என்னுடைய செல்ஃபோனில் ஒரு புதிய மென்பொருளைத் தரவிறக்கம் செய்தேன். சிறிதுநேரம் பயன்படுத்திப்பார்த்தேன். சரியாகப் புரியவில்லை.
ஆகவே, நண்பர்கள் சிலரிடம் உதவி கேட்டேன், ‘இது என்னமாதிரி மென்பொருள்? இதில் என்னென்ன வசதிகள் உண்டு? இவற்றை நான் எப்படிப் பயன்படுத்திக்கொள்வது? கொஞ்சம் விளக்கிச்சொல்லுங்களேன்.’
அரைமணிநேரத்துக்குள் அவர்கள் எல்லாரும் பதில் எழுதியிருந்தார்கள். அந்த மென்பொருளின் அருமையான வசதிகளைப் பட்டியலிட்டு உதவியிருந்தார்கள்.
வியப்பான விஷயம், அவர்கள் அனைவருடைய பட்டியலின் உச்சியிலும் இடம்பெற்றிருந்த விஷயம், ‘Lots and Lots of Emojis. Enjoy.’
எல்லாரும் சொல்கிறார்களே என்று அந்த மென்பொருளின் Emoji பக்கத்தை க்ளிக் செய்துபார்த்தேன். அசந்துபோனேன். நூற்றுக்கும் மேற்பட்ட பொம்மைகளை அடுக்கிவைத்திருந்தார்கள்: மகிழ்ச்சி, சோகம், கோபம், எரிச்சல், குறும்பு… நவரசங்களையும் அந்தப் பொம்மைகள் பிரதிபலித்தன.
இமோஜி/எமோஜி/எமோடிகான்/ஸ்மைலி/சிரிப்பான்… இப்படி விதவிதமான பெயர்களில் அழைக்கப்படும் சிறு பொம்மைகள்தான் இன்றைக்கு நவீன தகவல்தொடர்புச் சாதனங்களாகத் திகழ்கின்றன. அனைத்துக் கணினிகள், செல்பேசிகளிலும் இந்த பொம்மைகள் முக்கிய இடம்பிடித்திருக்கின்றன. யாராவது எதையாவது கேட்கும்போது அதற்கு மாங்குமாங்கென்று உட்கார்ந்து பதில் எழுதுவதைவிட, ஒரு பொம்மையில் விஷயத்தைச் சொல்லிவிடுவது எல்லாருக்கும் வசதியாக இருக்கிறது.
எடுத்துக்காட்டாக, ‘அலுவலகத்தில் எனக்கு இந்த விருது கிடைத்திருக்கிறது’ என்று ஒரு நண்பர் எழுதினால், அதற்குக் கைதட்டும் பொம்மையைப் பதிலாகத் தரலாம். அல்லது, கட்டைவிரல் உயர்த்தும் பொம்மை. சில குறும்பர்கள் கேக் அல்லது ஒயின் கோப்பை பொம்மையைப் போட்டுப் ‘பார்ட்டி எப்போ?’ என்று மறைமுகமாக விசாரிக்கலாம். அவருடைய வளர்ச்சியைப் பிடிக்காதவர்கள் காக்கை பொம்மையைக் காட்டி, ‘நீ காக்கா பிடிச்சுதான் மேலே வந்தேன்னு எங்களுக்குத் தெரியாதா?’ என்று பொருமலாம்.
இந்த விஷயங்கள் அனைத்தையும் எழுத்திலும் வெளிப்படுத்தமுடியும். ஆனால் அதையெல்லாம் யோசித்து எழுதுவதற்கு யாருக்கு நேரமிருக்கிறது? சட்டென்று ஓர் எமோஜியைத் தேர்ந்தெடுத்துப் பதிவுசெய்தால் வேலை முடிந்தது!
சென்ற தலைமுறையில் யாருக்காவது பிறந்தநாள் என்றால் உருகியுருகி வாழ்த்துக்கடிதம் எழுதிக்கொண்டிருந்தார்கள். பின்னர் அச்சிட்ட வாழ்த்தட்டைகளை வாங்கிக் கையெழுத்துப்போட்டுத்தருகிற கலாசாரம் வந்தது. கிட்டத்தட்ட அதேமாதிரி ஒரு மாற்றம்தான் இதுவும்: நானே சிந்தித்து எழுதினால்தான் ஆச்சா? இதுபோன்ற சூழ்நிலைகளுக்காகவே யாரோ சிந்தித்துப் படம்வரைந்துவைத்திருக்கிறார்கள், அதைப் பயன்படுத்திக்கொள்கிறேனே!
