வரலாற்றில் நமக்கு எஞ்சியிருப்பது கம்பீரமாக நிற்கும் கோட்டை கொத்தளங்கள், பிரம்மிக்க வைக்கும் கலைநயத்துடன் கட்டப்பட்ட கோவில்கள், நினைவு சின்னங்கள் போல ஒரு சில கட்டுமானங்கள் தான். ஆட்சியாளர்கள் இயல், இசை, நாட்டியம், சிற்பம், ஓவியம், கட்டுமானம் போன்ற பிராதான கலைகளுக்கு முக்கியத்துவம் தந்து ஆட்சி நடத்துனதிற்கான சாட்சினு நாம அதை சொல்லலாம். நாம் தற்போது இவைகளை பார்த்து கதைகளை தெரிந்து கொள்ளலாமே தவிர நீண்ட நெடிய வாழ்க்கை பயணத்தில் அரச வம்சாவளி என்று தற்போது நேரடியாக ஒரு குடும்பத்தினரை நாம் காண்பது அரிது.
அரசமைப்பு
இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்னர் சுமார் 5௦0 க்கும் அதிகமான பிராந்தியங்கள், தனித்தனி அரசர்கள் ஆளும் பகுதிகளாக பிரிந்து கிடந்தன. மன்னர்கள் தங்கள் செல்வாக்கு மற்றும் அதிகாரத்துடன் ராஜபோகமாக வாழ்ந்தனர். இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, பெரும்பாலான அரச குடும்பங்களின் பகுதிகள் இந்திய மாநிலங்களின் அங்கமாக இணைத்து எடுத்துக்கொள்ளப்பட்டது. இதை தொடர்ந்து அவர்களது சிறப்பு மரியாதைகள், முன்னுரிமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டு வருமானம் அனைத்தும் அரசுடமையானது. இன்றளவும் ஒரு மன்னர் வம்சம் தங்கள் பாரம்பரியத்தை தக்க வைத்து போற்றி பாதுகாத்து விழாக்களை நடத்தி வருவது அபூர்வமான ஒன்று. அந்த புகழுக்கு உரித்தானது மைசூர் மகாராஜா வம்சாவளி. இவர்கள் ராஜ்ஜியத்தின் முதல் மன்னர் ராஜ உடையார் அரியணை ஏறிய வருடம் 161௦. ஒவ்வொரு ராஜ்ஜியம் சரிந்து மற்றொரு ராஜ்ஜியம் உருவாகும் பொழுது பிரயோகப்படுத்தும் தந்திரோபாயங்கள், யுக்திகள், அதை சார்ந்த சர்ச்சைகள் எப்பொழுதும் வரலாற்று ஏடுகள் சுமந்து கொண்டிருக்கும். அந்த சுவடுகளின் ஒரு சில பக்கங்கள்.
நிலப்பரப்பு
கொங்கு நாட்டு மக்களின் பேச்சு வழக்கில் மைசூர் மகாராஜாவை நினைவு கூறாத நாளில்லை என சொல்லலாம். காலை தேனீர் கோப்பையை அம்மாவை எடுத்து வர சொன்னால் “இவுரு பெரிய மைசூர் மகராஜா, வந்து எடுத்துட்டு போக மாட்டாரா” என்று. சொகுசாக, ஆடம்பரமாக எதை செய்தாலும் உவமையாக மைசூர் மகாராஜா சட்டென்று நினைவில் வருவார். இதற்கும் ஒரு காரணம் உண்டு. காலம் காலமாக செல்வ செழிப்புக்கு பெயர் போனது உடையார் வம்சம். வருடம் 1940 வரை வாழ்ந்து மறைந்த மைசூரை ஆண்ட கிருஷ்ணராஜ உடையார் உலக செல்வந்தர்களில் ஒருவர்.
