பிப்ரவரி 25, 2018 , ஒரு நீண்ட பயணத்திற்குபின் நள்ளிரவு 2 மணிக்கு எனது அறைக்கு வந்து உறங்கி விழிக்கையில் மணி 6:30. அந்த விடியற் காலையிலே செய்தித் தொலைக்காட்சி வழியாக எனக்கு(இந்தியர்களுக்கு)ம் ஒரு அதிர்ச்சி செய்தி காத்திருந்தது. சினிமாவில் அலங்காரம், ஆடம்பரம் ஏதுமில்லாத ராணியாக வலம் வந்த ”ஸ்ரீதேவி காலமானார்” என்பதே அந்த அதிர்ச்சி செய்தி.இன்றும் நமது தமிழகத்தில் ஸ்ரீதேவி முதலில் திரையில் தோன்றிய படமாக 16 வயதினிலே வைத்தான் சிலர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். அது தான் அந்த படம் ஏற்படுத்திய தாக்கம்.
முருகர் வேடமே முதல் ஒப்பனை
சுமார் 15 வயது நிரம்பிய ஒரு பெண் அழகாக புருவத்தை தூக்கி ஒரு பார்வை பார்த்ததை இந்த சமூக வலைத்தள காலத்தில் அப்படி ஒரு பிரபலமாக்கி பெரிதாய் பார்க்கிற நாம் ஸ்ரீதேவி முதன் முதலில் குழந்தை நட்சத்திரமாக முருகர் வேடத்தில் “துணைவன்’ படத்தில் நடிக்கும் போது அவருக்கு வயது 6 என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அது மட்டுமல்லாமல் இப்போதிருக்கும் சக்தி அப்போதைய ஊடகத்திற்கு இல்லை. திரைப்படத்தின் கதாநாயகன், கதாநாயகியெல்லாம் திரைப்பட சுவரொட்டிகளில் சிறியதாக ஒரு ஓரமாகத்தான் இருந்தனர். முருகர் வேடத்தில் குழந்தை ஸ்ரீதேவி தான் நடுவில் பெரிதாக மிளிர்ந்தார்.
சிவகாசி மாவட்டத்தில் மீனம்பட்டி என்ற கிராமத்தில் பிறந்த ஸ்ரீதேவியின் தகப்பனார் காங்கிரஸ் கட்சியின் ஒரு முக்கிய பொறுப்பில் இருந்தவர். இவர் காமராசருக்கு நெருக்கமாக இருந்து கட்சியின் பணிகளை செய்து வந்தவர். அந்த சிறிய வயதில் துடுக்காக இருக்கும் ஸ்ரீதேவியை சினிமாவில் நடிக்க வைக்க பரிந்துரைத்ததே காமராசர் தான். அவர் பரிந்துரையில் தான் ஸ்ரீதேவி “துணைவன்” படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். அன்றைய காலகட்டத்தில் தான் கமல்ஹாசனும் குழந்தை நட்சத்திரமாக மின்னிக்கொண்டிருந்தார். இருவருக்கும் அப்போது தெரியாது, இணைந்து 27 படங்கள் நடிப்போம் என்று.
கதாநாயகி ஸ்ரீதேவி
1976 “மூன்று முடிச்சு” என்ற திரைப்படம், ஸ்ரீதேவி கதாநாயகியாக நடித்ததில் முதலில் வெளி வந்தது. ஆனால் கமல், ரஜினி மற்றும் ஸ்ரீதேவி மூவரும் இணைந்து நடித்த முதல் படம் “16 வயதினிலே” தான். முதலில் ”மயிலு” என்கின்ற பெயரில் அந்த படம் “ தேசிய திரைப்பட வளர்ச்சி நிறுவன”த்தின் தயாரிப்பில் உருவாகிக்கொண்டிருந்தது. அப்போது தயாரிப்பில் ஏற்பட்ட சில குழப்பங்களால் கைவிடப்பட்டு, பிறகு ”எஸ்.ஏ.ராஜ்கண்ணு” என்பவர் துணிச்சலாக உண்மையான கிராமத்தில் எடுக்கப்படும் முதல் தமிழ் படத்தை ”16 வயதினிலே” என்ற பெயரில் முழுவதுமாக எடுத்து முடித்தார். இந்த திரைப்படம் எடுத்து முடிக்கும் காலக்கட்டத்திற்குள் ஸ்ரீதேவி நடிக்க ஒப்பந்தமான மூன்று முடிச்சு, காயத்ரி மற்றும் கவிக்குயில் போன்ற படங்கள் வெளியாகிவிட்டது. பார்த்திங்களா, ஸ்ரீதேவியை கதாநாயகியாக அறிமுகப்படுத்துவதில் இயக்குனர் இமயத்திற்கும், இயக்குனர் சிகரத்திற்கும் போட்டி இருந்திருக்கிறது.
