கருப்பு நாக்கு கொண்ட சாவ்-சாவ் இன நாய்கள், படை வீரர்களுடன் சேர்ந்து களங்களில் போரிடுவதற்காக பயன்படுத்தப்பட்டன.

 புகைப்பட விபரம் –  www.collections.mcny.org

உடல் உழைப்புக்கு பயன்படுதப்பட்ட நாய்கள் காலப்போக்கில் காட்சிப் பொருட்களாக மாறின. சீனத்தின்  பண்டைய பிரபு வர்க்கத்தினர் தாம் செல்லும் இடங்களுக்கு எல்லாம் கொண்டு செல்லக்கூடிய வகையில் சிறிய உடலமைப்பு கொண்ட நாய்களை அதிகம் விரும்பினர். இதன் விளைவாக ஷிஹ்சூ, பெக்கினீஸ், பக் முதலான நாயினங்கள் தோன்றின. இருப்பினும் 1800 இன் பின்னரைப்பகுதியில் உலக வல்லரசாக இருந்த பிரித்தானியாவின் விக்டோரியா அரசியின் ஆட்சியிலேயே தற்கால நாய்களின் பெரும்பாலான சாதிகள் தோற்றம் பெற்றன. விக்டோரிய காலத்தில் நடைபெற்ற பல நாய் கண்காட்சிகளுக்காக ஐரோப்பா முழுவதிலும் இருந்து பல விலங்கு வல்லுநர்கள் தமக்கே உரிய கைத்திறனால் புதிய நாய் வகைகளை உருவாக்கினார். பிரித்தானியாவில் இருந்து கோர்கி, இங்கிலீஷ் புல்டாக், இங்கிலீஷ் ஃபாக்ஸ்ஹவுண்ட், கார்டன் செட்டர்,போர்டர் கொள்லீ முதலான வகைகளும், ஜெர்மனியில் இருந்து ஜெர்மன் ஷெப்பர்ட், ராட்வீலர், டோபர்மென், டேஷ் ஹவுண்ட், பொக்ஸ்ர், பொமனேரியன், க்ரேட் டேன் முதலிய நாய் வகைகளும் உருவாகின. பல நாடுகள் இப்போட்டிகளில் பங்கேற்ற போதிலும் ஜெர்மனியின் கைவண்ணங்களே அதிகம் விரும்பப்பட்டன, போட்டியில் வெற்றி பெற்ற நாய் ஜாதிகள் கெனல் அமைப்பினால் நியமப்படுதப்பட்ட நாய் வகைகளாக அறிவிக்கப்பட்டன. இங்கிலாந்தில் நடைபெற்ற இப்போட்டிகளின் தாக்கம் அமெரிக்காவிலும் புதிய நாய் வர்க்கங்களை உண்டாக்கின. போஸ்டன் டேற்றியர், புல் டாக்,பேகல், லேப்ரடார், ரொற்றிவர், பூட்ல், அலாஸ்கன் மெலமேட் முதலான வகைகள் அமெரிக்க கெனல் கழகதினால் நியமாங்காலளக்கப்பட்டன. உலகளாவிய ரீதியில் இந்த எல்லா நாய் வகைகளும் பிரசிததம் பெற்றிருந்தாலும் லேப்ரடார் வகையே 1990 களின் பின்னரை பகுதியில் இருந்து இன்று வரை உலகளவில் மிகப்பிரபலமாக உள்ளது.

ஆய்வாளர் கருத்து

மனித வரலாற்றில் முதன்முதலாக குடிமைப்படுதப்பட்ட விலங்குகள் நாய்கள் என்பது வலுவான உண்மை. எனினும் இது எங்கே? எப்போது? நடைபெற்றது என்பது குறித்து வரலாற்று ஆசிரியர்களுக்கும், மரபணு விஞ்ஞானிகளுக்கும் ஒருமித்த கருத்துக்கள் இல்லை. பொதுவான கருதுப்படி சுமார் 40,000 முதல் 27,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தில் ஏதோவொரு புள்ளியில் நாய்களிடம் இருந்து நாய்கள் தனியான இனமாக பிரிவடைந்திருக்க முடியும் என நம்பப்படுகிறது.

