கடந்த சில வாரங்களாக ஆசிரியர்களும் பல்கலைக்கழக பழைய மாணவர்களும் விரிவுரையாளர்களும் பதாகைகளை ஏந்திய படி வீதிகளில் பகீஷ்கரிப்புகளிலும் போராட்டங்களிலும் ஈடுபடுவதை காண்கிறோம். இந்த கொத்தலாவலை சட்டமூலம் என்ன அந்தளவுக்கு எதிர்க்கப்படவேண்டிய விடயமா? இலங்கை உயர்கல்வியோடு தொடர்புடைய சேவைகளில் ஈடுபடும் கல்விசார், கல்விசாரா உத்தியோகத்தர்களுக்கும் அரசியற் தலைவர்களுக்கும் இந்த கொத்தலாவலை சட்டமூலம் தொடர்பில் ஏராளமான விளக்கங்கள் அளிக்கப்பட்டிருப்பினும் மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பொதுமக்களுக்கு இது தொடர்பில ; வழங்கப்பட்டுள்ள அறிவு எம்மாத்திரம்? தமிழ் பேசும் மக்கள் கூட்டத்திற்கு கொத்தலாவலை தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலம் (KNDU) தொடர்பில் சில முக்கிய விடயங்களை எத்திவைப்பதே இக்கட்டுரையின் நோக்கம்.
1981ஆம் ஆண்டு, 68ஆம் இலக்க சட்டம் மூலம் சேர் . ஜோன் கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக்கழகம் தாபிக்கப்பட்து. இந்த ஆரம்பச் சட்டவரைவின் படி, இந்த பல்கலைக்கழகத்தின் உண்மையான நோக்கம் மாணவச்சிப்பாய் அதிகாரிகளுக்கான கல்விசார் வசதிகள் மற்றும் வழிகாட்டல்களை வழங்குதல், அடிப்படை சேவைப்பயிற்சிகளை வழங்குதல், அவர்களுடைய ஆளுமை, தன்னம்பிக்கை, தலைமைத்துவப் பண்புகளை கட்டியெழுப்புதல் முதலியவற்றை உள்ளடக்கியதாக காணப்பட்டது. எனின், இலங்கையின் இராணுவ அதிகாரிகளின் கல்வித்தரத்தையும் பயிற்சிகளையும் விஸ்தரிக்கும் ஒரு பல்கலைக்கழகத்தை இலங்கைப்பிரஜைகளும் கல்வியியலாளர்களும் எதிர்க்கின்றனரா? நிச்சயமாக இல்லை. இத்தகைய பல பல்கலைக்கழகங்கள் உலகெங்கும் நடாத்தப்படுகின்றன. இங்கு நாம் கவனம் செலுத்த வேண்டியிருப்பது தற்போது முன்வைக்கப்பட்டுள்ள புதிய கொத்தலாவலை சட்டமூலம் தொடர்பிலாகும்.
தற்போது நாடாளுமன்ற அனுமதியை வேகமாக பெற்று நிறைவேற்றிக் கொள்ளத் துடிக்கும் KNDU சட்டமூலம் இதற்கு முன் 2018ஆம் ஆண்டிலேயே முன்வைக்கப்பட்டது. பல தரப்பினராலும் நிராகரிக்கப்பட்டதால் அவ்வேளையில் அது புறந்தள்ளப்பட்டது. எனினும் அதே சட்டமூலம் மாற்றங்களின்றி தற்போது மீண்டும் முன்வைக்கப்படுகின்றதென்றால் இது சிந்திக்க வேண்டிய விடயமல்லவா?
1978ஆம் ஆண்டின் பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் படி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் (UGC) கீழ் இலங்கையின் 16 பல்கலைக்கழகங்களும் 1980இல் இலங்கைத் திறந்த பல்கலைக்கழகமும் பதிவுசெய்யப்பட்டன. KDU ஆனது இதிலிருந்து விடுபட்டு வேறு சில பாராளுமன்ற சட்டங்களின் மூலமே நிறைவு செய்யப்பட்டதாகும். நீண்ட காலமாக ஒழுங்கமைக்கப்பட வேண்டிய தேவையை வேண்டிநிற்கும் இப்பல்கலைக்கழகம் தொடர்பில் தற்போது முன்வைக்கப்பட்டிருக்கும் சட்டமூலம் இலங்கையின் உயர்கல்விக்கு பாதகத்தை ஏற்படுத்துவதாய் உள்ளது.
