இந்தியாவின் ஐந்து பெரிய அணைகளும் அவற்றின் சிறப்புகளும்

நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்

வான்இன்று அமையாது ஒழுக்கு.

                                                                                                –திருவள்ளுவர்.      

நீரின் முக்கியத்துவத்தை உணர்த்தும் குறள் இது.  தண்ணீர் “திரவத் தங்கம்” என்று அழைக்கப்படுகிறது.  நீரின்றி யாராலும் உயிர் வாழ இயலாது. அப்படி பட்ட நீர் மழையால் தான் இந்த புவி உலகுக்கு கிடைக்கிறது. அந்த மழை நீர் ஆறு, குளம், ஏரி போன்ற இடங்களில் சென்று கலக்கிறது. அந்த மழை நீரை சேமித்து தேவைப்படும் சமயங்களில் உபயோகிக்கவே அணைகள் கட்டப்பட்டது. சங்க காலத்திலேயே கரிகாலன் கட்டிய கல்லணை நம் அனைவர் நினைவிலும் அழியாத ஒரு நினைவு சின்னமாகவே பார்க்கப்படுகிறது. நமக்கு அடுத்த சந்ததியினரும் பயன் அடையும் வண்ணம் அந்த அணை பயன்பாட்டில் உள்ளது எத்தனை பெருமைக்குரிய செயல். இந்த கட்டுரையில் நான் கூற போவதும் இந்தியாவில் உள்ள மிகப்பெரிய அணைகள் பற்றிய செய்திகளே.

ஓர் ஆற்றின் போக்கைத் தடைசெய்து அதன் மட்டத்தையும் அளவையும் கட்டுப்படுத்தவும், நீரைச் சேமித்து வைத்துப் பயனாக்கவும் அதன் குறுக்கே போடப்படும் தடையே அணை என்று கூறப்படுகிறது. அணையின் மேற்புறம் தோன்றும் ஏரி நீர்த்தேக்கம் என அழைக்கப்படுகிறது. மிகையான நீரை வெளியிடும் களிங்குகளும், பாசனத்திற்காகவோ, குடிநீர் வசதிக்காகவோ அமைக்கப்படும் வாய்க்கால்களில் செல்லும் நீரைக் கட்டுப்படுத்தும் மதகுகளும், மின்னாக்க பொறிகளுக்கு நீரை கடத்தி செல்லும் குழாய்களும் இருக்கும். இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் எண்ணற்ற அணைகளும்,  நீர்த் தேக்கங்களும் நாடு முழுக்க கட்டப்பட்டன. தற்போது உலக அளவில் அணைக்கட்டுமானத்தில் இந்தியா 5100 அணைகளைக் கொண்டு அணைகள் கட்டுவதில், உலகிலேயே மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது.  இவற்றில் பெரும்பாலானவை 20 ஆண்டுகள் பழமையானவையாகும். ஒவ்வொரு அணையும் ஒவ்வொரு வகையில் தனிச் சிறப்புபெற்று விளங்கி வருகின்றன.

படம்: uttarakhanddarshan

உத்தரகண்ட் மாநிலத்தில் பகீரதி ஆற்றுக்கு குறுக்கே கட்டப்பட்டுள்ள தெஹ்ரி அணை இந்தியாவின் உயரமான அணையாக கருதப்படுகிறது. இந்தியாவின் மிக உயரமான அணை. உலகின் 8வது மிக உயரமான அணையும் இதுதான். இதன் நீர் விவசாயத்திற்கும், குடிக்கவும் பயன்படுகிறது. பகீரதி நதியில் கட்டப்பட்ட இதில்,  நீர் மட்டம் 261 மீட்டர் உயரத்துக்கு செல்லும். இதன் மூலம் 1000 மெகா வாட் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இந்த அணையானது இயற்கையான வலுவான பாறை முகட்டுக்கள் மற்றும் நிலப்பரப்பால் ஆனது. டெஹ்ரி ஹைட்ரோ டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் லிமிடெட் மற்றும் டெஹ்ரி நீர்மின் ஆகியவற்றின் முதன்மையான அணையாகும். அணையின் நீளம் 575 மீட்டர் (1,886 அடி) அதன் முகடு அகலம் 20 மீட்டர் (66 அடி),  அடிப்படை அகலம் 1.128 மீட்டர் (3,701 அடி) ஆகும்.

