
உலகின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில், இலங்கையின் அனைத்து பிரஜைகளுக்கும், கல்வியைப் பெறுவதற்கான, இலவசக் கல்வித் திட்டம் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த இலவசக் கல்விக் கொள்கையை இலங்கைக்கு அறிமுகப்படுத்தி, உயர் வர்க்கத்தினருக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டிருந்த கல்வியை, அனைத்து சமூக வர்க்கங்களுக்கும் ஒரு வரப்பிரசாதமாக மாற்றிய, மனிதநேய அரசியல்வாதி குறித்து, சிறு குறிப்பொன்றை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ள முயல்கிறோம்.

(wikimedia.org)
இலவசக் கல்வியின் தந்தை என்று இலங்கையர்கள் கௌரவமாக அழைக்கின்ற அவர், நாம் அனைவரும் நன்கு அறிந்து வைத்திருக்கின்ற கிறிஸ்டோபர் விலியம் விஜேகோன் கன்னங்கர என்றழைக்கப்படும் சி. டபிள்யூ. டபிள்யூ. கன்னங்கர ஆவார்.
கல்வியில் ஆர்வம் காட்டிய கன்னங்கர
தொன் தானியெல் விஜேகோன் கன்னங்கரவுக்கும், எமலி வீரசிங்கவுக்கும், 1884 ஒக்டோபர் 13 ஆம் திகதி, அம்பலங்கொடை பிரதேசத்தில் ரன்தொம்பயில் பிறந்த கிறிஸ்டோபர் விலியம் விஜேகோன் கன்னங்கர, ஐந்து குழந்தைகள் கொண்ட குடும்பத்தின் மூன்றாவது பிள்ளையாவார்.
சிறு வயது முதலே, காண்பதையெல்லாம் வாசிப்பதற்கு ஆர்வம் காட்டிய கன்னங்கர, காலப் போக்கில் பாடசாலையிலுள்ள அனைத்துப் பாடங்களில் மட்டுமன்றி, விளையாட்டு மற்றும் பேச்சுத்திறனிலும் திறமை காட்டினார். அம்பலங்கொடை வெஸ்லி பாடசாலையில் ஆரம்பக் கல்வியைப் பெற்ற அவர், அங்கு திறமைகளை வெளிக்காட்டியதால், 1897 இல் காலி ரிச்மன்ட் கல்லூரியினால் வழங்கப்பட்ட புலமைப்பரிசிலைப் பெற்றுக்கொண்டார். அதன்படி, ரிச்மன்ட் கல்லூரியில் அனைத்து வசதிகளுடன், கட்டணங்கள் இன்றி கல்வியைப் பெறும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.
உயர் கல்வியின் பின்னர் சட்டத்துறை தொழிலுக்கு…
ரிச்மன்ட் கல்லூரியில் கற்கின்ற காலத்தில், கேம்பிரிஜ் தேசிய சிரேஷ்ட பரீட்சையில் கணிதப் பாடத்தில் சிறப்பு சித்தி உள்ளிட்டு, இரண்டாம் நிலை சித்தி பெற்றார். 1902 இல் கேம்பிரிஜ் சிரேஷ்ட பரீட்சையை எழுதி, அதில் விசேட சித்தியுடன் பிரித்தானிய சாம்ராஜ்யத்தில் முதல் இடத்தைப் பெற்றார். அக்காலப் பகுதியில் ரிச்மன்ட் கல்லூரி வழங்கிய பாக் புலமைப்பரிசில், குணவர்தன புலமைப்பரிசில் மற்றும் ஜுப்லி புலமைப்பரிசில்களை தொடர்ந்தும் வென்றார் கிறிஸ்டோபர் கன்னங்கர.
