யாழ்ப்பாணம், இலங்கைத் திருநாட்டின் முக்கிய நகரங்கள் வரிசையில் கலை, கலாசாரம், வரலாறு, இலக்கியம், பண்பாடு இப்படிப் பல்வேறுபட்ட சிறப்பம்சங்களோடு முன்னிற்கின்றது. இந்தியாவிலிருந்து இலங்கைக்குவந்த கண்பார்வையற்ற ஓர் யாழ்ப்பாணனுக்கு மன்னனால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட இப்பிரதேசமே யாழ்ப்பாணம் என விளங்கிற்று என வரலாறுகள் கூறுகின்றன. தனது பெயரிலேயே இசைகொண்ட யாழ்ப்பாணம் தரும் சுற்றுலா அனுபவமும் இனிமையாகவே இருக்கும் என்பதில் ஐயமில்லை. இலங்கையைத் தரிசிக்கும் உல்லாசப் பயணிகளும் இலங்கையில் வசிக்கும் உள்நாட்டு மக்களும் தமது சுற்றுப்பயணங்களில் தவறவிட முடியாத ஓர் இடமாகவே யாழ்ப்பாணத்தைக் கூறலாம்.
இலங்கையின் வடக்கே அமைந்துள்ள யாழ்பாணத்தை ஆனையிறவின் ஊடான A9 வீதியின் மூலமகாவோ அல்லது கிளிநொச்சி மாவட்டத்தின் ஊடான A32 பாதையில் சங்குப்பிட்டி நவீன பாலம் ஊடாகவோ அடைய முடியும். கொழும்பிலிருந்து சொந்த வாகனங்களில் பயணிக்கும் சுற்றுலா பயணிகள் போக்குவரத்து நெரிசல் அற்ற நேரத்தில் குறைந்தது 5 மணிநேரத்தில் யாழ்ப்பாணத்தை வந்தடைய முடியும்.
சங்குப்பிட்டி பாலம்
யாழ்ப்பாணக் கடல் நீரேரிக்குக் குறுக்காக கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ளசங்குப்பிட்டியையும், யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள கேரதீவையும் இணைக்குமாறு அமைக்கப்பட்டுள்ள ஒரு சாலைப் பாலம் இதுவாகும். 1932ம் ஆண்டில் ஆங்கிலேயரின் ஆட்சிக்காலத்திலேயே இந்தபாதைக்கான திட்டமிடல் மேற்க்கொள்ளப்பட்டபோதிலும் உள்ளூர் மீனவர்களும் உப்பு உற்பத்தியாளர்களும் எதிர்ப்புத் தெரிவித்ததால் இத்திட்டம் முழுமையடையவில்லை.
பகுதியாகக் கட்டி முடிக்கப்பட்ட தரைப்பாலமே மக்களால் பயன்படுத்தப்பட்டு வந்தது. இலங்கையில் உள்நாட்டுப் போர் தீவிரம் அடைந்திருந்த காலத்தில், இவ்வழியான போக்குவரத்து அடிக்கடி தடைப்பட்டது. இருவழிப் பாதையைக் கொண்ட இந்தப் பாலம் 288 மீட்டர் நீளமும் 7.35 மீட்டர் அகலமும் கொண்டது. ஏ-32 எனப்படும் யாழ்ப்பாணம் – மன்னார் நெடுஞ்சாலையின் ஒரு பகுதியான இப்பாலம் கட்டப்படுவதற்கு முன்னர் தலைநிலத்துக்கும் யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குமான ஒரே சாலைத் தொடுப்பு ஆனையிறவு வழியான பாதையாகவே இருந்தது. சங்குப்பிட்டிப் பாலத்தினால், தென்னிலங்கையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கான பயணத்தில் 110 கிலோமீட்டர் (68 மைல்) அல்லது மூன்று மணி நேரம் குறைந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
நல்லூர் கோவில்
யாழில் உள்நுழையும் எந்தவொரு மதத்தினருக்கும் மதபேதமின்றி முதலில் நினைவுக்கு வருகின்ற இடங்களில் முதன்மையானது நல்லூர் கோவிலே. யாழ்ப்பாணத்தை ஆண்ட ஆரியசக்கரவர்த்திகளில் ஒருவரால் இக்கோவில் கட்டுவிக்கபட்டிருக்கலாம் என யாழ்ப்பாண வைபவமாலை நூலும், யாழ் இராச்சியத்தை ஆண்ட செண்பகபெருமாள் என்கிற புவனேகபாகு அரசனினால் கட்டப்பட்டதாக நல்லூர் கோவிலில் சொல்லப்படும் கட்டியமும் (திருவிழா காலத்தில் கூறப்படும் ஒரு கதை) கூறுகின்றன. எதுவாகினும், யாழின் தவிர்க்கப்பட முடியாத வரலாறுகளில் ஒன்றாக இன்று நல்லூர் கந்தன் உள்ளான் என்பதே உண்மை.