KNDU சட்டமூலம் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள முதல் குற்றச்சாட்டு அது உயர்கல்வியை இராணுவமயப்படுத்தும் என்பதாகும். KNDU ஓர் ஆளுநர் சபையினூடாக இயங்கும். அச்சபையின் உறுப்பினர்கள் யாரென கவனியுங்கள்,
அ) பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்
ஆ) பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர்
இ) பாதுகாப்பு பணியாளர்களின் தலைமை அதிகாரி
ஈ) இலங்கை இராணுவப்படையின் கொமாண்டர்
உ) இலங்கை கடற்படையின் கொமாண்டர்
ஊ) இலங்கை வான்படையின் கொமாண்டர்
எ) பல்கலைக்கழகத்தின் உபவேந்தர்
ஏ) பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் பிரதிநிதி
ஐ) பொது திறைசேரியின் பிரதிநிதி
இங்கு 9 உறுப்பினர்களுள் அறுவர் இராணுவ அதிகாரிகளாகவே உள்ளனர். உபவேந்தரும் ஓர் இராணுவ அதிகாரியாக அமையுமிடத்து 2 பேர் மட்டுமே இராணுவத்திற்கு புறத்தே இருந்து தெரிவுசெய்யப்படுவர். KNDUவின் முக்கியமான அதிகாரங்கள் யாவும் இந்த ஆளுநர் சபைக்கே வழங்கப்பட்டுள்ளன.
அனுமதி பெறும் மாணவர்களுக்கான தகுதியை தீர்மானித்தல், கல்வி மற்றம் கல்விசாரா ஊழியர்களுக்கான குறைந்த பட்ச தகுதியை தீர்மானித்தல், பல்கலைக்கழகத்தோடு இணைவான காப்புறுதி பொறிமுறைகளை நிறுவுதல், பல்கலைக்கழகத்தோடு இணைவான உயர்க்கல்வி நிறுவனங்களை தாபித்தல், பாடரீதியான பிரதிநிதிக்குழு அங்கத்தவர்களை நியமித்தல், கல்விசார் நெறிமுறைகளை நிறுவுதல் முதலிய அதிகாரங்கள் யாவும் வாய்த்ததாக இச்சபை காணப்படுகிறது.
இத்தகைய அதிகாரங்கள் யாவையும் இராணுவ அதிகாரிகளின் கையில் கையளிப்பது கல்வியை இராணுவமயப்படுத்தலின் முனைப்பன்றி எதுவாக இருக்கலாம்?
மட்டுமன்றி 2010ஆம் ஆண்டு தொட்டு சில காலமாக பல்கலைக்கழக புகுமுக மாணவர்களுக்கான விசேட தலைமைத்துவப்பயிற்சிகள் நடந்தமை உங்கள் நினைவிலிருக்கக் கூடும். இப்பயிற்சிகள் கூட இராணுவத்தினராலேயே வழங்கப்பட்டன. இராணுவ ஒழுக்கம், பயிற்சிகள் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டிருந்தன. இவற்றை இராணுவமயப்படுத்தலின் நீண்ட காலத்திட்டமாகவே எம்மால் காணமுடிகிறது.
