உங்கள் நண்பர்களை விட வித்தியாசமான கண்ணோட்டத்தை நீங்கள் கொண்டிருந்த நிகழ்வு கடைசியாக எப்போது நடந்தது என்று நினைவுள்ளதா? வேறொருவரின் கலாச்சாரத்தைப் பற்றி நீங்கள் கடைசியாக கற்றுக்கொண்டது எப்போது என்று நினைவுள்ளதா? இவ்வாறு ஒரே குழுவினரிடையே காணப்படும் வேறுபாடுகளே அவர்கள் சார்ந்த சமூகத்தின் பன்முகத்தன்மை எனப்படும்.
உலகின் உயிர்ப்புக்கு ஆணிவேராக விளங்குவது அதன் பன்முகத்தன்மை (diversity) ஆகும். மனிதர்களுள் பன்முகத்தன்மை என்பது வெவ்வேறு இன, மத,சமூக,பொருளாதார மற்றும் கலாச்சார பின்னணிகள் மற்றும் வேறுபட்ட வாழ்க்கை முறைகள், அனுபவம் மற்றும் ஆர்வங்கள் கொண்ட மக்களைக் கொண்டிருப்பதைக் குறிக்கிறது. அதாவது வெவ்வேறு விடயங்களை பிரதிநிதித்துவப்படுத்தப்படும் வேறுபட்ட கண்ணோட்டம் கொண்ட தனிநபர்களை கொண்ட குழு எனக்கொள்ளலாம்.
இவ்வாறான வேறுபாடுகளை கொண்ட சமூகத்தில் ஏற்படும் சிக்கல்களை தவிர்ப்பதுடன் அன்பை பாராட்டும் நோக்கில் , குறிப்பாக கல்வி நிறுவனங்கள் மற்றும் பொது மக்கள் சகிப்புத்தன்மையை சமூகத்தின் பிரதானமாக பார்க்க வேண்டும் என்ற குறிக்கோளுடன், ஐநா பொதுச் சபையால் 1995 ஆம் ஆண்டு சகிப்புத்தன்மைக்கான ஆண்டாக அறிவிக்கப்பட்டது. அதன்பின்1996 ஆம் ஆண்டில் ஐக்கியநாடுகள் பொதுச் சபை (தீர்மானம் 51/95) UN உறுப்பு நாடுகளை நவம்பர் 16 அன்று சகிப்புத்தன்மைக்கான சர்வதேச தினத்தைக் கடைப்பிடிக்க அழைப்பு விடுத்தது. அன்றிலிருந்து உலக சகிப்புத்தன்மை தினம் யுனெஸ்கோ அமைப்பினால் ஆண்டுதோறும் நவம்பர் 16 ம் திகதி தனிமனித, சமூக, கலாசார பன்முகத்துவத்தை சகிக்கும் , ஏற்கும் , மதிக்கும் , பாராட்டும் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகின்றது.
மனிதகுலம் வாழ்வதற்குத் தேவையான அன்பு, பரிவு, ஒற்றுமை ஆகிய பல உணர்வுகளுக்கு அடிப்படையாக சகிப்புத்தன்மை நம்மிடையே இருக்க வேண்டும் என்பதையும் அவ்வாறு இல்லாமல் போவதால் ஏற்படும் எதிர்மறை விளைவுகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்த தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. யுனெஸ்கோவின் சகிப்புத்தன்மை குறித்த கொள்கை பிரகடனத்தின் படி, ”சகிப்புத்தன்மை” என்பது உலக கலாச்சாரங்களின் செழுமையான பன்முகத்தன்மை, நமது கருத்து வெளிப்பாட்டின் வழிமுறைகள் மற்றும் மனித வாழ்க்கை முறைகளை மதிப்பது, ஏற்றுக்கொள்வது மற்றும் பாராட்டுவது ஆகும். இது அறிவு, வெளிப்படைத்தன்மை, கருத்துசுதந்திரம் ,தொடர்பாடல், மனசாட்சி மற்றும் நம்பிக்கை ஆகியவற்றால் கட்டியெழுப்பப்படுகிறது .