யோசித்துப்பார்த்தால், இதுவொன்றும் புதிய கலாசாரம் இல்லை. மனிதனின் தகவல் தொடர்பே ஓவியங்களில்தான் தொடங்கியிருக்கிறது. எழுத்துகளெல்லாம் கண்டறியப்படுவதற்குமுன்னால் குகைகளில் வாழ்ந்த மனிதன் தன்னுடைய நாளை ஓவியங்களாக வரைந்துகொண்டிருந்தான். பல கலாசாரங்களில் வெவ்வேறு காட்சிகளை, கதைகளை ஓவியங்களாக, அல்லது சிறு படங்களாக வரைந்துவைக்கும் பழக்கம் இருந்திருக்கிறது.
பின்னர் எழுத்துகள் வந்தபிறகு, படங்களின் பங்களிப்பு குறையத்தொடங்கியது. இதற்கு இரண்டு முக்கியக் காரணங்கள்:
- எழுத்தின்மூலம் விஷயங்களை இன்னும் தெளிவாக, குழப்பத்துக்கு இடமின்றி வெளிப்படுத்தமுடியும்
- எல்லாருக்கும் ஓவியம் வரைவது (இன்னும் சரியாகச் சொல்வதென்றால், பிறருக்குப் புரியும்படி ஓவியம் வரைவது) சரிப்படாது
அதேசமயம், படங்களுடன் ஒப்பிடும்போது, எழுத்துகளில் ஒரு குறை: அந்தக் குறிப்பிட்ட மொழியை அறிந்தவர்கள், அதை எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள்மட்டுமே அதனை வாசிக்கமுடியும். பிறருக்குப் புரியாது.
தமிழை நன்கு வாசிக்கும் நீங்களோ நானோ ஜப்பானுக்குச் செல்கிறோமென்றால், திகைத்துப்போவோம். அங்குள்ள எந்த எழுத்துகளும் நமக்குப் புரியாது. பேசவும் தெரியாது. ‘பேருந்து நிறுத்தம் எங்கே இருக்கிறது?’ என்று எப்படிக் கேட்பது?
அப்போது, திடீரென்று ஒரு பலகை எதிர்ப்படுகிறது. அதில் ஒரு பேருந்தின் படத்தை வரைந்திருக்கிறார்கள். நாம் நிம்மதிப் பெருமூச்சு விடுகிறோம். மொழி புரியாவிட்டாலும், அந்தப் படம் நமக்கு விஷயத்தை உணர்த்திவிட்டது.
சில சமயங்களில் மொழி தெரிந்தாலும்கூட, கூடுதல் ஈர்ப்புக்காகப் படங்கள் சேர்க்கப்படுகின்றன. நீளமான கதைப்புத்தகங்களுக்கு நடுவே ஆங்காங்கே சிறு ஓவியங்கள் இடம்பெறும்போது அவற்றின்மீது நம் கவனம் செல்கிறது, அவற்றை எழுத்துகளுடன் பொருத்தி அதிகம் அனுபவிக்கிறோம்.
இதனால்தான், புகழ்பெற்ற பல புத்தகங்கள் Illustrated Editionsஆக வெளிவருகின்றன. அதற்குமுன் வெறுமனே எழுத்துகளாகப் படித்துக்கொண்டிருந்தவர்கள் இப்போது அவற்றை ஓவியங்கள், புகைப்படங்களுடன் பார்த்துக் கூடுதலாக ரசிக்கிறார்கள்.
இது புத்தகங்களுக்குமட்டுமல்ல, தனிமனிதர்கள் எழுதும் கடிதங்களுக்கும் பொருந்தும். ஒரு நீண்ட கடிதத்தின் நடுவே பூவின் படமொன்று வரையப்பட்டிருந்தால் சட்டென்று நம் கண் அங்கே செல்லுமல்லவா?
சென்ற நூற்றாண்டின் முற்பகுதியில், அதாவது, கணினிகள், செல்ஃபோன்களெல்லாம் கண்டறியப்படுவதற்குமுன்பே Smiley Face எனப்படும் புன்னகை முகங்களைக் கடிதங்களில், ஆவணங்களில் பயன்படுத்தும் வழக்கம் இருந்திருக்கிறது. இன்றைக்கும் நாம் பல இடங்களில் பார்க்கிற மஞ்சள் நிறச் சிரிக்கும் முகம்தான் இது.
Smiley Faceஐ வரைவதும் எளிது, புரிந்துகொள்வதும் எளிது. இரண்டு புள்ளி வைத்துக் கீழே ஒரு வளைகோடு போட்டுச் சுற்றிலும் வட்டம் வரைந்துவிட்டால் நாம் மகிழ்ச்சியாக இருக்கிறோம், அதை வெளிப்படுத்துகிறோம் என்று எல்லாருக்கும் தெரிந்துவிடும்.