தமிழில் அறிமுகமாகியிருந்தாலும் ஸ்ரீதேவி தெலுங்கில் தான் அதிக படங்களில் நடித்துள்ளார். 2013ல் இந்திய அரசால் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்ட இந்த அழகிய திறமையான நடிகைக்கு தேசிய விருது கிடைக்கும் வாய்ப்பு ஏனோ நழுவிவிட்டது என்றே சொல்லலாம். ஆம் மூன்றாம் பிறை திரைப்படத்தைத் தான் சொல்கிறேன். அந்த படத்தில் முதல் 10 நிமிடத்தையும் கடைசி 10 நிமிடத்தையும் தவிற படம் முழுக்க புத்தி சுவாதீனம் இல்லாத கதாப்பாத்திரத்தில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். அந்த கடைசி காட்சியில் பாக்கியலட்சுமியாக நினைவுதிரும்பி தன் சொந்த ஊருக்கு ரயிலில் ஏறி பயணம் செய்ய அமர்ந்திருக்கும் நேரம், ஸ்ரீதேவியைப் பார்த்து கமல் நான் தான் சீனு என்று கூறுகையில், ஸ்ரீதேவிக்கு சீனுவை யாரென்றே தெரியாது, அப்போது கமல் நடித்துக்காட்டும் காட்சி ஒன்றிலேயே,தேசிய விருதை அவர் தட்டி சென்று விட்டார். உங்களில் பலருக்கு தெரிந்திடாத ஒரு விடயம் என்னவென்றால் அந்த படத்திற்கு பிறகு ஸ்ரீதேவி கமலுடன் இணைந்து நடிக்கவில்லை.
ஸ்ரீதேவி, ரஜினி & கமல்
தமிழ் மொழியைப் பொருத்தவரை கமல் மற்றும் ரஜினியுடன் தான் அதிக படங்களில் நடித்துள்ளார். தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்துள்ள ஸ்ரீதேவி தான் 1995ல் உச்சத்தில் இருக்கும்போதே “போனி கபூர்” என்கின்ற சினிமா தயாரிப்பாளரை திருமணம் செய்து கொண்டார். தேசிய விருது தான் இல்லை. ஆனால் அதை தவிர்த்து வாங்காத விருதுகளே இல்லை. ”16 வயதினிலே” உட்பட 6 பிலிம் ஃபேர் விருதுகள். “மூன்றாம் பிறைக்கு” தமிழ் நாடு அரசு விருது மேலும் என்னற்ற விருதுகள். இயக்குனர் மகேந்திரன் இயக்கத்தில் ரஜினியுடன் நடித்த ஜானி திரைப்படத்தில் “அர்ச்சனாவாக” அவர் பாடல் பாடுகின்ற காட்சியிலும், ரஜினியுடன் பியானோ வாசிக்கும் காட்சியிலும், இறுதி காட்சியில் உடல் நிலை சரியில்லாமலும் மழையில் பாடுகின்ற “ காற்றில் என்தன் கீதம்” பாடல் காட்சியிலும் தன் அழகிய நடிப்பில் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்திருப்பார். தான் ஏற்று நடிக்கும் கதாப்பாத்திரத்திற்கு முக்கியத்துவமுள்ள படங்களும் ஸ்ரீதேவிக்காகவே தமிழ் நாட்டில் பல நாட்கள் திரையரங்குகளில் ஓடிய வரலாறுகளும் உண்டு. மூன்றாம் பிறை, பிரியா, ஜானி, இவை அனைத்தும் மேலே குறிப்பிட்ட வரிசையில் நம்மால் மறக்க முடியாதது.
முதுமையிலும் இளமை
இவர் பல வருடங்கள் கழித்து திரையில் மறு பிரவேசிக்கையிலும் அனைவரும் தன் மூக்கில் மேல் விரல் வைக்கும்படி இளமையான தோற்றத்திலேயே இருந்தார் ஸ்ரீதேவி. ஸ்ரீதேவியிடம் அவரது ரசிகர்கள், தான் உங்களுடைய ரசிகன்/ரசிகை என்று கூறும்போதெல்லாம் வெகுளித்தனமாகத்தான் சிரிப்பாராம், 16 வயதினிலே மயிலைப் போல. ஒப்பனை இல்லாமலும் அழகாக இருப்பது வெகு சில நடிகைகள் தான், அதிலும் ஸ்ரீதேவிக்கு முக்கிய இடம் உண்டு என்பதற்கு “மூன்றாம் பிறை” ஒரு உதாரணம்.
