“பாபர்” இந்த பேர் கேட்ட உடன் எல்லாருக்கும் வரலாறு புத்தகத்துல படிச்ச ஞாபகம் வரும். பொதுவாக சிறுவர் முதல் பெரியவர்கள் வரை வரலாறு பற்றி கேட்டால் அவர்கள் உடனே சொல்வது பாபர், அக்பர், ஷாஜஹான்.. இதுபோல நிறைய உண்டு இங்கு கவனிக்க வேண்டியது முதல் ஞாபகம் பாபராகத்தான் இருக்கிறது, நம் கல்வியும் அதைத்தான் கற்றுக்கொடுக்கிறது. சரி பாபர் பற்றி மறந்தவற்றை இங்கே சுவாரசியமாக வாசிப்போம் வாருங்கள்.
ஆணிவேர்
மத்திய ஆசியா, பரந்து விரிந்த நிலப்பகுதி. ஈரானை மையமாகக் கொண்டு வாழ்ந்தவர்கள் தெமூரித்கள்(தைமூர்கள் என கூறுவதுண்டு). செங்கிஸ்கான் வம்சவழியில் வந்த இவர்கள் மத்திய ஆசியா முழுவதும் ஈரானிய-துருக்கி கலாச்சாரத்தை வளர்த்தார்கள். துருக்கி வழிவந்த செங்கிஸ்கான் பரம்பரையினரையும் ஆதி மங்கோலியர்களையும் குறிக்க பயன்படுத்தப்பட்ட சொல்தான் ” மொகல் “. மொகாலிஸ்தான் என உண்மையான மங்கோலியவை குறிக்க பயன்படுத்தினார்கள். அதில் இருந்து தோன்றியதுதான் ” முகலாயர்கள் “. இதில் உண்மையான இஸ்லாமியர்கள், மங்கோலிய வழிவந்த பின் இஸ்லாம் மதத்தை தழுவியவர்களை முழு இஸ்லாமியர்களாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆதலால், மங்கோலியர்கள் தங்கி இருந்த பகுதியான சமர்கண்ட், புகாராவில் வாழ்ந்த இஸ்லாமியர்களை ” முகலாயர்கள் ” என பிரித்து அழைக்க ஆரம்பித்தனர். இங்கு ஆட்சி புரிந்த தெமூரித்களில் முதன்மையானவர் அமீர் தெமூர் ( 1336 – 1405 ). இவர் காலத்தில் சிறு சிறு பிரதேசங்கள் மீது படையெடுத்து வெற்றிகொள்வது. அப்படி கைப்பற்றியதில் சிரியா, அனடோலியா மற்றும் இந்திய பகுதிகளும் அடங்கும். இவரின் தனித்துவமான சிறப்பு என்னவென்றால், தான் கைப்பற்றிய இடங்களில் இருந்து கலைஞர்களைத் திரட்டி தன் சொந்த பூமியான சமர்கண்ட்டிற்கு அனுப்பி அந்த நகரத்தையே கலைகளின் தலைநகரமாக மாற்றும்படி ஆணை பிறப்பித்தார். இதை ஒரு லட்சியமாகவே அமீர் தெமூர் கொண்டிருந்தார். அப்படி என்ன வியப்பு உள்ளது சமர்கண்ட்டில் என யோசிக்கும் நொடியில் இணையத்தில் சொடுக்கி பாருங்கள் உஸ்பெகிஸ்தானின் இரண்டாவது பெரிய நகரம் சமர்கண்ட். கலைகளின் மீது அளவிலாத ஆசை உள்ளவர்கள் அதை கண்டுகளியுங்கள்.
