
1954 ஏப்ரல் 10ஆம் திகதி பிரித்தானிய இளவரசி இரண்டாம் எலிசபெத், எடின்பரோ கோமகன் இளவரசர் பிலிப் ஆகியோர் முதன் முதலில் இலங்கைக்கு வருகை தந்தனர். இந்நிகழ்வு அரங்கேறி கிட்டத்தட்ட 65 வருடங்களாகின்றது.
இதில் விசேடம் என்னவென்றால் இலங்கைத் தீவை ஆட்சி செய்தவர்கள் கிட்டத்தட்ட 139 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கை வந்திறங்கினர். அரச காரணங்களுக்காக இலங்கைக்கு 10 நாட்கள் விஜயத்தை மேற்க்கொண்டிருந்தனர். அதுவும் தம்பதியினராக வந்தது மேலும் விசேடத்துவம் மிக்கது. இவர்களை வரவேற்க அந்த நேரத்தில் முழு இலங்கையும் விழா கோலம் பூண்டிருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்படி இலங்கை வந்த மகாராணியும் மகாராஜாவும் இலங்கை பாராளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் ஒன்றில் கலந்துகொண்டதோடு பேராதெனிய பல்கலைக்கழகத்தின் திறப்பு விழாவின் பிரதம விருந்தினர்களாகவும் பங்கேற்றனர். அத்தோடு கண்டியிலுள்ள ஸ்ரீ தலதா மாளிகைக்கு சென்ற ராஜ தம்பதியினர் வரலாற்று சிறப்புமிக்க தலதா பெரஹேராவையிலும் பார்வையாளர்களாகக் கலந்துகொண்டுள்ளனர்.
இந்த ராஜ தம்பதியினர் இலங்கைக்கு வருகைத் தருவதற்கு முன்னர் பத்திரிக்கையில் இவர்களின் பாதுகாப்பு குறித்த ஏற்பாடுகள் எவ்வாறு செய்யப்பட்டிருக்கின்றது என்பது குறித்த செய்தி முதற்பக்கத்தில் வௌியிடப்பட்டிருந்தது. சிங்கள மொழியில் வெளியிடப்பட்ட அந்த செய்தியில் ஜயவேவா ஜயவேவா (வாழ்க வாழ்க) என்று கோஷமிட தடை விதிப்பதோடு பட்டாசு கொழுத்தவும் அனுமதி மறுக்கப்படுவதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தச் செய்தியானது 1954ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1ம் திகதி வௌியான பத்திரிகையில் பிரசுரமாகியிருந்தது. ஆனாலும் மகாராணியார் பயணம் செய்யும் வழியெங்கும் வாழ்க வாழ்க என்று கோஷமிடுவது ஏற்கத்தக்கதுதான் என்று மகாராணியாரின் பயண ஒருங்கிணைப்பு அதிகாரி தெரிவித்துள்ளார். ஆனாலும் இதற்கு தடை விதிக்கப்பட்டதாகவே தெரிவிக்கப்படுகின்றது. அத்தோடு முக்கியமாக பட்டாசு கொழுத்த முடியாது என்பதை உறுதியாகவே தடை விதித்துள்ளனர். மகாராணியார் வருவதற்கு முன்னர் அவர் பயணிக்கும் வாகனங்கள் ரயில்கள் மீள பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அப்படி பரிசோதனைக்காக இயக்கப்பட்ட ரோயல் ரயில் பொல்காவலையில் பிரதேசத்தில் வைத்து இயங்க மறுத்துள்ளது. இதனால் பயணம் கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் வரை தாமதப்பட்டுள்ளது.
ரயிலின் ஒரு பெட்டியில் கோளாறு ஏற்பட்டதால் இந்த ரயில் இயங்க மறுத்தாகவும் அதன்பிறகு அந்த பெட்டியைக் கழட்டிவிட்டு பரிசோதனைப் பயணத்தை தொடர்ந்ததாகவும் குறிப்புகள் சொல்கின்றன. இந்த ரயிலானது பொல்காவலையிலிருந்து மாத்தளை நோக்கி பயணப்பட்டள்ளது. இந்த ரயிலில், ரயில்வே துறையின் தலைமை பொறியியாளர் ராம்பால, பொது மேலாளர் கணகசபை மற்றும் போக்குவரத்து கண்காணிப்பாளர் டெமர் மற்றும் ஏனைய உயர் அதிகாரிகளும் ரயிலில் இருந்துள்ளனர்.