ஆவணி மாதத்தில் ஆரம்பிக்கின்ற இந்தகோவிலின் திருவிழாவானது, இலங்கையில் பெருமளவிலான புலம்பெயர் உறவுகளை ஒன்றிணைக்கும் சமூக விழாவாக மாற்றமடைந்துள்ளது சிறப்புமிக்க ஓர் செய்தியாகும். இவ் ஆலய அனுஷ்டானங்களில் ஒன்றாக, எந்தவொரு ஆடவரும் மேலாடைகளை களைந்த பின்பே ஆலயத்தினுள் அனுமதிக்கபடுகின்ற விதி எவருக்காகவும் தளர்த்திக்கொள்ளப்படாமல், இன்றுவரை பின்பற்றபடுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
யாழ்ப்பாண அருங்காட்சியகம்
நல்லூர் கந்தனுக்கு அண்மையிலேயே பார்வையிடக்கூடிய தூரத்திலேதான் யாழ்ப்பாண அருங்காட்சியகம் அமைந்துள்ளது. நல்லூரின் நாவலர் மண்டபத்தின் பின்பகுதியில் இந்த அருங்காட்சியகத்தை காணக்கூடியதாக இருக்கும். வட இலங்கையில் காணப்படும் இரு அருங்காட்சியகங்களில் ஒன்றான இது யாழ்ப்பாணத்தை அகழ்வாராய்ச்சி மூலமாக ஆய்வுசெய்த வேளையில், கிடைக்கப்பெற்ற பெருன்பான்மையான பொருட்களை தன்னகத்தே கொண்டுள்ளது. ஆரம்பத்திலே ஆங்கிலேயர் பாணியில் அமைந்த தனியார் கட்டடம் ஒன்றிலே அமைக்கப்பட்ட இவ்வருங்காட்சியகம் பொருட்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, பொருட்கள் காட்சிப்படுத்துவதில் ஏற்பட்ட பிரச்சினைகள் மற்றும் நகர மயமாக்கம் போன்ற காரணங்களாலும் 11 கூடங்களைக் கொண்ட கண்டிக் கட்டடக் கலைப்பாணியில் அமைந்த கட்டிடத்திற்கு 1951 ஆம் ஆண்டு மாற்றப்பட்டது. இங்குள்ள கலைப்பொருட்கள் யாழின் சாதியங்களையும், இந்து, பௌத்த மத பரம்பளையும், ஆங்கிலேயே ஆக்கிரமிப்புக்களையும் நமக்கு உணர்த்தி நிற்கின்றன.
யாழ் பொதுநூலகம்
தெற்காசியாவின் மிகப்பெரிய நூலகமாக1981வரை வரலாற்றில் பெருமையுடன் உயர்ந்துநின்ற யாழ் பொதுநூலகம், இன்று இலங்கையின் ஓர் கறுப்புபக்கத்தையும் தாங்கியவாறு நவீனமயமாக்கப்பட்டு எழுந்து நிற்கிறது. 1981ம் ஆண்டு வரை, இலங்கையின் மிக அரிய 97,000 நூல்களை தன்னகத்தேகொண்டு, தென்னாசியாவின் மிகப்பெரிய நூலகமாக திகழ்ந்த இந்த பொதுநூலகமும், இலங்கையின் இனக்கலகத்திற்கு தப்பித்திருக்கவில்லை. இதன்விளைவாக, 1933ம் ஆண்டுமுதல் இயங்கிவந்த இந்த நூலகமானது, 1981ம் ஆண்டு ஆனி 1ம் திகதி முற்றாக தீக்கரையாக்கபட்டது. அதன்பின் ஆட்சிபீடமேற்ற அரசியல்தலைமைகள் இந்த நூலகத்தினை இன்று மீள்உருவாக்கம் செய்திருந்தாலும், பழமையான வரலாற்றை மீளஉருவாக்க முடியாத சோகத்துடன் இந்த வரலாறு எழுந்து நிற்கிறது.
யாழ்ப்பாணக் கோட்டை
இலங்கையின் திருகோணமலை, காலி உட்பட கடற்கரையை அண்டிய பலபிரதேசங்களில் ஆங்கிலேயே ஆக்கிரமிப்பின் ஒருபகுதியாக இவ்வாறான கோட்டைகளை நாம் காணக்கூடியதாக இருக்கும். போர்த்துகீசர் இலங்கையை ஆண்டசமயத்தில், யாழ்ப்பாண அரசினைக் கைப்பற்றி, அதுவரை காலமும் யாழ்ப்பாண அரசின் தலைநகராக விளங்கிய நல்லூரை யாழ்ப்பாண நகரத்துக்கு மாற்றியதுடன், தமது நிர்வாக செயல்பாடுகளுக்காக யாழ்நகரின் கடற்பரப்பை ஒட்டியதாக இந்த கோட்டையை அமைத்துகொண்டார்கள்.
