மொழி என்பது மனிதர்களுக்கிடையில் மனதின் எண்ணங்களைப் பரிமாறிக்கொள்வதற்கான மிகச் சக்திவாய்ந்த ஒரு ஊடகம்.
சமிக்கை மூலமாகத் தவறாக ஊடுகடத்தப்படக்கூடிய தகவல்களை மனிதர் நாம் மொழி மூலமாக சரியான அர்த்தப்படுத்திக்கொண்டோம்.
ஆனால், உலகமே நாடக மேடை, நாமெல்லாம் நடிகர்கள் என்று ஷேக்ஸ்பியர் சொன்னதை சரியாக நிரூபிக்கும் எம்மிற் பலர், மனதில் நினைப்பவற்றை மறைத்து, பேசும் வாய் மொழி மூலம் பாசாங்கினைப் பரப்பும் கலை கைவரப்பெற்றவர்களாக மாறியுள்ளோம்.
இதனால், பேசும் வார்த்தைகள் சொல்வனதான் நிஜமான அர்த்தங்கள் என்று நாம் எண்ணினால் அதைவிட முட்டாள்தனம் வேறேதும் கிடையாது.
மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று நாம் அறியமுடிந்தால் எவ்வளவு நல்லது என்று ஏங்கிக்கொள்பவரா நீங்கள்?
அதற்க்கும் வழியுள்ளது.
அந்த மாயாஜாலத்தின் பெயர் ‘உடல்மொழி’ (Body Language) !
உடல்மொழி என்பது சொல்லிலாத் தகவல்தொடர்பு வகையாகும் என்கிறது தமிழ் விக்கிப்பீடியா.
ஒருவரின் வார்த்தைகள் எமக்கு பொய் சொல்லலாம் ; நாம் நினைப்பவற்றை மூடி மறைக்கலாம். ஆனால் எவ்வளவுதான் மறைத்தாலும் நம் உடல்மொழி மட்டும் பொய் சொல்லாது.
பொதுவாக நாம் பிறரிடம் தொடர்பு கொள்ளும்போது
1) நாம் பயன்படுத்தும் வார்த்தைகள் – 7%
2) நம் குரல் (தொனி, குரலசைவுகள்) – 38%
3) நம் உடல்மொழி – 55%
*மானிடவியலாளர்களின் தொகுப்பு.
எமது குரல் மூலம் எம்மைப் பிறர் புரிந்து கொள்வதும், குரல் மூலம் நாம் பிறருக்கு உணர்த்துவதும் சாதாரணமான தொடர்பாடல்.
55% உடல்மொழிகள் மூலம் தொடர்புகளை மேற்கொண்டாலும், அதில் பெரும்பாலும் நாம் கவனம் செலுத்துவதே இல்லை. அதுசரி, பேசும் வார்த்தைகளிலேயே நாம் பெரிதாக அக்கறையில்லாமல் இருக்கும்போது உடல்மொழியை எங்கே கவனிக்கப்போகிறோம்?
சில நேரங்களில் நாம் நம் உடல் அசைவைக் கவனிக்க மறக்கலாம், ஆனால் கேட்பவருக்கு உடல்மொழி பற்றியஅறிவு இருந்தால் நம்மைப் பற்றி அவருக்கு நம் பேச்சை விட நமது உடல்மொழி இலகுவாக புரிய வைத்துவிடும்.
நாம் அறியாமலேயே எமது உடல் எம்மைப்பற்றிய செய்திகளை வெளியுலகத்துக்கு அறிவித்துவிடுகிறது.
நாம் மிகவும் நேசிப்பவரின் தொலைபேசி அழைப்பு வருகையில் முகம் மலர்வதும், ஒரு குறுந்தகவல் செய்தி எமது செல்பேசி/கணினித் திரையில் மின்னும்போது எமது முகத்தில் ஆயிரம் வாட் ஒளிர்வு தெரிவதும் இப்படியான விடயங்கள் தான்.
அதைவிட, ஒருவர் சொல்லாமலே தொலைபேசியில் அவர் அலுவலக மேலதிகாரியுடன் பேசுகிறாரா, அல்லது மனைவியிடம் வாங்கிக்கட்டுகிறாரா, குழந்தையுடன் கொஞ்சுகிறாரா என்று அறிந்துகொள்ளும் விதமும் இவ்வாறு தான்.
இதோ, மானிடவியலாளர்கள் ஆராய்ந்து தொகுத்துள்ள சில பொதுவான உடல்மொழிகளும் அதன் விளக்கமும் –
- மூட்டுக்களில் கை வைத்திருத்தல் : ஆர்வத்தைக் குறிக்கிறது.
- இடுப்பில் கை வைத்திருத்தல் : பொறுமையற்ற நிலையை குறிக்கிறது.
- முதுகுக்குப் பின்புறம் கை கட்டியிருத்தல் : சுயக் கட்டுப்பாட்டைக் குறிக்கிறது.
- தலைக்குப் பின்புறம் கை கட்டியிருத்தல் : நம்பிக்கையாக இருக்கும் நிலையைக் குறிக்கிறது.
- நாற்காலியின் ஒரு கைப்பிடியின் மேல் ஒரு காலைப் போட்டு உட்கார்தல் : கவனமின்மையைக் குறிக்கிறது.