அந்த வளைகோட்டைத் தலைகீழாக்கினால், அதே முகம் சோகத்திற்கு மாறிவிடும். வருத்தமான விஷயங்களைச் சொல்லும்போது இதனைப் பயன்படுத்தலாம்.
இதன் அடுத்தகட்டமாக, இதயவடிவப் படம் பிரபலமானது. உண்மையில் மனித இதயம் துல்லியமாக அந்த வடிவத்தில் இல்லையென்றாலும், யாரோ இதனை அறிமுகப்படுத்திவிட்டார்கள், அது காதலின் சின்னம் என்று சொல்லிவிட்டார்கள், ஒட்டுமொத்த உலகமும் விரும்பிப் பின்பற்றத்தொடங்கிவிட்டது. இன்றைய நவீன கருவிகளிலும் இதயப்படம் பலவிதமாகப் பயன்படுத்தப்படுகிறது: சிரித்த முகத்தின் கண்களுக்குப்பதில் இரு இதயங்களை வரைகிறார்கள், இதயத்தின் நடுவே அம்பு (மன்மதன் செலுத்தியது) வரைகிறார்கள், ஆண், பெண் படங்களை வரைந்து நடுவில் இதயத்தைச் சேர்க்கிறார்கள்… இப்படி இன்னும் நிறைய.
சிரிக்கும் முகம், அழும் முகம், இதயம் போன்ற பொம்மைகள் பல தனிப்பட்ட எழுத்துகள், அச்சு ஊடகங்களில் பயன்படுத்தப்பட்டுவந்த நேரத்தில்தான் கணினியில் எழுதுவது அதிகரித்தது. அங்கேயும் இதுபோன்ற படங்களைப் பயன்படுத்தமுடியுமா என்று மக்கள் யோசித்தார்கள்.
இன்றைய கணினிகளில் படம் வரைவது சுலபம். ஆனால், அன்றைய கணினிகள் வெறும் எழுத்துகளைமட்டுமே ஏற்றுக்கொண்டன, திரையில் காண்பித்தன. ஆகவே, அவற்றில் ஒரு சிரிக்கும் பொம்மையை ‘வரைவது’ சிரமம். அதற்குப்பதிலாக, சிரிக்கும் பொம்மையை ‘எழுதலாம்’ என்று ஒருவர் கண்டுபிடித்திருக்கிறார்.
அவர் பெயர் ஸ்காட் எலியாட் ஃபாஹ்ல்மன். 1982ம் வருடம் அவர் எழுதிய ஒரு குறிப்பில், ‘நகைச்சுவையான விஷயங்களை எழுதும்போது அவற்றை இப்படிக் காண்பிக்கலாமே’ என்று எழுதியிருக்கிறார்:
🙂
இந்த மூன்று எழுத்துகளையும் அருகருகே எழுதிவிட்டு, கழுத்தை 90 டிகிரி திருப்பிப்பார்த்தால், ஒரு முகம் சிரிக்கிறாற்போலிருக்கும். இதைத்தான் ஸ்காட் ஃபாஹ்ல்மன் கண்டுபிடித்துப் பரிந்துரைத்தார்.
‘ஸ்மைலி’ என்று செல்லமாக அழைக்கப்படும் இந்த மூவெழுத்துகளை இவர்தான் முதன்முதலாகக் கண்டுபிடித்தாரா என்பது தெரியவில்லை. ஆனால், கணினிகள் வளர வளர, இந்த மூவெழுத்துகளும் பிரபலமாகத்தொடங்கின. குறிப்பாக, Chat Programs/Messenger Programs என்றழைக்கப்படும் அரட்டை சாதனங்களில் இந்த ஸ்மைலி மிகப் பிரபலமடைந்தது.
சிலர் ‘சிரிப்பதற்கு மூன்று எழுத்துகளா? இரண்டு போதுமே’ என்றார்கள், இதனை இன்னும் சுருக்கி ‘:)’ என்று எழுதத்தொடங்கினார்கள். இதே பாணியில் வேறு ஸ்மைலிகளும் வந்தன. எடுத்துக்காட்டாக:
😀 பெரிதாகச் சிரிப்பது
😉 கண்ணடிப்பது
😛 நாக்கைத் துருத்திக்கொண்டு குறும்பாகச் சிரிப்பது
<3 இதயம்
இதுபோன்ற ஸ்மைலிகளைப் புரிந்துகொள்ளவேண்டுமென்றால், கழுத்தை 90 டிகிரி திருப்பியாகவேண்டும். அதற்குப்பதிலாக, நேரடியாகவே ஸ்மைலிகளை உருவாக்கலாமே என்று சிலர் நினைத்தார்கள். எடுத்துக்காட்டாக:
*_*
இதிலும் மூன்று எழுத்துகள்தான் இருக்கின்றன. ஆனால், கழுத்தைத் திருப்பாமலேயே இது ஒரு முகம் என்பது புரிகிறது, நட்சத்திரக்குறிகளைக் கண்களாகவும், நடுவிலுள்ள கோட்டை வாயாகவும் புரிந்துகொள்கிறோம்.