காலம் கடந்து பதினைந்தாம் நூற்றாண்டின் பிற்பாதியில் மூன்று இனத்தவர்கள் மத்திய ஆசியாவை கைப்பற்ற தீவிரமாக தந்திரங்களை கையாண்டனர். அதில் தெமூரித்களின் வியூகம் சற்று முன்னேறி இருந்தது. வடக்கே உஸ்பெகிஸ்தானில் இருந்து மங்கோலியர்களின் வம்சவழியில் வந்த சன்னி முஸ்லிம்கள், ட்ரான்ஸோக்ஸியானாவுக்குள் ஊடுருவ முயற்சி செய்துகொண்டிருந்தார்கள். ஈரானில் இருந்த ஷியா முஸ்லிம்களால் மேற்கில் சஃபாவித் என்ற புதிய சமஸ்தானம் உருவாக்கி இருந்தார்கள். ஓட்டமான் பேரரசு கிழக்கு ஐரோப்பிய பகுதிகளையும், ஈரான், இராக்கையும் கைப்பற்ற தீவிர போர் வியூகங்களை நடைமுறை படுத்தினர். இதில் வெற்றியும் தோல்வியும் கைமாறி கொண்டே இருந்தது. அன்று ட்ரான்ஸோக்ஸியானாவின் சுல்தானாக இருந்தவர் அபு ஸயீத் மிர்ஸா. இவர் அமீர் தெமூரின் பேரன். பாபரின் தாத்தா. போர்களின் பிணக்குவியலில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்ள நினைத்தார் அபு ஸயீத் மிர்ஸா, அதனால் தனது ராஜ்ஜியத்தை மகன்களுக்கு பிரித்து கொடுத்தார். அதில் ஃபெர்கானா பள்ளத்தாக்கு பகுதியை உமர் ஷேக் மிர்ஸாவிற்கும், சமர்கண்ட்டும், பொக்காராவும் அகமது மிர்ஸாவிற்கும், காபூல் உலுக் மிர்ஸாவிற்கும், பாதக்க்ஷன்அபுபக்ர் மிர்ஸாவிற்கும் மற்றும் காந்தஹாரை மூரத் மிர்ஸாவிற்கும் பிரித்து கொடுத்தார்.
பாபரின் பிறப்பு
இதில் ஃபெர்கானாவின் வாரிசாகவும் தந்தை உமர் ஷேக் மிர்ஸாவிற்கும், தாய் க்வட்லக் நிகார் கானும் மிற்கும் மகனாகவும் பிறக்கிறார் “பாபர்”. ஸாகிர் உதின் டின் முகம்மத் பின் உமர் ஷேக் ( Zahir ud-Din Muhammed bin Omar Sheykh ) என்பது பாபரின் முழுப்பெயர். உஸ்பெக்கிஸ்தானில் உள்ள ஆண்டிஜனில் பிப்ரவரி 14, 1483 ஆம் வருடம் பிறந்தார். பாபரின் தாயும் செங்கிஸ்கான் பரம்பரையில் வந்தவர். அதாவது தாய்வழி தாத்தாவான யூனுஸ் கான் செங்கிஸ்கானில் இருந்து பதிமூன்றாவது நேரடி பரம்பரை. ஆக பாபர் துருக்கி-மங்கோலிய கலப்பு இனத்தவர். பின் நாட்களில் என்னதான் கலப்பு இனத்தில் பிறந்து இருந்தாலும் பாபர் தன்னை துருக்கி இனத்தவர் என்று சொல்லிக்கொள்ளவே விரும்பினார். காரணம் மங்கோலியர்களை அவர் மனம் கலாச்சாரம் நிறைந்தவர்களாக ஏற்றுக்கொள்ளவில்லை. பாபர் பற்றிய சிறு வயது விவரங்கள் பதிவு