ஒரு வாசிப்பாளன், தான் வாசிப்பதை என்றுமே நிறுத்துவது இல்லை – ஆஸ்கர் வைல்ட் ஒரு நல்ல புத்தகம், சிறந்த வாசிப்பாளனை பல்வேறு கோணங்களில் பயணிக்க வைக்கின்றது, பல்வேறு வாழ்வினை வாழ வைக்கின்றது. அதனால் தான் ஒவ்வொரு மொழியிலும் சிறந்த நூல்களை மக்கள் கொண்டாடிக் கொண்டே இருக்கின்றார்கள். வருடங்கள் பல கடந்த பின்பும் கூட அந்த புத்தகங்கள் அனைவராலும் கொண்டாடப்பட்டுக் கொண்டே இருக்கின்றது. தீவிர இலக்கியங்கள் என்று இல்லாமல் இயல்பாய் அமையும் நாவல்களும், சுயசரிதைகளும், வரலாற்றுப் புத்தகங்களும், கவிதை புத்தகங்களும் வாசகர்களால் கொண்டாடப்படுவதை நாம் அறிவோம். அப்படியாய் நீங்கள் படிக்க வேண்டிய சில புத்தகங்கள்.
பொன்னியின் செல்வன் – கல்கி
அன்பில் அநிருத்தராயர் அவர்களுக்கு சுந்தரச் சோழர் அளித்த பட்டாயத்தின் அடிப்படையிலும் வரலாற்றுத் தரவுகளின் அடிப்படையிலும் எழுதப்பட்ட தமிழ் வரலாற்றுப் புதினம் இது. கதையின் முக்கிய கதாப்பாத்திரம் பொன்னியின் செல்வனான அருள்மொழி வர்மன் என்றாலும், கதையை நகர்த்திக் கொண்டு போவது, வாணர் குல வீரன் வல்லவரையன் வந்தியத்தேவன். சுந்தரச் சோழனிற்கு பின்பு, தஞ்சை அரியணையில் அமர்ந்து யார் சோழ மண்டலத்தை ஆளப்போகின்றார்கள் என்பது தான் கதை. ஆண்களுக்கு இக்கதையில் எத்தனை முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றதோ, அவ்வாறே இக்கதையில் வரும் பெண் மாந்தர்களும் வீரமிக்க கம்பீரமான பெண்களாக இருக்கின்றார்கள். பெரிய பிராட்டியார் தொடங்கி, இளைய பிராட்டி குந்தவை நாச்சியார், நந்தினி, பூங்குழலி வரை வீர சோழ மங்கைகளின் வாழ்வினையும் வீரத்தினையும் அறிவுக் கூர்மையினையும் பிரதிபலிக்கும் புதினம் இது. இதுவரை படிக்கவில்லை என்றால் நீங்கள் படிக்க வேண்டிய முக்கியமான நாவல்களில் இதுவும் ஒன்று.
சிவகாமியின் சபதம் – கல்கி
இதுவும் மற்றொரு வரலாற்றுப் புதினம். வாதாபியை தலைநகராகக் கொண்டிருந்த சாளுக்கிய மன்னன் புலிகேசி, காஞ்சி மண்ணின் கலைகளையும், கலைமகளான சிவகாமியினையும் காஞ்சியில் இருந்து கவர்ந்து செல்ல, சிவகாமியின் காதலனும், பல்லவ அரியணையில் அமரப்போகும் இளவரசனுமான நரசிம்மப் பல்லவன் எடுக்கும் முயற்சிகளும், இடையில் நிகழும் போர் சூழல்களும் கதையின் கரு. பல்லவ மண் சிலைகளுக்கு எவ்வாறு பெயர் பெற்றது என்பதற்கு மாமல்லபுரம் சாட்சி. அப்படி சாட்சியாய் நிற்கும் சிலைகளின் அழகும், வர்ணனையும், அதை வடிக்கும் தலைமைச் சிற்பி ஆயனார் அவர்களின் பணியையும் சிறப்பித்திருக்கும் இந்நூல். இந்நூலில் மிகவும் குறிப்பிட்டு சொல்லக்கூடிய மற்றொன்று நகர்புற வர்ணனையும், அரண்மனையின் வர்ணனையும் தான். இதுவும் வரலாற்று நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்ட ஒரு புதினமாகும். கல்கி வார இதழில் 12 வருடங்களாக தொடர்கதையாக எழுதப்பட்டு வந்தது.