KNDUவானது UGCக்கு கீழ்படாமல் சுதந்திரமாய் இயங்கும் தன்மையுடையதாய் இருப்பதோடு UGCக்கு சமாந்திரமான வலுவாண்மையை உடையதாய் செயற்பட எத்தணிக்கிறது. UGC அங்கத்தவர்களாய் இருக்கும் 6 பேரும் தேசிய பல்கலைக்கழகங்களின் சிரேஷ்ட பதவிகளில் இருப்போர் அல்லது இருந்தோராவர். துறைசார்ந்த பிரதிநிதிகள் கூட அத்தகையவர்களே. உதாரணமாக, சமூகவியல் துறையின் பிரதிநிதியாக பல்கலைக்கழகமொன்றின் கலைப்பீடத்திற்குரிய முன்னாள் பீடாதிபதி செயற்படுவார். UGCயின் நடைமுறைகள், கட்டமைப்புக்கள் மட்டுமன்றி கல்விசார் ஒழுங்கமைப்புகளுக்கும் குறிப்பிட்ட கல்வித்துறை சார்ந்த நிபுணத்துவம் தேவைப்படுகிறது.
அவ்வாறாயின் இராணுவத்தலைவர்களை கொண்டியங்கும் KNDUவின் நிலை யாது? முகாமைத்துவம் மற்றும் நிர்வாகத்தை மேற்கொள்ளும் அமைப்பாகவே காணப்படும் ஒரு ஆளுநர் சபையை கொண்டு உயர்க்கல்வி அமைப்பு இயங்கலாமா? அண்மையில் SAITM எனும் தனியார் பல்கலைக்கழகத்தின் மருத்துவப்பீடம் தகுதியற்றது என மூடப்பட்ட போது அங்கு கல்வி கற்ற மாணவர்கள் எத்தகைய கேள்விபார்வையுமின்றி கொத்தலாவலை பல்கலைக்கழகத்திற்கு இணைக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.
KDU சட்டமூலத்தின் ஒரு பகுதி பின்வருமாறு பொருட்படுகிறது:
‘தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுமிடத்து அல்லது பல்கலைக்கழகத்தின் இயல்பான நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுமிடத்து அதனை தடுப்பதற்குரிய எத்தகைய நடவடிக்கையையும் எடுக்கும்படி ஆளுநர் சபைக்கு பாதுகாப்பு அமைச்சரால் வழிகாட்டல் வழங்க முடியும்’. இது உயர்க்கல்வியை அரசியல்மயப்படுத்தும் நடவடிக்கையாகும். இதன் மூலம் வழங்கப்படும“ அச்சுறுத்தல் யாருக்கானது?
இலங்கையில் காலத்திற்கு காலம் இலவச கல்விக்கும் மக்கள் சார்புடைய கல்விக் கொள்கைகளுக்கும் பாதிப்புகள் ஏற்படும் போதெல்லாம் அவற்றிலிருந்து மீட்பதற்கு மாணவரே முனைப்புடன் செயற்பட்டனர். இச்சட்டமூலம் இனிமேல் இவற்றிற்கு இடமில்லை என்பதை சாடையாக காட்டுகிறது.
மாணவர் அமைப்புக்கள், சுதந்திர இயக்கங்கள் என்பவற்றை இச்சட்டமூலம் தடைசெய்துள்ளது. எனின் ஜனநாயகம் என்பதன் அர்த்தம் என்ன? அறிவு என்பது சுயாதீனமாக சிந்தித்து செயற்படுவதற்கான அடிப்படைகளை வழங்க வேண்டும். கல்விசார் சுதந்திரம் காணப்பட வேண்டும் என்பது சர்வதேசக் கொள்கையாகும். ஆனால் இச்சட்டமூலம் இவற்றைத் தடைசெய்கிறது. கீழ்ப்படிவற்ற, பணிவற்ற மாணவர்களாய் இருத்தல் அல்லது விரிவுரையாளர்களோடு விவாதிப்பது என்பவை தண்டனைக்குரிய குற்றமாக இதில் கருதப்படுகிறது. முரண்பாடுகளுக்கு குரல் எழுப்பாது கீழ்ப்படிதல், சமூகத்திலும் தொழில்புரியும் இடங்களிலும் எதிர் கேள்வியெழுப்பாத விசுவாசம் என்பவையே வருங்கால சந்ததியிடமிருந்து எதிர்ப்பார்க்கப்படுகிறதா? பாரம்பரிய இராணுவ மரபுகளும் ஒழுக்கங்களும் இராணுவத்திற்கு பொருந்தலாம். அவை நவீன பல்கலைக்கழகங்களுக்கு பொருத்தமாகா. ஒரு சமூகத்தில் இராணுவம் மூலம் ஆற்றப்படும் வகிபாகம் அல்ல சிவில் சமூகத்தால் நிறைவேற்றப்படுகிறது என்பதை நாம் இங்கு நினைவிலிருத்த வேண்டும். இப்பல்கலைக்கழகம் மூலம் ஒழுக்கமுள்ள நற்பிரஜைகளே உருவாகுவார்கள் என்று கருதுகின்ற நபர்களும் ஒழுக்கம் என்பது இராணுவத்திற்கு வேறு – சிவில் சமூகத்திற்கு வேறு என்பதை புரிந்து கொள்ளல் அவசியம்.