செய்யப்படவில்லை, பாபரின் பதினான்காவது வயதில் இருந்துதான் அவரது வாழ்க்கையை மிக விரிவாக அவர் சுய சரிதை ” பாபர் நாமா ” வில் பதிவு செய்துள்ளார். அது துருக்கிய மொழிகளுள் ஒன்றான சாகெட்டெயில் (Chagatai ) எழுதப்பட்டுள்ளது. தந்தையின் ஆளுமையை பார்த்து வியந்து வளர்ந்தவர் பாபர். தான் ஆட்சி பொறுப்பில் தந்தையை போலவே செயல்பட துடித்த சிறுவன் பாபர். அப்படி இருக்கையில் பாபர் தனது பனிரெண்டாம் வயதில் ஆண்டிஜன் நகரத்தின் வெளியே கூடாரமிட்டு தங்கியிருந்தபொழுது அவர் தந்தை இறந்த செய்தி வந்தடைகிறது. ஆனால் இறப்பதற்கு முன்னமே தனது மூத்த மகன் பாபரைத்தான் ஃபெர்கானாவின் அடுத்த சுல்தானாக அமர வைக்க வேண்டும் என்பது உமர் ஷேக் மிஸ்ராவின் ஆசை, ஆனால் அதற்கு முன் இறந்துவிட நிலைமை தலைகீழாய் மாறிப்போனது. சுல்தானாக ஆட்சியில் அமரவைக்க பாபர் பின் ஷேக் மிர்ஸாவின் நம்பிக்கைக்குரிய அமைச்சர்கள் இருந்தார்கள் மற்றொரு பக்கம் அவரது தம்பியை ஆட்சியில் அமரவைக்க இன்னொரு கூட்டம் சதி செய்து கொண்டிருந்தது. இதுபோக பாபரின் சித்தப்பா, பெரியப்பா மற்றும் அவர்களது மகன்கள் அனைவரும் அடுத்த சுல்தானாக முழு முயற்சியில் தந்திரங்கள் செய்து கொண்டு இருந்தனர். இருப்பினும் பாபரின் விசுவாசிகள் அனைவரின் சூழ்ச்சியை உடைத்து பாபரையே சுல்தானாக்குகின்றனர்.
ஃபெர்கானாவின் சுல்தானாக அமர்ந்தார் பாபர். சிறுவன் என்பதால் எந்நேரம் வேண்டுமானாலும் பாபர் உயிருக்கு ஆபத்து இருப்பதை கண்டறிந்த அமைச்சர்கள் பாபரை கண்காணிப்பிலேயே பாதுகாத்தனர். வேறு வலி இல்லாமல் ஆபத்தான சூழலிலேயே ஆட்சி செய்ய ஆரம்பித்தார். ஃபெர்கானா, சிறிய பிரதேசம்தான் ஆனால் செழிப்பான பள்ளத்தாக்கு பூமி. பயிர் தொழிலுக்கும் பழத்தொழிலுக்கும் ஏற்ற நிலம் மற்றும் கால்நடைக்கு ஏற்ற சீதோஷணம் கூடவே போராட்டங்களும் நிறைந்து இருந்தன. ஒவ்வொரு நாளும் விழிப்புடன் இருக்க வேண்டிய சூழல் உண்டாயிற்று இருந்தும் பாபருக்கு ஒரு கனவு சமர்கண்ட் மீது, எப்படியாவது அதை பிடித்தே ஆகவேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அன்றைய காலகட்டத்தில் தனது ஒன்றுவிட்ட சகோதரரான பைசங்கார் சமர்கண்ட்டை ஆட்சி செய்து வந்தார். சமர்கண்ட் மீதிருந்த ஆசையில் 1495 ஆம் ஆண்டு செப்டம்பரில் முற்றுகையிட முயற்சி செய்கிறார் ஆனால் தோல்வியே