
பாரதவர்ஷம் பல்வேறு நம்பிக்கைகளும் சம்பிரதாயங்களும் நிறைந்த மண். ஐரோப்பிய காலனித்துவத்தின் விளைவால் அவற்றில் பல வழக்கிழந்து போயின. கானகத்தீயில் விருட்சங்களுடன் சேர்ந்து விஷ நாகங்களும் எரிவது போல, சில மூடத்துவங்களும் அழிந்தது மகிழ்ச்சிக்குரியது. அவற்றுள் ஒன்று சுயமாக உயிரை தியாகம் செய்யும் முறை. இந்தியவரலாற்றை நோக்குங்கால் இவ்வாறான இரு பிரதான உயிர்த்தியாக முறைகள் பழக்கத்தில் இருந்தன. ஒன்று சதி (உடன்கட்டை), மற்றொன்று நவகண்டம் (அறிகண்டம்).
சதி (உடன்கட்டை ஏறுதல்)
கணவன் இறந்த பின்பு மனைவியும் இணைந்து கணவனுடன் சிதையில் ஏறி, அத்தீயில் தன்னை தானே அழித்துக்கொள்வது சதி முறைமை எனப்பட்டது. இந்த சதி முறைமையானது இந்துமத புராணங்களில் இருந்து பெறப்பட்டுள்ளது. தக்ஷனின் மகளான சதி தேவி தனது தந்தையின் யாகத்தில் தன் கணவனுக்கு ஏற்பட்ட அவமானம் தாளாது அக்னிக்கு தன்னை இறையாக்கிக்கொண்டாள். இதன் தாக்கமாகவே சதி எனும் பெயருடன் உடன்கட்டை ஏறும் வழமை கைக்கொள்ளப்பட்டது. மேலும் சமஸ்கிருத சொல்லான सती (sati) எனும் சொல்லின் பொருள் நல்ல மனைவி என்பதாகும். எனவே நல்லதொரு மனைவியின் அடையாளமாக இந்த உடன்கட்டை ஏறும் வழமை பிற்காலத்தில் மாற்றப்பட்டிருக்க வேண்டும்.
தமிழ் இலக்கிய குறிப்புகளின் பிரகாரம், பாண்டியன் மாதேவியால் பாடப்பட்ட புறநானூறு பாடல் ஒன்றில் அரசனுடன், அரசியும் உடன்கட்டை ஏறிய குறிப்பு உள்ளது. அதன் படி பூதப்பாண்டியன் தேவி நாட்டின் அமைச்சர்கள் அனைவரினதும் ஆலோசனையையும் தவிர்த்து அரசனுடன் உடன்கட்டை ஏறியுள்ளாள். இங்ஙனமே மஹாபாரதத்தில் மஹாராஜா பாண்டுவின் இறப்புக்கு பின்னர், இளைய அரசி மாத்ரி உடன்கட்டை ஏறினாள், ஆனால் முதல் அரசி குந்தி அவ்வாறு செய்யவில்லை. சோழ சாம்ராஜ்யத்தின் முக்கிய அரசரான ராஜராஜரின் தாயான வானவன்மாதேவியும், ராஜேந்திர சோழரின் மனைவி வீரமாதேவியும் தங்கள் கணவர்களின் இறப்பினால் முழுமனதுடன் உடன்கட்டை ஏறினார்கள். இதன் மூலம் ஆரம்பகாலத்தில் சதி முறைமையானது முழுக்க முழுக்க பெண்களின் தன்னிச்சையான முடிவாகவே அமைந்தது தெளிவுற தெரிகிறது. பெண்கள் தம் கணவனின் மீது கொண்ட அதீத அன்பின் விளைவால் இத்தகைய பழக்கத்தை கைக்கொண்டனர். எனினும் பின்பு இம்முறைமையானது கௌரவத்தின் சின்னமாக மாற்றப்பட்டு, கணவனை இழக்கும் அத்தனை பெண்கள் மீதும் திணிக்கப்பட்டது.