போனிகபூருக்கும், ஸ்ரீதேவிக்கும் இரண்டு பெண் குழந்தைகள். ஸ்ரீதேவி ஏனோ அவரது தந்தையும் தாயும் மறைந்த பிறகு தனது சொந்த ஊரான மீனம்பட்டிக்கு வரவில்லையாம். அதற்கு முன்பும் கூட குடும்ப விழாவுக்கோ அல்லது ஊர் கோயில் திருவிழாவிற்கோ மீனம்பட்டிக்கு வருவது வழக்கமாம். தான் 1980 களில் புகழின் உச்சத்தில் இருக்கும்போதும் எந்த தலக்கனமும் இல்லாமல் பழகுவாராம் ஸ்ரீதேவி.
சரியாக 32 வருடங்களுக்கு முன்பு ரஜினியுடன் நடித்து வெளிவந்த “நான் அடிமை இல்லை” என்கிற படம் தான், நாம் ஸ்ரீதேவியை தமிழில் கடைசியாக பார்த்தது. அதன் பிறகு ஸ்ரீதேவியின் பேரும் புகழும் இந்தியிலும் தெலுங்கிலுமே ஓங்கியது.
பொறுப்புள்ள நடிகை
அவர் 1995ல் போனி கபூரை திருமணம் செய்ததிலிருந்து 15 வருடங்கள் குடும்பத்தை பார்த்துக்கொள்வதிலேயே முழு கவனத்தையும் செலுத்தியுள்ளார். 15 வருடங்கள் கழித்து மீண்டும் திரையில் தோன்ற இருக்கிறார் என்கிற செய்தி வலைதளங்களை உற்சாகப் படுத்தியது. ஆனால் இப்போது அவர் நடித்த திரைப்படத்தில் அவர் ஏற்றதும் அவரைபோலவே ஒரு பொறுப்புள்ள அம்மா கதாப்பாத்திரம் தான். ஆங்கிலம் கற்றுக்கொள்ள துடிக்கும் ஒரு பெண். அதில் அவர் வெளிப்படுத்திய நடிப்பு இருக்கிறதே…. இந்த முதுமையிலும், இளமைப் பருவத்தில் இருந்த அதே ஈர்ப்பு அவரைப் பார்க்கையில் இன்றைய இளைஞர்களுக்கும் ஏற்பட்டது தான் ஆச்சர்யம். ”இங்கிலிஷ் விங்கிலிஷ்” திரைப்படத்தில் தான் முதன் முதலில் திரையில் ஸ்ரீதேவியை பார்த்த ஒரு இளைஞன் நிச்சயம் ஸ்ரீதேவி கதா நாயகியாக நடித்த பழைய திரைப்படங்களை இணையத்தில் பதிவிரக்கம் செய்து பார்த்திருப்பான் அதுவும் ஸ்ரீதேவிக்காக.
ஸ்ரீதேவி வெகுளித்தனத்தை வெளிப்படுத்துவதில் கைத் தேர்ந்தவர் போலும். இந்த இங்கிலிஷ் விங்கிலிஷ் திரைப்படத்திலும் அமிதாப்புடன் விமானத்தில் பறக்கும் காட்சியில் அசத்தியிருப்பார் இவர். தமிழ் ரசிகர்களுக்கு ஸ்ரீதேவியை மீண்டும் தமிழ் படத்தில் காண்பித்த பெருமை பால்கியைச் சாரும். அவரது கதை வசனத்தில் அவரது மனைவி கௌரி ஷிண்டே இயக்கிய படம் தான் அது. இங்கிலிஷ் விங்கிலிஷ் திரைப்படம் ஸ்ரீதேவி கொடி கட்டி பறந்த மூன்று மொழிகளிலும் நேரடி படமாக எடுத்து வெளியிட்டதால் அந்த படம் ஒரு பெரிய லாபம் ஈட்டியது அதுமட்டுமல்லாமல் ஒரு பெரிய கதாநாயகனின் படம் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடுவது போல் இந்தியா முழுவதும் ஓடியது.
