இன்றைய காலக்கட்டத்தில் நேரம் பார்க்க கடிகாரம் இருக்கிறது. தொலைவில் உள்ளவர்களிடம் நினைத்த போதெல்லாம் பேச தொலைப்பேசி உள்ளது. உலகில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளையும் உடனுக்குடன் கண்டுகளிக்க தொலைகாட்சி உள்ளது. எந்திர மயமான உலகில் இன்று அனைத்தும் நவீன மயமாகி விட்டது. அப்படியானால் பழங்காலத்தில் மக்கள் எப்படி அவர்களின் நேரத்தை கணித்திருப்பர்கள்? அவர்களின் பொழுதுபோக்கு தான் என்ன? இயற்கை மாற்றங்களை எப்படி அறிந்திருப்பார்கள்? என்ற கேள்வி நிச்சயம் நம் அனைவரின் மனதிலும் எழும் மிகப்பெரிய ஐயப்பாடாக இருக்கும். ஆனால் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வானிலை ஆய்வு மையம் ஒன்று இயங்கி உள்ளது என்பதை உங்களால் நம்ப முடிகிறதா? நம்பி தான் ஆக வேண்டும். அதற்கான சான்றுகள் ஆந்திர பிரதேசத்திற்கும் கர்நாடக மாநிலத்திற்கும் இடையில் உள்ள எல்லையில் அமைந்திருக்கும் ஆந்திராவின் மெஹபூப்நகர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பழமையான பெருங்கற்காலத்தை சேர்ந்த கல் வடிவங்கள் காணப்படுகிறது. இதே போல் தமிழ்நாட்டிலும் வேலூர் மாவட்டத்தில் இருந்து 13 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள விரிஞ்சிபுரம் என்னும் ஊரில் இது போன்று கல் ஒன்று காணப்படுகிறது. பல்லவ மன்னனின் ஆட்சி காலத்தில் மார்க்கபந்தீஸ்வர் எனும் ஆலயத்தை கட்டி உள்ளனர். அப்போது அந்த ஆலயத்தின் வடக்கு பகுதியில் காலம் கட்டும் கல்லையும் கட்டி இருந்துள்ளனர்.
காலம் காட்டும் கல்
கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தக் குடி நம் தமிழ் குலமே என்பதற்கு இது ஒரு சிறந்ததொரு உதாரணம். பல்லாயிரக்கணக்கான ஆண்டு வரலாறு உண்டு என்பதால் தமிழரின் கண்டுபிடிப்புகள் மனிதரின் நாகரிக வளர்ச்சியில் தமிழரின் பங்கு முக்கியமானதாக உள்ளது. இதில் மிக மிக முக்கியமான ஒன்று நம் முன்னோர் கண்டுபிடித்த காலம் காட்டும் கல். இதனை மணிகாட்டிக் கல் என்றும் அழைப்பர். அறிவியல் வளராத காலத்தில் கூட சூரியனை எந்த விதத்தில் பயன்படுத்தலாம் என்று சிந்தித்தவர்கள் தமிழர்கள். மேலை நாட்டினர் மணல் கடிகாரத்தைப் பயன்படுத்தி நேரத்தை அறிந்து கொண்டனர். மேலை நாட்டினர் மண்ணை பார்த்து சிந்தித்த தருணத்திலேயே நாம் விண்ணைப் பார்த்து சிந்தித்து உள்ளோம். அன்றே தமிழர்கள் சூரியனை பார்த்து நேரம் கணித்தனர் சூரியனை கடிகாரமாக பயன்படுத்தி உள்ளனர் என்பதும் உண்மை. கோயில் கோபுரத்தையும் சூரியனையும் வைத்து நேரத்தை அறிந்துக் கொண்டிருந்தனர். பின் சிறிய கருங்கல்லை வைத்து தன் தொழில்நுட்பத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்று உள்ளனர். சிறிய கருங்கல்லை வைத்து பன்னிரண்டு மணி நேரத்தை பார்க்கும் படி வடிவமைத்துள்ளனர். நான் மேற்கூறியது போல விரிஞ்சிபுர கோயில் ஆலயத்தின் வடக்கு பகுதியில் காலம் காட்டும் கல்லை பல்லவ மன்னர்கள் அன்றே கட்டியுள்ளனர். மணி காட்டும் கல்லின் மேற்பகுதியில் சிறிய பள்ளமான பகுதி ஒன்று அமைந்திருக்கும். அதன் மேல் சிறு குச்சி ஒன்று வைத்தால் சிறிய ஒளியின் திசைக்கு ஏற்றாற்போல் குச்சியின் நிழல் மணிக்காக குறிக்கப்பட்ட கோட்டின் மீது விழும் அதை பார்த்து நாம் மணியை தெரிந்துக் கொள்ளலாம். அன்றே நம் முன்னோர்கள் எவ்வளவு விஞ்ஞான பூர்வமாக சிந்தித்துள்ளனர்.
