Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

கதை சொல்லிகள்

வேப்பமரத்தின் நிழலில் அமர்ந்து  கிராமத்து அத்தை ,மந்திரவாதி கூடுவிட்டு கூடுபாயும்  வித்தையை விவரிப்பார்.அல்லது அரக்கனின் உயிரை எடுக்க ஏழு கடல் தாண்டி ஏழுமலை தாண்டி கிளியின் தலையை திருகி பாவம், அநியாயமாக கொலை செய்வார்.

படம் – narrativeinart.files.wordpress.com

என் பெரிய தாத்தாவும் ஒரு கதை சொல்லி. கிராமத்தின் காளியம்மன் கோயிலில் ராமாயண, மகாபாரத கதைகளை “……நேத்து எங்க விட்டேன்?” என தொடங்கி ராமன் , சீதை, லெட்சுமணனோடு வனவாசம் போனான் என்று இடையிடையே  பாட்டோடு கதைபோகும். ஊம்… போட ஒருவர் இருப்பார் ஊம் சத்தம் குறையத்தொடங்கிவிட்டால் கதை அடுத்த நாள் இரவு தொடங்கும். ராமருக்கு பட்டாபிஷேகம் அன்றைக்கு பொருமாள் கோயிலில் பொங்கல் வைத்து தாத்தாவுக்கு வேட்டி, துண்டு கிடைக்கும்.

குழந்தைகளுக்கு சோறு ஊட்ட, தூங்கவைக்க அம்மாமார் கதை சொல்வார்கள். கோடை விடுமுறைக்கு குழந்தைகள் ஊருக்கு செல்வதே தாத்தா, பாட்டிகளிடம் கதை கேட்கும் ஆர்வத்திலேதான். இன்றைக்கு கோடை விடுமுறையில் ஓவியப்பயிற்சி, யோகா, கணிணி பயிற்சி என விடுமுறை நாட்களிலும் குழந்தைகளின் மூளையை நிரப்புவதிலேயே குறியாக இருக்கிறார்கள் பொற்றோர்கள் .

படம் – tamil.thehindu.com

1980களில் தான் பார்த்த திரைப்படத்தைகூட வரிவரியாக கதை சொல்வார்கள். கிளைமாக்ஸ் மட்டும் சொல்ல வேண்டாம் படம் பாத்துகிறேன் என சொல்லும் நண்பர்கள்….  இப்படி தமிழ் சமூகம் முழுவதும் கதைகள் நிறைந்திருந்த காலம் இருந்தது. இன்றைக்கு கதை சொல்லுவதும், கதை கேட்பதும் மிக மிக அரிதான நிகழ்வாக மாறிவிட்டது. இதன் தொடர்ச்சியாகவே சினிமாக்கள்  கதைகளற்ற சம்பங்களின் தொகுப்புக்களாக மாறிவிட்டது எனலாம்.

கதை கேட்பதால் என்ன கிடைத்துவிடப்போகிறது?

இன்றைய அவசர உலகத்தில் கதை சொல்லவோ, படிக்கவோ, முடிவதில்லை. ஆனால் குழந்தைகள் கேட்க ஆர்வத்தோடு இருக்கிறார்கள்.  தனியார், அரசு பள்ளிகள்  குழந்தைகளை முதல் வகுப்பிலிருந்தே மார்க் வாங்கும் இயந்திரங்களாக  உருவாக்குகிறார்கள். யோகா வகுப்பு, ஜெர்மன்மொழி கற்றல், விளையாட்டு என வகுப்புகள் இருந்தாலும் கதைசொல்ல வகுப்புகள் இல்லை.

கதை கேட்பதால் என்ன கிடைத்தவிடப்போகிறது? ஒரு ஊர்ல ஒருராஜாவாம்… என்று சொல்ல துவங்கும் போதே நம்  முன்னால் காட்சி பூர்வமாக சிம்மாசனத்தில் ராஜா உட்கார்ந்து விடுவார். இப்படி காட்சி பூர்வமாக படிக்கிற பாடங்களும் மனதில் பதிய துவங்குகிறபோது  குழந்தைகளுக்கு படிக்கும் ஆர்வமும், கற்பனை திறனும் அதிகரிக்கும் என்பதே உண்மை.

படம் – technologybubbles.files.wordpress.com

கதைகள் வெறும் கற்பனைகள்தானே என் நினைப்பவர்கள்  எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன்  சொல்லும் கருத்தை அறிந்துகொள்ளுங்கள் “…கதை என்பதை வெறும் கற்பனை என்று நினைத்திருக்கிறோம், அது தவறு, கதை என்பது நமது ஞாபகங்களின் சேமிப்புக்கூடம், மரபின் தொடர்ச்சி, கதைகள் நம் சமூகத்தின் மனசாட்சி, எல்லா கதைகளும் கேட்பவரை களிப்பூட்டுவதுடன் படிப்பினை ஒன்றையும் கற்றுதருகின்றன” என்கிறார்.

பல கதைகளை கொண்ட நாவல்கள், சிறுகதைகள், ஒருபக்க கதைகள், குட்டிகதைகள், என கதை வடிவம் மாறிமாறி இன்றைக்கு 10 விநாடிக் கதைகள் வரை சுருங்கிப்போனது.