முன் மாதிரி
இந்தியாவின் கனவுக்கன்னி, வில்லியாகவும் நடித்துள்ளார். ஒரு வித்தியாசமான கற்பனைக் கதையம்சம் கொண்ட திரைப்படமான “புலி”யில் ”ராணி யவனா ராணி” யாக மிரட்டியிருப்பார். தமிழ் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும் படங்களை கொடுக்க வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கும் சிம்பு தேவன் இந்த படத்தில் விஜய் தான் கதா நாயகன் என்று கூறும்போது என்ன ஒரு அலை வலைதளங்களில் எழுந்ததோ அதே அலை தான் ஸ்ரீதேவி முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார் என்று கூறும்போது எழுந்தது. இத்தனைக்கும் விஜய்க்கு ரசிகர் மன்றங்கள் இருக்கின்றது, ஸ்ரீதேவிக்கென்று ரசிகர் கூட்டம் தான் இருக்கின்றது. இதில் ஸ்ரீதேவி இருக்கின்ற காரணத்தினாலோ என்னவோ இந்தியிலும் இந்த படத்தை வெளியிட்டனர்.
இவர் காலத்தில் நடித்த பெரும்பாலான நடிகைகள் கூட அரசியலில் குதித்த நிலையிலும் தன்னை இறுதி வரை ஒரு நடிகையாக மட்டுமே வெளிப்படுத்திக் கொண்ட இந்த நேர்மையான நடிகையிடம் ஒரு கன்னியத்தைக் காண்கிறேன். அதற்கு அவரது அழகான குடும்பமும் ஒரு காரணமாக இருக்கலாம். 2008ல் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் ஃபேஷன் மாடலாகவும் தோன்றி அசத்தினார். அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த லேக் மீ நிறுவனம் இவரை மாடலாக மேடையேற்றுவதில் பெருமைக் கொள்வதாகவும் அறிவித்தது.
ஒரு கன்னியமான நடிகையாக எந்தவித சர்ச்சையிலும் தனது பெயர் வராத வண்ணமும் வாழ்ந்த ஸ்ரீதேவி நிச்சியம் மதிக்கத்தக்க பெண் தான். 90களிலும் அதற்கு பிறகும் இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் அறிமுகமான நடிகைகள் பெரும்பாலானோருக்கு ஒரு முன் மாதிரியாகவும், சிலருக்கு ஒரு இலக்காகவும் இருந்திருக்கிறார் இவர். தனது 53 ஆவது வயதிலும் “மாம்” என்று ஒரு தரமான திரைப்படத்தில் நடித்து அசத்தினார். பொது வாழ்க்கையில் ஸ்ரீதேவி என்றால் நடிகை மட்டும் தான். இந்த பெருமையே இன்றைக்கு இருக்கும் எந்த ஒரு நடிகைக்கும் இல்லை. ”மாம்” ஸ்ரீதேவியின் 300 ஆவது திரைப்படம். இந்த திரைப்படத்தை தயாரித்தவர் அவரது கணவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது. நான் இந்த கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும் இத்தருவாயில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டிருக்கும். இதே வேளையில் சமூக வலைத் தளத்தில் பல நெட்டிசன்கள் ஸ்ரீதேவியின் உடல் மீது தேசியக் கொடி போர்த்தியது எதற்கு என்று கொந்தளிக்கிறார்கள். குடி போதையில் உயிரிழந்த நடிகைக்கு அரசு மரியாதை எதற்கு என்று வெடிக்கிறார்கள். அவர்கள் அனைவரும் ஸ்ரீதேவி ஒரு பத்மஸ்ரீ விருது பெற்ற கலைஞர் என்பதை மறந்து விட்டனர் போலும்.
கடந்த 25 ஆம் தேதி அன்று கண்ணுறங்கிய அந்த முகத்தைப் பார்க்கையில் நம் அனைவருக்கும் ஒரே பாடல் தான் நினைவுக்கு வரும். உங்களோடு சேர்ந்து நானும் பாடுகிறேன்.
கண்ணே கலைமானே! கன்னி மயிலென கண்டேன் உனை நானே
கண்ணே கலைமானே! கன்னி மயிலென கண்டேன் உனை நானே
அந்தி பகலென உனை நான் பார்க்கிறேன்ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன்ஆரிராரோ ஓ! ராரிரோ!
Web Title: Sridevi “A Dreamgirl Drowned”
Featured Image Credit : vagabomb.com