நடுநிசி நாய்கள், தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய படைப்பு தான். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் என்று ஒருவரை இத்திரைப்படத்தின் தயாரிப்பாளரும் இயக்குனருமான கௌதம் வாசுதேவ் மேனன் நியமிக்க வில்லை. இசை கோர்ப்பு இல்லாத முதல் தமிழ் படம் நடுநிசி நாய்கள்.
இசையும் இத்திரைப்படமும்
1931 ஆம் ஆண்டு முதல் தமிழ் சினிமாவில் இசையின் பங்கு பிரதானமாக இருந்து வந்த போதிலும், இசை கோர்ப்பு இல்லாமல் ஒரு திரைப்படத்தை வணிக ரீதியாக வெளியிடுவது, ஒரு தயாரிப்பாளருக்கு எவ்வாறான சுமை என்று தெரிந்திருந்தும் இப்படி ஒரு முயற்சி எடுப்பதற்கான காரணம் என்ன ? என்று பத்திரிக்கையாளர் கேட்டதற்கு அவர் கூரிய பதில், முதலில் இவ்வகையான படத்திற்கு பயத்தினை உணர்த்தும் விதமாக ஒரு தனி ரக இசை கோர்ப்பு இருக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் இப்படத்தின் திரைக்கதை மற்றும் காட்சியின் விரிவுரையிலேயே இசையும் பிணைந்திருப்பதாக உணர்ந்தபின் இசையை தவிர்த்தேன். என்று கூறினார். மேலும் தான் எப்போதும் வித்தியாசமான படங்களை எடுக்க விரும்புவேன், அதில் நடுநிசி நாய்களும் ஒன்று என்று குறிப்பிட்டார்.
மிகவும் ஸ்டைலிஷ்ஷான படங்களை மட்டுமே கொடுத்து வந்த கௌதம் மேனனிடம் இருந்து நடுநிசி நாய்கள் போன்ற படம் வருவது தமிழ் சினிமா ரசிகர்கள் மட்டுமல்ல, சினிமா விமர்சகர்களையும், பத்திரிக்கையாளர்களையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. நடுநிசி நாய்கள் திரைப்படத்தின் கதை எந்த சம்பவத்திலிருந்தும் இன்ஸ்பைர் ஆகி எழுதியது இல்லை என்று எல்லா பேட்டியிலும் கௌதம் தவறாது கூறி வந்தாலும். அந்த படத்தில் நடிகர் வீரா ஏற்று நடித்த கதாப்பாத்திரம் 1970 களில் அமெரிக்க காவல் துறைக்கு பெறும் சவாலாக விளங்கிய “தொடர் கொலைகாரன்”,”டெட் புண்டி”யின் தாக்கமே என்பது வெகு சிலருக்கே தெரியும்.
யார் இந்த டெட் புண்டி
ஒரு சாதனையாளரைப் பற்றி பல ஆராய்ச்சி கட்டுரைகள் எழுதுவது வழக்கம். ஒரு சிறந்த மருத்துவரைப்பற்றியோ அல்லது வின்வெளி ஆராய்ச்சியாளர்கள் பற்றியோ குறிப்புகளூம் புத்தகங்களும் ஆராய்ச்சி கட்டுரைகளும் இருந்ததுண்டு. ஒரு மன நோயாளியைப் பற்றி அதுவும் ஒரு தொடர் கொலைகாரனைப் பற்றி கட்டுரைகளும் புத்தகங்களும் வெளியானது அநேகமாக “டெட் புண்டி” யின் கதை தான் முதலாவதாக இருக்க முடியும்.
ஒரு உளவியல் பட்டதாரி தனது முனைவர் பட்டத்திற்கு இந்த தொடர் கொலைகாரனின் நடத்தையில் ஆய்வு செய்து வருகிறேன் என்று கூறிய கதைகளும் அரங்கேரியிருக்கிறது.
”டெட் புண்டி” ஒரு பிரபல கொலைகாரனாக ஆனதற்கு அவன் வளர்ந்த விதமும் ஒரு முக்கிய காரணம் தான். திருமணம் ஆகாத பெண்ணிற்கு தான் ”டெட் புண்டி” பிறந்திருக்கிறான். ஆதலால் அவனது தாத்தா, பாட்டியிடமிருந்து மிகுந்த வதைச் சொற்களை கேட்கும் நிலைக்கு ஆளான டெட் புண்டியின் தாய், தனது பெற்றோர்களிடம் “தியோடர் ராபர்ட் கோவல்” ஐ (அவனது இயற்பெயர்)அவர்களே அருகில் வைத்து வளர்த்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு தனியாக வாழத் துவங்கிவிட்டாள். சில காலம் கழித்து ”டெட் புண்டியின்” தாய், ஜானி புண்டியை திருமணம் செய்து கொண்டாள். அவளுக்கும் ஜானிக்கும் இரண்டு குழந்தைகள் பிறந்தன.
