Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

முதல் அரசியற்கொலை : மதம் மாறிய குற்றவாளி

S. W. R. D. பண்டாரநாயக்காவின் கொலை நிகழ்ந்த சில நாட்களுக்குள்ளேயே அதனுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் பலர் கைது செய்யப்பட்டனர். அவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் முதன்மையானவர் களனி ரஜமகா விகாரையின் தலைமைப் பிக்குவான மப்பிட்டிகம புத்தரகித தேரர் ஆவார்.

நடந்தது என்ன?

பௌத்த பிக்குவினால் மேற்கொள்ளப்பட்ட S. W. R. D. பண்டாரநாயக்காவின் கொலை பற்றிய வழக்கு விசாரணை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. கொலையாளியான சோமராம தேரர் மீதான விசாரணையை, இலங்கை காவல்துறை உயர் அதிகாரிகளை உள்ளடக்கிய குழுவொன்று முன்னெடுத்தது. அதேபோல் உலகின் பிரசித்தி பெற்ற புலனாய்வுத்துறையான ஸ்கொட்லன்ட் யார்ட்டின் புலனாய்வு அதிகாரிகளும் இந்த விசாரணைகளில் பங்கு கொண்டிருந்தனர்.

இலங்கையின் முதலாவது பெண் அமைச்சர் கைது…

S. W. R. D. பண்டாரநாயக்காவின் உயிரிழப்பையடுத்து இலங்கையின் பிரதமர் பதவியை வகித்த தஹநாயக்கவுக்கு இது பாரிய சிக்கலை ஏற்படுத்தியது. பண்டாரநாயக்காவின் உயிரிழப்பினை அடுத்து அவர் குறித்த உரையொன்றை, “சிலோன் ரேடியோவில்” மப்பிட்டிகம புத்தரகித தேரர் ஆற்றியிருந்தார். அந்த உரை அலரி மாளிகையில் இருந்தே ஆற்றப்பட்டது. இதிலிருந்து, குறித்த உரையை ஆற்றுவதற்கு மப்பிட்டிகம புத்தரகித தேரரை ஏற்பாடு செய்தவர் தஹநாயக்க என்பது எல்லோருக்கும் புரிந்திருக்கும். S. W. R. D. பண்டாரநாயக்காவின் மறைவு குறித்து உரை ஆற்றுவதற்கு தாம் ஏற்பாடு செய்தவரே, கொலையின் முதல் நிலைச் சந்தேகநபராக அறிவிக்கப்பட்ட நிலையில், அப்போதைய பிரதமர் தஹநாயக்க சங்கடத்தில் மாட்டிக் கொண்டார்.

கொலை குற்றச்சாட்டில் முதன்மையான மப்பிட்டிகம புத்தரகித தேரர்

இதனையடுத்து, தஹநாயக்கவின் அமைச்சரவையின் உறுப்பினராக இருந்த பெண் அமைச்சர் விமலா விஜேவர்தன கைது செய்யப்பட்டார். 1952 ஆம் ஆண்டில் விமலா களனி தொகுதியிலிருந்தே ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்திப் போட்டியிட்டார். எனினும் தனது உறவினரான ஜே. ஆர் ஜெயவர்தனவிடம் அவர் தோல்வி கண்டார். இதனையடுத்து, அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் மீரிகம தொகுதியில் போட்டியிட்டு வென்ற விமலாவை, பண்டாரநாயக்கா சுகாதாரத்துறைக்கான அமைச்சராக்கியிருந்தார்.

இலங்கையின் முதலாவது பெண் அமைச்சர் விமலா விஜேவர்தன

இலங்கையின் முதலாவது பெண் அமைச்சர் என்ற பெருமையைப் பெற்ற விமலா விஜேவர்தனவும், இந்தக் கொலையில் சந்தேகநபராக கருதி கைது செய்யப்பட்டமை, பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அவர் கைது செய்யப்பட முன்னர், அமைச்சர் பதவியிலிருந்து  நீக்கப்பட்டிருந்தாரெனக் கூறப்படுகின்றது. இந்த வழக்கு விமலாவின் அரசியல் வாழ்வுக்கு ஒரு முற்றுப்புள்ளியாக அமைந்தது.

கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி யாருடையது?

S. W. R. D. பண்டாரநாயக்காவின் கொலையில், அவரது அரசியல் எதிரியான ஜே. ஆர். ஜெயவர்தனவுக்கும் தொடர்பிருந்ததாக, பல வதந்திகள் அப்போது உலாவின. மப்பிட்டிகம புத்தரகித தேரரின் நெருங்கிய சகாவான H.P. ஜெயவர்தனவின் கைதின் பின்னரே இவ்வாறான வதந்திகள் பரவலாயின. கொள்ளுப்பிட்டி பகுதிக்கான காவல்துறை இன்ஸ்பெக்டராக இருந்த நியூட்டன் பெரேரா கைதானதை விட, ஒஸ்ஸி கொரியா கைதான விடயமே பேசப்பட்டது. ஒஸ்ஸி கொரியா காவல் துறை இன்ஸ்பெக்டராக இருந்து பின்னாளில், சமூக விரோத செயல்களில் ஈடுபடும் பாதாள உலகக்குழு உறுப்பினராக மாறியவர் என்பது மேலதிக செய்தி.

பண்டாரநாயக்க கொலை அவர்களை சுட்ட வெப்லே ரிவோல்வர்

வர்த்தகரான F.R.D.சொய்ஸாவும் இந்த வழக்கில் கைதானதைத் தொடர்ந்து, இலங்கையின் நிதியமைச்சராக அப்போது பதவி வகித்த ஸ்டான்லி டி சொய்ஸா தனது பதவியைத் துறக்கவேண்டியேற்பட்டது. பிரதமராக இருந்தபோதே பண்டாரநாயக்க மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருந்தமை காரணமாக, இலங்கையின் அப்போதைய காவல்  அதிபராக பதவி வகித்த சிட்னி டி சொய்ஸா கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டார்.