யுனெஸ்கோ-மதன்ஜீத் சிங் பரிசு
1995 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் சபையின் சகிப்புத்தன்மை ஆண்டு மற்றும் மகாத்மா காந்தியின் 125 வது பிறந்த நாள் ஆண்டினை குறிக்கும் வகையில், யுனெஸ்கோ சகிப்புத்தன்மை மற்றும் அகிம்சையை ஊக்குவிப்பதற்காக ஒரு பரிசை அறிமுகப்படுத்தியது. சகிப்புத்தன்மை மற்றும் அகிம்சையை மேம்படுத்துவதற்கான யுனெஸ்கோ-மதன்ஜீத் சிங் பரிசு, சகிப்புத்தன்மை மற்றும் அகிம்சையின் உணர்வை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட அறிவியல், கலை, கலாச்சார அல்லது தகவல் தொடர்புத் துறைகளில் குறிப்பிடத்தக்க செயல்பாடுகளுக்கு வெகுமதி அளிக்கிறது. “அமைதி தோல்வியடையக் கூடாது என்றால் அது மனிதகுலத்தின் அறிவுசார் மற்றும் தார்மீக ஒற்றுமையின் அடிப்படையில் நிறுவப்பட வேண்டும்”; எனும் யுனெஸ்கோவின் அடிப்படை எண்ணக்கருவுடன் இப்பரிசு தோற்றம் பெற்றது.
இந்த பரிசு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை சர்வதேச சகிப்புத்தன்மை தினமான நவம்பர் 16 அன்று வழங்கப்படுகிறது. சகிப்புத்தன்மை மற்றும் அகிம்சைக்கு குறிப்பாக தகுதியான மற்றும் பயனுள்ள முறையில் பங்களித்த நிறுவனங்கள், நிறுவனங்கள் அல்லது நபர்களுக்கு பரிசு வழங்கப்படும். யுனெஸ்கோவின் நல்லெண்ணத்தூதுவர், இந்தியக் கலைஞர், எழுத்தாளர் மதன்ஜீத் சிங்கின் பெயரைக் இவ்விருது கொண்டுள்ளது.
சகிப்புத்தன்மை என்பது வேற்றுமையில் ஒற்றுமை (Harmony in difference) எனும் அழகிய கருப்பொருளை கொண்டதாகும். சகிப்புத்தன்மை ஒரு தனிமனித கடமை மட்டுமல்ல இது ஒரு நாட்டின்அரசியல் மற்றும் சட்ட தேவையும் ஆகும். இது மனிதரிடையே நிலவும் விரோதம் , இனவெறி , ஜாதிவெறி ,குரோதம் போன்றவற்றை களைந்து அன்பையும் ஒற்றுமையையும் பரப்ப உதவும்.
சகிப்புத்தன்மை என்பது பிறரின் வேறுபாடுகளுக்கு அலட்சியமாய் நடந்துகொள்வது அல்ல என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். மற்றவர்களின் கருத்துக்களை இகழ்வது அல்லது நிராகரிப்பது சகிப்புத்தன்மை மனப்பான்மை அல்ல. சகிப்புத்தன்மை என்பது அதே மதிப்புகளை நாம் பகிர்ந்து கொள்ளாவிட்டாலும் கூட பரஸ்பர மரியாதையையும், பரஸ்பர புரிதலையும் குறிக்கிறது.
எது எப்படியிருந்தாலும், ஒருவர் மற்றவர்களின் உரிமைகளை எந்த வகையிலும் மீற முடியாது. உதாரணமாக, ஒருவருக்கு இன மேலாதிக்கம் மற்றும் மற்றவர்களை அழிப்பதை நோக்கமாகக் கொண்ட எண்ணங்கள் செயற்பாடுகள் இருந்தால், அத்தகைய நடத்தை பொறுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று அர்த்தமல்ல.
இன்றைய காலகட்டத்தில் சகிப்புத்தன்மையின் முக்கியத்துவம்
இன்றைய காலகட்டத்தில் வேலைவாய்ப்பு நோக்கங்களுக்காக பெரும்பாலானோர் தத்தம் வாழ்விடங்களை விட்டு நகர்ப்புறங்களுக்கு நகர்ந்துள்ளனர். இவ்வாறு வேறுபட்ட சமூகங்களை சேர்ந்த மக்கள் ஓரிடத்தில் வாழும் போது ஒருவருக்கொருவர் ஆதரவாக வாழ வேண்டியது அவசியமாகிறது. இவ்வாறான சந்தர்ப்பங்களில் சகிப்புத்தன்மை மிக அவசியமாகும். யுனெஸ்கோ அமைப்பானது தனது உறுப்பு நாடுகளின் கல்வி மற்றும் மனித உரிமைகளுடன் ஜனநாயகம், குடியுரிமை, கருத்துச் சுதந்திரம், சமூக பொருளாதார கலாசார வளர்ச்சிகளில் இளம் பெண்கள் மற்றும் ஆண்களின் பிரதிநிதித்துவம் மற்றும் முடிவெடுக்கும் செயல்முறைகளில் அவர்களின் தீவிர பங்கேற்பு போன்ற விடயங்களில் கவனம் செலுத்தி அதற்கான செயல்திட்டங்களையும் ஏற்பாடு செய்கிறது.
