உலகில் தொன்மையான இடங்களில் விடை கிடைக்காத பல மர்ம இடங்கள் இன்னமும் அதிகமாகவே காணப்படுகின்றன. அதில் மைல்கணக்கில் நீண்டு வரையப்பட்ட ஓவியங்கள் ஏன், எதனால் வரையப்பட்டுள்ளது என இன்றளவும் தெரியவில்லை. அந்த ஓவியம் அமையத்துள்ள மர்ம இடம் தான் நாஸ்க்கா இன மக்களின் வாழ்விடமான பெரு. இங்கு வரைபட்டுள்ள ஓவியங்கள் ‘நாஸ்க்கா’ கோடுகள் என அழைக்கப்படுகின்றது. இந்த கோட்டு ஓவியங்களானது எதற்காக வரையப்பட்டு என்பதற்கான சரியான விளக்கமும் ஆதாரமும் கண்டறியப்படாமையினால் இந்த மர்மத்திற்கு பலரும் பல்வேறுபட்ட விளக்கங்களை சொல்கின்றனர். உலகின் மர்மங்கள் நிறைந்த நாஸ்க்கா கோடுகள் பற்றிய சில தகவல்கள் அடங்கிய தொகுப்பே இது.
அகழ்வாய்வில் புரட்சி கண்ட இடம் என்று சொல்லப்படும் பெரு நாட்டின் தென்கிழக்கே 200 மைல் தொலைவில் அமைந்துள்ள இடம் தான் நாஸ்க்கா. ரியோ கிராண்ட் டி நஸ்க்கா (Rio Grande de Nazca) என்ற நதிக்கரை நாகரீகத்தை சேர்ந்த மக்கள் நாஸ்க்கா இன மக்கள் உலகின் எந்த பகுதிகளிலும் இல்லாத வினோதமான உடை, கைவினை பொருட்கள் மற்றும் தரையில் வரையப்படும் பெரிய அளவிலான ஓவியங்கள் அதாவது Geoglyphs என்ற ஓவியங்களை வரைவதில் சிறந்து விளங்கியுள்ளனர் என்றும் இந்த நாஸ்க்கா இன மக்கள் காடுகளை பெருமளவில் அழித்து வாழ்ந்ததால் பின்னாட்களில் ஏற்பட்ட வெள்ளத்தினால் அழிந்து போனதாகவும் வரலாற்றுக் குறிப்புகள் சொல்கின்றன.
தொல்பொருள் ஆய்வாளர்கள் 1926ஆம் ஆண்டில் பல கிலோமீட்டர்கள் நீண்டு வரையப்பட்ட இக்கோடுகளை ஆராய்ச்சி செய்த பின் இதற்கு நாஸ்க்கா கோடுகள் எனப்பெயரிட்டனர். இக்கோடுகளின் நீளம் சுமார் 30 கிலோமீட்டர்கள் ஆகும். பின்னாட்களில் 1930 ஆம் ஆண்டில் பெரு நாட்டின் வானூர்திப் படையினர் இப்பகுதியனை வான்பரப்பிலிருந்து பார்த்த போது ஆச்சர்யத்தில் அதிர்ந்து போயியுள்ளனர். காரணம் அந்த கோடுகள் அனைத்தும் பல்வேறு உருவங்களில் வரையப்பட்ட ஓவிங்களாக இருந்துள்ளன. வண்ணத்து பூச்சி, தேரை, குரங்கு, பறவை, மற்றும் திமிங்கிலம் போன்ற உருவங்கள் அதில் காணப்பட்டுள்ளன. அப்போது தான் இவைகள் சாதாரணக் கோடுகள் இல்லை இதில் பல மர்மங்கள் ஒளிந்துள்ளதை உலகம் அறிந்துகொண்டுள்ளது.
வானில் இருந்து பார்த்தால் மட்டுமே தெளிவாகத் தெரியும் படி வரையப்பட்டுள்ள இந்த ஓவியங்கள் 2000 ஆண்டுகளுக்கு முன்பாக வரையப்பட்டது எப்படி சாத்தியம் என இன்றும் பல ஆய்வாளர்கள் விளக்கம் இன்றி குழப்பமுற்றுள்ளனர். 300 க்கும் மேற்பட்ட இந்த ஓவியங்கள் தரையில் உள்ள பாறைகளை நகர்த்தி, நிலங்களை தோண்டி சமமான அளவில் வரையப்பட்டுள்ளது. பெரு நாட்டின் இந்த நாஸ்க்காப் பகுதியில் வருடத்திற்கு வெறும் 20 நிமிடம் மட்டுமே மழை பெறும் நிலமாக இது காணப்படுவதால் பாறைகளும், நிலமும் மங்கிய நிறத்தில் இத்தனை வருடங்கள் அழியாமல் மறையாமல் காணப்படுகின்றது என்றும் ஆய்வாளர்கள் சொல்கின்றனர். இவ்வகையான கோடுகளினால் உருவம் வரையப்பட்ட ஓவியங்கள் உலகின் வேறு இந்தப் பகுதிகளிலும் இல்லை என்பது பெரு நாடு மெச்சிக் கொள்ளவேண்டிய சிறப்புகளில் ஒன்றாகும்.
உலகின் பல ஆராய்ச்சியாளர் பெரு நாட்டில் உள்ள இக்கோடுகளை ஆராய்ச்சிசெய்து பல அறிவியல் கருத்துக்கள் சொன்னாலும், உலக புகழ் பெற்ற National Geographic Society யைச் சேர்ந்த அறிஞர் Johan Reinhard என்பவர் இக்கோடுகளை புவியியலோ அல்லது வானியல் தொடர்பு கொண்ட கோடுகள் அல்ல அதற்கு மாறாக தண்ணீர், விளைச்சல் சார்ந்த கோடுகள் என்று தன்னுடைய ‘The Nasca Lines: A New Perspective on their Origin and Meanings’ என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். அதன் பின்னர் அப்பகுதியை ஆராய்ச்சி செய்த ஆய்வாளர்களுக்கு இன்னும் நிறைய மர்மனான ஆச்சரியங்களை கொடுத்துள்ளது பெரு நாட்டின் இந்த நாஸ்க்கா கிராமம்.
பின்னாட்களில் இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு பல புதிய தகவல்களையும் புதிய மர்ம இடங்களையும் ஆய்வாளர்கள் உலகுக்கு அறியப்படுத்தினாலும் இந்த நாஸ்க்கா கோடுகளின் மர்மத்திற்கான முழுமையான விளக்கம் எவராலும் இன்றளவும் சொல்லப்படவில்லை. இக்கோடுகள் ஏன், எதற்காக, அமைக்கப்பட்டது என்ற கேள்விக்கான விடை ஆய்வாளர்களால் காலப்போக்கில் கண்டறியப்படலாம் என நம்பி இருப்பதே நிதர்சனமான உண்மை!