தாய் தந்தையின் சரியான அரவணைப்பில் வளராத டெட் சிறு வயது முதலே வித்தியாசமான நடவடிக்கைகளைக் கொண்டவனாகவே இருந்திருக்கிறான். விளையாட்டு பொம்மைகளைக் கண்டால் உற்சாகமாகும் தனது 3 வயதில் அதற்கு மாறாக கத்தியை கண்டால் உற்சாகமானான். யாராவது அவனை அடித்தாலோ கண்டித்தாலோ அவனுக்கு கோபம் வரும். அனைத்தையும் கூர்ந்து கவனிக்கக்கூடிய பதின் வயதுகளில் தான் அவனைச் சார்ந்தவர்களுக்கே அவனது மூர்க்க குணம் தெரிய வந்தது. இந்த கொலைகாரன் ஒரு இளங்கலை உளவியல் பட்டதாரி என்பது தெரியுமா உங்களுக்கு ?
டெட் புண்டியின் முதல் காதல்
வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்த தனது கல்லூரி காலத்தில் கலிஃபோர்னியா மாகானத்திலிருந்து வந்து படித்துக் கொண்டிருக்கும் அழகிய பெண் ஒருவர் மீது காதல் வயப்பட்டான். சில காலம் அந்த காதல் அவனுக்கு ஆறுதல் அளித்தது. பட்டப் படிப்பு முடியும் தருவாயில் அவனது காதலும் முறிந்தது. அந்த குறிப்பிட்ட சம்பவம் அவனை உருக்குளைத்ததாக கூறப்படுகிறது.
அந்த சம்பவத்திற்கு பின்னே அவன் அழகிய பெண்களை கொலை செய்யத் துவங்கியதாக கருதப்படுகிறது. அவன் செய்த முதல் கொலை எது என்பது யாருக்கும் சரிவர தெரியவில்லை. ஆனால், டெட் புண்டி இதுவரை 36 கொலைகளை செய்ததாக பதிவாகியிருக்கிறது. இவன் செய்த கணக்கில் வராத கொலைகளையும் சேர்த்தால், மொத்த கொலைகளின் எண்ணிக்கை நூறை தாண்டும் என்கின்றனர்.
சமர் கதாப்பாத்திரம் தான் டெட் புண்டியா ?
இதற்கு நடுநிசி நாய்களின் 1:54 நிமிட முன்னோட்டமே ’ஆம்’ என்று தெளிவாக சொல்லிவிடும். தமிழில் ”சீரியல் கில்லர்” வகை திரைப்படங்கள் மிகக் குறைவு என்பதால், நடுநிசி நாய்கள் திரைப்படத்தின் வெளியீட்டின் போது, இது பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளிவந்த “சிகப்பு ரோஜாக்கள்” திரைப்படத்தின் தழுவல் தான் என்று பலரும் நினைத்தனர். ஆனால் தனது படம் சிகப்பு ரோஜாக்களின் தழுவல் இல்லை என்று கௌதம் மேனன் கூறியதிலும், டெட் புண்டியின் வாழ்க்கைத் தழுவலாக “டெட் புண்டி” என்கிற பெயரிலேயே வெளி வந்த திரைப்படத்தின் காட்சிகளையும் நடுநிசி நாய்கள் திரைப்படத்தின் பிரதான காட்சிகளையும் ஒப்பிட்டு பார்க்கும்போது, நடுநிசி நாய்கள், டெட் புண்டியின் வாழ்க்கைத் தழுவல் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.