கிட்டுகிறது. பின்பு சரியாக ஒரு வருடம் கழித்து மீண்டும் முற்றுகையிடுகிறார் மீண்டும் தோல்வி. முயற்சியை கைவிடாத பாபர் 1497 ஆம் ஆண்டு ஆகஸ்டில் அடுத்த முற்றுகையை நிகழ்த்துகிறார் வெற்றி கிடைக்கிறது. பதினைந்து வயதில் தெமூர் இனத்தின் சுல்தானாக பதவி, சிறிய வயதில் பெரிய சாதனைகள் இருப்பினும் எப்பொழுதும் யார்வேண்டுமானாலும் சமர்க்கண்டை குறிவைக்கலாம். அதனால் போதுமான பாதுகாப்போடு சமர்க்கண்டை ஆட்சி புரிந்தார் பாபர். வந்து நூறு நாட்கள் கடந்த நிலையில் பாபருக்கு உடல் நிலை குன்றியவேளையில் அந்த கெட்ட செய்தி வந்து சேர்கிறது. அது, ஃபெர்கானாவை இழந்துவிட்டோம் என்ற செய்தி மேலும் அதை பிடித்தது அவரது சகோதரர் ஜஹாங்கிர் என தெரிய சோகத்தில் இருக்கிறார் பாபர். இந்த சோகம் தணிவதற்குள் இன்னொரு அதிர்ச்சி செய்தி, அலி மிஸ்ராபோகராவின் சுல்தான் பாபரின் ஒன்றுவிட்ட சகோதரர் சமர்க்கண்டை முற்றுகையிட்டுகிறார்.செய்வதறியாது போரில் நின்ற பாபர் உயிர் பிழைக்க தப்பி ஓடவேண்டிய நிலை ஏற்பட்டது. இப்பொழுது ஃபெர்கானாவும் இல்லை சமர்கண்ட்டும் இல்லை. பாதுகாப்பான இடத்தில் பதுங்கினால் போதும் என்ற நிலைக்கு வந்தார் பாபர். தப்பியோடி மீண்டும் போருக்காக படைகளை கொஞ்சம் கொஞ்சமாக திரட்டுகிறார் பின் போர் புரிந்து வெற்றியும் பெறுகிறார். நிம்மதி பெருமூச்சு விடுவதற்குள் புதிய எதிரி அதுவும் மிகவும் பலமான எதிரி. உஸ்பெகிஸ்தானின் வலிமையான சுல்தான். தெமூரித்களை அழிப்பதே இவரின் வாழ்க்கை லட்சியமாக கொண்டிருந்தவர். அவர்தான் சைபானி கான். இதை அறிந்த பாபரால் களத்தில் தாக்குப்பிடிக்க முடியாமல் தோல்வியை தழுவுகிறார். பாபரின் வாழ்க்கை சூதாட்டம் போல வெற்றியும் தோல்வியுமாக மாறி மாறி பாபரை சுற்ற விடுகிறது. ஒருவழியாக 1500 ல் சமர்கண்ட் மீண்டும் பாபரை வரவேற்கிறது அதிகப்படியாக ஆறு மாதம் நிம்மதியாக இருக்க முடிந்தது.
மறக்கமுடியாத நாட்கள்
திரும்பவும் உஸ்பெகிஸ்தானின் சுல்தான்களில் ஒருவரான வேர்ம்ஸ்வுட் கான் சமர்கண்ட்டை குறிவைத்தார். சேதி கிடைத்தவுடன் பாபர் அவர் பற்றி தெரிந்து அதிர்ந்துபோகிறார் மீண்டும். ஏனெனில், வேர்ம்ஸ்வுட் கான் வயதில் மூத்தவர், அனுபவமிக்கவர், போர்தந்திரங்களில் கைதேர்ந்தவர். நெருங்கி நெருங்கி சமர்கண்ட்டை சுற்றி வளைக்கிறார். இவருடைய