பாரதி நினைவுகள் – யதுகிரி அம்மாள்
பாரதியினை பெரிய கண்களுடனும், முறுக்கு மீசையுடனும், வீரத்தினை ஊட்டும் சிறந்த கவிதைகளுடன் நினைவு கூறும் நமக்கு வேறொரு பாரதியை அறிமுகம் செய்து வைத்திருப்பார் யதுகிரி அம்மாள். சுதேசி பத்திரிக்கையின் ஆசிரியர் திரு. ஸ்ரீநிவாசாச்சாரி அவர்களின் புதல்வி யதுகிரி எழுதிய இந்த புத்தகத்தில் நடப்பவை எல்லாம், பிரிட்டிஷ் இந்தியாவின் காவல் கெடுபிடிகளுக்கு தப்பி பிரெஞ்சு இந்தியாவான புதுவையில் வாழ்ந்து கொண்டிருந்த காலம் ஆகும். செல்லம்மாள், பாரதியின் மகள்கள் தங்கம்மாள் மற்றும் சகுந்தலை ஆகியோருடனும் நடக்கும் சம்பாசனைகள் கொண்டு எழுதப்பட்ட புத்தகம். அதாவது வீட்டில் பாரதி எப்படி ஒரு கணவனாக, ஒரு தகப்பனாக, ஒரு ஆசானாக, ஒரு விளிம்பு நிலை கவிஞனாக வாழ்ந்தார் என்பதை அறிந்து கொள்ளலாம். அவருடைய ஒவ்வொரு கவிதையையும் யாருக்காக, எந்த ஒரு சூழலில் எப்படியாய் எழுதினார் என்பதையும் அறிந்து கொள்ளலாம். வீட்டிற்கு பருப்பு உடைக்க வரும் பெண் தொடங்கி, இரயிலில் பாட்டுப்பாடி பிச்சையெடுக்கும் பெண் குழந்தைவரை எப்படி பாரதிக்கு பாடல் தரும் உந்து சக்தியாக விளங்கினார்கள் என்பது இப்புத்தகத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம். வேறொரு பாரதியை அறிந்து கொள்ள இப்புத்தகம் உதவும்.
எரியும் பனிக்காடு – இரா.முருகவேள் (மூலம் பி.எச். டேனியல் அவர்களின் Red Tea)
இது சுதந்திரத்திற்கு முன்பான வரலாற்றை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்ட வரலாற்றுப் புதினம். உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு ஆங்கிலத்தில் பி.எச். டேனியல் அவர்கள் எழுத, தமிழில் இரா.முருகவேள் அவர்கள் மொழிபெயர்த்திருந்தார். ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் கங்காணி முறையினை பயன்படுத்தி எப்படி சமூகத்தில் தாழ்த்தப்பட்ட மக்களை அடிமைகளாக ஆனைமலைக் காட்டில், தேயிலை தோட்டங்களில் எப்படியாக சிறைபடுத்தினார்கள் என்பது தெரியும். மேலும், சாதியியல், பாலியல், மற்றும் உழைப்பு சார்ந்த சுரண்டல்களால் அன்றைய காலங்களில் மக்களின் வாழ்வு எப்படி சீர்குலைந்தது என்பதையும் அறிந்து கொள்ள முடியும். சில வருடங்களுக்கு முன்பாக இக்கதையினை தழுவி, தமிழ் பட இயக்குநர் பாலா அவர்களின் பரதேசி படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.
ஜிப்ஸி – இராஜூ முருகன்
தமிழில் குக்கூ, ஜோக்கர் படம் பார்த்த அனைத்து சினிமா இரசிகர்களுக்கும் பரிட்சயமான ஒருவர் இராஜூ முருகன். ஆனால் அவரை வாசகர்கள் கொண்டாடியது இப்படைப்பின் பின்பு தான். விகடன் வார இதழில் கட்டுரையாக வெளிவந்து கொண்டிருந்தது. தமிழ்நாட்டில் இருந்து காசி வரை பயணிக்கும் இவரின் பயணித்தில் இவர் காணும் நாடோடிகளின் வாழ்வியலை விளக்கும் கட்டுரைகள் இதில் இடம் பெற்றிருக்கின்றன. பரதேசிகளின் ஆன்மாதான் இந்த பாரதம் – இது தான் புத்தகத்தின் மையக் கருத்து. புத்தகத்தின் உள்ளே நூறு கேள்விகள், ஆயிரம் தேடல்கள், எண்ணற்ற மேற்கோள்கள். தெரெசா, புத்தர், வண்ணதாசன், கிரா, அய்யாக்கண்ணு, தஞ்சைப் பிரகாஷ், பத்மராஜன், மௌனி, விதோபா சிட்டல் (கன்னட மொழிக் கவிஞர்), பிரபாகரன் அதிகம் விரும்பிப்படித்த அலெக்ஸ் ஹேலியின் ஏழு தலைமுறைகள், வைக்கம் முஹமது பஷீர், ரஸ்தாபாரியின் பாப் மார்லி, ஆர்.