அதன்போது, நாற்சதுர அமைப்பில் இந்த கோட்டை அமைக்கபட்ட போதிலும், ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தில் இந்த கோட்டையானது தற்போதைய வடிவம்கொண்ட ஐங்கோணி வடிவத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இலங்கையில் நிலவிய யுத்தசூழலுக்கு இந்த கோட்டையும் தப்பாதபோதிலும், இன்றும் வரலாறு மாறாது, உறுதியாக எழுந்து நிற்கிறது.
நயினாதீவு
யாழின் சப்ததீவுகளில் ஒன்றான நயினாதீவு வரலாறுகளில் மணிபல்லவம், நாகர்தீவு, நாகதீபம் என பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டு வந்திருக்கிறது. திராவிடர்களின் முன்னோர்கள் எனகருதப்படும் நாகர்கள் வாழ்ந்தமைக்கு சான்றாக உள்ள இடங்களில் இந்த நயினாதீவு முக்கியம்வாய்ந்ததாகும். யாழ்ப்பாணம் வருகின்ற அனைவருமே நயினாதீவுக்குப் பயணப்பட முக்கியகாரணங்கள் பல உள்ளன. அவை, வரலாற்றுச் சிறப்புமிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் கோவில், கௌதம புத்தரின் வருகையை குறிப்பதாக நம்பப்படும் விகாரை போன்றனவாகும். இலங்கைக்குள் தரைவழி அற்றதாக, கடல்வழி போக்குவரத்தைக் கொண்ட தீவாகவும் இது அமைந்துள்ளமை மற்றுமொரு காரணம் எனலாம்.
நெடுந்தீவு
நயினாதீவு போன்றே கடல்வழிப் பிரயாணம் மூலமாக சென்றடையக்கூடிய அழகிய தீவு இதுவாகும். நயினாதீவைப்போன்று, மதரீதியான முக்கியத்துவங்களை இது கொண்டிராதபோதிலும், சுற்றுலாப்பயணிகளுக்கு சாலப்பொருத்தமான தலங்களில் ஒன்றாக இது உள்ளது. நெடுந்தீவு செல்லும்போது, கீழ்வரும் பட்டியலை மறக்காமல் கவனித்துவிட்டு வாருங்கள்.
- புறாக்கோபுரம் – கலானித்துவ ஆட்சி சமயத்தில் புறாமூலாக தொடர்பாடலை மேற்கொண்ட ஆங்கிலேயர்கள் அத்தகைய புறாக்களுக்காக உருவாக்கிய கோபுரமே இது.
- இராட்சத காற்பாதம் – இயற்கையாக அல்லது மதநன்மிக்கைகளின் பிரகாரம் இறைவனின் கால் சுவடியாக இது பார்க்கபடுகிறது
- வளரும் கல் – ஆண்டுதோறும் சில மில்லிமீட்டர்கள் வளர்ச்சியடையும் கல்லாக உள்ளதுடன், அங்குவாழும் மக்களின் நம்பிக்கைகளுக்கு பெயர்போன இடமாகவும் உள்ளது.
- பெருக்குமரம் – நூற்றாண்டுகள் பழமையானதாக இன்றுவரை உள்ள மரத்தின் சிறப்பே அதன் அடிப்பாகத்தில் உள்ளது. இதன் அடிப்பகுதியில் காணப்படும் மிகப்பெரிய இடைவெளி, ஒரு குடும்பம் உள்நுழைந்து உள்ளே இருக்ககூடியவகையில் பெரியதாக அமைந்துள்ளது.
- கட்டைகுதிரைகள் – ஆங்கிலேயே ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட இக்குதிரைகளின் பரம்பரையாக இன்றும் இங்கே குதிரைகள் உள்ளன. இவற்றறை, இந்த தீவிலிருந்து வெளியே கொண்டு செல்வது இலங்கை சட்டங்களுக்கு அமைவாக, சட்டவிரோதமாகும்.
- நெடுந்தீவுகோட்டை மற்றும் பவளப்பாறை மதில்கள்..