1904 இல் ரிச்மன்ட் கல்லூரியில் கணித ஆசிரியராக சேவையில் இணைந்த இளைஞர் கிறிஸ்டோபர் கன்னங்கர, ரிச்மன்ட் கல்லூரிக்குப் பின்னர் இளவரசர் வேல்ஸ் கல்லூரி, மெதடிஸ்ட் கல்லூரி, வெஸ்லி கல்லூரி ஆகியவற்றில் கணித ஆசிரியராக சேவை புரிந்தார். இதேவேளை, சட்டக் கல்லூரியில் இணைந்து சட்டம் பயின்ற அவர், சட்டக் கல்லூரியில் பட்டம் பெற்று, 1910 இல் காலி நீதிமன்றத்தில் நியமனம் பெற்று, சட்டத் தொழிலில் பிரவேசித்தார்.
அரச மந்திரிகள் சபைக்கு…
1923 இல் நடைபெற்ற தேர்தலில், அவர் அரசியலமைப்பு சபைக்கு தென் மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக, பெரும்பான்மையான வாக்குகளால் தெரிவுசெய்யப்பட்டார். அத்தோடு, 1931 இல் அரசியலமைப்பு சபை கலைக்கப்படும் வரையில் அதில் செயற்பட்டார். இந்தக் காலப் பகுதியில் மரண தண்டனையை இரத்துச் செய்தல், பிரித்தானியர்களிடமிருந்து இலங்கையர்கள் பெறும் விடுமுறை நாட்களை, ஒரு நேர்மையான அளவுக்கு நீட்டுதல் மற்றும் வருமான வரி மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்தம் போன்ற திட்டங்களில் அவர் ஈடுபாட்டுடன் கலந்துகொண்டார்.

(panoramio.com)
1931 இல் அரச மந்திரி சபைக்கு தெரிவுசெய்யப்பட்ட கன்னங்கர, 1936 இல் இரண்டாம் தடவையாகவும் இச்சபையை பிரதிநிதித்துவம் செய்தார். 1931 இல் கலாநிதி சி.டபிள்யூ.டபிள்யூ. கன்னங்கர கல்வி செயற்குழு சபையின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டார். அத்தோடு, அரச மந்திரி சபையின் கல்வி அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார். 1931 முதல் 1947 வரை அரச மந்திர சபையின் முழுமையான காலப் பகுதியில் இந்த அமைச்சுப் பதவியை கன்னங்கர வகித்தார்.
கல்வி சீர்த்திருத்தம்
1938 இல் அரச மந்திரி சபையில் புதிய கல்வி கட்டளைச் சட்டமொன்றுக்கான முன்மொழிவை முன்வைத்த கன்னங்கர, அரசியலமைப்பு கொள்கை உருவாக்கும் அதிகாரம் கொண்ட கல்வி நிறைவேற்று செயற்குழுவை உருவாக்கி, ஓரளவு அதிகாரங்களுக்கு உட்பட்டு, அதன் பணிப்பாளராக செயற்பட்டார்.
அக்காலத்தில், உயர் பாடசாலைகளில் இணையும் வாய்ப்பு, வரப்பிரசாதங்கள் பெற்ற வர்க்கத்தினருக்கு மட்டுமே கிடைத்தது. எனவே, இந்த செயற்குழுவின் ஊடாக, கல்வி துறையிலுள்ள பலவீனங்களை இல்லாமலாக்கி, அனைவருக்கும் ஒரே கல்வியை வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்தார் கன்னங்கர.
அனைவருக்கும் கல்வி உரிமையை வழங்குவதற்காகக் கொண்டுவரப்பட்ட முன்மொழிவை மிகவும் கஷ்டங்களுக்கு மத்தியில், நிறைவேற்றிக் கொள்வதற்கு, அன்று முதல் இன்றுவரை ஒரு கல்வி அமைச்சர் மேற்கொண்ட மிக உயர்ந்த அர்ப்பணமாக இதனை அறிமுகப்படுத்துவது மிகவும் பொருத்தமானதாகும். அத்தோடு, கிராமப்புறங்களில் கல்வியைக் கட்டியெழுப்புவதற்காக மத்திய கல்லூரிகளை ஆரம்பிக்கும் செயற்பாடும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது. நான்கு மத்திய கல்லூரிகளுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த முன்னெடுப்பானது, இப்போது பெருமளவு வெற்றிபெற்றிருக்கின்றமை நிரூபிக்கப்பட்டுள்ளது.