சதிமுறைமையில் உயிரை துறக்கும் பெண்களின் ஞாபகச்சின்னமாக சதிகல் நடுவது வழக்கமாய் இருந்தது. இந்தியாவின் பல பகுதிகளில் காணக்கூடிய இந்த சதிகற்கள் ராஜஸ்தானில் மாத்திரம் மிகையாக கிடைக்கப்பட்டுள்ளது. இவை பெரும்பாலும் 11ம் நூற்றாண்டு காலப்பகுதியை சேர்ந்தவை. ஆர்தர் கோக் பர்னல் மற்றும் ஹென்றி யூள் ஆகியோரின் கருத்துப்படி சதி முறையானது முற்கால வோல்கா நதிக்கரை ரஷ்யர்களிடமும், தென்கிழக்கு ஐரோப்பிய பழங்குடிகளான Thracians இடமும், டோங்கா மற்றும் பிஜி தீவு பழங்குடியினரிடமும் காணப்பட்டது. டியோடோர்ஸ் எனும் வரலாற்று ஆசிரியரின் நூலின் படி கி.மு 1ம் நூற்றாண்டில் அலெக்சாண்டரின் படைவீரன் ஒருவனின் இறப்புக்கு பின்னர் அவனின் இருமனைவியரில் ஒருத்தி உடன்கட்டை ஏறியதாக குறிப்பு உள்ளது.
சதிமுறைக்கு இணையாக பலப்பெண்கள் கூட்டாக தீயில் விழுந்து உயிரை துறக்கும் முறை ஜஉஹர் (jauhar) எனப்பட்டது. இந்த பழக்கமானது ராஜஸ்தான் மற்றும் மத்தியபிரதேசம் ஆகிய ராஜபுத்திர ஆட்சி நிலவிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டது. 14ம் நூற்றாண்டுகளில் ராஜபுத்திர அரசுகள் இஸ்லாமிய படைகளுடன் போர் புரிய ஆரம்பித்த காலத்திலேயே இது வளர்ச்சிகண்டது. போரில் ராஜபுத்திர படைகள் தோல்வியடைந்து எதிரிகள் கோட்டைக்குள் நுழைவார்கள் எனக்கருதும் சமயங்களில் பெண்கள் தங்களின் மானத்தையும், கற்பையும் பாதுகாக்கும் நோக்கில் ஒன்றாக இணைந்து பெரிய அக்னி குண்டத்தில் விழுந்து உயிரை மாய்த்துக்கொள்வார்கள். இந்த பழக்கமானது இஸ்லாமிய-ராஜபுத்திர போர்களின் போது மட்டுமே கைகொள்ளப்பட்டதே தவிர இந்து-ராஜபுத்திர போர்களின் போது நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே ஜஉஹர் (jauhar) முறையானது இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்களிடம் பெண்கள் தங்களின் கற்பை பாதுகாக்க மேற்கொண்ட நடவடிக்கை என தெளிவாக தெரிகிறது. 2018 இல் வெளியான பத்மாவத் எனும் திரைப்படம் ஜஉஹர் முறையை சிறப்பாக வெளிப்படுத்தி காட்டியுள்ளது.

பட உதவி : www.idiva.com
ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சி இந்தியாவில் நிலைகொண்ட பிறகே சதிமுறைக்கு எதிரான குரல்கள் ஒலிக்க ஆரம்பித்தன. 1815இல் இருந்து 1818 வரையான காலப்பகுதியில் வங்காள மாநிலத்தில் மாத்திரம் சதி முறையால் இறந்தவர்களின் எண்ணிக்கை 387 இல் இருந்து 839 ஆக அதிகரித்தமை குறிப்பிட வேண்டிய விடயம். உடன்கட்டை ஏறும் இந்த மூடப்பழக்கத்தை வேரறுக்க கிறிஸ்தவ மறைபரப்பாளரான வில்லியம் கேரி என்பவரும், பிராமண இந்து சீர்திருத்தவாதி இராஜாராம் மோகன் ராய் முதலியோரும் அயராது பாடுபட்டு, 1829 இல் சதி முறையானது சட்டவிரோதம் என மாநில அளவிலான சட்டத்தை கொண்டுவர செய்தனர். 1861 இல் விக்டோரியா மகாராணியின் ஆணைப்படி இந்தியா முழுவதும் சதி முறை ஒழிக்கப்பட்டது. நேபாளத்தில் 1920 முதல் சதி முறைமை ஒழிக்கப்பட்டது. இந்திய சதி (உடன்கட்டை ஏறல்) தடுப்பு சட்டத்தின் படி, சதி முறைமையை ஆதரித்தல், பின்பற்றுதல், பிரபல்யம் செய்தல் ஆகிய அனைத்துமே தண்டனைக்குரிய குற்றங்களாக்கப்பட்டன. இருப்பினும் இன்னும் மின்சாரம் தொடாத சின்னஞ்சிறு கிராமங்களில் மடைமையின் பிரதிபலிப்பாக சதி ஏறும் சிதைகள் எரிந்துகொண்டுள்ளன.
