.jpg?w=1200)
இலங்கை நாட்டின் கரையோரப் பகுதிகளில் ஒவ்வொரு திசையிலும் சிவாலயங்கள் அமையப்பெற்றுள்ளன. இவை இலங்கையை காவல் காப்பதற்காக அமைக்கப்பட்டன என வரலாற்று தொன்மங்கள் குறிப்பிடுகின்றன. நகுலேச்சரம், திருக்கேதீச்சரம், திருக்கோணேச்சரம் மற்றும் தொண்டீச்சரம் ஆகிய திருத்தலங்களே அவையாகும்.
போர்த்துக்கேய படையெடுப்பின் போது இத்திருத்தலங்கள் இடித்து சேதப்படுத்தப்பட்டன. நூற்றாண்டுகள் பல கடந்து பிறகு இன்று இக்கோயில்களின் தோற்றமும் நிலையும் மாற்றமடைந்து காணப்படுகின்றன. ஆறுமுகநாவலர், சிவஸ்ரீ நகுலேஸ்வர குருக்கள், குளக்கோட்டன் ஆகியோர் உட்பட பல பெருந்தகையோர், இக்கோயில்களின் மீள்கட்டுமானங்களுக்கென அயராது உழைத்தவைகளாவர்.
இலங்கையை காவல் காக்க அமைக்கப்பட்ட அவ் ஈச்சரங்களின் சிறு விபரங்களை பார்வையிடலாம்.
நகுலேச்சரம்
நகுலேச்சரம் அல்லது நகுலேஸ்வரம் இலங்கையில் யாழ்ப்பாண மாவட்டம் கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் ஆகும். மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றும் ஒருங்கே அமையப் பெற்ற சிவாலயமாக இது விளங்குகின்றது. அதனாலேயே உலகில் உள்ள பிரசித்தி பெற்ற ஆயிரத்தெட்டு சிவத்தலங்களுள் ஒன்றாக இத்தளமும் இனம்காணப்பட்டுள்ளது.

காலத்தால் முந்திய வழிபாட்டுத் தலங்களில் ஒன்றாக விளங்கும் இத்திருத்தலம் நகுல முனிவர், இராமன், சோழவேந்தன், நளன், அர்ஜுனன் , மாருதப்புரவீகவல்லி, ஆதி சோழ மன்னன் முசுகுந்தன் போன்றோரால் தொழப்பெற்ற தீர்த்தத் திருத்தலம் என புராணங்கள் குறிப்பிடுகின்றன.


இங்கு எழுந்தருளியுள்ள இறைவன் நகுலேஸ்வரப் பெருமான் என்றும் அம்பாள் நகுலாம்பிகை என்றும் அழைக்கப்படுகின்றனர்.

ஆரம்ப காலத்தில் திருத்தம்பலை கோயில் கொண்ட பெருமான் என்றும், திருத்தம்பலேசுவரர் ஆலயம் என்றும் பெயர் கொண்ட இக்கோயில் பின்னர் கீரிமலைக் கோயில் என்றும் நகுலேஸ்வரம் என்றும் அழைக்கப்படுகின்றது.

நகுலேஸ்வரத்தின் வரலாறுகள் தொடர்பில் தட்சிண கைலாயபுராணம், யாழ்ப்பாண வைபவமாலை, சீர்பாதகுலவனாறு, கைலாசமாலை, நகுலேஸ்வர புராணம், நகுலகிரிப்புராணம் என்பனவும் நகுலேஸ்வரர் விநோத விசித்திரக் கவிக்கொத்து, நகுலாம்பிகை குறவஞ்சி, நகுலமலைச் சதகம் என்பனவும் இத்திருத்தலத்தின் சிறப்பைக் குறிப்பிடுகின்றன.
திருக்கேதீச்சரம்
திருக்கேதீச்சரம் அல்லது திருக்கேதீசுவரம் என்றழைக்கப்படும் இலங்கையின் மேற்குக் கடற்கரைப் பகுதியிலுள்ள ஒரு சிவன் கோயிலாகும். இது மன்னார் மாவட்டத்திலுள்ள சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த துறைமுக நகரமான மாதோட்டத்தில் அமைந்துள்ளது.

கேது வழிபட்ட தலமாதலால் திருக்கேதிச்சரமாயிற்றென ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பழங்குடியினரான நாகர்களது முக்கிய வழிபாட்டுத் தலமாதலால் இத்திருக்கோயிலிற்கு நாகநாதர் எனவும் பெயர் வழங்கி வந்துள்ளது. சோழ, பாண்டிய மன்னர்கள் பல திருப்பணிகளை இத்திருக்கோயிலிற்காற்றியுள்ளனர். வன்னி, யாழ்ப்பாண அரசர்கள் நித்திய நைமித்திய பூஜைகளை இடையறாது செய்த பெருமையுங் கொண்ட திருத்தலம் இதுவாகும்.

இங்கு எழுந்தருளியுள்ள இறைவன் திருக்கேதீஸ்வர பெருமான் என்றும் அம்பாள் கௌரியம்மை என்றும் அழைக்கப்படுகின்றனர்.

திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரும், சுந்தரமூர்த்தி நாயனாரும் இத்தலத்தின் மீது பதிகம் பாடியுள்ளார்கள். தேவாரப் பாடல் பெற்ற ஈழ நாட்டுத் தலங்களில் இத்தலமும் ஒன்றாகும்.

இத் தலத்திலமைந்துள்ள பாலாவித் தீர்த்தத்தில் நீராடி இறுதிக்கடன் புரிவோர்க்கு புண்ணியம் கிட்டுமெனவும் இத் தீர்த்ததில் நீராடுவோர்க்குப் பிரமகத்தி போன்ற பாவங்கள் தீருமென்பதும் ஐதீகம்.
திருக்கோணேச்சரம்
திருக்கோணேச்சரம் (திருக்கோணேஸ்வரம்) இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் தலை நகரமான திருகோணமலையின் சுவாமிமலையில் உள்ள ஒரு சிவன் கோயில் ஆகும். உலகில் உள்ள வழிபாட்டுத்தலங்களில் மிகப்பழமையான இவ்வாலயத்தை இலங்கையை ஆண்ட மனு மாணிக்கராஜா என்ற மன்னன் இக்கோயிலைக் கட்டினான் என்று சான்றுகள் கூறுகின்றன.

கி.பி. 1624 ஆம் ஆண்டில் போர்த்துக்கேயத் தளபதியாகவிருந்த கொன்ஸ்டன்டைன் டீ சா கோயிலை இடித்து சேதப்படுத்தியுள்ளான். கோட்டை சுவரில் “முன்னே குளக்கோட்டன் …” எனும் கல்வெட்டு காணப்படுவதும், பாண்டியருடைய கயல் சின்னம் பொறிக்கப்பெற்றிருப்பதும் இக்கோவிலின் வரலாற்று பெருமையை உணர்த்தும்.

இலங்கை சுதந்திரம் பெற்ற பின்பு 1952 ல் திருகோணமலையில் உள்ள பெரியார்களால் மீள கட்டுவிக்கப்பட்டது. முன்னைய கோயிலுடன் ஒப்பிடும் போது இப்போது இருக்கும் கோயில் மிகச்சிறியது என்கின்றனர் ஆய்வாளர்கள்.

திருக்கோணேச்சர ஆலயம் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியவற்றால் சிறப்பு மிகுந்தது. இத்தலத்தில், இறைவன் கோணேச்சரரும், இறைவி மாதுமையாளும் வீற்றிருந்து அருள் புரிகின்றனர். இக்கோயிலின் தீர்த்தம் பாவநாசம் என அழைக்கப் படுகின்றது. அதன் அர்த்தம் பாவங்களை கழுவித் தீர்க்க வல்லது. தலவிருட்சமாக கல்லால மரம் விளங்குகின்றது.

இத்தலத்தின் மீது திருஞானசம்பந்தரால் தேவாரப் பதிகம் பாடப் பெற்றுள்ளது. அவ்வாறே, அருணகிரிநாதரும் இத்தலத்தின் மீது திருப்புகழ் பாடியுள்ளார்.

இந்த ஆலயத்தில் ஆகம முறைப்படி பூசைகள் இடம்பெறுகின்றன. மகோற்சவம் பங்குனி உத்தரத்தில் கொடியேற்றத்துடன் ஆரம்பித்து, பதினெட்டு நாட்களுக்கு நடைபெறுகின்றது. இந்த ஆலயத்தில் சிவராத்திரி தினம் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.
தொண்டேச்சரம்
தொண்டீசுவரம் (அல்லது தொண்டேசுவரம், தொண்டேச்சரம்) என்பது இலங்கையின் தெற்கில் மாத்தறை மாவட்டத்தில் தெவிநுவர (தேவேந்திரமுனை) எனும் பகுதியில் இருந்த ஒரு வரலாற்று சிறப்பு மிக்க சிவன் கோயிலாகும். இக்கோயில் போத்துக்கீசர் ஆட்சியின் போது போத்துக்கீசரால் உடைத்து சேதப்படுத்தப்பட்டது என வரலாறுகள் கூறுகின்றன. தற்போது தொண்டேச்சரம் கோயில் இருந்த இடத்தில் ஒரு விஷ்ணு கோயில் அங்கிருந்த சிங்களப் பௌத்தரால் எழுப்பப்பட்டுள்ளது. “தெவிநுவர கோயில்” என இது அழைக்கப்படுகிறது.

இங்கு மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகளின் போது ஒரு பெரிய சிவலிங்கம் ஒன்று ஆய்வாளர்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டது என்றும் இருப்பினும் இந்த தகவல் வெளியில் வெளிவராமல் தடுக்கப்பட்டதாக வரலாற்று ஆய்வாளரான முருகர் குணசிங்கம் அவரின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் என கூறப்படுகின்றது.

இலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க திருத்தலங்களாகவே இன்றும் இத்தலங்கள் அறியப்படுகின்றன. இத்தலங்களை சுற்றி வரலாற்று ஆய்வுகளும் அகழ்வாராய்ச்சிகளும் மேற்கொள்ளப்பட்டால் பல உண்மைகளை உலகம் அறிந்துகொள்ளமுடியும் என்கிறார்கள் தமிழ் ஆர்வலர்கள்.