போர் வியூகம் சற்று மாறுபட்டு காணப்பட்டது ஏனெனில் முற்றுகையிட்ட நாளில் இருந்து கோட்டையை சுற்றி வந்தாரே தவிர தாக்குதல்கள் எதுவும் நிகழ்த்தவில்லை. மூன்று மாதங்கள் உருண்டோடின பொறுமை காத்த பாபர் அதன்பின் பொறுமை இழந்து எதிரியின் படைபலம் அறியாமல் கோட்டைக்கு வெளியே வந்து பெரிய தவறு செய்கிறார். கடுமையான தாக்குதலுக்கு இடையே திரும்ப கோட்டைக்குள் ஓடி ஒளிகிறார். வேர்ம்ஸ்வுட் கான் முற்றுகையை தொடர்கிறார். உதவி கேட்கக்கூட எந்த போக்குவரத்தும் இல்லாமல் போனது முற்றிலும் முடக்கினார் வேர்ம்ஸ்வுட் கான். கோட்டைக்குள் உணவு தானியங்கள் தீர்ந்து பசியில் குதிரைகளையும், கழுதைகளையும் அடித்து தின்ன ஆரம்பித்தனர். பாபர் நம்பிக்கை இழந்தார். மக்களும், வீரர்களும் பசியின் பிடியில் சிக்கி கோட்டையை விட்டு வெளியேறி எதிரிகளிடம் சரணடைந்தனர். பாபர் உட்பட அனைவரையும் மன்னித்து சமர்கண்ட்டை விட்டு வெளியேற அனுமதிக்கிறார். தன்னுடன் இருப்பவர்களை கூட்டிக்கொண்டு அங்கிருந்து தப்பிக்கிறார் பாபர். போக வழி இல்லாமல் காடு, மலை, கரடுமுரடான பாதைகளை கடந்து யோசிக்க கூட முடியாத தருணங்கள். அனைவருக்கும் ஓய்வெடுக்க முடியாத பயணமாகி போனது அது மேலும் தன்னுடன் வருபவர்கள் பின் இருக்கிறார்களா என குதிரை மீதிருந்து பாபர் திரும்பி பார்க்க தவறி விழுந்து நினைவு இழக்கிறார். நிற்க வழி இல்லாமல் அவரை தூக்கி சுமந்துகொண்டு பயணத்தை தொடர்கின்றனர் இடையில் பசியின் கொடுமை தாங்காமல் குதிரை உணவாகி அனைவரின் பசியை போக்கியது. பாபருக்கு நினைவு வர ஒருநாள் பிடித்தது அவர் கண் விழித்த பின்புதான் அனைவருக்கும் நம்பிக்கை பிறக்கிறது. பயணம் தொடர்ந்து வெகுநேரம் ஆகி தாக்கட் என்ற அடைந்தனர். இங்கு தன்னுடன் வந்தவர்களை அங்கே விட்டுவிட்டு பாபர் வேறு சில உறவினர்களை பார்க்க தாஷ்கண்ட் செல்கிறார். சுல்தானாக வாழ்ந்தவர் ஒருவேளை உணவிற்க்கே அல்லாடும் நிலை. அடுத்தது என்ன செய்வது என தெரியாமல் நேரத்தை கடந்துக்கொண்டு இருக்கிறார். ஆறுதல் சொல்கூட யாரும் இல்லாதவேளையில் தனக்கு தானே ஆறுதல் கூறிக்கொள்வார் ” ஏன் ஆன்மாவைவிட உண்மையான சிநேகிதனை பார்த்ததில்லை. என் மனதைவிட நம்பிக்கையானவர் வேறு எவரும் இல்லை.” மனதில் நம்பிக்கை குறையும்போதெல்லாம் இதை நினைத்துக்கொள்வார்.