முடுமால் கிராமத்தில் காணப்படும் கற்கள்
ஆந்திர பிரதேசத்திற்கும் கர்நாடக மாநிலத்திற்கும் இடையில் உள்ள எல்லையில் அமைந்திருக்கும் ஆந்திராவின் மெஹபூப்நகர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் காணப்படும் மூவாயிரம் ஆண்டுகள் பழமையான கல் வடிவங்கள் வரலாற்று ஆய்வாளர்கள் மற்றும் வானியல் ஆய்வாளர்களின் கவனத்தை பெருமளவு ஈர்த்துள்ளது. அந்த இடம் எண்பது ஏக்கர் பரப்பளவில் முடுமால் எனும் கிராமத்தில் 12 அடி முதல் 14 அடி உயரம் உள்ள எண்பது கற்கள் நடப்பட்ட நிலையில் காணப்படுகிறது. அதுமட்டுமல்ல அங்கு சுமார் 3500 சிறிய கற்களும் காணப்படுகிறது. அந்த கற்களின் நிறங்களை வைத்து பார்க்கும் போது அது கிருஷ்ணா நதியில் இருந்து கொண்டு வந்து இங்கு நடப்பட்டு இருக்கலாம் என்று எண்ணுகின்றனர் ஆய்வாளர்கள்.
அந்த கிராமப்பகுதியில் வாழும் மக்கள் அந்த பகுதியில் ஏதோ பேய் பிசாசுகள் காணப்படுவது போல் பயப்படுகின்றனர். அங்கு வாழும் கிராமத்தினர் தெய்வம் ஒன்றின் கோபத்துக்கு ஆளான மனிதர்கள் அங்கு கல்லாக மாறி விட்டதாகவும் மேலும் அங்கு இறந்தவர்கள் பேய்களாக உலவும் இடம் என்றும் கூறுகின்றனர். இந்த இடத்தை ஆராய்ச்சி செய்வதற்கு முன்பு வரை மக்கள் இந்த கற்களை தொட்டால் இறந்து விடுவார்கள் என்றே அந்த கிராமவாசிகள் எண்ணி அந்த கற்களை தொடாமல் இருந்துள்ளனர்.
சில குடும்பங்கள் அந்த கற்களை தங்கள் முன்னோர்களாகவே எண்ணி அந்த கற்களை தொழுது வந்து உள்ளனர். சிலர் அங்கு புதையல் இருப்பதாக நினைத்து அந்த இடத்தை தோண்டி பார்த்து ஏமாந்ததே மிச்சம். ஆனால் ஆராய்ச்சியாளர்களோ வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வானியல் ஆராய்ச்சி மையமாக இருந்த இடம் இது என்று கூறுகின்றனர். அன்றைய காலத்தில் இன்று போல் அறிவியல் வளர்ச்சியோ அறிவியல் தொழில்நுட்பங்களோ கிடையாது. பருவ கால மாற்றங்களை அறிந்துக் கொள்ளவும் பருவ நிலை பற்றி தெரிந்துக் கொள்ளவும் அவர்களுக்கு பயன்பட்ட ஒரு தொழில்நுட்பம் இந்த கல் வடிவங்களை கூறலாம். அன்றைய காலத்தில் வாழ்ந்த மக்கள் இந்த கற்களின் நிழல்களின் மூலமே நாட்கள் நேரம் பருவ காலங்கள் போன்றவற்றை மக்கள் கணக்கிட்டு உள்ளனர் என்று அந்த இடத்தில் ஆய்வு நடத்திய ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
பழங்கால வானியல் ஆராய்ச்சி மையம்
கோடைக் காலத்திலும் குளிர் காலத்திலும் சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் உள்ள மிக குறுகிய மற்றும் நீண்ட இடைவெளி போன்றவற்றை அறியும் வகையில் இந்த கற்கள் நடப்பட்டுள்ளது. விஞ்ஞானிகள் இந்த இடத்தை இந்தியாவின் பழங்கால வானியல் ஆராய்ச்சி மையம் என்றே கருதுகின்றனர். விண்மீன் கூட்டங்களின் அமைப்பை விளக்கும் வகையில் இங்கு வரைப்படம் செதுக்கப்பட்ட கல் ஒன்று மற்ற கற்களுக்கு மையப்புள்ளியாக நடப்பட்டு உள்ளது. இது நேரத்தை அளவிடவும் திசைகளை அறியவும் பயன்பட்டு உள்ளது. ஐதராபாத் மத்திய பல்கலைக்கழக பேராசிரியர் புல்லா ராவ் முடுமால் கிராமம் பழங்காலத்தில் வானியல் ஆராய்ச்சி மையமாக விளங்கியுள்ளது என்று கூறுகிறார்.