நவகண்டம்
தற்கொலையானது பாவமாகவும், கோழைத்தனமாகவும் கண்ணோக்கப்படும் நவீன தமிழர்கள் நம்மில் பலர் அறியாத ஒரு விடயம் நவகண்டம் எனப்படும் அறிகண்டம். சதி எனப்படும் உடன்கட்டை ஏறும் முறைமையை போலவே தன்னுயிரை தானே அழித்துக்கொள்ளும் இந்தப்பழக்கமும் பெருமைக்கும், போற்றுதலுக்கும் உரியதாக பார்க்கப்பட்ட ஒரு காலமும் இருந்தது. தன் கழுத்தை தானே அறுத்துக்கொண்டு மாய்வதற்கு நவகண்டம் என பெயருண்டு.
‘தன் உயிரை தானே மாய்த்துக்கொள்வதில் என்ன விந்தை உள்ளது? இதுவும் தற்கொலை தானே? அதென்ன கழுத்தை அறுத்துக்கொண்டு சாவது, இறப்பதற்கு வேறு வழியே கிடைக்கவில்லையா?’
என பல கேள்விகள் நவகண்டம் குறித்து செவியுறும் முதல் கணத்தில் அனைவருக்கும் தோன்றக்கூடும். அதற்கான காரணங்களையும், விளக்கங்களையும் காண்போம்.
நவ + கண்டம் என்பதே நவகண்டம் எனப்படுகிறது. நவ என்பது நம் உடலிலுள்ள ஒன்பது துவாரங்களை குறிப்பதாகும். இந்த ஒன்பது துவாரங்களின் நரம்பு முடிச்சுகளும் நம் கழுத்தின் பின்புறத்தில் முள்ளந்தண்டு வடத்தில் அமைத்துள்ளது, உடலின் ஒன்பது துவாரங்களையும் ஒரே தருணத்தில் செயலிழக்க செய்வது உயிர் துறப்பதற்கான வழிகளில் ஒன்று. எனவே இந்த முக்கிய நரம்புமுடிச்சை கொண்ட கழுத்தை (கண்டத்தை) தன் கையால் தானே துண்டம் செய்வது நவகண்டம் எனப்படுகிறது. ஒரே வீசில் தன் தலை உடலில் இருந்து அறுத்து வீசுவதால் அறிகண்டம் எனவும் கூறப்படும். இந்த வழமை பழங்கால தென்னகம் முழுவதும் பரவலாக இருந்து வந்துள்ளது. சங்க இலக்கியங்களின் படி கொற்றவைக்கு முன்பாக தன் வேண்டுதலுக்காக கழுத்தை அறுத்துக்கொண்டு மாய்ந்துபோனோரை பற்றிய குறிப்புகள் உள்ளன.

www.jeyamohan.in
நவகண்டம் செய்யப்பட்டதற்கான வரலாற்று குறிப்புகள்
- நவகண்டம் அளிக்கப்படுவதற்கான பிரதான நோக்கமாக அமைவது போர் வெற்றி. தன்னாட்டு அரசன் தன்னைக்காட்டிலும் வலிமை மிக்க ஒரு எதிரியை செருக்களத்தில் சந்திக்கவிருக்கும் சமயத்தில், தெய்வத்தின் அருளை நாடி தன்னுடைய நாடும், அரசனும் வெற்றி பெற வேண்டுமென வீரர்களில் ஒருவன் தானாக முன்வந்து போர்த்தெய்வமாகிய கொற்றவையின் முன்னிலையில் நவகண்டம் அளிப்பது வழமை. கலிங்கத்துபரணி நூலில் சோழ அரசின் வெற்றிக்காக தன்னை நவகண்டம் இட்டுக்கொண்ட வீரன் குறித்து கூறப்படுகிறது.
- அரசன் நோயுற்று அல்லது மோசமான போர்காயங்களுக்கு உள்ளாகி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் நேரங்களில், அரசனின் அணுக்கர்களில் ஒருவன் அரசனின் உடல் தேற்றம் காண வேண்டும் என இறைவனை வேண்டி நவகண்டம் அளிப்பார்கள்.