ஜப்பானியர்கள் அறிமுகப்படுத்திப் பிரபலப்படுத்திய இதுபோன்ற ஸ்மைலிகளை Kaomoji என்றழைத்தார்கள். ஜப்பானிய மொழியில் Kao என்றால் முகம், moji என்றால் எழுத்துகள்.
கணினித்தொழில்நுட்பம் வளர வளர, இப்படி எழுத்துகளைக்கொண்டு சிரமப்படாமல் அழகிய, சிறு பொம்மைகளை நேரடியாகத் திரையில் ‘வரைகிற’ தொழில்நுட்பம் வந்தது. எடுத்துக்காட்டாக, பல மென்பொருள்களில் நீங்கள் 🙂 என்று எழுதியவுடன், அது ஓர் அழகிய சிரிக்கும் முகமாக மாறிவிடும். நீங்கள் வரையவேண்டியதில்லை, கணினியே வரைந்துவிடும்.
இப்படி உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் பொம்மைகளை Emoticon, அதாவது, உணர்வுகளைக் காட்டும் சிறு படங்கள் என்று அழைத்தார்கள். இவை பல கணினி, செல்ஃபோன் மென்பொருள்களில், குறிப்பாக தனிப்பட்ட செய்திகளைப் பரிமாறிக்கொள்கிற, குழுக்களாக உரையாடுகிற மென்பொருள்களில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டன. நூற்றுக்கணக்கான Emoticonகள் அறிமுகமாகின.
தொண்ணூறுகளில் செல்ஃபோன்கள் வேகமாகப் பிரபலமடைந்துவந்த நேரம், ஜப்பானிய செல்ஃபோன் தயாரிப்பாளர்கள் இந்தப் படங்களை மேலும் அதிகப்படுத்தி ஏராளமான உணர்வுகளை வெளிப்படுத்தும் பொம்மைகளை அறிமுகப்படுத்தினார்கள். இவை ‘Emoji’ என்று அழைக்கப்பட்டன. ‘E’ என்றால் பொம்மை, ‘moji’ என்றால் எழுத்துகள்!
இப்படி விளையாட்டாகத் தொடங்கிய சிரிப்பான்கள்/உணர்வுப் பொம்மைகள் இன்று எல்லாவிதமான தகவல் தொடர்புகளிலும் பயன்படுகின்றன. அரட்டைகளில்மட்டுமின்றி, அலுவல்ரீதியில் எழுதும் கடிதங்களில்கூட இவற்றை ஆங்காங்கே பார்க்கமுடிகிறது. பெரிய அரசியல் தலைவர்களின் ட்விட்டர் வாழ்த்துச்செய்திகளில் இவற்றைப் பார்க்கிறோம். நவீன ஸ்வாமிஜிக்களும் தங்களுடைய உபதேசங்களில் எமோஜிகளைப் பயன்படுத்தினால் வியப்பில்லை.
குறிப்பாக, இளைய தலைமுறையினர் இவற்றை ஏராளமாகப் பயன்படுத்துகிறார்கள். வெறுமனே ஸ்மைலிகளிலேயே பேசிக்கொள்கிறவர்கள் உண்டு. எழுத்துகளெல்லாம் எதற்காக?
பொம்மைகளில் பேசத்தொடங்கிய நாம் எழுத்துகளைக் கற்று மீண்டும் பொம்மைகளுக்குத் திரும்பியிருப்பது ஒரு சுவாரஸ்யமான சுழல். அதேசமயம், இதன்மூலம் நமது வார்த்தைவளம், உணர்வுகளை வெளிப்படுத்தும் திறன் குறைந்துவிடுமோ என்கிற திகைப்பு ஏற்படுகிறது. இனி, நாம் சொல்ல நினைத்த ஒன்றைச் சொல்லும் பொம்மை இல்லையென்றால்தான் அதை எழுத்தில் எழுதத் துணிவோமா? எல்லாவற்றையும் சொல்லும் பொம்மைகள் வந்தபிறகு, எழுத்துகள் அநாவசியமாகிவிடுமோ? நாளைய புத்தகங்கள் ஸ்மைலிகளில்மட்டும் எழுதப்படுமோ?
சுவாரஸ்யமான கேள்விகள், காத்திருந்து பார்ப்போம் 🙂