
இன்டீரியர் டிசைனிங் மற்றும் டெகரேஷன் என்ற உள்ளரங்க வடிவமைப்பு மற்றும் அலங்காரம் என்பது வெறுமனே கட்டடமொன்றின் உட்புறத்தை அலங்காரப்படுத்துவது மட்டுமல்ல, இது கலைசார்ந்த விஞ்ஞானமுறையுமாகும். இம்முறையானது, கட்டடமொன்றை கட்டும்போது அதன் வெளிப்புறத்தையும் ஏனைய உட்கட்டமைப்புகளையும் வடிவமைக்க உதவும் மிகவும் அவசியமான காரணியாகும். கட்டடத்தை வெளியே இருந்து பார்ப்பவர்கள் அதனழகையும் அமைப்பையும் பார்த்து வியப்பது போல் அக்கட்டடத்தினுள் வசிப்பவர்கள் ஆரோக்கியமான மற்றும் மனதை மகிழ்விக்கும் மிகவும் அழகாகன சூழலில் வாழவேண்டும். இதற்கு நேர்த்தியான உள்ளரங்க வடிவமைப்புத் திட்டம் மற்றும் அலங்காரம் என்பன மிகவும் அவசியம். இந்த வடிவமைப்பு குறித்த எண்ணம் மனிதனுக்கு எப்படி உருவாகியிருக்க முடியும்?
உள்ளரங்க வடிவமைப்பு மற்றும் அலங்காரத்தின் வரலாறு
இன்டீரியர் டிசைனிங் என்பது இன்றோ நேற்றோ இந்த நூற்றாண்டோ அல்லது அதற்கு முந்தைய நூற்றாண்டோ உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட விடயமன்று. எப்போது மனிதன் தனக்கென்று ஒரு வாழ்விடத்தை அமைத்து வாழ ஆரம்பித்தானோ அன்றே இந்த அலங்கார முறையையும் ஆரம்பித்துவிட்டான். கற்கால மனிதன் தனது குகையினுள் தனக்கு பிடித்த வர்ணத்தில் அக்குகை சுவர்களில் தனக்கு அன்றாடம் ஏற்பட்ட அனுபவங்களை அவனது மனக்கண் முன் தோன்றிய வடிவில் வரைந்து வைத்தான். இதுவே இன்டீரியர் டெகரேஷன் இன் ஆரம்பம் என்று கருதமுடியும். அதன் பின் பல நாகரிக வளர்ச்சிகளின் பின்னர் இந்த வடிவமைப்பு மற்றும் அலங்காராமானது அந் நாகரீகங்களின் கலாசரம், வதிவிடம், பொழுதுபோக்குக் கலைகள், தொழில்நுட்பம் மற்றும் கட்டடக்கலை என்பனவற்றுடன் பின்னிப்பிணைந்தே வளர்ந்து வந்துள்ளது.
இக்கலை பற்றிய அறிவில் நமது முன்னோர் எவ்வாறு பங்களித்தனர்?
சமீபத்தில் தமிழ்நாட்டின் வைகைக்கரை பழந்தமிழ் நாகரிகம் குறித்தான அகழ்வாய்வின் போது, கீழடியில் கண்டெடுக்கப்பட்ட எச்சங்களில் எமது தமிழ் மூதாதையர் தமது வீடுகளையும் தாம் பயன்படுத்திய மண்தளபாடங்களையும் அலங்காரம் செய்து பயன்படுத்தி இருந்திருக்கும் சான்றுகள் கிடைக்கப்பெற்றன. தமது இருப்பிடத்தை ரசனையுடன் பேணிவந்திருப்பதன் ஆதாரங்கள் இவை.

புராணங்களில் மற்றும் இதிகாசங்களில் உள்ளரங்க வடிவமைப்பு.