கொங்கு மண்டலத்தின் எல்லை என சத்தியமங்கலத்தை சொல்லலாம். அதன் முடிவில் தொடங்குகிறது மேற்கு தொடர்ச்சி மலைகளின் கர்நாடக மலைப்பிரதேசங்கள். அது மைசூரின் மேடான நிலப்பரப்பை இணைத்து நம்மை அந்த கம்பீரமான சரித்திர கால மைசூர் மகாராஜா அரண்மனைக்கு கொண்டு சேர்க்கிறது. இந்தியாவின் பிரமாண்டமான ராஜ வம்சத்தில் ஒன்று உடையார் ராஜ வம்சம்.
நாகரீகம்
ஒவ்வொறு நதிக்கரைக்கும் ஒரு மண் வாசனை, ஒரு பேச்சு வழக்கு, நாகரீகம் தொன்று தொட்டு நம்மில் தொடர்ந்து கொண்டிருப்பது இயற்கையின் வரங்களில் ஒன்று. தமிழ்நாட்டின் வரலாற்றில் தாமிரபரணி, பூம்புகார் நாகரீகத்தை போல நாகரீகத்தில் தனக்கென ஒரு உயர்ந்த மதிப்பை கொண்டது அந்த தலக்காடு மக்களின் நாகரீகம். சற்றே மெல்ல உலக உருண்டையை பின் நோக்கி சுழற்றுவோம். கர்நாடகத்தின் வடக்கில் பெல்லாரி மாவட்டத்தின் நகரங்களில் விஜயநகரமும் ஒன்று. சரிவடைந்த விஜயநகர பேரரசின் சரித்திர புகழ்மிக்க தலைநகரம் இந்த விஜயநகரம். விஜயநகர பேரரசின் எல்லை சிறகுகள் மைசூர், திருச்சிராப்பள்ளி, பாண்டிச்சேரி, செங்கல்பட்டு என்று காஞ்சிபுரம் வரை பறந்து விரிந்து வியாபித்திருந்தது. அந்தந்த பகுதியின் பாளையகாரர்கள் அந்த பகுதியை ஆண்டு விஜயநகர பேரரசுக்கு கப்பம் கட்டி வந்தனர்.
காவிரியின் வழித்தடங்களில் மைசூரின் கீழ்பரப்பில் அமைந்துள்ள இடம் தலக்காடு. இது ஸ்ரீரங்கபட்டினத்தின் கட்டுபாட்டில் அமைந்துள்ள இடம். இன்றைய மாண்டியா மாவட்டத்திற்குட்பட்ட புகழ் பெற்ற ஸ்ரீரங்க பெருமாளின் ஆலயம் இங்கு அமைந்துள்ளது. ஆங்கிலேயர்களின் சிம்ம சொப்பனமாக விளங்கிய திப்பு சுல்தான் தன் ஆட்சி காலத்தில் ஸ்ரீரங்கப்பட்டினத்தை தலைநகராக கொண்டிருந்தார்.
1610 ல் ஸ்ரீரங்கபட்டினத்தை ஆண்டு வந்தவர் திருமலை ராஜா. இவர் விஜயநகர பேரரசின் நேரடி பிரதிநிதியாவார். இவருக்கு கீழ் கப்பம் கட்டும் பாளையகாரர்களில் ஒருவராக மைசூரை ஆண்டு வந்த ராஜ உடையார் வம்சம் இருந்தது. இந்திய வரலாற்றில் பெரும்பாலும் குறுநில மன்னர்களும், கப்பம் கட்டும் ஆட்சியாளர்களும் பேரரசுகளின் மீது எப்போதும் ஒரு கண் வைத்து சமயம் பார்த்து காத்திருப்பர். தகுந்த நேரத்தில் தங்கள் பலத்தையும் தந்திரங்களையும் பயன்படுத்தி தங்களுக்கு மேல் உள்ள ராஜ்ஜியத்தை தங்கள் வசமாக்கி அரியணை ஏறிவிடுவார்கள். இதன் மற்றொரு யுக்தி இரு பேரரசுகளுக்குள் போர் ஏற்பட்டு ஆட்சிமாற்றம் ஏற்பட்டால் பிரதிநிதிகளாக இருந்தவர்கள் தங்கள் பிராந்தியத்தை தாமே ஆளத்துவங்கி விடுவர்.