ஒரு பிராந்திய மொழி திரைப்பட இயக்குனர், எந்த கதையை படமாக எடுத்தாலும் முதலில் பார்வையாளனால் அந்த படத்தின் கதையை எந்த அளவுக்கு தான் வாழும் வாழ்க்கை முறையோடு சம்மந்தப்ப்டுத்திப் பார்த்துக்கொள்ள முடியும் என்பதை கருத்தில் கொண்டு தான் அந்த கதையின் தர்க்கங்களை வகுப்பான். எப்பொழுது ஒரு பார்வையாளனால் ஒரு கதையின் கருத்துக்களையும், தர்க்கங்களையும் ஏற்றுக்கொள்ள்ளும் நிலைக்குப் பிறகு தான் அவனால் எந்த வித இடையூறுமின்றி படத்தின் இன்னபிற சிறப்புகளையும் ரசிக்க முடியும். இதனை கருத்தில் கொண்டே ஒவ்வொரு கதாசிரியரும் உண்மைக் கதையை படமாக எடுக்கும்போது, சில மாற்றங்களை ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப மாற்றி காட்சிகளை அமைத்து படம் எடுக்கின்றனர்.
நடுநிசி நாய்கள் திரைப்படத்தின் முக்கிய காட்சிகளில் சமர் கதாப்பாத்திர தோற்றத்தை பார்க்கையில் கவுதம் மேனனும் பிராந்திய ரசிகர்களின் புரிதலுக்கு ஏற்ப சில மாறுதல்களை செய்திருப்பதை நம்மால் உணர முடியும். ஒரு திரைப்படத்தின் வணிகத்திற்கு அது மிகவும் முக்கியமான ஒன்றாகும். உண்மை சம்பவங்களை மையமாகக் கொண்ட திரைப்படங்களை மட்டுமே இயக்கும் பாலாஜி சக்திவேலின் படத்தின் திரைக்கதையிலும் இவ்வகையான மாறுதல்களைக் காணலாம்.
டெட் புண்டி தான் கொலை செய்த பெண்களை கொலை செய்ததற்கான காரணத்தை ஆராயும் போது அவன் கொலை செய்த பெண்கள் அனைவருடனும் உடலுறவு வைத்துள்ளான் என்கின்ற அதிர்ச்சி தரும் தகவல் நமது நெஞ்சை உரைய வைத்தாலும், அவன் அந்த பெண்களை துன்புறுத்தி உடலுறவு வைத்துக்கொண்ட பாங்கை புத்தகங்களில் படிக்கையிலேயே சற்று அறுவறுப்பாகவும், நமது மன திடத்தை சோதிக்கும் விதமாகவும் இருக்கிறது. டெட் புண்டி தொடர்பு வைத்து பின் கொன்ற பெண்கள் அனைவரும் வசீகர அழகினைக் கொண்ட பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சாதாரணமாக அவன் அந்த பெண்களிடன் உடலுறவு கொள்ளவில்லை, அந்த பெண்களை அடித்து துன்புறுத்தி, துன்புறுத்தும் தருவாயிலும் அந்த பெண்கள் துடிக்கும் நேரங்களிலும், அதே பெண்கள் இவன் துன்புறுத்துதலுக்கு பொறுக்க முடியாமல் உயிர் மாய்க்கின்ற தருணத்திலும் அந்த பெண்களிடம் உடலுறவு கொண்டுள்ளான்
ஒரு மனிதன் மரணிப்பது 5 நிலைகளில் நடைபெறுகின்றதாம். முதலில் சுவாசம் நின்றுப்போகும், அடுத்த கட்டமாக நாடித்துடிப்பு நின்று போகும், அடுத்த கட்டமாக உடலின் மேலிருக்கும் தோல் நிறமிழத்தல், இதன் விளைவாக உடல் வெப்பம் குறைந்து சில்லிடுதல், உடல் விரைத்துப் போதல் அதன் அடுத்த கட்டமாக உடலில் இருக்கும் ரத்தம் உரைந்து போதல் இறுதியாக உடல் சிதைவு அடைதல். டெட் புண்டியால் மரணித்த ஒரு பெண் உடலின் பிரேதப் ப்ரிசோதனையில் அந்த பெண்ணின் மரணத்தின் இறுதி நிலையிலும் அவன் உடலுறவு வைத்திருந்தது தெரிய வந்தது. அதாவது மக்கும் நிலையில் இருக்கும் பிணத்தோடும் கூட உடலுறவு வைத்திருந்திருக்கிறான்.