நமது புராணங்களில் உள்ள குறிப்புக்களின் படி தேவதச்சன் என அழைக்கப்படும் கடவுள்களில் ஒருவரான விசுவகர்மன் கட்டிடக் கலைக்கும் உரியவராக போற்றப்படுகிறார். மற்றும் நமது புகழ்பெற்ற மகாபாரத யுத்தத்திற்கான சம்பவம் இடம்பெற முதல்சுழி இட்டதே மயாசுரன் அல்லது மயன் என்னும் மாய கட்டடக் கலைஞன் தான். எப்படி? அவனே இந்திரப்பிரத்தத்தில் பஞ்ச பாண்டவர்களுக்கு மாயாசபை என உலகத்தாரால் புகழப்பட்ட அரண்மனையிலே அதிசயமிக்க அதிதொழிநுட்பத்தை பயன்படுத்தி நிலத்தை நீரென்றும், நீரை நிலமென்றும் எண்ணும் வண்ணமான தரையை அமைத்திருப்பான். இத் தரையிலேயே துரியோதனன் நிலத்தை நீர் என்றும் நீரை நிலம் என்றும் எண்ணி தடுமாறி விழ இதனைக் கண்ட திரௌபதி சிரிக்க, அங்கே மாகாபாரத போருக்குரிய வித்துக்களிலொன்று வீழ்ந்தது. இவ்வாறு தரையை சிறப்பாக அமைப்பது கூட இன்டீரியர் டிசைனிங் வகையாகும். ஆகவே கட்டடக்கலையை பற்றி மட்டுமன்றி அக்கட்டடம் எவ்வாறு அழகுபடுத்தப்பட்டிருந்தது என்பது பற்றிய குறிப்புகளையும் எமது முன்னோர் நமது புராணங்களில் குறித்துவைத்துள்ளனர்.
எகிப்து மற்றும் ரோமானிய நாகரீகம்
பண்டைய எகிப்த்தானது அதனது சிறப்பு கட்டடக்கலையான பிரமிட்டுகளுக்கு புகழ்பெற்றதென்று உங்களில் பலரும் அறிந்திருப்பீர்கள். அவ்வாறான பிரமிட்டுகள் அதிகளவில் கல்லறைகளாகும். அக் கல்லறைகளில் வரையப்பட்டிருக்கும் ஓவியங்கள் மற்றும் செதுக்கங்களை கொண்டு அவர்களின் அலங்கார ரசனைகளைப் பற்றி அறிய முடியும். மேலும் பண்டைய எகிப்திய சாதாரண குடிமக்கள் அவர்களுடைய மண் வீடுகளை விலங்குகளின் தோல்கள், எளிய துணிவகைகள், ஹைரோகிலிபிக் எனப்படும் பழங்கால எகிப்திய சித்திர எழுத்துக்கள், சிற்பங்கள் மற்றும் வர்ணம் பூசப்பட்ட அடுப்பு மேடைகள் போன்றவற்றால் அலங்கரித்திருந்தனர் என்று அகழ்வாராய்ச்சிகளின் போது தெரியவந்துள்ளது.

எகிப்திய நாகரீகத்தின் பின் தோன்றிய கிரேக்க மற்றும் ரோமானியர்கள் தங்களின் வீடுகளை, நேர்த்தியான வேலைப்பாடு மிகுந்த மர தளபாடங்கள், தந்தம் மற்றும் வெள்ளியினால் ஆன அலங்காரப் பொருட்களைக் கொண்டு அலங்கரித்தனர். ரோமானிய தளபாடங்கள் பெரும்பாலும் கல், பளிங்கு, மரம் அல்லது வெண்கலத்தால் செய்யப்பட்டன, மேலும் அவை மெத்தைகள், பட்டுத்துணிகள் மற்றும் பட்டுச்சரங்கள் என்பனவற்றால் அலங்கரிக்கப்பட்டன. கிரேக்கர்களும் ரோமானியர்களும் கலைநயமிக்க மட்பாண்டங்கள், மயக்கும் மொசைக் ஓடு தளங்கள், சுவர் ஓவியங்கள் மற்றும் சிற்பங்கள் ஆகியவற்றைக் கொண்டு அவர்களின் இல்லங்களை அலங்கரித்தனர்.