சகிப்புத்தன்மை அமைதியான சகவாழ்வுடன் நமது தனிப்பட்ட ஆளுமை வளர்ச்சிக்கும் உதவும். உலகெங்கிலும் உள்ள பல்வேறு சமூக கலாசார விழுமியங்களை பற்றிய அறிவு உலகம் மீதான எமது பார்வையை மேலும் விரிவாக்கும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், சகிப்புத்தன்மையின்மை பயம் மற்றும் அலட்சியப்போக்கை விளைவாக்குகின்றது . புதிய கருத்துக்கள் மற்றும் சிந்தனை வழிகளைப் பற்றி அறிய ஆர்வமும் தயார்நிலையும் நாம் மிகவும் சகிப்புத்தன்மையுடன் இருக்க உதவும். புதிய கலாச்சாரங்களை மொழிகளை கொண்டவர்களுடன் நாம் பழகும்போது நம்மிடையே காணப்படும் அறியாமையும் மொழி குறித்த பயமும் இல்லாமல் போகின்றது . உலகெங்கிலும் உள்ள வேறுபட்ட பல சமூகங்களுடன் தொடர்பு வைத்திருப்பவர்கள் திறந்த மனப்பான்மையைக் கொண்டுள்ளனர். இது இரு தரப்பினரும் ஒருவரையொருவர் நன்கு தெரிந்துகொள்ளவும், இறுதியில் ஒருவருக்கொருவர் வாழ்க்கை முறையைப் புரிந்துகொள்ளவும் உதவுகிறது.
நீங்கள் சொல்வது சரிதான் என்று நீங்கள் உறுதியாக நம்பினாலும், மற்றவர்களின் கருத்துக்களுக்கு மேல் உங்கள் கருத்துக்களை வைக்காதீர்கள். சகிப்புத்தன்மையுள்ள நபராக இருப்பது எளிதல்ல. உங்கள் சொந்த கருத்துக்களில் விடாப்பிடியாய் இருப்பது பரவாயில்லை, ஆனால் உங்கள் எண்ணங்களை மதிப்பிடுவது அர்த்தமுள்ளதாக இருக்கும், குறிப்பாக அவை மற்றவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தினால், ஒவ்வொருவருக்கும் அவரவர் கருத்துகள் மற்றும் எண்ணங்கள் உள்ளன என்பதையும், அவை மதிக்கப்பட வேண்டும் என்பதையும் தெளிவாகக் கொள்ள வேண்டும். நாம் அமைதியான சமூகத்தில் வாழ விரும்பினால், சகிப்புத்தன்மை அவசியம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
சகிப்புத்தன்மையைப் பற்றி குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுப்பது அவர்களுக்கு கொடுக்கக்கூடிய மிகச் சிறந்த பரிசாகும். குழந்தைகள் வெறுப்பு மற்றும் சந்தேக உணர்வுகளுடன் வளரக்கூடாது. மற்றவர்கள் மீது வெறுப்புடனும் பொறாமையுடனும் வளரும் குழந்தைகள் மகிழ்ச்சியற்றவர்களாக மாறுகிறார்கள். மேலும் சில கருத்துக்களை திணித்து வளர்க்கப்படும் குழந்தைகள் சுதந்திரமாக சிந்திக்காதவர்களாக உருவாகுவார்கள். இது அவர்களின் எதிர்காலத்தை பெருமளவில் பாதிக்கும். இளம்பிராயத்தில் சிறந்த வாழ்க்கை விழுமியங்களை கற்றுக்கொள்வது அவர்களின் வாழ்க்கை முழுவதட்குமான மகிழ்ச்சிக்கான விதை ஆகும். குழந்தைகள் அன்பையும் சகிப்புத்தன்மையையும் சிறுவயது முதலே கற்று வளர்ந்தால் அவர்கள் வளர்ந்து ஆளுமை மிக்கவர்களாக உயரிய குணங்கள் கொண்டவர்களாக , நிறைவான மற்றும் அமைதியான வாழ்க்கையை வாழுவர் .