பின்னாளில் F.R.D.சொய்ஸா மற்றும் ஒஸ்ஸி கொரியா ஆகியோர் இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட போதும், கொலை செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி ஒஸ்ஸி கொரியாவினுடையது என விசாரணையில் கண்டறியப்பட்டிருந்தது. அதுமட்டுமல்லாது, கொலைச் செயலை மேற்கொண்ட தல்டுவே சோமராம தேரருக்கு துப்பாக்கி சுடும் பயிற்சியை நியூட்டன் பெரேராவே வழங்கியிருந்தமையும், விசாரணைகளில் வெளியானது. எனினும், அவர்கள் இருவரும் இந்த வழக்கியிருந்து விடுவிக்கப்பட்டார்கள்.

நவம்பர் 26, 1959, S. W. R. D. பண்டாரநாயக்காவின் கொலைக்கு சதித்திட்டம் தீட்டிய குற்றச்சாட்டின் பேரில் ஏழுபேர் மீது கொழும்பு தலைமை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

இலங்கையின் முதலாவது அரசியல் கொலை தொடர்பில், ஏழு பேர் மீது, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டது. மப்பிட்டிகம புத்தரகித தேரர், ஹேமசந்த்ர பியசேன ஜயவர்தன, பள்ளிஹகரகே அருண டி சில்வா, தல்டுவே சோமராம தேரர், வீரசூரிய ஆராச்சிகே நியூட்டன் பெரேரா, விமலா விஜேவர்தன, அமரசிங்க ஆராச்சிகே கரோலிஸ் அமரசிங்க ஆகியோரே குற்றம் சுமத்தப்பட்டவர்கள்.

பண்டாரநாயக்க கொலை குற்ற வழக்கு தொடர்ந்த கட்சியினர்
ஆனந்த பெரேரா, ஜார்ஜ் சிட்டி qc மற்றும் லியோனல் பிரேமரத்ன

இவர்களில், நான்காவதாக குற்றம் சுமத்தப்பட்ட தல்டுவே சோமராம தேரர் மீது, கொலை முயற்சிக் குற்றமும் சுமத்தபட்டது. அந்தக் கொலை முயற்சியை தாம் மேற்கொண்டதாக காவல்துறையினரிடமும் பிரதான நீதவான் முன்னிலையிலும் சோமராம தேரர் ஒப்புக் கொண்ட போதும், பின்னாளில், உயர் நீதிமன்ற விசாரணையில் தனது வாக்குமூலத்தை மாற்றிக் கொண்டார்.

நீதவான் விசாரணையில், ஏழாவதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த அமரசிங்க ஆராச்சிகே கரோலிஸ் அமரசிங்க சாட்சியாளராக மாறியதுடன், மன்னிப்பையும் பெற்றுக்கொண்டார். ஆறாவதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் விமலா விஜேவர்தன மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டிலிருந்து அவர் வெளியேற்றப்பட்டார்.

கொலைக்கான காரணம் என்ன தெரியுமா?

இந்த விசாரணைகளில், கொலை மேற்கொள்ளப்பட்டமைக்காக கூறப்பட்ட காரணம் மிகவும் சுவாரசியமானது. பண்டாரநாயக்க தேர்தலில் போட்டியிடும் போது, அவருக்கு பல வழிகளிலும் பக்கபலமாக இருந்த புத்தரகித தேரர், பிரதமர் பண்டாரநாயக்கவிடம் ஒரு கோரிக்கையை முன் வைத்திருந்தார். தாமும் தமது சகாவுமான எச். பி. ஜெயவர்தனவும் இணைந்து ஆரம்பித்த தனியார் நிறுவனத்திற்கு, பர்மா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து அரிசி இறக்குமதி செய்வதற்கு தீர்மானித்திருந்த புத்தரகித தேரர், அதற்கான இறக்குமதி அனுமதியையே பண்டாரநாயக்கவிடமிருந்து எதிர்பார்த்தார். எனினும் அந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதுவே, பண்டாரநாயக்க மீது புத்தரகித தேரர் கோபம் கொள்வதற்கு காரணமாக அமைந்ததாக விசாரணை முடிவுகள் தெரிவித்தன.

தூக்கிலிடும் முன்னர் மதம் மாறிய குற்றவாளி..

உயர்நீதிமன்ற விசாரணையின் பின்னர், புத்தரகித தேரர், சோமராம தேரர் மற்றும் H.P. ஜெயவர்தன ஆகியோருக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டது. இதனையடுத்து செய்யப்பட்ட மேன்முறையீட்டின் காரணமாக, புத்தரகித தேரர், மற்றும் H.P. ஜெயவர்தன ஆகியோர் தூக்குத் தண்டனையிலிருந்து தப்பித்தனர். எனினும், சோமராம தேரர் மீதான தூக்குத்தண்டனை மீள உறுதி செய்யப்பட்டது.

பண்டாரநாயக்க அவர்களை துப்பாக்கியால் சுட்ட தல்டுவே சோமராம தேரர்

1962 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 6 ஆம் திகதி சோமராம தேரர் தூக்கிலிடப்பட்டார். மரணிக்கும் போது அவருக்கு வயது 48. மற்றுமொரு சுவாரசியமான விடயம் என்னவென்றால், தூக்கிலிடப்படும் முன்னர், சோமராம தேரர் தாம் அதுவரை பின்பற்றிய பௌத்த மதத்தைத் துறந்து, ஞானஸ்நானம் பெற்று கிறிஸ்தவராகியிருந்தார்.

Related Articles