நவீன நாகரீகத்தில் அலங்காரக் கலையின் வளர்ச்சி
இதன் பின் தோன்றிய பலதரப்பட்ட நவீன நாகரீகங்கள், அதிகமாக கிரேக்க மற்றும் உரோம நாகரீகங்களைத் தழுவியே தங்களது கட்டடக்கலை மற்றும் உள்ளரங்க வடிவமைப்பு மற்றும் அலங்காரங்களை அமைத்தன. அதேபோல் இந்திய மற்றும் சீன உட்கட்டமைப்பு அமைப்புக்கள் மற்றும் அலங்காரங்களும் புகழ்பெற்றவையாகும்.
15 மற்றும் 16 ஆம் நூற்றாண்டுகளில், மேற்கத்தேயர்கள் மற்றும் ஐரோப்பியர்கள் உள்ளரங்க வடிவமைப்பு கலை மற்றும் அலங்காரத்தில் சிறப்புக் கவனம் செலுத்தினர். அக்கால கட்டட மற்றும் அலங்கார வல்லுநர்கள் பளிங்குத் தளங்கள், அலங்கார செதுக்க வேலைப்பாடுகளுடன் கூடிய மரவேலைகள், ஓவியங்கள் மற்றும் தனிச்சிறப்பு வாய்ந்த மரங்களால் செய்யப்பட்ட தளபாடங்கள் உள்ளிட்ட கணிசமான அலங்காரக் குறிப்புகளைக் கொண்ட கட்டடங்களை உருவாக்கத் தொடங்கினர். அக்கால அரண்மனைகள், சொகுசு வீடுகள் மற்றும் வணக்கத்தலங்களில் சிறந்த உள்ளரங்க வடிவமைப்பு எடுத்துக்காட்டுக்களை அவதானிக்கலாம்.
ஆசிய பாணி அல்லது கீழைத்தேய பாணியிலான உள்ளரங்க வடிவமைப்பு சில நேரங்களில் ஓரியண்டல் வடிவமைப்பு என்றும் அழைக்கப்படுகிறது. இது யப்பான், சீனா, வியட்நாம், தாய்லாந்து மற்றும் பிற முக்கிய கிழக்கு சமூகங்களின் கலாச்சாரங்களைக் எடுத்துக் காட்டுவதாக அமைந்திருக்கும். ஆசிய பாணியில் சீன ஆதிக்கத்துக்கு உட்பட்ட உள்ளரங்க அலங்காரங்கள், தளபாடங்கள் மற்றும் அலங்காரப்பொருட்கள் என்பன திண்ணிய வண்ணங்களில் காணப்படும். மேலும் அதிகமான அலங்காரங்களில் டிராகன் இடம்பெற்றறிருக்கும். பீங்கானால் ஆனா தட்டுக்கள், அலங்காரச் சாடிகள், குவளைகள், மீன் தொட்டிகள் மற்றும் அலங்காரப் பொருட்கள் என்பன வெள்ளை மற்றும் நீல நிறத்தில் அல்லது பலவண்ணத்தில் கிடைக்கப்பெறும். அன்றாடம் பயன்படும் சுவரோவியங்கள், உலோகத் தகடுகள், மற்றும் திரைகள், என்பனவற்றில் வரலாற்றுக் குறியீடுகள் மற்றும் புகழ்பெற்ற காட்சிகள் என்பன துல்லியமான முறையில் பளீர் வண்ணங்களில் வரையப்பட்டிருந்தன.
இந்திய வடிவமைப்பு பாணி
இந்திய பாணியிலான உள்ளரங்க வடிவமைப்பு மிகவும் கவர்ச்சியான, ரசனைமிக்க மற்றும் சிக்கலான அலங்கார பாணிகளில் ஒன்றாகும். அந் நாடு முழுவதும் கலாசாரம், வரலாறு மற்றும் கலை ஆகியவற்றில் உள்ள வேறுபாடுகள் காரணமாக, இந்திய உள்ளரங்க வடிவமைப்பு பல வகைகளைக் கொண்டுள்ளது எனலாம். கவர்ச்சிகரமான நிறங்கள், திடமான மர தளபாடங்கள், நுண்ணிய வேலைப்பாடுகள் என்பன பெரும்பாலான இந்திய வீடுகளின் உட்புறங்களுக்கு பொருந்தும். இந்தியா அதன் மாறுபட்ட கலாச்சாரம், கலை மற்றும் வரலாற்றுக்கு பெயர் பெற்றது, இது ஒவ்வொரு இந்திய வீட்டிலும் பிரதிபலிக்கிறது. இந்தியாவின் சிறந்த மாறுபட்ட உள்ளரங்க வடிவமைப்பு மற்றும் அலங்காரத்துக்கு உதாரணமாக ராஜஸ்தானில் உள்ள ஹவேலிகள் எனப்படும் சுமார் 2000 மாளிகைகளைக் குறிப்பிடலாம், மேலும் “ஹவா மஹால்” எனப்படும் மாளிகை தனிச் சிறப்பு வாய்ந்தது.