ராஜ தம்பதியினரின் இலங்கை வருகைக்காக கொழும்பு மற்றும் கண்டி நகரங்கள் விழாகோலம் பூண்டிருந்ததாகவும், வீதிகள் முழுக்க கொடிகள் கட்டப்பட்டிருந்ததாகவும் கொழும்பிலிருந்து கண்டி வரை செல்லும் வீதியில் அமைந்திருந்த பாலங்கள் எல்லாம் அலங்கரிக்கப்பட்டிருந்தாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதில் சுவாரஷ்ய தகவல் என்னவென்றால், கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்திலும் கொடிகள் கட்டப்பட்டிருந்ததாம். இதில் கட்டப்பட்டிருந்த கொடிகளை திருடிய இருவர் பொலிஸாரால் அப்போது கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்தக் கொடிகளை திருடியதால் இந்த இருவரும் அப்போது பெரும் புகழ்பெற்றவர்களாக விளங்கியுள்ளனர். 1954ஆம் ஆண்டு புதன்கிழமை ஏப்ரல் 24ஆம் திகதி வெளியிடப்பட்ட தினமின பத்திரிகையில் ‘கொடிகள் திருப்பட்ட குற்றச்சாட்டு’ என்ற தலைப்பில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
அந்தச் செய்தியில்…ராஜ தம்பதியினரின் இலங்கை வருகைக்காக கொழும்பு லிப்டன் சுற்றுவட்டாரத்தில் அலங்காரத்திற்காக கட்டப்படிருந்த கொடிகளை திருடிய குற்றச்சாட்டில் இருவர் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரும் கொழும்பு நீதிமன்றம் ஆஜப்படுத்தப்பட்டனர். அப்போது 250 ரூபா சரீரப் பிணையில் இவ்விருவரும் விடுவிக்கப்படுவதாகவும் வழக்கு விசாரணை எதிர்வரும் 27ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்படுவதாகும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
ராஜ தம்பதியினரின் வருகைக்காக கொழும்பு மற்றும் கண்டியைக்கு இடையேயுள்ள பாலங்களை அலங்கரிப்பதற்கான சிற்ப வேலைப்பாடுகளுக்கு ஒரு நிபுணத்துவம் பெற்ற குழு ஒன்றை அப்போதைய இலங்கை அரசு நிமித்தது. அப்போதிருந்த புகழ்பெற்ற ஓவியர்கள் பலரும் இந்தக் குழுவில் இணைந்திருந்தனராம். அதன்படி அந்தக் குழுவில் அப்போதைய பிரபல கலை சிற்பிகளாக விளங்கிய நிஸ்ஸங்க சூரியதாச, கே.பி.சூரியதாச, எஸ்.எம்.நவரத்ன மற்றும் எஸ்.பி. மெதகொட ஆகியோர் இருந்துள்ளனர். ராஜ தம்பதியனரின் வருகைக்காக கொழும்பை அலங்கரிக்க நியமிக்கப்பட்ட இந்த குழுவுக்கு தலைமையேற்றவர் நிசங்க சூரியதாச என்ற கலைசிற்பிதான். இவர் தனது 91ஆவது வயதில் கடந்த 2008ஆம் ஆண்டு காலமானார்.
இந்த அலங்காரத்திற்காக அதிக தாமரை மலர்களை பயன்படுத்தியுள்ளார். மகாராணி அமரும் இடத்திற்கு மேலாகவும் அவரின் இருக்கையை சுற்றியும் தாமரை மலர்களால்தான் அலங்கரிக்கப்பட்டதாம். ராணியின் இலங்கை வருகைக்காக சுதந்திர சதுக்கமும் கண்டியில் பல இடங்களும் அப்போது அலங்கரிக்கச் சொன்னதாக சூரியதாச குறிப்பிட்டுள்ளார். இந்த வேளைகைளை மூன்று மாதங்களுக்கு முன்பே ஆரம்பித்துவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அலங்காரங்களுக்கான முழு செலவையும் உள்ளாட்சி அமைச்சு ஏற்றுக்கொண்டுள்ளது. கண்டியில் அலங்கார வேலைகளில் ஈடுபட்டும் நபர்களுக்கான பணத்தை கொழும்பிலிருந்துதான் கொண்டு வருவார்களாம்.
கிட்டத்தட்ட 2000 ஆயிரும் ரூபா வரையில் ஒரு மாதத்திற்கான சம்பளப் பணத்தை கொழும்பிலிருந்து எடுத்துவருவார்களாம். அப்படி பணத்தை எடுத்துவருபவர் வாகனத்தில்தான் வருவாராம். அந்த வாகனத்திற்கு பொலிஸ் பாதுகாப்பும் கொடுக்கப்பட்டதாம். 1954ஆம் அண்டு ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி கோதிக் கப்பலில் ரோயல் தம்பதியினர் இலங்கைக்கு வந்து சேர்ந்துள்ளனர். பத்து நாட்கள் இலங்கையில் தங்கியிருந்த அவர்கள் அதே கப்பலில் மீண்டும் பிரித்தானியா நோக்கி பயணமாகியுள்ளனர்.
இதில் மேலுமொரு விசேட நிகழ்வு என்னவொன்றால் எலிசபெத் மகாராணி தனது 28ஆவது பிறந்தநாளை இலங்கையில்தான்கொண்டாடியிருக்கிறார். ரோயல் தம்பதியினர் இலங்கையில் தங்கியிருந்த பத்து நாட்களில் ஐந்து லேண்ட் ரோவர் கார்கள் பாதுகாப்புக்காக அமர்த்தப்பட்டிருந்தாகவும் குறிப்புகள் சொல்கின்றன. இலங்கைக்கான தனது விஜயத்தை முடித்துக்கொண்டு மீண்டும் நாடு திரும்புவதற்காக கோதிக் கப்பலுக்கு ஏறுவதற்கு முன்னர் புதிதாக நிர்மானிக்கப்பட்ட கப்பல்துறையையும் ராணியார் திறந்து வைத்தாராம். இதற்கு இரண்டாவது எலிசபெத் கப்பல் தளம் என்று பெயரிடப்பட்டுள்ளது.