
மேற்குத்தொடர்ச்சி மலைகளில் உற்பத்தியாகி தெய்வங்களின் தேசத்தில் பாய்ந்தோடி அரபிக்கடலோடு கலந்து மறைந்த ஒரு நதியை அதன் திசை மாற்றி வைகை நதியோடு இணைத்து, தென்தமிழ் நாட்டை வளமாக்கி வங்கக்கடலுடன் இணைக்கவைத்த அரிய பெரும் படைப்பே முல்லைப்பெரியாறு அணை.
தற்போதைய கேரளத்தின் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த அணை, இற்றைக்கு 125 ஆண்டுகளுக்கு முன் சூரியன் அஸ்தமிக்காத ஆங்கிலேயே ஆட்சியில் நம்மவர் வசித்த காலத்தில் கட்டப்பட்டது. ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக ஓங்கி நிற்கும் இவ்வணை இரு மாநிலங்களுக்கு இடையேயான பிணக்காக இன்றளவும் பேசப்பட்டு வருகிறது.
பெரியாறு நதி கேரளத்தில் ஊற்றேடுத்து கேரளத்தில் பாய்ந்தோடி அரபிக்கடலில் கலக்கிறது. 19ம் நூற்றாண்டு. இந்தியாவின் பெரும்பான்மை பகுதிகள் பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்த காலத்தில், தற்போதைய மதுரை மாவட்டம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் அநேகம் வரட்சிகளை சந்தித்த வண்ணம் இருந்தது. இதனால் அந்த பகுதியில் பெருமளவு வரியை சேகரிக்க பிரித்தானிய அரசால் முடியவில்லை. போதிய மழையின்மையே இதற்கான காரணம் என கண்டறிந்த மெட்றாஸ் பிரித்தானிய அரசு, வீணே நிலமளந்து கடலாடும் முல்லைப்பெரியாறு நதியை தமிழகத்தின் வைகை நதியுடன் இணைக்க திட்டங்களை மேற்கொண்டது. இதற்கான பொறுப்பை பென்னி குயிக் (Colonel John Pennycuick) எனும் ஆங்கிலேய பொறியியலாளரிடம் ஒப்படைத்தது. பென்னி குயிக் இன் ஆய்வுகள், களப்பயணங்களின் பின் அவர் நேர்த்தியான ஒரு திட்டத்தை மெட்றாஸ் பிரித்தானிய அரசிடம் முன்வைத்தார். ஆனால் ஆங்கிலேய அரசால் உடனடியாக இந்த திட்டத்தை முன்னெடுக்க முடியாத படி ஒரு முட்டுக்கட்டை விழுந்தது. அது திருவிதாங்கூர் சமஸ்தானம்.
இக்காலத்தில் தற்போதைய தென் கேரளாவின் பெரும் பகுதி திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்கு சொந்தமாய் இருந்தது. வடகேரளம் கொச்சின் ஆட்சியாக இருந்தது. முல்லைப்பெரியாறு நதியின் ஊற்றுமுகம் முதலாக முழுநதி பாயும் பகுதிகளும் திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்கு உரியதாக இருந்தது. எனவே மெட்றாஸ் அரசு திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் பேச்சு வார்த்தை நடாத்தியது. நாட்கள் மாதங்களென, மாதங்கள் வருடங்களென ஓடி 22 ஆண்டுகள் ஓய்ந்த பின்னர் 1886 இல் திருவிதாங்கூர் சமஸ்தானதிற்கும் மெட்றாஸ் அரசுக்கும்இடையே ஒரு உடன்படிக்கை கைச்சாத்து இடப்பட்டது. அவ்வுடன்படிக்கை பிரகாரம்
- திருவிதாங்கூர் சமஸ்தானம் முல்லைப்பெரியாறு நதியில் அணை கட்டி அதில் பெய்யும் மழை நீரை மதுரை சுற்றுவட்டாரத்துக்கு விவசாயத்தின் பொருட்டு கொண்டு செல்ல மெட்ராஸ் பிரித்தானிய அரசுக்கு அனுமதி அளிக்கிறது.
- முல்லைப்பெரியாறில் அணை கட்ட 8600 ஏக்கர் நிலம் வழங்கப்படும்.
- ஒரு ஏக்கர் நிலத்துக்கு 3 ரூபாய் வீதம் பிரித்தானிய அரசால் வழங்கப்பட வேண்டும்.
- மேலும் ஆண்டு தீர்வையாக 42 963 ரூபாய் பிரித்தானிய அரசால் திருவிதாங்கூருக்கு வழங்கப்பட வேண்டும்.