இலங்கை வடிவமைப்பு பாணி
இலங்கையில் உள்ளரங்க வடிவமைப்பு மற்றும் அலங்காரம் என்பது கட்டிடக்கலைக்கு இணையான விடயமாகும். உண்மையில் இலங்கையின் உள்ளரங்க வடிவமைப்பு மற்றும் அலங்காரம் என்பன உலகின் நெறிமுறைகளை மாற்றியமைத்த பல சிறந்த வடிவமைப்பாளர்களினது தனித்துவமான பாணியைக் கொண்டது. எமது பண்டைய வரலாற்றுக்குச் சென்று இலங்கையின் பல்வேறு இராச்சியங்களை நோக்கினால். அங்கு அவற்றிற்கே உரித்தான தனித்துவமான பாணிகளையும் வடிவமைப்புக்களையும் அவதானிப்பீர்கள். அனுராதபுர இராச்சியம் முதல் இறுதி இராச்சியமான கண்டி இராச்சியம் வரை சிங்கள கட்டிடக்கலை மற்றும் உள்ளரங்க வடிவமைப்பு மற்றும் அலங்காரம் ஆகியவை பாரம்பரிய கலைப்பொருட்களில் தாக்கம் செலுத்தின. மேலும், இலங்கையின் வடிவமைப்புகள் மற்றும் அலங்காரங்களில் பண்டைய வட இந்திய மற்றும் கிழக்கு ஆசியாவின் தாக்கங்கள் பெரிதும் காணப்பட்டன, மேலும் பௌத்த மதம் இலங்கையின் கட்டிடக்கலை மற்றும் உள்ளரங்க வடிவமைப்பில் மிகப்பெரிய செல்வாக்கு செலுத்திய விடயமாகும்.
<Pic4> இலங்கையின் சுற்றுலா பயணிகளுக்கான தங்குமிடமொன்றில் பௌத்த மத அடையாளம் கொண்ட வடிவமைப்பு பட உதவி: architecturaldigest.com/
உள்ளரங்க வடிவமைப்பு மற்றும் அலங்காரத்தின் போது கவனத்திற் கொள்ளவேண்டியவை
உள்ளரங்க வடிவமைப்பு மற்றும் அலங்காரத்தைப் பற்றி சிந்திக்கும்போது, எமக்கு படைப்பாற்றல் மற்றும் நுட்பத்திறன் போன்ற சொற்களே உடனடியாக நினைவுக்கு வருகின்றன – ஆனால் ஆச்சரியமிக்க விடயமென்வென்றால் இதில் விஞ்ஞானமும் சரிபாதி கலந்துள்ளது. உட்தள வடிவமைப்பு மற்றும் அலங்காரத்தின் போது இட அமைவு, ஒளி, வண்ணம் போன்றவற்றை பிரதானமாக கவனத்திற்கொள்ள வேண்டும். அத்தோடு வீட்டிற்கு தேவையான தளபாடங்கள், திரை சீலைகள் மற்றும் அலங்கார பொருட்கள் என்பவை இல்லத்தின் தோற்றத்தை மேம்படுத்துவதோடு, சிறந்த பலன்களையும் பெற்றுத்தரும்.

இடம் அல்லது வெளி
இடம் என்பது உட்புறத்தின் அடித்தளமாகும். கிடைக்கப்பெற்ற இடத்தில் சிறந்த முறையில் உள்ளரங்கையும் அதன் அலங்காரங்களையும் வடிவமைப்பது ஒரு கைதேர்ந்த வடிவமைப்பாளரின் சூட்சமமாகும்.