வைத்தீஸ்வரன்
இந்த எழுதப்படாத நடைமுறைகளில் மைசூர் ராஜ உடையார் விதிவிளக்கு அல்ல. அவரின் பார்வை என்றுமே அவர் கப்பம் கட்டி வந்த ஸ்ரீரங்கப்பட்டினத்தின் மேல் இருந்தது. திருமலை ராஜா நோய்வாய் பட்டிருந்த தருணம் அது. திருமலைராஜா தன் இரண்டாவது மனைவியை சிம்மாசனத்தில் அமர்த்தி விட்டு முதல் மனைவியுடன் தலக்காட்டில் உள்ள வைத்தீஸ்வரன் கோவில் நோக்கி செல்கிறார். வைத்தியர்களால் குணப்படுத்த முடியாத நோயாக இருந்ததால் வைத்தீஸ்வரனே துணை என்று இறைவனை நாடி சென்றார். நாட்கள் உருண்டோடின. அவர் உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை. மாறாக கவலைக்கிடமான நிலைமைக்கு வந்தது. அலமேலம்மாவிற்கு தகவல் சொல்லபடுகிறது. அலமேலம்மா தலக்காடு சென்றடையும் போது கணவரின் உயிர் பிரிந்தது. பருந்து பார்வையுடன் காத்திருந்த மைசூர் ராஜ உடையார் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தனது படை பரிவாரங்களுடன் சென்று ஸ்ரீ ரங்கபட்டினத்தை கைப்பற்றினார். மீண்டும் தன் ராஜ்ஜியத்திற்கு திரும்ப முடியாத அலமேலம்மா காவிரியின் மற்றொரு கரையில் அமைந்துள்ள ஊரான மலாங்கியில் தங்கி விடுகிறார். மைசூர் மன்னர்களின் ராஜ்ஜியம் அன்றிலிருந்து தொடங்கியது.
அலமேலம்மா செல்லும்பொழுது தன்னுடன் அரச குடும்பத்தின் நகைகளையும் எடுத்து செல்கிறார். ஸ்ரீ ரங்கபட்டினத்தின் ராணியான அலமேலம்மா எப்பொழுதும் வாரத்தின் ஓரிரு நாட்கள் ஸ்ரீ ரங்கபட்டின ரங்கநாயகி அம்மனுக்கு நகைகளை சாத்தி வழிபடுவது வழக்கம். ராஜ்ஜியத்தில் நகைகள் இல்லாததை கண்ட மைசூர் ராஜ உடையார் ஒரு சில வீரர்களை அனுப்பி நகைகளை பெற்று வருமாறு கட்டளையிட்டார். அலமேலம்மா அதற்கு மறுப்பு தெரிவிக்கிறார். ராஜ உடையார் மீண்டும் வீரர்களை அனுப்பி கட்டாயமாக நகைகளோடு வர ஆனையிடுகிறார். இம்முறை அலமேலம்மா நகைகளுடன் ஓட மன்னரின் கட்டளைக்கு அடிபணித்து அவரை வீரர்கள் துரத்துகின்றனர். அவர் காவரியில் விழுந்து உயிரை மாய்த்து கொள்கிறார். அலமேலம்மா ஆற்றில் விழுகும் முன் இந்த தலக்காடு மணல் மேடாகட்டும். ராஜ உடையார் வம்சம் வாரிசே இல்லாமல் போகட்டும் என்று சாபம் கொடுத்து மறைந்து விடுகிறார். அவர் கூறியது போலவே பல கோவில்களுடன் அழகிய நகரமாக விளங்கிய தலக்காடு மணல் மேடானது. ஆண்டாண்டு ஆற்றங்கரையின் மண் சில அடி உயர்ந்து தலக்காடு பாலைவனம் போல் ஆனது. கட்டிடங்கள் மண்ணோடு மண்ணாக புதைந்தன. அதுமட்டுமல்லாமல் உடையார் குடும்பத்தையும் அலமேலம்மா சாபம் தொடர்ந்து வந்தது. இதுவரை பட்டத்து இளவரசர்களுக்கு ஆண் வாரிசுகள் பிறக்கவே இல்லை. தங்கள் உறவுகளுக்குள் தத்தெடுத்து பட்டத்து இளவரசர்களாக முடிசூட்டிக்கொண்டு பின்னர் மன்னர்களாக பொறுப்பேற்று கொண்டனர்.