1938 இலும், 1944 இலும் அமைச்சர் கன்னங்கர, நியமித்த கல்வி செயற்குழுக்களில் நிறைவேற்றப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்ட சில முன்மொழிவுகளையும், நவீனமயப்படுத்தல்களையும் கீழ்வறுமாறு பட்டியலிடலாம்.
- முதலாம் ஆண்டு முதல் பல்கலைக்கழகம் வரையில் இலவசக் கல்வி
- வருமானம் குறைந்த குடும்பங்களின் திறமைமிகு மாணவர்களுக்காக புலமைப்பரிசில் திட்டமொன்றை நிறுவுவதன் மூலம், கிராமப் புற கல்வியை விஸ்தரித்தல் (ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை)
- பாடசாலைகளை அரசுடமையாக்கல்
- ஆசிரியர்களை பயிற்றுவிப்பதற்காக ஆசிரியர் கல்லூரிகளை ஸ்தாபித்தல்
- சிங்கள மொழியில் கற்பித்தல் மற்றும் இரண்டாம் தரத்திலிருந்து ஆங்கிலத்தை கற்பிப்பதை கட்டாயமாக்கல்
- பாடசாலைகளுக்கு பொதுப் பாடத்திட்டத்தை தயாரித்தல்
- வாசிப்பு திறன் 50 சதவீதமாக உள்ள வளர்ந்தோருக்கு, சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளை கற்பித்தல்
- கல்வி தொடர்பிலான சேவைகள் ஆரம்பிக்கப்படல். (சுகாதார, பகல் உணவு, போக்குவரத்து வசதிகள் மற்றும் பாடசாலை வானொலி சேவை ஆரம்பிக்கப்படல்)
- நிரந்தர ஆசிரிய சம்பளம் மற்றும் ஆசிரியர்களுக்கான ஓய்வூதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படல்.
- இலங்கை மருத்துவக் கல்லூரி மற்றும் யுனிவர்ஸிடி கொலேஜ் ஆகியவை ஒன்றிணைக்கப்பட்டு இலங்கைப் பல்கலைக்கழகம் ஸ்தாபிக்கப்படல்.

இலங்கைப் பல்கலைக் கழகம் (Wikipedia)
தேர்தலில் தோல்வியடைதல்
அரச மந்திரி சபையின் ஒரு உறுப்பினராகவும், அமைச்சராகவும் அனைத்து அமர்வுகளிலும் பங்கெடுத்த ஒருவராக கன்னங்கரவை அடையாளப்படுத்தலாம். இவர் இலங்கையின் கல்வித் துறைக்கு செய்த மகத்தான சேவைகளை கௌரவிக்கும் வகையில், இலங்கைப் பல்கலைக்கழகம் 1943 இல் கன்னங்கரவுக்கு கலாநிதிப் பட்டத்தை வழங்கியது.
1947 தேர்தலில் தோல்வியடைந்த கன்னங்கர, 1950 முதல் 1952 வரையில் இந்தோனேஷியாவுக்கான இலங்கைத் தூதுவராகக் கடமை புரிந்தார். பின்னர் மீண்டும் 1952 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி, பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டார் கன்னங்கர. அதில், மாகாண சபைகளுக்கான அமைச்சராக செயற்பட்டார்.
இன்னும் பிறக்காத ஒரு சமூகத்துக்கு கல்வியை இலவசமாக வழங்கிய விசேடமானவரான சி. டபிள்யூ. டபிள்யூ. கன்னங்கர 1969 செப்டம்பர் 23 ஆம் திகதி மரணமடைந்தார். ஆனால், இலவசக் கல்வியை வழங்கி, பின்தங்கிய பிரதேசங்களில் கல்விமூலம் எழுச்சியை ஏற்படுத்துவதற்காக அவர் செய்த அமைதியான புரட்சியின் அறுவடையை, இன்று நாம் அனைவரும் புசிக்கிறோம்.
உசாத்துணை: rupavahini.lk, www.dailymirror.lk
ஆக்கம்: லசந்த குலரத்ன
தமிழாக்கம்: அஷ்கர் தஸ்லீம்