ஒளி
இயற்கையாக அல்லது மனிதனால் உருவாக்கப்பட்ட ஒளி என்பது எந்தவொரு இடத்தினதும் முக்கிய அம்சமாகும். மேலும் ஒளியானது சரியான முறையில் பிரயோகிக்க படாதவரை உள்ளரங்க வடிவமைப்பு மற்றும் அலங்காரத்தின் ஏனைய முக்கிய அம்சங்களின் முழு அழகையும் அனுபவிக்க முடியாது. குறித்ததொரு பகுதியில் பிரயோகிக்கப்படும் ஒளியின் அடிப்படையில் அப்பகுதியில் இருக்கும் பொருட்களின் இருப்பை அடையாளப்படுத்துவது, அவற்றின் சிறப்புகளை வெளிக்காட்டுவது மற்றும் அச்சூழலின் இயல்பை பிரதிபலிப்பது என பலவவைகளில் பலனடையமுடியும்.
வண்ணம்
வண்ணம் என்பது எப்படி ஒரு அழகியற் கலையோ அதேபோன்று விஞ்ஞானமும் ஓர் அழகியற்கலை ஆகும். இது உள்ளரங்க வடிவமைப்பு மற்றும் அலங்காரத்தின் முக்கிய பங்காகும். எமது உணர்வுகளையும் மனநிலையையும் உருவாக்கவும் மாற்றவும் கூடிய திறன் நிறங்களுக்கு உண்டு. ஆகவே வர்ணங்களின் உளவியல் ஆற்றலை குறைத்து மதிப்பிடப்படக்கூடாது. மேலும் இதனால் ஒரு அறையின் அளவை மிகைப்படுத்தியோ அல்லது குறைத்தோ காட்டலாம். உதாரணமாக நாம் இளம் வண்ணங்களை பயன்படுத்தும் போதும் அவை அறைகளை விசாலமாக்கி காட்டுவதுடன், அவை எம்மைச் சுற்றி நேர்மறையான அதிர்வலைகள் உருவாக்கும்.
தளபாடங்கள், ஒளி விளக்குகள், திரை சீலைகள் மற்றும் அலங்கார பொருட்கள்
உங்களது இல்லத்துக்குரிய தளபாடங்களை தேர்வு செய்யும்போது, அவற்றை நீங்கள் உபயோகிக்கும் அறைகளுக்கும் அவற்றின் நிறத்திற்கும் ஏற்றவாறு தேர்வு செய்வது உகந்தது. மேலும் அடர் நிறங்களில் அல்லாமல், இளம் நிறங்களில் தேர்வு செய்தால் அது உங்களது இல்லத்தை மென்மேலும் மெருகூட்டும். மற்றும் தற்கால பாணியின் படி ஒவ்வொரு அறையையும் ஏதாவது ஒரு கருப்பொருளில் அலங்கரிக்க அக் கருப்பொருளுக்கு ஏற்ற வண்ணம் நிறங்களையும் தளபாடங்களையும் மற்றும் ஒளி விளக்குகளையும் தேர்வு செய்திடுங்கள். வரவேற்பறைக்கு இளம் நிறங்கள் தீட்டுவது, ஜன்னலுக்கும், வாசலுக்கும் இளம் நிறங்களில் திரைச் சீலை மற்றும் கண்கவர் வேலைப்பாடுகளுடன் கூடிய ஒளி விளக்குகளையும் சுவர் விளக்குகளையும் உபயோகிப்பது வரவேற்பறையை அழகாகக் காட்டுவதுடன், விசாலமானதாகவும் காட்டும். மேலும் அறைகளுக்கு இயற்கை சூழலொன்றின் உணர்வைக் கொடுத்திட செயற்கை அல்லது இயற்கைத் தாவரங்களையும் வைத்திடலாம். மற்றும் அலங்கார பொருட்களாக சுவரோவியங்கள், புகைப்படங்கள், சிற்பங்கள் என்பனவற்றை உங்களது வீட்டின் நிறத்திற்கும் உங்களது ரசனைக்கும் ஏற்றவாறு தெரிவு செய்திடுங்கள்.