டி. பர்மன், பெரியார், தமிழகத்தில் நாடோடிகள் – பக்தவத்சல பாரதி, அ.கா பெருமாள், பாபி ஹென்லைன், எட்வர்த்தோ கலியானோ, நுகர்வு எனும் பெரும் பசி – இராமச்சந்திர குஹா, தென்னிந்திய குலங்களும் குடிகளும் – எட்கர் தர்ஸ்டன், வறுகறி – பெருமாள் முருகன், புதுமைப்பித்தன்.. இன்னும் ஏராளமாய் கிளைப்பரப்பி வேர் விட்டுச் சென்று மனிதம் தேடித்திரியும் பயணங்களின் அடிப்படையில் எழுதப்பட்டது. வெகு விரைவில் இந்நூல் படமாக்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
மூவலூர் இராமாமிர்தம் வாழ்வும் பணியும் – பா.ஜீவசுந்தரி
தமிழகத்தில் காங்கிரஸும், திராவிட கட்சிகளும் பழுத்த அரசியல் பேச ஆரம்பித்த காலத்தில் இருந்தே இரண்டு கட்சிகளிலும் பயணித்த ஒரே பெண்மனி மூவலூர் இராமாமிர்தம் அவர்கள் தான். தஞ்சை மாவட்டத்தில் இருக்கும் மூவலூரில், தேவதாச வம்சத்தை சேர்ந்த ஸ்ரீமதி. ஆச்சிக்கண்ணு அவர்களின் வளர்ப்பு புதல்வி மூவலூர் இராமாமிர்தம். ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த பெண்களுக்கு ஆயிரமாயிரம் ஆண்டுகள் பொட்டுக்கட்டுதல் செய்து, அவர்களை திருமண பந்தத்தில் இருந்து ஒதுக்கி வைத்த தேவதாச அமைப்பினை எதிர்த்து தன்னுடைய இருபதிகளில் போராடத் தொடங்கினார். காங்கிரஸ்ஸாரும் பல்வேறு சமூக சீர்க்கேடுகளை சீர் திருத்த தொடங்கிய ஆரம்பகாலங்களில் இருந்தே fallen sisters என்ற வார்த்தைகளுக்குள் அடங்கும் விபச்சாரத் தொழில்களில் ஈடுபட்ட பெண்களை காக்க வேண்டும் என்பதை ஒரு கொள்கையாகவே கொண்டிருந்தார்கள். அதற்கெல்லாம் முன்னோடியாக மூவலூர் அம்மை செயல்பட்டதன் விளைவாக, அவர் வெகு விரைவில் காங்கிரஸ்ஸார் சார்பாக களத்தில் இறங்கி பொட்டுக்கட்டுதல் முறை ஒழிய அரும்பாடுபட்டார். மேலும், கதராடை இயக்கம், சுதேசி இயக்கத்திலும் அதிக பங்கு வகித்தார். பெரியாருடன் சேர்ந்து காங்கிரஸ்ஸில் இருந்து பிரிந்து சுயமரியாதை இயக்கத்திலும், பின்பு திராவிட கட்சியிலும் பங்கு வகித்த முதல் பெண்மணி இவராவார். மேலும் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி சார்பாக மேடை ஏறி பேசிய முதல் பெண் போராளி இவர் தான்.
தகனம் – ஆண்டாள் பிரியதர்சினி
விளிம்பு நிலை மனிதர்களான வெட்டியான்கள் அவர்களின் வாழ்வுமுறை, மற்றும் அங்கு நடைபெறும் சம்பிரதாயங்கள் என ஒவ்வொன்றையும் அறிந்து கொள்ள பெரிதும் உதவும் நாவல். கதைக்கு நாயகன் என்று ஒவ்வொரு முறையும் ஒரு ஆண் கதாப்பாத்திரம் வந்து போக, கதையினை தாங்கிப் பிடிக்கும் பொறுப்பினை ஏற்கின்றார் சின்னப்பொண்ணு… பிணமெரிக்கும் போதும், சோதனைக்காக மறுமுறை தோண்டும் போதும், தகன வெப்பத்தில் வெடித்துச் சிதறும் உடலில் இருக்கும் தசைகள் என ஒவ்வொன்றினால் எப்படியாக இம்மக்கள் பாதிப்படையின்றார்கள் என்பதை விளக்கும். இன்று மின்தகன மேடைகளும், மயானங்களும் வந்த பின்பு இம்மக்கள் எங்கே சென்றார்கள்? அவர்களின் வாழ்வு என்னவானது என்பதைப் பற்றியும் அறிந்து கொள்ள உதவும்.
நீங்கள் இதில் எந்த புத்தகத்தையாவது படிக்கத் தவறியிருந்தால், இந்த வார இறுதியில் படிக்கத் தொடங்குங்கள். மேலும் தவறாமல் படிக்க வேண்டிய தமிழ் புத்தகங்கள் ஏதேனும் குறிப்பிட விரும்பினால் கீழே பதியவும். புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை அடுத்த தலைமுறைக்குள்ளும் விதைப்போம்.
Web Title: Books To Read In Tamil
Featured Image Credit: pixabay