சாபம்
இந்தியா சுதந்திரம் அடைந்த பொழுது ஜெயசாமராஜேந்திர உடையார் மன்னராக இருந்தார். இவரது பட்டத்து ராணிக்கு ஆண் வாரிசு இல்லாமல் போகவே தன்னுடைய இரண்டாவது மனைவியின் மகனான ஸ்ரீகந்ததத்தா நரசிம்மராஜா உடையாரை தத்து எடுத்து கொண்டார். ஸ்ரீகந்ததத்தா நரசிம்மராஜா மறைந்த பொழுது அவரின் மனைவி தங்கள் குடும்பத்தின் ஒருவரான யதுவீரை தத்து எடுத்தார். யதுவீர் முடி சூட்டியவுடன் அலமேலம்மா மறைந்த இடமான தலக்காட்டில் அவரின் சிலையை நிறுவி வழிபட்டதன் பலனாக சாபம் விலகியதாக நம்பப்படுகிறது. தற்போது அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஏறத்தாழ 80,000 கோடிகள் அளவிற்கு மைசூர் அரண்மனை வம்சத்தின் சொத்துக்கள் உள்ளன. இதை தாண்டி பல இடங்களில் அரண்மனைகள் உள்ளன. இந்திய அரசாங்கம் சில காலம் அரச குடும்பத்தின் சொத்துக்களை வசப்படுதினாலும் பின் அவைகளை மீண்டும் அவர்களுக்கு திருப்பியளித்துள்ளது.
வருடம் 1940 வரை வாழ்ந்து மறைந்த கிருஷண ராஜ உடையார் எண்ணற்ற திட்டங்களை மக்களுக்காக நிறைவேற்றினார். கர்நாடகா மாநிலத்தின் முதல் அணை வாணி விலாச சாகரா 19௦7 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. புகழ் பெற்ற கிருஷ்ண ராஜ சாகர் அணை இவர் காலத்தில் கட்டியது தான். மைசூர் சர்க்கரை ஆலை, குழந்தை திருமண தடுப்பு, விதவைகள் மறுமணம், எண்ணற்ற கல்வி நிறுவனங்கள் அனைத்தும் இம்மாநிலத்தை மற்றொரு தளத்திற்கு இன்று எடுத்து சென்றிருக்கிறது. நமது தேசத்தந்தை மகாத்மா காந்தி வருடம் 1925 ஆம் ஆண்டு இவரது தன்னலம் கருதாத தொண்டுள்ளம் கொண்டவர் என்று வெகுவாக பாராட்டி “ராஜ ரிஷி” என்று அழைத்துள்ளார். இன்று அரண்மனை அறியனைகளுக்கு அதிகாரம் இல்லையென்றாலும் இன்றளவிலும் அம்மாநில மக்களின் மனதில் உடையார் வம்சம் மன்னர்களாகவும் ரானிகளாகவுமே வாழ்கின்றனர்.
Web Title: Mysore Maharaja History
Featured Image Credit: wikipedia