இன்று எம் நாட்டில் பெரும்பாலானோர் காலூன்றி நிற்பதற்கும் சீவனம் செய்வதற்கும் பிரதான காரணம் இலவச கல்வித்திட்டமாகும். எனினும், KNDU மூலம் ஏனைய தேசிய பல்கலைக்கழகங்கள் போலன்றி கட்டணம் வசூலிக்கும் பாடநெறிகளை (எந்த ஒரு துறையோடு தொடர்புடையதும்) தனது இணைப்புக்கு கீழுள்ள எந்த ஒரு பல்கலைக்கழகத்தினாலும்நடாத்த முடியும். ஒரு நபர் தன்னால் இலவசமாக பட்டப்படிப்பை மேற்கொள்ள முடியாதவிடத்து அவரால் பணம் செலுத்தி கற்க முடியுமாயின் அவ்வாறு பெறுவது அவரது உரிமையாகும். இத்தகைய தனியார் கல்வி நிறுவனங்கள் முறையான பரிசீலனைகளின் கீழே நடரத்தப்பட வேண்டும். எனினும் KNDU தம்மோடு இணைக்கப்பட்ட கல்வி நிறுவனங்களினூடாக தனியார் கல்வி வியாபாரம், அதற்கான கட்டண அறவீடு மற்றும் மேலதிக இலாபமுழைக்கும் சந்தர்ப்பங்கள் என்பவற்றை விரும்பியவாறு விஸ்தரிக்கலாம். இதனால் உயர்க்கல்வியானது வணிகமயப்படுத்தப்படும். மேலும், இது UGCயின் நியமங்களுக்கு புறத்தே இயங்குவதால் பட்டப்படிப்பு ஒன்றிற்கு அனுமதி வழங்க UGC கொண்டுள்ள நியமங்களையும் பின்பற்றுவதில்லை.
இலாப நோக்கதின் பொருட்டு தரமற்ற பாடநெறிகளையும் அனுமதிக்கக் கூடிய அதிகப்படியான வாய்ப்பு இங்கு காணப்படுகிறது. இதனால் உயர்க்கல்வியானது தனது தரத்தை இழக்கலாம் என்றும் கல்வியலாளர்களால் கருதப்படுகிறது. மட்டுமன்றி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளுக்கு இச்சட்டமூலம் பெரிதும் இடமளிப்பதால் தேசிய பாதுகாப்புக்கும் எதிர்காலத்தில் அச்சுறுத்தல் ஏற்படலாம். என்பதனை புத்திஜீவிகள் என்ற பார்வையில் ஏற்றுக்கொள்ளலாம்.
கொத்தலாவலை தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலமானது இத்தகைய பல்வேறு ஆபத்துகளுக்கு வித்திடுவதாலேயே இன்று அது பலராலும் எதிர்க்கப்படுகிறது. இதனை வருங்கால சந்ததியை உருவாக்கும் பெற்றோர்களும் ஏனைய பொறுப்பு வாய்ந்தவர்களும் அறிந்து சீர்தூக்கி பார்ப்பது மிகவும் இன்றியமையாததாகும்.