- இந்த நிலமானது 999 வருடங்களுக்கு குத்தகைக்கு வழங்கப்படுகிறது.
- 999 வருடங்களின் பின்பு நிலத்துக்கான உரிமை மீண்டும் திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்க்கே சேரும்.
22 வருடங்களுக்கு பின் முல்லைப்பெரியாறு அணைக்கான வேலைகள் நடைபெற ஆரம்பித்தன. ஆரம்பத்தில் ஆங்கிலேய அரசு கணக்கிட்ட செலவை விட கட்டுமான செலவு பலமடங்கு அதிகரித்து சென்றது. பென்னி குயிக் இதனை மெட்றாஸ் அரசுக்கு தெரியப்படுத்தினார். ஆரம்பத்தில் விவசாயத்தை பெருக்கி அதன் மூலம் அதிக வரிவருவாயை பெறலாம் என்ற நோக்கில் ஆரம்பமான இந்த செயல்திட்டம், மதிப்பிட்ட செலவை விட விஞ்சி சென்றதால் லாபம் காண முடியாது என்பதை புரிந்துகொண்ட மெட்றாஸ் அரசு அணை கட்டுமானத்துக்கான நிதியை நிறுத்தியது. செல்வந்த குடும்பத்தில் பிறந்திருந்த பென்னி குயிக் இந்த திட்டத்தை முடித்தே ஆகவேண்டும் என்ற நோக்கத்தில், இங்கிலாந்தில் இருந்த தன் பூர்வீக சொத்துக்கள் அனைத்தையும் விற்று முல்லைப்பெரியாறு அணையின் கட்டுமானத்தை 1895 இல் பூர்த்தி செய்தார். பென்னி குயிக் இன் இந்த சாதனைகளை குறிப்பாகக் கொண்டே லிங்கா என்ற தமிழ் திரைப்படமும் வேறு ஒரு பார்வையில் உருவாக்கப்பட்டது.

அணையின் உயரம் 158 அடிகள். உச்சபட்ச நீர் கொள்ளளவு 155 அடிகள். முல்லை பெரியாறு அணையின் கட்டுமானத்தின் பின்பு மேற்கு தொடர்ச்சி மலையில் மிகையாக பெய்யும் மழையின் ஒரு பகுதி அவ்வணையில் சேகரிக்கப்பட்டு வைகை ஆற்றில் இணைக்கப்பட்டதால், வைகை நதிப்படுகையில் வசித்த விவசாயிகள் பெரும் நன்மையை பெற்று வந்தனர். மேலும் 5 மாவட்டங்களின் மக்களுக்கான குடிநீரும் இந்த அணை மூலமாகவே இன்றளவும் வழங்கப்பட்டு வருகிறது. திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்குள் இந்த அணையின் பயன்பாடு, பராமரிப்புக்காக மெட்றாஸ் அரசு உள்நுழைய அனுமதியும் வழங்கப்பட்டிருந்தது. அணை முழுக்க முழுக்க ஆங்கிலேய அரசின் கட்டுப்பாட்டில் இருந்தது. அணையில் மீன்பிடிப்பு மற்றும் சுற்றுலாவுக்கான உரிமையும் மெட்றாஸ் அரசிடம் இருந்தது.
1947ம் ஆண்டு நள்ளிரவில் சுதந்திரம் பெற்று கொண்ட இந்தியா, சுதேச அரசுகளாக நிலைபெற விரும்பிய பல சமஸ்தான்களை வலுக்கட்டாயமாக தன்னுடன் இணைத்துக்கொண்டது. அவ்வாறே திருவிதாங்கூர் சமஸ்தானமும் இந்திய அரசுக்கு சொந்தமாகியது. 1956 வரை மெட்ராஸ் மாநிலத்தின் ஒரு பகுதியாக இருந்த கேரளா, அதன் பின்னரான மொழிவாரி மாநில பிரிவினையால் தனிமாநில அந்தஸ்தை பெற்றது. எனினும் இன்றளவும் முல்லைப்பெரியாறு அணையை கட்டுப்படுத்தும் மொத்த அதிகாரமும் தமிழக அரசிடம் இருந்தது. ஆண்டுதோறும் 257 000 ரூபாய் குத்தகை பணமாக கேரள அரசுக்கு தமிழகத்தால் கொடுக்கப்பட்டும் வருகிறது.