கசூரினா கடற்கரை
இலங்கை அழகான கடற்கரைகளுக்கு பெயர்போன ஓர் நாடு. அதற்கு இன்னுமொரு சான்றாக யாழின் அழகிய கடற்கரையாக கசூரினா கடற்கரை காணப்படுகிறது. கசூரினா மரங்கள் நிறைந்ததாகக் காணப்படுவதே இக்கடற்கரை இப்பெயர்பெற்று விளங்கக் காரணமாகும். யாழிற்கு அதிகளவிலான வெளிநாட்டவர்களை கவர்கின்ற மிகமுக்கியமான சுற்றுலாதளங்களில் இக்கடற்கரையும் ஒன்றாகும்.
கந்தரோடை
யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள மிகப் பழைய குடியேற்றப் பகுதிகளில் இது முக்கியமானது. இது இலங்கையிலேயே நகராக்கம் இடம்பெற்ற மிகப் பழைய இடங்களில் ஒன்றாகவும் சொல்லப்படுகின்றது.
இலங்கை முழுவதும் வாழ்ந்த இயக்கர்-நாகர்களின் பரம்பலுக்கு ஆதாரமான வாழ்வியல் எச்சங்களையும், அதன்பின்னான பௌத்தமத பரம்பலுக்கு சான்றான புராதன பௌத்தசின்னங்களையும் தன்னகத்தே கொண்ட புனிதபூமியாக இது உள்ளது, தற்போது, தொல்பொருளியல் திணைக்களம் மூலமாக பராமரிக்கபடுகின்ற இந்நிலமானது, இலங்கையின் ஆதிக்குடிகள் முதற்கொண்டு நகராக்கம் ஏற்படுத்தப்பட்ட சான்றுகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது.
கீரிமலை
கீரிமலையானது உலகின் பிரசித்திபெற்ற ஆயிரத்தெட்டுசிவத்தலங்களில் ஒன்றான நகுலேஸ்வரத்தையும், நோய்தீர்க்கும் வரலாற்று பின்னணியை கொண்ட கீரிமலை தீர்த்தத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளமையால், பிரசித்தம் பெற்று விளங்குகிறது. இந்துமத புராணங்களின் பிரகாரம், கீரிமலை தீர்த்தமானது பல்வேறு நோய்களுக்கும் நிவாரணம் தருகின்ற தீர்த்தமாக உள்ளதுடன், கடலுக்கு மிக அண்மையில் கடல்நீர் கலப்பை கொண்டிராத ஒரு நன்னீர் நீர்நிலையாகவும், 10KM தொலைவில் அமைந்துள்ள நிலாவரை கிணற்றுடன் தொடர்புடையதாகவும் காணப்படுவது அறிவியல் விந்தையுமாகும்.
நிலாவரை கிணறு
இலங்கையில் மர்மம் துலங்காத வரலாற்று விடயங்களுள் நிலாவரை முடிவில்லாத கிணற்றுக்கும் ஒரு இடமுண்டு. இதுவரையும் பலரால் எடுக்கப்பட்ட எந்த முயற்சியிலும், இந்த கிணற்றின் எல்லை இதுவரை கண்டறியப்படவில்லை. இந்த கிணற்றின் 40 அடிவரையான நீர் நன்னீராக உள்ளதுடன், அதற்க்கு அப்பால் உள்ள நீர் உப்புச் செறிவானதாக உள்ளதை, ஆழத்தை கண்டறியச் சென்ற சுழியோடிகள் கூறியதாக சான்றுகள் கூறுகின்றன. அதேபோன்று, இந்தக்கிணற்றில் போடப்பட்ட எலுமிச்சைபழத்தை கீரிமலை தீர்த்தத்தில் எடுத்ததாக சான்றுகளை கொண்டிராத கதைகளும் கூறப்பட்டுவருகின்றன. எது எவ்வாறாயினும், இது இன்றுவரை துலங்காத மர்மமாகவே உள்ளது.
யாழ்ப்பாணம் இயற்கை, வரலாறு போன்ற அம்சங்களோடு பல வியத்தகு விந்தைகளையும், ஆச்சர்யங்களையும் தன்னகத்தே தாங்கி நிற்கின்றது. மேற்கூறிய இயற்கை மற்றும் கலாசார அம்சங்கள் தவிர, காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலை, பருத்தித்துறை கலங்கரை விளக்கம், பலாலி விமானத்தளம் மற்றும் ஆனையிறவு நிலப்பகுதி என்பவற்றையும் பார்வையிட முடியும். மேலும் பாரம்பரிய வரலாற்றினை தன்னகத்தே கொண்டுள்ள யாழிற்கு பயணப்படுகின்ற அனைவரும், மண் மணம் மாறாத, பாரம்பரிய உணவுகளையும், இலங்கைத் திராட்சைகளையும் மறக்காமல் சுவைத்துகொண்டே சுற்றுலா பயணத்தை அனுபவிப்பீர்கள் என்றே நம்புகிறோம்.