முல்லை பெரியாறு அணை மேற்குத் தொடர்ச்சி மலையில் துவங்கி மேற்கு நோக்கி கேரளாவில் பாயும் பெரியாற்றின் மீது கட்டப்பட்ட அணையாகும். இது தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ளது. இது கட்டப்பட்ட இடம் கேரளாவுக்கும்,  அணை தமிழகத்திற்கும் உரியது. தமிழக பொதுப்பணித்துறை இவ்வணையை பராமரித்து வருகிறது. 1895 ஆம் ஆண்டு இது ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது. இதன் கொள்ளளவு 15.5 டி.எம்.சி மற்றும் உயரம் 155 அடி ஆகும். இந்த அணையின் நீர்பிடி பகுதியில் வன சரணாலயம் தேக்கடி உள்ளது. இதன் கீழ்பாசனத்தில் இடுக்கி அணை கட்டப்பட்டுள்ளது. முல்லைபெரியாறு அணை,  சுண்ணாம்பு சுர்க்கி கலவையில் கருங்கல்லில் கட்டப்பட்ட அணை ஆகும். மெட்ராஸ் மாகாணத்திற்கும் தண்ணீரை திருப்பி விவசாயப்பணிகளுக்கு பயன்படுத்திக்கொள்ளும் பொருட்டு ‘பெரியாறு திட்டத்தின்’  கீழ் அப்போதைய மெட்ராஸ் மாகாணத்திற்கும் திருவிதாங்கூர் மகாராஜாவுக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. 1886 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி கையொப்பமிடப்பட்ட இந்த பெரியாறு குத்தகை ஒப்பந்தந்தின்படி ஒரு ஏக்கர் நிலத்திற்கு ஐந்து ரூபாய் ஆண்டு வாடகை என்ற அடிப்படையில் 999 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டது.

படம்: thehindu

கேரளா அரசு நீண்ட காலமாக தமிழ்நாடு எல்லையில் முல்லைப்பெரியாறு அணையை புதிய அணையாக கட்ட கோரி வருகிறது. இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சியின் போது இப்பகுதி மக்களின் நலனிற்காக பென்னி குயிக் என்பவரால் கட்டப்பட்டது. தற்போதுள்ள 116 வயதான முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பானதில்லை என நம்பப்படுகிறது. ஆனாலும் சமீபத்தில் சோதனை செய்யப்பட்ட முடிவின்படி, அணை வலுவானதே ஆகும். இப்பிரச்சனை தொடர்பான வழக்கை தற்போது உச்சநீதிமன்றம் கையாளுகிறது.

அதேபோல இந்தியாவில் கட்டப்பட்ட முதல் வில்லணையாகவும், ஆசியாவின் மிகப்பெரிய வில்லணையாகவும் பெரியார் நதிக்கு குறுக்கே கட்டப்பட்ட இடுக்கி வில்லணை திகழ்கிறது. மேலும் திருச்சிராப்பள்ளி அருகே காவிரி ஆற்றின் குறுக்காக 2000 ஆண்டுகளுக்கு முன்பாக கரிகால் சோழனால் கட்டப்பட்ட கல்லணை உலகின் பழமையான அணையாகவும், நம் பாரம்பரிய பெருமையை எடுத்துரைக்கும் விதமாகவும் திகழ்ந்து வருகிறது.

பக்ரா நங்கல் அணை (படம்: tribuneindia)

பக்ராநங்கல் அணை ஹிமாச்சல பிரதேசத்தின் பிலாஸ்பூர் மாவட்டத்தில் சட்லஜ் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. 225 மீட்டர் உயரம் கொண்ட பக்ராநங்கல் அணை, தெஹ்ரி அணைக்கு பிறகு இந்தியாவின் உயரமான அணையாக திகழ்ந்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் இந்த அணையின் நீர்த்தேக்கமான ‘கோபிந்த் சாகர் ஏரி’  இந்தியாவின் 2-வது பெரிய நீர்த்தேக்கமாக அறியப்படுகிறது. இந்த அணை இந்தியாவில் பஞ்சாப் மற்றும் ஹிமாச்சல பிரதேசம் இடையே எல்லைக்கு அருகே உள்ளது.  ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய அணையாகும். அணையின் நீளம் 518,25 மீ மற்றும் கொள்ளளவு 9,34 பில்லியன் கன மீட்டர்கள் ஆகும்.

ஹிராகுட் அணை, மகாநதி ஆறு ஓடும் இந்தியாவின் ஒரிசா மாநிலம் சம்பல்பூரில் இருந்து 15 கிமீ தொலைவில் கட்டப்பட்டுள்ளது. 1957 ல் கட்டப்பட்ட  இந்த அணையானது உலகின் மிக நீளமான மண்ணாற் ஆன அணைகளில் ஒன்றாகும். ஹிராகுட் அணையின் நீளம் 16 மைல் (26 கிமீ) ஆகும். உலகின் மிக நீளமான முழுக்க முழுக்க மனித சக்தியால் கட்டப்பட்ட அணையாக உள்ளது. இது இந்திய சுதந்திரத்திற்கு பிறகு தொடங்கியது. சுதந்திர இந்தியாவின் முதல் பெரிய பல்நோக்கு நதிகள் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டது இந்த அணை.