வரலாற்றின் மிகப்பழமையான நாய்-மனித உறவு குறித்தான தேடல்களில் தனியே வரலாற்று ஆதாரங்கள் மட்டும் போதாது, மரபணு ரீதியான விஞ்ஞான ஆய்வுகளும் முக்கியம் பெறுகிறது. இதுவரை உலகம் முழுவதும் பல இடங்களில் இருந்து வெவ்வேறு காலகட்டங்களை சேர்ந்த நாய் எச்சங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. சைபீரியாவில் கண்டுபிடிக்கப்பட்ட கி. மு 9000 ஆண்டைச் சேர்ந்த கடுவன் நாய் எச்சத்துடன் நாய்கள் விளையாடும் பொருட்கள் போன்ற உபகரணங்களும் கிடைக்கப்பெற்றுள்ளது முக்கிய புள்ளியாக கருதப்படுகிறது. இதன் வாயிலாக அக்கால மனிதர்கள் நாய்களை தங்கள் குடியின் ஒரு அங்கமாக பாவித்தமை தெளிவாக தெரிகிறது. இதைவிட எகிப்தின் அரசர்கள் வெளியில் கண்டெடுக்கப்பட்ட பதப்படுத்தப்பட்ட நாய் உடலானது,நாய்களுக்கு அரசர்கள் முதற்கொண்டு வழங்கிய முதன்மை நிலை குறித்த தெளிவினை வழங்குகிறது. ஜோர்தான் வெளியில் கண்டெடுக்கப்பட்ட 12,000 ஆண்டுகள் பழமையான நாய் எழும்பும், ஜெர்மனியில் இரு மனித உடல்களுடன் சேர்த்து புதைக்கப்பட்ட 16,000 ஆண்டுகள் பழமையான நாய் குட்டியின் எச்சங்களும், 2018 இல் சைபீரியாவின் இண்டிகிற்கா நதிக்கரையில் இருந்து எடுக்கப்பட்ட 18,000 பழமையான 2 மாத வயதுடைய நாய் குட்டியின் முழு உடலுமே இதுவரை கிடைத்த மிகப் பழமையான நாய் எச்சங்கள்.

புகைப்பட விபரம் –  theatlantic.com

இதுவரை நடத்தப்பட்ட ஆய்வுகளில் இருந்து பெறப்பட்ட முடிவுகள் பிரகாரம் நாய்களுக்கும், தற்கால சாம்பல் நிற ஓநாய்களுக்கும் மூதாதைக்களான  பழைய ஓநாய்கள் முற்றாக உலகிலிருந்து அழிந்துவிட்டன. மனித குடியற்றங்களில் தங்களை தாங்களே குடிமைப்படுதிக்கொண்டு (self domestication) வாழத்தொடங்கிய ஓநாய்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே இருக்க, மனிதர்களுக்கு வேட்டையாடுவது மிக எளிதானதாக அமைந்தது. இதனால் காட்டு ஓநாய்கள் உணவுப்பற்றாக்குறையாலும், மனித வேட்டையாலும் அழிவின் விளிம்பினை சந்தித்து இருக்க வேண்டும் என்ற முடிவு முன்வைக்கப்பட்டுள்ளது. நாய்களின் பூர்வகால மூதாதைகள் அழிந்தமையால், நாய்கள் எவ்வாறு முழுமையாக குடிமைப்படுதப்பட்டது என்பது குறித்த ஆய்வுகளில் குழப்பங்கள் நிலவுகின்றன. மேலும் எங்கு நாய்கள் முதன்முதலில் மனிதர்களுடன் சேர்ந்து வாழத்தொடங்கின? என்பதும் தெளிவில்லாமல் உள்ளது. சிலர் மொசபத்தேமியா  பகுதிகளிலேயே முதல் நாய்கள் தோன்றின என்றும், சிலர் தெற்கு சீனம் என்றும், சிலர் ஐரோப்பா என்றும் நாய்களுக்கான தாயகங்களை வரையறுக்கின்றனர்.  ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் வரலாறு மற்றும் மரபணு துறைகளில் பணியாற்றும் கிறெகர் லாரசன் இன் கருத்துப்படி நாய்கள் ஐரோப்பா மற்றும் சீனம் ஆகிய இரு இடங்களிலும் ஒரே காலப்பகுதியில் குடிமைப்படுத்தப்பட்டன. எனவே நாய்கள் இரட்டை குடிமைப்படுத்தலுக்கு உள்ளான விலங்கு என்கிறார். இந்த இரு இடங்களிலும் பழைய நாய் எச்சங்கள் கிடைப்பதே அதற்கான சான்று என்கிறார். மேலும் தற்கால நாய்களில் பெரும்பாலும் கிழக்குலக நாய்களின் மரபணு நீட்சியே தொடர்கிறது என்றும், பூர்வ ஐரோப்பிய நாய்கள் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பெருமளவு அழிந்திருக்க வேண்டும் என்றும் கூறுகிறார். டிமிட்ரி கே. பெலியர்  50 ஆண்டுகளாக ரஷ்யாவில் காட்டு நரிகளை கொண்டு ஆய்வொன்றை மேற்கொண்டார். அதன் விளைவாக சுமார் 6 தொடக்கம் 8 தலைமுறைகளுக்கு பின்னர் அந்நரிகளின் சந்ததிகள் பெரும்பாலும் நாய்களை போன்று நடந்து கொள்ளத் தொடங்கின. இன்றும் ஆவ்வாய்வின் விளைவாக தோன்றிய நரிகளின் சந்ததிகள் உலகின் ஒரே குடிமைப்படுத்தப்பட்ட நரித்தொகுதியாக காணப்படுகிறது 