- மரணதண்டனை பெறவிருக்கும் குற்றவாளி ஒருவன், மரணதண்டனைக்கு பதிலாக அரசனின் அனுமதியுடன் நவகண்டம் அளிக்கலாம். இதன் மூலம் போர்வீரர்கள் அடையும் வீரகதியை அடையலாம் என நம்பப்பட்டது.
- நோயினால் இறப்பை எதிர்நோக்கி இருக்கும் போர்மறவன், வீரர்களுக்கு உரிய முறையில் மரணமடைய நவகண்டம் இட்டுக்கொள்ளலாம்.
- போர்க்காயத்தாலோ, நோயினாலோ ஒருவன் இறப்பின் விளிம்பில் நிற்க அவன் செய்து முடிக்க வேண்டிய கடமைகள் எஞ்சியிருக்குமானால் தன் உயிர் சிறிது காலம் நிலைக்க வேண்டுமென வேண்டிக்கொள்வான். அவ்வேண்டுதல் நிறைவுறும் பட்சத்தில், குறித்தகடமைகளை முடித்துவிட்டு நவகண்டம் இட்டு உயிர்துறப்பதும் உண்டு.
- பெரும் அவமானத்தை தாங்காது உயிர் துறக்கவிளையும் நபர், வீரகதி அடைய வேண்டும் என விழைந்தால் நவகண்டம் இட்டுக்கொள்ளலாம்.
- தற்கால முக்கிய புள்ளிகளுக்கு வழங்கப்படும் ’கருப்புப்பூனை’ பாதுகாப்புக்கு இணையாக பழந்தமிழ் அரசர்களான பாண்டியர்களுக்கு தென்னவன் ஆபத்துதவி என்றும், சோழர்களுக்கு வேளக்காரப்படை என்றும் இருவகை படைப்பிரிவுகள் பணியாற்றின. இவர்கள் தங்கள் அலட்சியாதலோ அல்லது தங்களை மீறிய பிறகாரணியாலோ மன்னன் உயிருக்கு ஆபத்து விளையுமானால் துர்க்கைக்கு முன்னால் தங்களை அறிகண்டம் கொடுத்து பலியிடுவதாக சபதம் மேற்கொண்டவர்கள்.
- பிற்காலங்களில் கோயில் கட்டுமானம் குறையின்றி நடக்கவும், வறட்சி முதலியவை நீங்கவும் நவகண்டம் இடும் பழக்கம் உருவானது.
நவகண்டம் அளிக்கப்படுவது ஒரு விழாவைபோல கொண்டாடப்பட்டது. ஊரின் நலனுக்காக உயிர் துறக்க முன்வந்த நபரை வாழும் தெய்வமாக கருதி ஊர் மக்கள் மரியாதை செய்வார்கள். தினம் ஒரு குடும்பமென ஒவ்வொரு அந்நபர் விரும்பும் உணவினை செய்து படையல் இடுவார்கள். அவரின் தேவைகள், ஆசைகள் அனைத்தும் நிவர்த்தி செய்யப்படும். நவகண்டதுக்கான நாள் வந்தவுடன் ஊரு மத்தியில் குறித்த பலியாள் நிறுத்தப்படுவார். ஊர் மக்கள் அவரை சுற்றி நிற்க, மஞ்சள் நீரால் நீராட்டப்படுவார். பலியாள் மார்பில் கவசமும், இடையில் வாழும் அணிந்து ஊர்மக்கள் நடுவே நின்றிருக்க பெண்கள் குலவையிட பறைகளும், முழவுகளும் உச்சஸ்தாயியில் வாசிக்கப்படும். அந்நபர் தன் கையால் தன்னுச்சி மயிரை இழுத்து கழுத்தை இறுக்கிக்கொள்வார். வலது கரத்தில் வாளை எடுத்து கழுத்தை அறுக்க ஆரம்பிப்பார். சுயநினைவு இருக்கும் வரை தொடரும் இந்த வாளின் விளையாட்டு, பலியாளின் குருதியால் அதன் விடாய் அடங்கும் வரை நிகழ்த்திவிட்டு அமைதி கொள்ளும். இத்தனை காலமும் தம்மோடு வாழ்ந்து, தமக்காக உயிர் நீத்தவனின் பாதத்தை அனைவரும் தொட்டு வணங்குவர். வீரகதி அடைந்தவனுக்காக ஒரு துளி விழிநீரும் சிந்தமாட்டார்கள். உயிர்நீத்தவன் ஊருக்கு காவல் தெய்வமாவன். அவர் உயிர்நீக்க நவகண்டம் அளித்த அதே வடிவில் சிலைவடிக்கப்பட்டு நடுகல்லாக நிறுவப்படும். 