புல்லா ராவ் அந்த கற்களை ஆய்வு செய்த போது அதை குறித்து பல தேசிய மற்றும் சர்வதேச அறிவியல் மாநாடுகளில் இதை பற்றி விளக்கியுள்ளார். இந்த இடத்தில் உள்ள நடுகற்களுக்கு பின் உள்ள கதையை சென்ற பத்து ஆண்டுகளுக்கு முன்பே வெளியானது அன்று முதல், வெளி நாடுகளில் உள்ள அறிவியலாளர்கள் இந்த இடத்திற்கு வந்து ஆய்வு செய்து வருகின்றனர். கற்கால மனிதர்கள் வாழ்ந்த காலங்களிலும் அறிவியல் வழக்கங்களின் சான்றாக அமைந்துள்ளது இந்த கற்கள். பல சிறப்பு வாய்ந்த நம் மண்ணில் இன்றும் மின் உற்பத்திக்கு அணு உலையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். அரசு விவசாயிகளுக்கு நிலம் வழங்கியதால் சில பகுதிகள் விளைச்சலுக்கு பயன்பட்டு வருகிறது அதை பாதுகாத்து வரலாற்று சுற்றுலா மையமாக அறிவிக்கப்பட வேண்டும் என்று அந்த கிராம மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். மத்திய அரசின் உதவியுடன் இந்த இடம் குறித்து விரிவான ஆய்வு ஒன்று நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது. விவசாயிகளிடம் இருந்து நான்கு ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் அந்த இடத்தை வேலி அமைத்து பாதுகாக்கப்படும் என்று தொல்லியல் துறை அதிகாரி தெரிவித்துள்ளனர்.
இதேபோல் ஜெய்ப்பூரில் உள்ள ஜந்தர் மந்தர் வானியல் ஆய்வு மையம் யுனோஸ்கோவின் பாரம்பரிய சின்னம் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. ஜந்தர் மந்தர் வானியல் ஆய்வு மையம் 1727-1734 ஆம் ஆண்டில் ஆட்சி புரிந்த இரண்டாம் ஜெய்சிங் அரசரால் கட்டப்பட்டது. இவரது பெயரை தான் இந்த நகருக்கு ஜெய்ப்பூர் என பெயர் சூட்டியுள்ளனர். மிகப்பெரிய சூரிய கடிகாரம் ஜந்தர் மந்தரில் தான் உள்ளது. இந்த சூரிய கடிகாரம் கொண்டு பல்வேறு கால அளவுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வானியல் ஆய்வு மையம் மூலம் நாட்காட்டி மற்றும் அளவீடுகள் கொண்டு துல்லியமாக நட்சத்திரம் மற்றும் கோள்களின் நகர்வுகள் போன்றவை அளவிடப்பட்டுள்ளது. இந்த வானியல் மூலம் பெறப்படும் தகவல் கொண்டு வானியல் கோட்பாடுகள் அளவீடுகள் மற்றும் கிரகணங்கள் ஏற்படுவதற்கான காரணங்கள் மற்றும் பூமிக்கும் நட்சத்திற்கும் கோள்களுக்கும் இடையே உள்ள தொடர்புகள் பற்றியும் ஆராயப்பட்டது. மேலும் இங்கு ஒரு தொலைநோக்கியையும் அமைத்து துல்லியமான பதிவுகள் மூலம் அதன் விளைவுகளும் ஆராயப்பட்டுள்ளது. சூரிய மண்டலம் வட்டப்பாதை அல்ல நீள் வட்டப்பாதையே என்று ஒரு ஆண்டின் நீளம் மூலம் பூமியின் விட்டமும் துல்லியமாக கணக்கிடப்பட்டது. சூரியனும் இரவில் காணப்படும் நட்சத்திரம் போன்றது தான் என்ற கருத்தையும் இந்திய வானியல் அறிஞர்கள் வெளியிட்டனர்.
உலகிற்கு மிக தெளிவாக உண்மையை எடுத்துக் கூறும் வண்ணம் பழங்கால அறிவியல் அமைந்துள்ளது. அன்றைய வானியல் அறிஞர்கள் நம் அனைவரின் மனதிலும் இடம் பிடிக்க முக்கிய காரணமாக உள்ளவை அவர்களின் பண்டைய வானவியல் சாதனைகளும் கணிப்புகளுமே. தொலைநோக்கி இல்லாத காலக்கட்டத்தில் கூட இந்த அளவிற்கு வானியல் ஆய்வு மையம் வளர்ந்தது நம் இந்தியாவில் மட்டுமே சாத்தியம்.
Web Title: Indian Old Weather Forecast Centre
Featured Image Credit: bbc