புகைப்பட விபரம் : squarespace-cdn.com

நாய்களின் தோற்றம் மற்றும் வளர்ச்சி குறித்து ஏன் இவ்வளவு ஆர்வம் காட்டப்படுகிறது என்று பலருக்கும் குழப்பம் ஏற்படலாம். அதற்க்கும் நியாயம் உள்ளது. டியூக் பல்கலைக்கழகத்தின் கூர்ப்பு மானுடவியலாளர் ப்ரெய்ன் ஹேர் மற்றும்  கிறெகர் லாரசன் ஆகியோரின் கூற்றுப்படி நாய்களே மனிதன் முதன்முதலில் இயற்கையில் இருந்து தன்னுடைய தேவைக்காக மாற்றியமைத்துக் கொண்ட முதல் விடயம் என்கின்றனர். காட்டு விலங்குகளை தங்களுக்கு தேவையான வகையில் மாற்றிக்கொள்ள முடியும் என்ற புரிதலை அடைந்த மனிதன் தன்னை சூழவுள்ள அனைத்தையும் தனக்குகந்தாற்  போல மாற்றியமைக்க தொடங்கினான். இந்த செயற்பாட்டில் நாய்களின் உதவியும் அளப்பரியது. இந்தப் புரிதலின் நீட்சியே மனித வரலாற்றில் நாகரீக தோற்றங்களுக்கும், கைதொழில் புரட்சிக்கும், விஞ்ஞான வளர்ச்சிக்கும் அடிகோலின. எனவே நாய்களுக்கும், மனிதர்களுக்கும் உருவான உறவு குறித்து ஆய்வது, மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையில் இருந்த உறவு பற்றி தெளிவுபடுத்தும்.

முடிவாக..

இன்றைய திகதியில் நாய்கள் வேட்டைக்காகவோ, உடல் உழப்புக்காகவோ மட்டும் பயன்படுவன அல்ல. அதிகரித்து வரும் மனித தேவைகளை எப்போதும் பூர்த்தி செய்யும் முதல் தோழனாக நாய்கள் உள்ளன. நாய்களுடன் மனிதர்கள் பழகும் பொழுதுகளில் இருவரிடமும் அன்பையும், பாதுகாப்புணர்வையும் வெளிப்படுத்தும் oxytocin எனும் ஹார்மோன் சுரக்கும் என்பது சமீபத்திய கண்டுபிடிப்பு. இதனால் 1953 இல் இருந்து நோய்களாலும், மனவழுதங்களாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் therapy dogs ஆக நாய்கள் பணியாற்றுகின்றன. போர்க்களங்கள் முதல் தீயணைப்பு படை வரை எத்தனையோ மனித உயிர்களை காப்பாற்றிய தியாக வரலாறுகளும் அவற்றுக்கு உண்டு. அனைத்தையும் விட முதன் முதலில் விண்வெளியை தொட்ட பூமியின் முதல் உயிரினமான Lyca எனும் நாயே மனித-நாய் உறவின் ஆழத்தையும், ஒருவர் மேல் ஒருவர் கொண்டுள்ள நம்பிக்கையையும் காலமுள்ள வரை பறைசாற்ற போதுமானது!

Related Articles