ஆறுதல் ஆட்சி
இடையில் காபூலில் பாபரின் உறவினரான உலுக் பெக் மிர்ஸா ஆண்டு வந்தார். நிலையான ஆட்சியை கொடுத்த அவர் நோய்வாய்ப்பட்டு இறந்து போக அரியணை ஏற வயது இல்லாமல் அவர் மகன் அப்துல் ரஸாக் மிர்ஸா வை பலரையும் எதிர்த்து ஆட்சியில் அமரவைத்துவிட்டு ராஜ்பரதிநிதியாக அமீர் ஜெரிம் ஜாகா என்ற விசுவாசி பொறுப்பேற்கிறார். ஆனால் சில நாட்களிலேயே ஜாகாவை படுகொலை செய்கின்றனர். இடைப்பட்ட நேரத்தில் முகம்மது முகீம் அர்கன் காபூலை சுற்றி வளைத்து ஆட்சியை கைப்பற்றுகிறான், சிறுவன் அப்துல் ரசாக் மிர்ஸாவை நாட்டைவிட்டு துரத்தி விடுகிறான். தலைமை சரியில்லாமல் காபூலில் ஆட்சி குழப்பமான நிலையில் இயங்கி கொண்டிருந்ததை பாபர் தெரிந்துகொண்டார். மேலும் பல மாதங்களாக காபூல் ,சமர்கண்ட் பற்றியும் செய்திகளை கூர்ந்து கவனித்து வந்தார். பாபர் சிந்திக்க தற்போது சமர்கண்ட்டில் போர் செய்யும் அளவிற்கு நிலைமை சரியில்லை கொஞ்ச நாட்களுக்கு உஸ்பெக்கியர்களிடம் இருந்து விலகி இருப்பது நல்லது என முடிவுக்கு வருகிறார் உடன் இருப்பவர்களும் அதையே கூறுகிறார்கள். பாபரின் உறவினர்கள் காபூலுக்கு செல்லுங்கள் உங்களுக்கு பொருளுதவி மற்றும் படை உதவியை நாங்கள் செய்கிறோம் என முன்வந்தனர். பாபர் முடிவெடுத்து காபூலை நோக்கி செல்கிறார் வழியில் இவருக்கு ஆதரவாக பல்வேறு உறவினர்கள், நிலப்பிரபுக்கள் உடன் இணைகின்றனர். இதற்கிடையில் முகலாய தேசிய படையை உருவாக்குகிறார் அதன்வழியே பாபர் சகோதரர் ஜஹாங்கிர் உடன் இணைகிறார். இறுதியில் காபூல் முற்றுகையிட எந்த ஒரு பெரும் போர் இல்லாமல் முகீம் அர்கன் சரணடைகிறார். தனது இருபத்திரண்டாவது வயதில் காபூலின் அரசர் ஆனார் பாபர். பிடிபட்டவர்களை பாதுகாப்பாக நாட்டை விட்டு வெளியேற்றி மரியாதையை செலுத்துகிறார்கள். முதல்முறையாக எந்த பிரச்னையும் யோசிக்காமல் ஒரே இடத்தில இரண்டு ரமலான் நோன்பை கழிக்கிறார். மக்கள் வறுமையில் வாடுவதை கண்ட பாபர் பொருளாதாரத்தை மேம்படுத்த நிறைய ஆலோசனைகள் கேட்கிறார் அதில் எதுவுமே இவருக்கு திருப்தி அடையாமல் இருக்கும்பொழுது அமீர் தெமூரின் செயல் நினைவுக்கு வருகிறது. அதையே செயல்படுத்த ஆயத்தமாகிறார் பாபரும் அவருடைய படையும். கொள்ளையடிப்பது அதுவும் இந்துஸ்தானத்தில் வந்து கொள்ளையடித்து சென்றுவிடுவது. அதேபோல் பாபர் முதன்முறையாக 1505 ல் தான் இந்துஸ்தானத்தின் உள்ளே கால் வைக்கிறார். கைபர் கனவாய் வழியே உள்வந்து செல்வங்களை கொள்ளையடித்துவிட்டு செல்கிறார். அப்பொழுது அவர் கண்ணில் செல்வங்கள் மட்டுமே தெரிந்தன மற்றபடி ராஜ்ஜியங்களை பிடிக்கவேண்டும் என்ற எண்ணமெல்லாம் வரவில்லை.