1963 இல் முதன்முதலாக கேரள அரசு முல்லைப்பெரியாறு குறித்தான சில பிரச்சினைகள் குறித்து பேசியது.அக்காலத்தில் மலையாள மனோரமா என்ற பத்திரிக்கையில் வெளியான செய்தியே இதற்கான முக்கிய காரணமாக அமைந்தது. முல்லைப்பெரியாறு அதிகளவான நீரை கொண்டுள்ளதாகவும், சிலகாலங்களில் கேரளாவிற்கு நீர்ப்பற்றாகுறை ஏற்படுவதாகவும் முதல் வாதத்தை வைத்தனர். இரண்டாவது வாதமாக முல்லைப்பெரியாறு பழமையான ஒரு அணைக்கட்டாகும், அது உடைப்பெடுக்குமானால் கேரளாவுக்கு பெரிய வெள்ள அனர்த்தம் வரலாம். ஆகவே இனி தமிழக அரசு முல்லைப்பெரியாறு அணையை பயன்படுத்த கூடாது எனவும் கூறியது. எனவே முல்லைப்பெரியாறு நதியை மீண்டும் அதன் பழைய வழித்தடத்தில் ஓடி கடலில் கலக்க விடுமாறு அழுத்தம் கொடுத்து கேரள அரசு. மதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் அனைத்தும் முல்லைப்பெரியாறு அணையை நம்பி இருப்பதாலும், பல நகரங்கள் வைகைநதியோரம் உருவாகி வருவதாலும் முல்லைப்பெரியாறு அணையை தொடர்ந்து செயல்படுத்தவேண்டும் என தமிழக அரசு பதில் அளித்து வந்தது. அப்போதைய மத்திய அரசு, கேரள அரசு, தமிழக அரசு மூன்றும் ஆய்வு செய்து அணை உறுதியாக உள்ளதாக அறிக்கையிட்டனர்.
கேரள அரசின் மிக பிரதான அடிப்படையானது IIT நிறுவனங்களின் குழுக்கள் மேற்கொண்ட ஆய்வுகளின் முடிவுகளே ஆகும். IIT ஆய்வு முடிவுகளின் படி அணையானது 6.5 ரிக்டர் அளவுக்கு மேல் நிலநடுக்கம் வரும் போது குறித்த மட்டத்துக்கு அதிகமாக நீர் அணைக்கட்டில் இருந்தால் அணை தகர்ந்து போகும் என்பதாகும். இதற்கு தமிழக அரசின் மறுமொழியாக ‘முல்லைப்பெரியாறு அமைந்துள்ள பகுதி நிலநடுக்கம் ஏற்படும் வாய்ப்பே இல்லாத பகுதி’ என்றது. எனினும் கேரள அரசின் தொடர்ந்த அழுத்தத்தினால் 1978 இல் அணையின் நீர்மட்டத்தை 152 அடியில் இருந்து 145 அடிவரை குறைத்துக்கொள்ள தமிழ்நாடு அரசு முடிவு செய்தது. நீர் மட்டம் குறைக்கப்படும் போது நிலநடுக்கம் ஏற்பட்டாலும் அதனால் அணைக்கு பாதிப்பு ஏற்படாது. இந்த புரிந்துணர்வின் அடிப்படையில் முல்லைப்பெரியாறு அணை பயன்படுத்தப்பட்டு வந்தது.
1979 இல் மத்திய நீர்வளத்துறை கவுன்சில் தலைவர் K. C. தோமஸ் பெரியாறு அணையை ஆய்வுசெய்து மீண்டும் அதன் உறுதியை சோதித்தார். அவரின் ஆலோசனை படி நீர்மட்டம் 136 அடியாக குறைக்கப்பட்டதுடன், அணையின் உள்புறம் concrete தடுப்பையும் தமிழக அரசு அமைத்தது. அணையின் நீர்வரத்து குறைக்கப்பட்டதால் தேனி,மதுரை திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் பெரும்பாலான விவசாய நிலங்கள் போதியளவு நீரிலாத காரணத்தால் பாதிப்பு அடைந்தது. குடிநீருக்கான தட்டுப்பாடும் நிலவியது. இதனால் வைகை நதி விவசாயிகள் மற்றும் மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட ஆரம்பித்தனர். இதனால் தமிழக அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கொன்றையும் தாக்கல் செய்தது. தொடர்ந்து தமிழக அரசின் ஏற்பாட்டால் அணை மேலும் வலுவூட்டப்பட்டு 9 அடிகள் அணைசுவர் உயர்த்தப்பட்டது. 27/02/ 2006 இல் உச்ச நீதிமன்ற அனுமதியுடன் நீர்மட்டம் 142 அடிகள் வரை உயர்த்த தமிழக அரசு முயற்சிக்கவும், கேரள அரசு நாடாளுமன்றத்தில் புதிய மசோதாவை கொண்டுவந்து மாநில அணைகள் பாதுகாப்பு அவையின் அனுமதி இல்லாது அணையின் நீர்மட்டத்தை உயர்த்த முடியாது என்ற நிலையை உருவாக்கியது.