2010 வெளியான ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் இக்காட்சி பதிவு செய்யப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மஹாபாரதத்தில் பாண்டவர் தரப்பு வெற்றி அடைய வேண்டி பீஷ்மரை வெல்வதற்காக களபலியாக அர்ஜுனனின் மகன் அரவானை பலியிட்டது நாமறிந்த முதல் நவகண்டம் ஆகும். அரவான் முழு மனதுடன் முன்வந்து தன்னை பலியாக இட்டுக்கொண்டான். அதற்கு முன் அவன் விரும்பியவாறே திருமணமும் செய்து கொண்டான். அரவானின் தியாகத்தை புகழ்ந்து இன்றளவும் தென்கிழக்கு ஆசியா, வடத்தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அரவானின் வெட்டுண்ட தலையின் சிலைகள் வணக்கத்துக்கு உரியதாக நோக்கப்படுகிறது. இதற்கு இணையான கதைகள் ராஜஸ்தானில், நேபாளத்திலும் வெவ்வேறு பெயர்களுடன் கூறப்பட்டு வருகிறது. சீக்கிய மரபிலும் நவகண்டம் அளிக்கும் முறைகள் காணப்பட்டது.
இவ்வாறு மனிதர்கள் தாமே முன்வந்து பலியிட்டுக்கொள்ளும் முறைகள் உலகின் பல்வேறு பகுதிகளில் காணப்பட்டது. பண்டைய எகிப்தின் களிமண் பட்டயம் ஒன்றில் ஒருவன்தன் முன்னே நிற்கும் மனிதனின் நெஞ்சில் கத்தியை பாய்ச்சி பலியிடும் காட்சி அச்சிடப்பட்டுள்ளது. இதை ஒத்து சிந்துவெளி முத்திரை சிலவற்றில் இரு வீரர்கள் இறைவனுக்கு முன்னாள் ஒருவரை ஒருவர் வெட்டிக்கொள்ளும் காட்சி வரையப்பட்டுள்ளது. மேலும் பெரிய மிருகத்தின் மீது அமர்ந்த பெண் தெய்வத்திற்கு மனித தலையை பலியிடுமாறு வரையப்பட்ட முத்திரையும் கிடைத்துள்ளது.
ஆண்கள் மட்டுமே நவகண்டம் அளிப்பதாக நினைக்கப்பட்டு வந்த போதிலும் பெண்கள் நவகண்டம் அளிக்கும் வகையிலான நடுகற்களும் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இங்ஙனம் ஊரின் நன்மைக்காக தங்களை பலியிடும் தியாகிகள் தமிழகம் எங்கும் காணப்பட்டுள்ளனர் என்பதற்கு ஆதாரமாக தாராமங்களம், சேலம், தஞ்சை ஆகிய இடங்களில் நவகண்ட நடுகற்கள் கிடைத்துள்ளன. எனினும் இந்த கொடூர பலியிடல் முறைமையானது பிற்காலத்தில் வழக்கொழிந்து போனது. நம்முன்னோர் எத்தகைய கொடிய வலிகளையும் தாங்கி தம் சமூகத்தை காத்த பொதுநலவாதிகளாக இருந்தமையை குறிக்கும் இந்த நடுகற்சிலைகளை பேணி நம் சந்ததியினருக்கு கையளிப்பதே நம் கடமையாகும்.
தமிழகத்தில் நவகண்ட சிலைகள் கிடைத்துள்ள இடங்கள்.
- தஞ்சாவூர் – சோழமன்னனின் வெற்றிக்காக.
- மகாபலிபுரம் காளியின் ஐந்தாவது ரதம்.
- மதுரை மாடபுரம் மாரியம்மன் கோயில் – சித்திர சரிதனும் வல்லபனும்.
- தெங்கரை கிராமம்.
- மல்லல், இளையான்குடி – அரசனின் நலம் வேண்டி காளி தேவிக்கு இடப்பட்ட நவகண்டம்.
- சாதிப்பட்டு(பண்ருட்டி அருகில்) – அதிராஜமங்கல்யபுரத்தின் ஆட்சியாளருக்காக.