அதே போல நடுநிசி நாய்கள் திரைப்படத்திலும் பெண்களை, சமர் தனது வீட்டில் உள்ள சூரிய ஒளி அண்டாத ஒரு நெருக்கடியான இடத்தில் நிர்வானமாக கட்டிப்போட்டு சித்திரவதை செய்யும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். அந்த படத்தில் சுகன்யா கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் சமீரா ரெட்டியை தன் வசப்படுத்தி தனது காரில் ஏற்றி செல்லும் காட்சியும் இது டெட் புண்டியின் வாழ்க்கைத் தழுவல் என்பதை தெளிவாக உணர்த்துகிறது. தான் சந்திக்கும் அனைத்து அழகிய பெண்களையும் முதலில் தனது காரில் தான் வைத்து சித்திரவதை செய்வானாம் ”டெட் புண்டி”. இன்றும் அவன் பயன்படுத்திய வோல்க்ஸ்வோகன் கார் “க்ரைம் மியூசியம்: என்ற அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதற்கு முன் அந்த கார் வாஷிங்டன் அருங்காட்சியத்தில் பாதுகாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அவன் கொன்ற ஒரு சில பெண்களின் மரணம் இந்த காரினுள்ளே நடைபெற்றிருக்கிறது என்கின்றனர் வாஷிங்டன் காவல்துறையினர். ஒரு சில பெண்களை தலை தனியாக முண்டம் தனியாக வெட்டி கொன்றதோடு மட்டுமல்லாமல், அவர்கள் இறக்கும் தருவாயிலும் அவர்களோடு உடலுறவு வைத்திருக்கிறான் அந்த கொடூரன்.
டெட் புண்டியிடமிருந்து தப்பித்த பெண்
இத்தகைய கொடூரமானவனிடமிருந்து தப்பித்த ஒரு பெண் கூறிய செய்திகளை வைத்து தான் அவனை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இவனை உளவியல் ரீதியாக சுமார் 20 மணி நேரம் மதிப்பீடு செய்த மனநல மருத்துவர் மதிப்பீட்டின் முடிவில் கொலை செய்வது ஒன்றைத் தவிற இவன் ஆழ் மனதில் வேறெதுவும் இல்லை. மிகவும் கொடூரமான ஒருவனை நாம் இந்த சிறையில் வைத்து கண்காணித்து வருகிறோம் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
நடுநிசி நாய்கள் திரைப்படத்திலும் சமரை காவல் துறையினர் கைது செய்தபின், அவன் மன நிலை பாதிக்கப்பட்டவன் என்று குறிப்பிடுவது போன்று காட்சி அமைக்கப்பட்டிருக்கும். சமர் கதாப்பாத்திரத்தில் நடித்த வீராவின் நடிப்பு ஒரு சைக்கோ கில்லர் கதாப்பாத்திரத்திற்கு நறுக்கென்று பொறுந்தியிருக்கும். அது மட்டுமல்லாமல் வீரா அந்த கதாப்பாத்திரத்திற்கான சரியான தேர்வு தான் என்பது படம் பார்க்கின்ற ஒவ்வொருவருக்கும் புரியும்.
குறிப்பாக இறுதிக்காட்சியில் சமர் சேர்க்கப்படுகின்ற மனநல காப்பகத்தில் அவன் படுக்கை அருகில் உள்ள படுக்கையில் பாலியல் துன்புறுத்தலால் மனதளவில் பாதிக்கப்பட்ட ஒரு பெண் இருப்பதாக திரைப்படத்தை முடித்திருப்பார், கவுதம் மேனன். இதைப் போன்ற கதைகள் பல நகரங்களில் நம் பார்வைக்குள் வராமல் தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது என்கின்றது அந்த காட்சியின் உள் அர்த்தம்.
கொலை என்பது ஒரு கிரிமினர் குற்றமாகத்தான் கருதப்படுகிறது. ஆனால் டெட் புண்டி மாதிரியான மனதளவில் பாதிக்கப்பட்டவர் குற்றவாளி கூண்டில் நிறுத்தும் பொழுது, ஒரு வகையாக கடும் கோபம் அவன் மீது இருந்தாலும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று அவர்களை தண்டிக்க முடியாது. ஏனென்றால் அவன் இவ்வாறு மாறியதற்கு இந்த சமுதாயத்தின் அழுக்குகளும் பொய்மையுமே ஆகும். டெட் புண்டியின் குழந்தைப் ப்ருவம் போன்று இவ்வுலகில் எந்த குழந்தைக்கும் ஏற்பட்டு விடாமல் இருக்க வேண்டும் என்று விரும்புவோம்.
Web Title : Nadunisi Naaygal, A sad story of a serial killer, Tamil Article
Featured Image Credit : biography.com