ஹிராகுட் அணை (படம்: odishasuntimes)

நாகார்ஜூன சாகர் அணையானது 1955 மற்றும் 1967 இடையில் கட்டப்பட்டது. நாகார்ஜூன சாகர்,  ஆந்திர பிரதேசம்,  நலகொண்டா மாவட்டத்தில்  கிருஷ்ணா நதியின் குறுக்கே கட்டப்பட்ட உலகின் மிகப்பெரிய கல்கட்டு அணையாக உள்ளது. அணையின் திறன் 11.472 மில்லியன் கன மீட்டர்கள் வரை உள்ளது. அணையின் உயர அளவு 490 அடி (150 மீ) ஆகும். 1.6 கிமீ பரந்த அளவு கொண்ட இந்த அணையில் 26 வாயில்கள் உள்ளன.  நாகார்ஜூன சாகர் அணை இந்தியாவில் பசுமை புரட்சிக்கு வித்தாக தொடங்கப்பட்ட பெரிய உள்கட்டமைப்பு திட்டங்களின் பெயரில் அமைக்கப்பட்டது.

நாகார்ஜூன சாகர் அணை ( படம்: commons.wikimedia)

‘சர்தார் சரோவார்’ அணை நர்மதா நதியின் மீது கட்டப்பட்ட அணையாகும். இந்த அணை குஜராத் மாநிலத்தின் ‘நவகம்’ என்ற இடத்தின் அருகில் உள்ளது. இது நர்மதா பள்ளத்தாக்கு திட்டம்,  பெரிய நீர்ப்பாசன மற்றும் ஒரு தொடர் நதிநீர் கட்டுமான சம்பந்தப்பட்ட ஒரு பெரிய ஹைட்ராலிக் பொறியியல் திட்டத்தின் கீழ கட்டப்பட்ட மிகப்பெரிய அணையாக உள்ளது. கட்டுமான திட்டம் பாசனத்தை அதிகரிக்க மற்றும் நீர் மின்சாரம் உற்பத்தி செய்ய ஒரு வளர்ச்சி திட்டத்தின் ஒரு பகுதியாக 1979 இல் வடிவம் பெற்றது. 163 மீ (535 அடி) உயரம் கொண்ட இந்த அணை மிகவும் சர்ச்சைக்குரிய அணைகளில் ஒன்றாக விளங்குகிறது. மேலும் அதன் சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் நிகர செலவுகள் மற்றும் பயன்கள் பற்றி பரவலாக விவாதிக்கப்படுகிறது.

கடந்த 1961-ம் ஆண்டில் அன்றைய பிரதமர் நேரு, நர்மதை நதியில் சர்தார் சரோவர் அணை கட்ட அனுமதி அளித்தார். 1979-ம் ஆண்டில் அடிக்கல் நாட்டப்பட்டது. 1987-ல் அணையின் கட்டுமானப் பணிகள் தொடங்கின. இத்திட்டத்துக்கு உதவ முன்வந்த உலக வங்கி திடீரென நிதியுதவி வழங்க மறுத்துவிட்டது. இதனிடையே அணை திட்டத்தால் மத்திய பிரதேசம் மற்றும் குஜராத் விவசாயிகள், பழங்குடிகள் பாதிக்கப்படுவார்கள் என்று கூறி நர்மதா நதி பாதுகாப்பு அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

சர்தார் சரோவார் அணை (படம்: udayavani)

இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த 1996-ல் அணை கட்டுமானப் பணிக்கு தடை விதித்தது. பின்னர் 2000-ம் ஆண்டு அக்டோபரில் சில கட்டுப்பாடுகளை விதித்து தடை உத்தரவை நீக்கியது. குஜராத் முதல்வராக நரேந்திர மோடி இருந்தபோது கடந்த 2006-ம் ஆண்டில் அணை பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. அப்போது அணையின் உயரம் 121.92 மீட்டராக இருந்தது. பின்னர் அந்த அணையின் உயரத்தை 138.68 மீட்டராக உயர்த்துவதற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கின. அந்தப் பணிகள் நிறைவு பெற்று சர்தார் சரோவர் அணையை பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார். அமெரிக்காவின் கிரான்ட் அணை உலகிலேயே மிகப்பெரிய அணையாகும். அதற்கு அடுத்த இடத்தை சர்தார் சரோவர் அணை பிடித்துள்ளது. நாட்டின் மிகப்பெரிய இந்த அணை மொத்தம் 88ஆயிரம் சதுர கி.மீ. பரப்பளவு கொண்டதாகும். மத்தியபிரதேசம், குஜராத்தில் சுமார் 214 கி.மீ. தொலைவுக்கு நீண்டுள்ளது. அதிகபட்சம் 16.10 கி.மீ. அகலமும் குறைந்தபட்சம் 1.77 மீட்டர் அகலமும் கொண்டதாகும். கடந்த 1961-ல் தொடங்கிய அணை திட்டம் சுமார் ரூ.40,000 கோடி செலவில் 56 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது முழுமை அடைந்துள்ளது.

Web Title: Five biggest dams in India.

Feature image credit: hewlett

 

 

Related Articles

Exit mobile version