- குன்றக்குடி கோவில் – துர்கைக்கான நவகண்ட சிலை.
- மன்னர்க்கோட்டை – தன் ஆசானின் நலனுக்காக.
- திருப்பரங்குன்றம் – ஆலயத்தை அந்நிய படைகளிடம் இருந்து காக்கும் பொருட்டு மேற்கொண்ட நவகண்டம்.
- திருவாசி மாற்றுறைவரதீசுவரர் கோயில்
- திருமுக்கூடலூர் அனலாடீசுவரர் கோயில்
- மடப்புரம் காளி கோயில் (மதுரையில் இருந்து 18 இல், வைகை நதியின் வடக்குகரை)
- திருபூவனம் (திருபுவனம்,வைகை நதி தென்கரை) புதூர் – நவகண்டம் அளிக்கும் இளைஞன்
- பழனி, பெரியநாயகி அம்மான் கோயில்.
நவகண்டத்தின் நாயகியாக பழந்தமிழர் போற்றி வணங்கிய போர்த்தெய்வமான கொற்றவை குறித்த சிறு பதிவு வருமாறு,
கொற்றவை
பாலை நிலத்தின் தெய்வமாகிய கொற்றவை எயினர்களாலும் வெட்டுவர்களாலும் வணங்கப்பட்டதாக பழந்தமிழ் இலக்கியங்களான அகத்தியம்,தொல்காப்பியம்,பதினெண் கீழ்க்கணக்கு,சிலப்பதிகாரம் முதலியவற்றில் குறிப்புகள் உள்ளன. கொற்றவை காட்டில் வசிக்கும் மறவர்களான கள்வர்களுக்கும் குலதெய்வமாக அறியப்படுகிறாள். நக்கீரரின் திருமுருகாற்றுப்படை நூலில் முருகனை ‘கொற்றவைச்சிறுவ பழையோள் புழவி’ என விழிக்கிறார். இதனால் பழந்தமிழரின் தெய்வமாக கொற்றவை பலகாலமாக வணங்கப்பட்டது தெளிவாகிறது.

‘சிங்கக்கொடியும் பசுங்கிளியும் ஏந்தியவள், கலைமான் ஊர்தி கொண்டவள், பேய்களை படையாக பெற்றவள், ஒளியோடு வெற்றிமிக்க சூலப்படையை உயர்த்தியவள், புழுக்களும் குருதியும் நிணமும் குடலும் நிறைந்த மண்டையோட்டை கையில் ஏந்தி நிற்பவள் என கொற்றவையின் வடிவம் குறித்து புறப்பொருள் வெண்பாமாலையில் கூறப்படுகிறது. எனினும் சிலப்பதிகாரமோ ‘வெண்ணிற பாம்பை ஒத்த பொன்னிழையால் கட்டப்பட்ட நீண்ட சடைமுடியும், அதில் பூப்போல வெண்ணிற காட்டுப்பன்றியின் பல்லும், கழுத்தில் புலிநகத்தாலியும், இடையில் புலித்தோலும் அணிந்தவள். கையில் வில்லினை ஏந்தி கலைமான் மீது ஏறிநிற்பவள்’ என விளக்குகிறது.
கிளி, காட்டுக்கோழி, மயில், கிழங்கு போன்றன படைக்கப்படுவது வழக்கம். மேலும் கொட்டும் பறை, கொம்பு, குழல் ஆகியவற்றின் இசையோடு உலா கொண்டு செல்லப்படுபவள் கொற்றவை. சிலப்பதிகாரமானது கொற்றவையானவள் உமையில் இருந்து வேறுபட்டவள் எனவும், இருவரும் வெவ்வேறு தெய்வங்கள் எனவும் உறுதியாக கூறுகிறது. எனினும் பிற்காலத்தில் சமஸ்கிருத தாக்கத்தினால் இந்த பழந்தமிழ் தெய்வமானவள் உமையின் அம்சம் என்றும், திருமாலின் தங்கை என்றும் ஆழைக்கப்பட்டு, கையில் சங்கு சக்கரத்துடன் நிறுத்தப்பட்டாள்.
இன்றளவும் கொற்றவை வழிபாடு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. மாமல்லபுரம். பொன்செய், திருணனிப்பள்ளி, மறங்கியூர், போளூர் ஆகிய இடங்களில் கொற்றவை கோயில்கள் காணக்கூடியதாக உள்ளது.