மேடைப்பேச்சாளர்கள், எழுத்தாளர்கள், அரசியல்வாதிகள் தங்கள் சொற்பொழிவுக்கு இடையே தங்கள் பேச்சின் கருத்தை வலியுறுத்த குட்டிக்கதைகளை சொல்கிறார்கள். மறைந்த முதல்வர் ஜெயலலிதா, நடிகர்களில் ரஜினிகாந்த், போன்றவர்கள் தங்களின் பேச்சின் ஊடாக கதைகளை சொல்வதை கேட்டிருப்பீர்கள்.

கதைகளின் துவக்கமும் கதை சொல்லிகளும்.

படம் – topyaps.com

கதை சொல்லல் வழக்கம், அக்காலத்தில் நிகழ்ந்த வெற்றி, தோல்வியின் காரணங்களை விளக்குவதன் பொருட்டுத் தோன்றியிருக்கலாம் என நம்பப்படுகிறது. அல்லது அச்சப்படும் நேரத்தில் பிறரை அமைதிப்படுத்தவோ, சந்தேகங்களைத் தீர்க்கவோ பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட உத்தியாகவும் இருக்கலாம்.

இந்தியாவில் தொனாலிராமன் கதையும், அரபு நாடுகளில் ஈசாப்கதைகள், முல்லா கதைகள் போன்றனவும் வாய்மொழிக்கதைகளாக உலகெங்கும்பரவின. இக்கதைகள் ஒரு நியதியை, கருத்தை, விழிப்புணர்வை, வாழ்க்கையின் யதார்த்தத்தை உணர்த்துபவையாக இருக்கும்.

போகோ, நிக் என குழந்தைகள் விரும்பி பார்க்கிற தொலைக்காட்சி  நிகழ்ச்சிகள் அதீத கற்பனையும், சாகஸமும், வன்முறையும் நிறைந்ததாகவே இருக்கின்றன.

அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளில் தொழில் முறை கதை சொல்லிகள் இருக்கிறார்கள் . வங்காளத்தில் பாவுல் எனும் கதை சொல்லிகள் ஊர் ஊராகப்போய் இசையோடு கதை சொல்லி வருகிறார்கள்.

ரகூகோ (உதிரும் வார்த்தைகள்)என்ற  பெயரில் ஜப்பானில் கதை சொல்லுதல் ஒரு கலையாகவே இருக்கிறது. குரல் ஏற்ற இறக்கத்தோடு , மாறிமாறிவரும் முகபாவங்களோடு ஒரு நடிகரைப்போல கதையை சொல்லும் வழக்கம் ஜப்பானில் உள்ளது.

படம் – keepingithuman.com

கதை சொல்லுவதை தொழில்முறையாகவே அமெரிக்காவில் கற்றுத்தருகிறார்கள். பயிலரங்குகள், முகாம்கள் மூலமாக கதை சொல்லிகளை உருவாக்குகிறார்கள். இவர்கள் படங்கள், பொம்மைகளை கொண்டு பள்ளிக்குழந்தைகளுக்கு கதைகள் சொல்கிறார்கள். பொது இடங்களில் மக்கள் ரசிக்க கதை சொல்கிறார்கள்.

உலக கதை சொல்லல் தினம்

கதை-சொல்லல் தினம்’, முதன்முதலில் 1991இல் ஸ்வீடன் நாட்டில் தோன்றியது. சில ஆண்டுகளிலேயே கைவிடப்பட்ட இந்த தினம், பின்னர் மேற்கு ஆஸ்திரேலியாவில் வசித்த ‘கதை சொல்லிகள்’ மூலமாக 1997இல், மீண்டும் உயிர்பெற்றது. இக்காலக்கட்டத்தில், தென் அமெரிக்க நாடுகள், மெக்சிகோ மற்றும் அதைச் சுற்றியுள்ள நாடுகளும்  இத்தினத்தை தேசிய அளவில் கொண்டாடுகின்றன. 2001இல், ‘ஸ்காண்டினேவிய கதை-சொல்லல் இணைய அமைப்பு’ [Scandinavian storytelling web-network] “Ratatosk” என்னும் பெயரில் தொடங்கப்பட்டது.

இந்த அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் மார்ச்சு மாதம் 20ஆம் நாளை கதைசொல்லிகள் தினமாக கொண்டாடுகிறது.

இந்நாளில் உலகிலுள்ள ‘கதை சொல்லிகள்’ அனைவரும் ஒன்றிணைந்து பல ‘கதை சொல்லல்’ சார்ந்த நிகழ்வுகளை மக்களிடையே நிகழ்த்தி, அவர்களை மகிழ்ச்சிப்படுத்துகிறார்கள்..

சமூக மாற்றத்தை குழந்தைகளிடம் இருந்து துவக்குவதே சரியாக இருக்கும். அந்த மாற்றத்தை உருவாக்கும் கருவிளில் ஒன்றாக கதைகள் இருக்கும். எனவே பொற்றோர்களே, ஆசிரியர்களே குழந்தைகளுக்கு கதை சொல்லுங்களேன்.

Related Articles