- குறிப்பிட்ட திசையில் பாதமும் கால்களும் வைத்திருத்தல் : நீங்கள் ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் அதிகமாக ஆர்வமுடன் இருப்பதை குறிக்கிறது.
- கை கட்டியிருத்தல் : பணிந்து போகும் தன்மையைக் குறிக்கிறது.
- நகத்தினை கடித்தல் : தயக்கம், நம்பிக்கையீனம், பாதுகாப்பின்மையை குறிக்கிறது.
- மூக்கினை வருடிக் கொண்டு இருத்தல் : சந்தேகத்தை குறிக்கிறது.
- கன்னத்தினைத் தேய்த்துக் கொண்டு இருத்தல் : முடிவெடுக்க போகும் தருணத்தை குறிக்கிறது.
- விரல்களால் தாளம் தட்டல் : பொறுமையின்மையைக் குறிக்கிறது.
- கன்னத்தில் கை வைத்துக் கொண்டு இருத்தல் : சிந்தனை செய்யும் நிலையைக் குறிக்கிறது.
- தலையினை அசைக்காமல் உற்று கவனித்தல் : அதிக கவனம் செலுத்துவதை குறிக்கும்.
- காதினை வருடி கொண்டு இருத்தல் : இருமனதுடன் சந்தேக உணர்வுடன் இருக்கும் உணர்வு.
- பின் தலையை சொறிதல் : நம்பிக்கை குறைகிறது என்று அர்த்தம்.
- விரல்களை முகம் அருகில் கோர்த்து கொண்டு இருத்தல் : அதிகாரம் செலுத்துவதை குறிக்கும்.
மேற்கோள்கள் சில – கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிப்பீடியாவிலிருந்து பெறப்பட்டவை.
இனிமேலும் நீங்கள் ஒரு நண்பர் வட்டத்திலோ, உறவுகள் மத்தியிலோ அல்லது உங்கள் அலுவலக சகாக்கள்/ஊழியர்க்கிடையில் உரையாடும்போது, அவர்களில் யாராவது அல்லது சிலர், தலையை சொறிந்துகொண்டு இருந்தாலோ, வேறு வேறு திசைகளில் பார்த்துக்கொண்டிருந்தாலோ, தங்கள் செல்பேசிகளை நோண்ட ஆரம்பித்திருந்தாலோ, கொட்டாவிகளைப் பறக்கவிட ஆரம்பித்தாலோ அந்த இடத்தில் உங்கள் உரையை நிறுத்திக்கொள்ளப் பாருங்கள், அல்லது கூட்டத்தைக் கலைத்துவிடுங்கள்..
இதே போல் இன்னும் சில உடல்மொழிகளை வைத்து எதிரே உள்ளவர் பொய் கூறுகிறார் என்பதையும் கண்டறியலாம் என்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
- முறைத்துப் பார்த்தல்
- ஆடைகளை தேவையில்லாமல் சரி செய்தல்
- அங்குமிங்கும் உடலசைத்தல்
- கண்களை பார்த்து பேசாமல் தவிர்த்தல்
- கண்களை அடிக்கடி தேய்த்தல்
- கண்களை அதிகம் சிமிட்டுதல்
இவ்வாறு பல வழிகளில் பொய் கூறுபவரைக் கண்டுபிடித்து விடலாம்.
கவனித்துப் பார்த்தால் உங்களுக்கும் புரியும்.
இப்போது தானாகவே இவ்வாறு முன்பு நடந்துகொண்டீர்களா என்று சற்று சிந்தித்துப் பார்க்கிறீர்கள் தானே?
இது தான் மனிதவியல்பு!
இதை நீங்கள் வாசித்துக்கொண்டிருக்கும்போது கூட உங்கள் உடல்மொழிகள் பலவிதமாக மாறிக்கொண்டிருந்திருக்கும்.
எதிரே உங்களை அவதானிப்பவர் உங்களை வாசித்துக்கொண்டிருப்பார்.
உடல்மொழி என்பது ஒரு மனிதனின் அந்த நேரத்துக்குரிய மனோபாவம் அல்லது மனநிலை ஆகியவற்றை அறிந்துகொள்ள உதவக்கூடிய வகையில் முக்கியமான குறிப்புகளை வழங்கலாம். எடுத்துக்காட்டுக்கு, அது முரட்டுத்தனம், சலிப்பு, தளர்வான நிலை, போன்றவற்றையும் இன்னும் பல மனநிலைகளையும் உணர்த்தலாம்.
நடை, உடை, பாவனை என்று பொதுவாக சொல்லப்படுவனவற்றில் உடல்மொழி என்ற முக்கியமான கூறை வைத்து மனிதர்களை எடைபோடும் திறன் வாய்த்தவர்கள் இந்தக் காலத்தில் துரிதமாக முன்னேறும் கலை தெரிந்தவர்களாகிறார்கள்.
ஆனால், யாருக்குத் தெரியும்…
பேசும் மொழிகளில் உணர்வுகளின் பிரதிபலிப்பை மறைக்கத் தெரிந்ததுபோல, உடல்மொழிகளையும் மறைத்து நட(டி)க்கத் தெரிந்த தேர்ந்த நடிகர்கள் எம்மத்தியில் எத்தனை எத்தனை பேரோ?