“பாட்ஷா” பாபர்
இந்நிலையில், சைபானி கான் அச்சுறுத்தல் மத்திய ஆசிய பகுதிகளில் அனைவரிடமும் பயத்தை ஏற்படுத்துகிறது , உஸ்பெக்குகள் படை தெமூரித்களின் வம்சத்தை அடியோடு அழிவேண்டும் என்ற நோக்குடன் வியூகம் அமைக்க ஆரம்பித்தார்கள். இதையறிந்த ஹுசைன் மிர்ஸா இஸ்லாமியர்களின் கலாச்சார தலைநகரமாக இருந்த ஹீரத்தின் சுல்தான். அன்றய தைமூர் இனத்தின் வலிமையான சுல்தானாக வயதில் மூத்தவராக இருந்தவர் ஆதலால் இவர் “பாட்ஷா” என்றழைக்கப்பட்டார். இவர் அனைவரும் ஒன்றிணைந்தால் சைபானி கானை வீழ்த்தமுடியும் எனக்கூறி அழைப்புவிடுகிறார். பாபரோ அழைப்பை ஏற்று படைகளோடு ஹீரத்தை சென்றடைகிறார் அங்கே அவருக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. வயதான ஹுசைன் மிர்ஸா இறந்து போயிருந்தார். நம்பிக்கை இழக்காமல் அவரின் இரண்டு மகன்களைக்கொண்டு போர் புரிய எத்தனிக்கும் பொழுது அவர்களுக்கு போரில் எல்லாம் ஈடுபாடு இல்லை என்பதை உணர்கிறார் அவர்கள் இசை, ஓவியம், இதர கலைகள் மீது ஆர்வம் கொண்டுள்ளார் என்பதை புரிந்து இனி இங்கிருந்தால் நமக்குத்தான் ஆபத்து என காபூலை நோக்கி திரும்ப ஆரம்பித்தார்கள். பாபர் காபூலை சென்றடைவதற்குள் சைபானி கான் ஹீரத்தை பிடித்துவிட்டார் என செய்தி வருகிறது. எதிர்பார்த்த செய்திதான் பாபர் நினைக்கிறார். தைமூர் இனத்தில் மிஞ்சி இருந்தவர்களில் வலிமையான சுல்தானாக பாபர் ஒருவரே இருக்கிறார் ஆகையால் பாபர் ” பாட்ஷா ” ஆகிறார்.
செருக்கு தலைக்கு ஏறி இருந்தவேளையில் சைபானி கான் தவறான முடிவை எடுக்கிறார். திட்டமிட்டு போரில் வெற்றிபெறும் யுக்தியை மறந்து ஆர்வக் கோளாறில் பாரசீகத்தை நோக்கி படை எடுத்துவிடுகிறார் சைபானி கான். அங்கே ஆட்சியில் இருப்பார் ஷா இஸ்மாயில் சாதாரணமான ஆள் கிடையாது மிகப்பெரிய மாவீரன் அவரது படையின் ஒரு பகுதியே போதும் சைபானி கானின் படையை வீழ்த்த. தெளிவில்லாமல் அவரிடம் மாட்டி சிதைகிறார் சைபானி கான். கூறாக வெட்டி எறியப்படுகிறார் சைபானி கான். உஸ்பேக்குகளை போர்க்களத்தில் வீழ்ந்தவண்ணம் போர் முடிவு பெறுகிறது. செய்தி தைமூர்களின் காதில் விழ அனைவருக்கும் பெரிய சந்தோசம். பாபருக்கு மீண்டும் சொந்த மண் சமர்கண்ட் மின்னியது. தனது சகோதரர்களில் ஒருவரான நாஸிர் மிர்ஸாவிடம் காபூலில் ஆட்சி பொறுப்பை ஒப்படைத்துவிட்டு படையை திரட்டி ட்ரான்ஸோக்ஸியானா நோக்கி செல்கிறார். ஹஸ்ஸார் என்ற இடத்தில போர் ஹம்ஸா சுல்தான், மஹ்தி சுல்தான் துணையுடன் உஸ்பெக்குகளை