1979ல் இருந்து 35 ஆண்டுகளாக அணையின் நீர்மட்டம் 136 அடியாக பேணப்பட்டது. 07/05/2014 இல் 142 அடிக்கு நீர்மட்டம் மாற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. எனினும் குறித்த 35 வருட காலத்தில் தமிழக பாசன நிலங்களில் 38 000 ஏக்கர் நிலங்கள் தரிசு நிலங்களாகி உள்ளன. 26 000 ஏக்கர் நிலங்கள் இருபோக விளைநிலங்களில் இருந்து ஒருபோக விளைநிலங்களாகின. மின்சார உற்பத்தியிலும் ஆண்டுக்கு 75 கோடி ரூபாய் இழப்பு உருவானது. அணையின் நீர்மட்டம் உயர்த்தப்பட்டது தமிழக மக்களிடம் பெரும் வரவேற்ப்பை பெற்றது. முல்லைப்பெரியாறு அணை 142 அடி நீரை தேக்குவதால் கேரளாவின் இடுக்கி அணைக்கு போதிய நீர் வரத்து வரவில்லை என குற்றம் சாட்டியது கேரள அரசு. 208 147 ஏக்கர் நிலங்கள் நம்பி இருந்த முல்லைப்பெரியாறில் கேரள அரசு புதியதொரு அணையை அமைக்க முயற்சித்தது. எனினும் அது நடைபெறவில்லை. 2016ம் ஆண்டில் முல்லைப்பெரியாறு நீரேந்தல் பகுதிகளில் தொடர்ச்சியான நில ஆக்கிரமிப்பு நடைபெறுவதாக தமிழக விவசாயிகளிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கேரள அரசு பெரியாறு அணையின் பகுதியில் புதிய காவல் மையத்தையும் நிர்மாணித்தது நிலையை மேலும் மோசமாக்கியது. மதுரை உள்ளிட்ட வைகைநதி மாவட்டங்களில் போராட்டங்கள் ஏற்பட்டன.
கடந்த 2018 ஜூலை இறுதி காலத்தில் ஏற்பட்ட பெரும் மழை கேரளத்தில் 14 மாவட்டங்களை வெள்ளத்தில் மூழ்கடித்தது. அந்நேரத்தில் முல்லைப்பெரியாறு அணைவிவகாரம் மீண்டும் சூடு பிடிக்க தொடங்கியது. மேற்கு தொடர்ச்சி மலைகளில் பெய்த வரலாறு காணாத மழையின் விளைவால் முல்லைப்பெரியாறு அணை அதன் பதிவுசெய்யப்பட்ட உச்ச உயரத்தை விட(152 அடிகள்) அதிக கொள்ளளவை அடைந்தது. அந்நேரத்தில் நிகழக்கூடிய சிறுமண்சரிவு கூட அணையை உடைப்பெடுக்கவைக்கும் நிலையை உருவாக்கவே அது கேரள அரசுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலானது. எனினும் தமிழக அரசின் நிலைப்பாடு வேறாக இருந்தது. பெய்து கொண்டிருக்கும் மழைநீரை சேமித்துவைப்பதன் மூலம் 2019 இன் கொடைகாலத்தை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும் என்ற கணிப்பு நிலவிவந்தது தமிழ்நாட்டில். இதனை அவதானித்த மத்திய அரசு, இருமாநிலங்களும் பேசி சுமூகமான முடிவுக்கு வருமாறு கூறியது. மேலும் இதுகுறித்த வழக்கும் உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது.
கேரள அரசானது திருவிதாங்கூர் ஒப்பந்தமான காலத்தினால் பழமையானது எனவும், தற்போதைய நிலையில் கேரளாவின் தேவைகள் மாறியுள்ளதாகவும் கூறிவருகிறது. தமிழக அரசுடன் புதியதோர் ஒப்பந்தம் செய்யவும் முயற்சித்து வருகிறது. ஆனால் தமிழக அரசு அதற்கு தொடர்ந்து மறுப்பு தெரிவித்த வண்ணம் இருக்கிறது. ஆட்சிகள் மாறுந்தோறும், காலநிலை தன் கருணையை மறக்குந்தோறும் முல்லைப்பெரியாறு அணை ஒரு சர்ச்சைக்குரிய அணையாகவே இருந்து வரும்.