வாஸ்து சாத்திரம் மற்றும் ஃபெங்-சுய்
வாஸ்து சாஸ்திரம் என்பது கட்டட வடிவமைப்பு மற்றும் கட்டுமான அம்சங்களுடன் மட்டுமே தொடர்புடையது என்று பலர் நம்புகிறார்கள். ஆனால் உண்மை என்னவென்றால், இது இல்லங்களின் உள்ளரங்க அலங்காரத்திற்கும் பொருந்தும். உங்களின் இல்லத்தை வாஸ்து விதிமுறைகளின்படி கட்டுவித்து, பின்பு உட்புறங்களை அலங்கரிக்கும் போது வாஸ்துவை புறக்கணித்திருந்தால், அது இல்லத்தின் ஒட்டுமொத்த வாஸ்துவில் ஏற்றத்தாழ்வை உருவாக்கக்கூடும். வாஸ்து சாத்திர நிபுணர்களின் கூற்றின் படி சுவரின் நிறம், வீட்டின் நுழைவாயில், தளபாடங்கள் பொருத்துதல் மற்றும் பூஜையறை போன்ற உள்ளரங்க அலங்காரங்கள் என்பன வாஸ்து சாத்திரத்தின் முக்கிய விடயங்களாகும். வாஸ்து சாத்திரம் போன்று ஃபெங்-சுய் என்பது ஒரு பண்டைய சீன தத்துவமாகும். ஃபெங்-சுய் என்ற இச் சொல் இரு சொற்களைக் கொண்டது: “ஃபெங்,” என்றால் காற்று என்று பொருள் மற்றும் “சுய்”, என்றால் நீர் என்று பொருள். இந்த இரு கூறுகளும் மனித இயல்புக்கு அடிப்படையான மற்றும் இன்றியமையாதவை ஆகும். இது தாவரங்கள், உலோகங்கள் மற்றும் பூமி, நீர், நெருப்பு போன்ற பஞ்ச பூதங்கள் ஆகியவற்றுக்கிடையிலான சமநிலையையும் நல்லிணக்கத்தையும் பேண முற்படுகிறது. இது உடல் மற்றும் மன ஆரோக்கியம், வெற்றி மற்றும் சுமூகமான உறவுகளை ஏற்படுத்துவதில் தாக்கம் செலுத்துகின்றன. இது நேர்மறை ஆற்றலை அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது. ஃபெங்-சுய் தத்துவங்கள் உலகெங்கும் பிரசித்தி பெற்று பலராலும் பின்பற்றப்படுகிறது. ஃபெங்-சுய் தத்துவத்தை அடிப்டையாகக் கொண்டு உள்ளரங்க வடிவமைப்பு செய்யலாம். அதிர்ஷ்ட மூங்கில், ஆமை, சிரிக்கும் புத்தர், பளிங்கு தாமரை மற்றும் ஃபெங்-சுய் பளிங்கு உருண்டைகள் போன்ற பிரசித்தி பெற்ற சில ஃபெங்-சுய் அலங்கார பொருட்களை வாங்கியியும் இல்லத்தை அலங்கரிக்கலாம்.
உங்களுக்கு சிறந்தவற்றையே தேர்ந்தெடுங்கள்
உங்களது வீடு அல்லது வேலைத்தளத்தினை அமைத்துக்கொள்ளும் போது அதனை உங்களது ரசனைக்கும் மற்றும் நிகழ்கால பாணிக்கும் ஏற்ப வடிவமைக்கவும் அலங்கரிக்கவும் உங்களுக்கு கைகொடுப்பது இந்த இன்டீரியர் டிசைனிங் மற்றும் டெகரேஷன் எனப்படும் துறையும் அதன் வல்லுனர்களுமேயாகும். எனவே உங்கள் இருப்பிடத்தை வடிவமைத்திட சரியான அலங்காரமுறையையும் வடிவமைப்பு சாதனங்களையுமே தேர்ந்தெடுங்கள்.