வீழ்த்துகிறார். சிறிது நாட்களிலே மீண்டும் உஸ்பெக்குகள் ட்ரான்ஸோக்ஸியானாவை கைப்பற்றுகிறார்கள். திரும்பி ஓட முடியாமல் சொந்த மண்ணை அடையவேண்டும் என்ற தவிப்பு ஆகவே பாதக்க்ஷனில் தாங்கினார். மாதங்கள் கழிந்தன எப்படியும் பிடித்துவிடவேண்டும் என்ற நினைப்புடன் இருந்த பாபருக்கு காபூலில் இருந்து சகோதரருக்கு உடல்நிலை மிகமோசமாக உள்ளது என செய்தி வர உடனே காபூல் கிளம்பினார் பாபர். பிப்ரவரி 15, 1515 ல் நாஸிர் மிர்ஸா இருந்துபோகிறார். அடுத்து சில ஆண்டுகள் காபூலில் தாங்கும் நிலை உருவாகிறது இதற்கிடையில் தன் ஆப்கானிய எல்லையை விரிவுபடுத்த நினைத்து சிறு சிறு பிராந்தியங்களை போரிட்டு ஒன்றிணைகிறார். தன் படைவீரர்களை பெருமளவு உயர்த்தினார். அவர்களுக்கு முகாம்களை நடத்தி போர் சிறப்பு பயிற்சி வழங்கினார் அதில் போர் தந்திரங்கள், நவீன ஆயுதங்களை கையாள்வது என பலவகை கற்றுத்தரப்பட்டது. பாட்ஷா தேவைப்படும்பொழுது கொள்ளையும் அடித்தார்.Muhammad Shaybani
கனவு தேசத்தின் அழைப்பு
பாபர் மனக்கட்டுப்பாடு மற்றும் மதக்கட்டுப்பாடும் அதிகம் உள்ளவர் ஆதலால் கலை, இலக்கியம், உல்லாசம் இதன்மீதெல்லாம் அவருக்கு நாட்டம் இருந்ததில்லை.வற்புறுத்தியும் இவைகளை செய்யாதவர் தனது முப்பதாவது வயதில் அவருக்கு ஒயின் மீது ஈடுபாடு ஏற்பட ஓபியம் போதைகளும் அறிமுகமாகிறது. பின் பல திருமணங்கள், அந்தப்புரத்து ஆசை இவையெல்லாம் ஆரம்பித்தது. பாபருக்கு நிறைய மனைவிகள் மற்றும் நிறைய குழந்தைகள் இருந்தாலும் 1507 ஆம் ஆண்டு மாஹாமா பேகத்திற்கு ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது. அந்த ஆண் குழந்தைக்கு அபுல் மூஸாஃபர் நஸீர்-உத்-தின் முகம்மது ஹுமாயூன் என பெயர் சூட்டுகிறார். இந்நிலையில் சமர்கண்ட் அவ்வப்போது நினைவில் வந்துபோனது உஸ்பெக்குகள் வலிமையாக இருந்ததால் இம்முறை பாபரின் பார்வை இந்துஸ்தானத்தின் மீது விழுந்தது.
இந்துஸ்தானத்தை பற்றி நிறைய அறிந்துகொண்டார். இந்துஸ்தானத்தின் வளமும் செழிப்பும் அவருக்குள் கொஞ்சம் கொஞ்சமாக ஆசையை வளர்த்து கொண்டிருந்தது. ஏற்கனவே கொள்ளை சம்பவத்தை மட்டுமே அரங்கேற்றிய பாபர் மீண்டும் சில கொள்ளை சம்பவங்களை செய்கிறார் ஆனால் இந்துஸ்தானத்தின் ஆட்சியை கைப்பற்றவேண்டும் என்ற எண்ணம் இருந்ததில்லை. 1524 ல் தெளலத் கான் லோடியும், ரானா சங்காவும் வந்து அழைப்பு விடுக்கும்வரை.
Web Title: Babur Focus On samarkand
Featured Image Credit: marghdeen